VDO
https://www.srf.ch/play/tv/popupvideoplayer?id=e3911c84-38a2-42e7-b456-d9c31f4de65d
இந்த கடவுளின் தூதனுக்கு (Pastor) வயது 62. தமிழன். பெயர் வில்லியம்ஸ். தமிழுலகை உய்விக்க அவன் GGMCI என்ற Tamil Evangelical Church இனை Bern (swiss) இல் ஆரம்பித்து தனது சேவையைத் தொடங்குகிறான். அடங்காத சேவை மனசு அவனுக்கு. தனது கிளைகளை யேர்மனி, பிரான்ஸ், கொலன்ட், நோர்வே போன்ற நாடுகளிலும் படரவிட்டு அருளொளிச் சோதியை பாவப்பட்ட அகதித் தமிழருக்காக பரவவிடுகிறான். இந்த ஐந்து நாடுகளிலும் 25 தேவாலயங்களை ஆண்டவன் அவனிடம் ஒப்படைக்கிறான். இளம் பெண்கள் உட்பட பல தமிழ் மாந்தர்கள் தேவதூதனிடம் தம்மை ஒப்புக் கொடுக்க திரள்கின்றனர்.
தூதனோ அன்பு (LOVE) பற்றியும் அதை அடைவது பற்றியும் தேவனின் வேதவாக்குகளை பைபிளிலிருந்து ஓதி, அதுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, அந்த இளம் பெண்களுக்கு தேவன் மீதான அன்பை அடைவதற்கு வழிகாட்டுகிறான். அவர்களுக்குள் புகுந்திருக்கும் கெட்ட ஆவியை விரட்டி அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்க சித்தமாகிறான்.
;
“பாலியல் இன்பம் என்பது அன்பின் உச்ச வெளிப்பாடு. இந்த அன்பைத் தரிசிக்க கல்யாணமாகினாலும்கூட ஒரு மனிதன் திருமணமாகாத இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வதன் மூலம் உதவ முடியும். இதில் நான் ஏதாவது தவறிழைப்பேனாயின் தேவன் என்னைத் தண்டிப்பான்” என தூதர் அருள்கூர்ந்து செப்புகிறார். அதை அவர் கடைப்பிடிக்கிறார்.
இப்போ அந்த ஐந்து நாட்டுப் பெண்களில் சிலர் இந்தத் தூதன் தம்மை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக புகார் தெரிவிக்கிறார்கள். அவர்களில் ஆகக் குறைந்த வயதுடைய சிறுமிக்கு இன்னும் 16 வயதுகூட ஆகவில்லை. 13வயதாயிருக்கும்போதே சிறுமிக்குள் இருந்த பிசாசை விரட்டப் புறப்பட்ட தூதன், பைபிள் வாசகங்களை ஓதி தன்னை முளைச்சலவை செய்ததாக சொல்கிறாள். இன்னொரு பெண்ணுடன் பாலியல் தொடுகைகளை செய்வித்து, தனது கையை தூதன் தொட்டபடி ஜெபித்ததாகவும் சொல்கிறாள். தன்னுடல் மீதான தொடுகையை அவள் இப்போ அருவருப்புடன் உணர்வதாகவும் சொல்கிறாள். கடைசியில் தன்னை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் சொல்கிறாள். அழுகிறாள்.
இந்தப் பெண்களின் -அதாவது மானிடர்களின்- குற்றச்சாட்டை மறுக்கிறான் தேவதூதன்.
“What do you think of me – I’m a pastor!” என்கிறான்.
சுவிஸ் தொலைக்காட்சி குழுவோ கமராவுடன் அந்தத் தேவதூதனை இடைஞ்சல் செய்கிறார்கள். குறுக்குக் கேள்வி கேட்கிறார்கள். அவன் எல்லா குற்றச் சாட்டுகளையும் மறுக்கிறான். “என்மீது இந்த குற்றச்சாட்டை வைக்கும் பெண்களை எனக்கு முன்னால் கொணர்ந்து நிப்பாட்டுங்க. அவர்களுக்குள் ஆட்சிபுரியும் கெட்ட ஆவியை போக்கிவிடுகிறேன். அவர்கள் மீண்டும் நற்சிந்தனைக்கு திரும்பிவிடுவார்கள்” என செப்புகிறார்.
ஆனால் இந்த மனிதர்களோ, “இல்லை.. இது குழந்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம். விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது” என்கிறார்கள்.
அதுமட்டுமா, 25 தேவாலயத்தின் மூலமாக இந்தத் தூதனுக்கு பல ஆயிரக்கணக்கான யூரோ பணம் வருமானமாகக் கொட்டியதாக வேறு சொல்கிறார்கள். இந்த நாட்டு தேவாலயங்கள் ஒவ்வொன்றினதும் வாசற்படியேறி தனது புனிதப் பணிக்கான ‘திருப்பணத்தை’ ஒழுங்காக பெற கடுமையாக உழைக்கிறான். பணம் வருகிறது. அதைவிட தமிழடியார்கள், தேவாலய திருச்சபையினர் ‘தட்சணை’ வழங்குகின்றனர்.
அதற்கான சில ஆதாரங்களை காட்டுகிறார்கள் சுவிஸ் தொலைக்காட்சி குழுவினர். மக்கள் சேவையே தனது வாழ்வாக வரித்த தூதனோ “I take no money from the church” என்கிறான். அவன் முழுநேர தேவதூதனாக இருந்ததால் வறுமையில் அகப்பட்டுப்போய், சுவிசின் சமூக உதவிப் பணத்தை வருடக் கணக்காகப் பெற்று வாழும் நிலையில் இருக்கிறான்.
இந்த மனிதர்களோ அவன் பெருந்தொகை வருமானம் பெற்றதாகவும் அதை மறைத்து, பிழையாக பத்திரங்களைக் காட்டி சமூக உதவிப் பண முறைமையை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டுகிறார்கள்.
“தேவனே எனை ஏன் நீர் கைவிட்டீர்” என கதறுகிறார் தூதன். சுவிஸ் அரசுக்குத்தான் அது கேட்கவில்லை. பாவம் தூதன்.
முகநூல் வெளியெல்லாம் அலைந்து திரிஞ்சு, கலாச்சார காவலர்கள் கத்திக் களைத்துப்போய் இருக்கும் பொழுதொன்றில், ஒரு பூனையின் காலடியாய் ஓசைப்படாமல் இந்த தேவதூதனை சுவிஸ் தொலைக்காட்சி தான் தேடிப் போய் எடுத்த காணொளியுடன் செய்தியை இப்போ அம்பலமாக்கியிருக்கிறது.
இனி.. ?
*
Additional VDOs (SF1 TV)
- https://www.srf.ch/play/tv/popupvideoplayer?id=267f90b2-6037-4972-b3a9-40d7c0bfbc83
- https://www.srf.ch/play/tv/popupvideoplayer?id=39bfc068-86f6-44bc-b680-99fc9faa1465
*
13092019