அண்மையில் எதிர்பாராதவிதமாக ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை சட்டென அடையாளம் கண்டுவிட்டார், நம்மட தலையில் மயிர் போனபின்னும்!. எனக்கு அவரை தெரியவில்லை. “உங்களை நான் 28 வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். என்னைத் தெரியுதா” என கேட்டார். “தெரியவில்லை” என்றேன். “ஞாபகமிருக்கா, உங்கள் நண்பர் எக்ஸ் (புனைபெயர்) இன் கல்யாணவீட்டில் பிரச்சினை எழும்பினது. தாலி கட்டாமல், ஐயர் இல்லாமல் செய்த கல்யாணம். பரிசுகள் எதுவும் கொண்டுவரக்கூடாது என்று அறிவித்து நடந்த கல்யாணம். பிரச்சினைப்பட்டது நாங்கதான். உங்கட நண்பர் என்ரை உறவினர்” என்றார்.
இப்ப தெரியுது என்றேன். தமிழ்க் கலாச்சாரத்தின் மீது தீராக் காதல் கொண்ட அவருக்கு அந்த சம்பவம் நேற்றுப்போல இருந்திருக்கலாம். நமக்கெல்லாம் கடந்து சென்றுவிட்ட சம்பவங்கள் அவை. “நான் செய்தது சரியானது” என்று வேறு இப்பவும் அவர் ஒப்ப, நான் புன்னகையை மட்டும் பதிலாய் அளித்தேன்.
பொலிசை வரவழைக்காத குறையாக அன்று அந்த கலாச்சார காளி வேப்பிலையோடு ஆடி முடித்தது. அது வெளியேற்றப்பட்டு அந்தத் திருமணம் திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது.
கலாச்சார அதிர்ச்சி வேப்பிலையோடுதான் ஆடும் என்பதை இப்போ சுவிசில் நடந்த திருமணமொன்றை வைத்து முகநூலில் உருப்பெற்றிருக்கும் உருவாட்டம் மீண்டும் நிருபித்திருக்கிறது. இரவுகளில் ஐரோப்பிய வீதியில் ஒரு பெண்ணைக் கண்டாலும் ஆடுகிறது. கூடப் படிக்கிற வேற்றுநாட்டு (ஐரோப்பாவோ ஆபிரிக்காவோ) நண்பனுடன் நண்பியுடன் கண்டாலும் ஆடுகிறது. “உனக்கு கறுப்பன் கேட்குதோ…, வெள்ளைத்தோல் கேட்குதோ” என்று வாக்குச் சொல்கிறது. நாற் திசையும் சென்று அறிவுச் செல்வத்தைத் தேடி நிரம்பி வழிகிறோம் என்றும் அது வாக்குச் சொல்லுதல் கூடும்.
அந்த திருமணத்துக்கு நானும் சென்றிருந்தேன். அது மண்டபத்தில் நடந்தது. மத சடங்குகள் இல்லை. பரஸ்பரம் மாலை மாற்றினார்கள். பரஸ்பரம் தாலி கட்டினார்கள். அவளவுதான்.
இதை திரிச்சு மணமகள் மணமகனுக்கு (மட்டும்) தாலி கட்டினாள் என இணையத்தளமொன்று முரசு அறைந்தது. பெண் ஆணுக்கு தாலிகட்டியதால் அமேசன் காடு எரிந்த கணக்கில் கலாச்சாரம் பற்றியெரிந்துவிட்டதாக முடியை இழந்த நமது இளவரசர்கள்கூட சினந்து எழும்பியிருக்கின்றனர்.
வானத்தைப் பிரித்து இறங்கிய கெலியிலிருந்து பூப்பு நீராட விடலைச் சிறுமி இறங்கிவந்தபோதும், சுவாமி காவும் சப்பறத்தில் 50 வயது இளைஞன் பிறந்து வளர்ந்து வீதியுலாக் காட்டியபோதும், குடும்பவன்முறையை ஆதரித்து மனைவியை கணவன் அடிப்பதை ஏற்றுக்கொண்டு தமிழ் விடலைகளில் 23 வீதம் பேர் (சுவிசில்) கருத்துக் கட்டும்போதும், சாதியை அடுத்த சந்ததியின் மண்டைக்குள் கழுவி ஊற்றுகிறபோதும்… இந்த கலாச்சார காவலர்கள் கொஞ்சம் கொறி பண்டங்களோடு முகநூலில் வந்து தண்ணிகாட்டிவிட்டுச் செல்வதே வழக்கம். காட்டுக் கூச்சல் கிடையாது. (கறாரான பார்வை கிடையாது.) அதுவேதான் தமிழரின் கலாச்சாரம் என புரிந்து வைத்திருப்பதே அதற்குக் காரணம்.
அந்த திருமணம் இரண்டாம் சந்ததியைச் சேர்ந்தவர்கள் தமக்குள் கொண்ட உடன்பாட்டில் நிகழ்ந்த ஒன்று. இருவேறு கலாச்சாரங்களுக்கு இடையிலான முரண்களுக்கு இடையிலும், அடையாளச் சிக்கலிலும் அகப்பட்டு நசிபவர்கள் இந்த இரண்டாம் மூன்றாம் சந்ததியினர். மூத்த சந்ததியோ “நாங்கள் சிறீலங்காவிலிருந்து வந்தவர்கள்” என பல்லை இழிச்சுக் கொண்டு அப்பாவித்தனத்தோடு (நிற அரசியலை புரிந்துகொள்ளாமல்) தமது “பிரவுண்” நிறத்தையும், “அழகையும்”, பல்லின் வெண்மையையும் அறிமுகமாக்கிக்கொண்டிருக்க… இங்கு பிறந்து வளரும் சந்ததியோ exotism பற்றி உணர்ந்தவர்களாயும் இந்தவகை அறிமுகங்களை எதிர்ப்பவர்களாகவும், எங்கையிருந்து வந்தனி என்ற கேள்வியை நிராகரித்து இந்த நாடுதான் என திரும்பத் திரும்ப பதில் சொல்பவர்களாயும் இருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் தாலி கட்டுவதை தமிழரின் பண்பாடாக அடையாளப்படுத்தி இருவரும் பரஸ்பரம் கட்டியிருக்கிறார்கள். அவர்கள் சார்ந்த கருத்தியல் அல்லது அடையாளச் சிக்கலிலிருந்து எழுவது அது. மணமகனின் அரசியலோடு எனக்கு எந்தவித உடன்பாடும் இல்லையென்றபோதும், அவர்களின் இந்த கலகச் செயலை புரிந்துகொள்ளவும் பாராட்டவும் எதுவும் தடையாக இல்லை.
இதைவிட தாலி கட்டாமல் செய்து எதிர்மறுப்பை நிகழ்த்தியிருக்கலாம் என்பது இன்னொரு கருத்து. (எனது கருத்தும் அதுவே). அதை அவர்கள் ஏன் செய்யவில்லை என கேட்பது என்ன நியாயம். இதில் கலாச்சார காவலர்கள் மட்டுமல்ல, மாற்றுகளை வேண்டிநிற்பவர்கள் சிலரும் பலியாகியிருப்பதுதான் வேதனை. ஆணதிகார சமூகத்தின் மீதான எதிர்மறுப்பு, ஒடுக்குமுறைக் குறியீட்டின் மீதான தாக்குதல் இங்கு பொதுவாக இருக்கும் அம்சம். அது வௌ;வேறு வழிகளில் வெளிப்படலாம் என்பதை அங்கீகரிக்க நமக்கு எது தடையாக இருக்கிறது. தெரியவில்லை.
இருவரும் தாலியோடு திரிந்தாலென்ன கழற்றி வீட்டில் வைத்தாலென்ன ஒரு திருமண நிகழ்வில் வைத்து செய்யப்படும் எதிர்மறுப்பு குறியீட்டின் மீதான தாக்குதல்தான். இதை பகிரங்கமாச் செய்வதுதான் பிரச்சினைப்பாடாக இருக்கிறதெனில், நாம் கடைப்பிடிப்பதாக நம்பும் கலாச்சாரம் கள்ளக் கலாச்சாரம் என்றுதானே பொருள்.
இன்னொரு படி மேலே போய் ஆண் ஆணுக்கு கட்டிய தாலி என பெண்ணை ஆணாக உருவகித்து எழுதுகிற வக்கிரம் பிடித்தவர்களும்கூட இருக்கிறார்கள். இந்தளவுக்கு ஆணாதிக்க பிசாசு பிடித்து ஆட்டுகிறது.
இப்படியேதான் தமது தமிழீழக் கனவை நிறைவேற்ற விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளை புரட்சிப்பெண் என கூவி, அவர்களது வீரத்தை விதந்தோம்பினார்கள். இப்போ அவர்களை குசினுக்கும் கீழாக கலாச்சார பாதாளத்துள் அனுப்பியதும் இந்தவகை கலாச்சார காவலர்களே.
தாலி கட்டுபவர்கள் எல்லாம் குடும்பத்தில் பெண்ணொடுக்குமுறையைப் பேணுகிறார்கள் என்று இதை மொழியெர்க்கத் தேவையில்லை. அவரவர் தனக்கு தெரிந்த வழியில் பிழையான அம்சங்களை நிராகரித்தோ அல்லது கலகம் செய்தோ வாழ்தலை கலாச்சார அளவுகோலால் அளவிட முயல்வது வளர்ச்சியடையும் ஒரு சமூகத்துக்கு உகந்ததாக இருக்காது.
பெண்ணொடுக்குமுறையை எதிர்த்து, இந்த மணப்பெண்ணின் பெற்றோரும் (1990 இல்) தாலி கட்டாமல் மதச் சடங்கு இல்லாமல் கல்யாணம் செய்தவர்கள். சுவிசில் பிறந்து அந்த குடும்ப சூழலில் வளர்ந்தவள் அவள். அதனால்தான் இந்த துணிச்சலான முடிவை அவள் எளிதாக எடுத்தாள்.
1990 ஆரம்பத்தில் பேர்ண் நகரில் 3 தம்பதியினர் மே தினத்தன்று ஒரே மேடையில் மோதிரம் மட்டும் மாற்றி திருமண நிகழ்வை செய்து காட்டினார்கள். எம்மில் பலர் இதை செய்தபோதும் இப்படி சலசலப்புகளையும் அவதூறுகளையும் சந்தித்தோம். முதல் பந்தியில் நான் குறித்த சம்பவமும் அக் காலகட்டத்தில் நடந்த ஒன்றுதான். இப்படி வௌ;வேறு நாடுகளில் ஆட்கள் நிச்சயம் இருப்பர். இவ்வாறான குடும்ப சூழலில் வளரும் பிள்ளைகளின் எதிர்மறுப்புகள் தொடர்ந்தும் வௌ;வேறு வடிவில் வெளிவரவே செய்யும். முத்திப்போன சந்ததிக்கும் குருத்தடைச்ச சிந்தனைக்கும் அது ஒவ்வாதுதான். என்ன செய்வது.
- ரவி 12092019