– ஓர் அலைக்கழிப்பு
(ஓரான் பாமுக்கின் “வெண்ணிறக் கோட்டை” என்ற நாவல் வாசிப்பும் உரையாடலும்-23 இல் 01.09.19 அன்று உரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந் நாவல் குறித்து பல்வேறு பரிமாணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில் நான் முன்வைத்த கருத்துகளின் விரிவு இப் பதிவு)
ஓரான் பாமுக் இன் ஆரம்பகால நாவல்களில் ஒன்று வெண்ணிறக் கோட்டை. ஓட்டோநாம் துருக்கிய சாம்ராஜ்யம் 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலவிய பெரும் சாம்ராஜ்யம் 15ம் நூற்றாண்டிலும் பின்னர் 16ம் நூற்றாண்டிலும் அது வெனீஸ் மீது போர் புரிந்தது. இந்த இரண்டாவது காலகட்டத்தில் தொடங்கி, போலந்தின் வெண்ணிறக் கோட்டையை கைப்பற்ற நடந்த போர்வரையான காலப் பகுதியுள் வைத்து புனையப்பட்ட நாவல் இது.
வெனீஸ் மாணவன் ஒருவன் ஆராய்ச்சிக்காக கடல் பயணமொன்றை மேற்கொள்கிறான். திடீரென துருக்கிய கப்பல்கள் சூழ்ந்துவிடுகின்றன. அவனும், அவனுடன் வந்தவர்களும், படகை வலித்த அடிமைகளுமாக எல்லோரும் கைதிகளாக பிடிக்கப்படுகின்றனர். அவன் தனக்கு மருத்துவம் தெரியும் என்கிறான். கப்பலில் காயப்பட்டவர்களுக்கு அவன் அளித்த சிகிச்சை பலனளிக்கிறது. அவன் தனக்கு வானவியல் மற்றும் இயந்திரவியல் கூட தெரியும் என்கிறான். அதனால் அவன் விசேட அடிமையாக கணிக்கப்பட்டு ஹோஜா என்பவனிடம் ஒப்படைக்கப்படுகிறான். ஹோஜாவைக் கண்டதும் அவனுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. அசலாக தன்னைப் போன்ற அதே உருவ அமைப்பு கொண்டவனாக ஹோஜா இருந்ததே காரணம். கதை நகர்கிறது.
அரசனாக ஒன்பது வயது சிறுவன் சுல்தான் இருக்கிறான். அவனது அரண்மனையில் ஹோஜா முக்கியமானவன். அவனது திறமைமீது அறிவின்மீது சுல்தானுக்கு பிடிப்பு இருந்தது. ஹோஜாவும் சுதந்திர அடிமையான ‘அவனும்’ (வெனீசியன்) இணைந்து செயற்பட்டு சுல்தானின் அபிமானத்தைப் பெறுகின்றனர்.
மிகக் குறைந்த பாத்திரங்களோடு நகர்கிற கதை இது. வெனீசிய மாணவன் ‘அவன’ என்றே கதை முழுவதும் சுட்டப்படுகிறான். பெயரிடாமல் ‘அவன்’ என்ற குறியீட்டுப் பெயரை பாவிப்பது நூலாசிரியர் ஓரான் பாமுக்குக்கு மிக முக்கியமாக இருந்தது. இக் கதையின் கட்டமைப்புக்கு அது அத்திவாரமாக இருக்கிறது என சொல்ல முடியும்.
பாத்திரக் கட்டமைப்பு
கதாமாந்தர்களினூடான தோற்றப்பாடுகளுடன் நகருவதில் பரிச்சயப்பட்ட வாசிப்பு மனதுக்கு, அது கதாமாந்தர்களோடு பயணிப்பது மட்டுமல்ல, அவர்களைக் கைவிட்டு அகத்துக்குள் புகுந்துவிடுவதுமாக (பரிச்சயப்பட்ட) வாசக எல்லையை உடைத்துப் போட்டுவிட்டு எம்மை வரக் கோருகிறது.
‘மக்கள்’ என்ற பருண்மையான சொல் அதற்குள் அடக்கிவைத்திருக்கிற முரண்பாட்டு சிக்கல்கள் அல்லது வித்தியாசங்கள் போலவே, நான் என்பதும் ஒரு பருண்மையானதுதான். அது ஒருபடித்தானதல்ல. முரண்பாடுகளும் வித்தியாசமும் கொண்டது. தான் ஒத்துக்கொள்வதையே -ஒரு கணங்களின் பின்னர்கூட- தனக்குள் மறுப்பது, உண்மை என நம்பவதற்கு எதிராக தனக்குத் தானே இருப்பது, அதற்கான நியாயங்களை உருவாக்கிக் கொள்வது, மிருகம்கூட துன்புறுவதை சகிக்கமுடியாமல் இருப்பது ஆனால் இறைச்சியை புசித்து உண்பது என அன்றாட வாழ்வில் அது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிற பல எளிமையான உதாரணங்களைக் காட்ட முடியும்.
ஓரான் பாமுக்கின் நாவல்களில், பாத்திரக் கட்டமைப்புகளில் ஒருமையை நிராகரிக்கிற பன்மை வெளி இருக்கும். வெண்ணிறக் கோட்டையை உருவமழிதல் என்ற இன்னொரு பரிமாணத்திலும்கூட வாசிக்க முடியும். ஹோஜாவும் ‘அவனும்’ இரு வெவ்வேறு பாத்திரங்களாக வாசிப்பு நகர்ந்துகொண்டு போகிறபோது, இருவரும் ஒன்றுதான் என்பது போலவும் இடையிடையே வாசிப்பு நிலைகுலையும். கடைசி அத்தியாயம் இந்த ‘அவனை’ வைத்து வாசகரை முழுவதுமாக அலைக்கழிக்கிறது.
“எனது ஆன்மாவை அவன் கையகப்படுத்திவிட்டதாகக் கூறினான். சற்று நேரத்திற்கு முன்பு, கண்ணாடிக்கெதிரே எனது அங்க அசைவுகள் அனைத்தையும் படியெடுத்துக் காட்டியது போல, நான் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் அவனுக்குத் தெரியுமாம். எனக்கு எது தெரியுமோ அதை அவன் நினைத்துக் கொண்டிருக்கிறானாம். இந்தக் கணம் நான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என அவன் கேட்டபோது, அவனைத் தவிர வேறெதைப் பற்றியும் என்னால் நினைக்க முடியவில்லை என்றேன்.”
உண்மையும் ஆளுமைக் கட்டமைப்பும்
பிளேக் நோயிலிருந்து தப்புவதற்காக தனது வாழ்வின் மீதான நேசிப்புடன் தப்பியோடி அருகிலுள்ள தீவுக்கு செல்கிறான் ‘அவன்’. அவனை ஹோஜா கண்டுபிடித்துவிடக் கூடாது என வாசக மனம் ஏங்கிக்கொண்டிருக்க, அவனோ தனது தப்பித்தலை ஒரு விடுதலையாகவோ, அவனிடமிருந்து தப்பியதாகவோ உணரவில்லை. ஹோஜா அவனைத் தேடி கண்டுபிடித்தபோது அவனுக்கு எந்த அதிர்ச்சியோ ஏமாற்றமா இல்லை. அவனிடமே போய்ச் சேர்வதை விரும்பினான். போகிறான்.
“நான் அவன் பக்கத்தில் இருக்கவேண்டும். ஹோஜாவின் ஆளுமையாக இருந்தது நானே. எனக்கு அடிக்கடி வருகிற துர்க் கனவுகள் போல நான் எனது நிஜ ஆளுமையிலிருந்து பிரிந்து, என்னை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் உள்ளிருந்த இந்த வேறொரு மனிதனின் அடையாளத்தை அறிந்துகொள்வதற்குக்கூட எனக்கு விருப்பம் இல்லை. என்னுடைய ஆளுமை என்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதை நான் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது விரைவில் அவனோடு திரும்ப சேர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. ஆனால் அப்போது ஒரு முரட்டுப் படைவீரன் முழுபலத்தோடு என்னைத் தள்ள, கூட்டத்தினர் மீது விழுந்தேன்” என்கிறான்.
பண்பாடு, அறிவு, பழக்கவழக்கம், நாகரிகம், மதம், அழகு குறித்த பார்வை, அதிகாரம், கருத்தியல் மேலாளுமை… என வாழும் சூழலின் பல காரணிகளால் கட்டமைக்கப்பட்ட ஆளுமை கொண்டவர்களாக நான் என்பது உருவாக்கப்படுகிறது. இவ்வாறான பன்முக உள்ளடக்கம் கொண்ட நான்களின் உண்மைக்கும்; ஆளுமைக் கட்டமைப்புக்கும் இடையிலான போராட்டத்தையும் இந் நாவல் சித்தரிக்கிறது.
அடையாளச் சிக்கல்
அடையாளச் சிக்கலை பேசுவதாகவும் இப் பிரதி வாசிக்கப்படலாம். முற்றுமுழுதான இன்னொரு வாழ்நிலையில் விடப்படும்போது அல்லது நிர்ப்பந்திக்கப்படும்போது ஒருவரது அடையாளம் தகவமைதலும் எதிர்நிலைகளும் கொண்டதாக மாறுவதை பிரதிக்குள் காண முடிகிறது.
ஆரம்பத்தில் மதம் மாற முடியாது என, கொலைக் களத்துக்கு அனுப்பப்பட்டு கழுத்துத் துண்டிக்கப் படப்போகும் கணம் வரை மறுத்த ‘அவன்’ (வெனீசியன்) கடைசியில் ஒரு துருக்கியன் போலவே மொழியைப் பேசியும் மதமாற்றமடைந்தும் வாழ்கிறான். (துருக்கிய) மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளெனவும் தவறாமல் தொழுகை நடத்தியும் வாழ்கிறான். இங்கு தகவமைதல் நிகழ்கிறது
.
முரணாக, கடைசி அத்தியாயத்தில், தன்னிடம் வந்த குதிரைப் பயணி ‘அவனது’ (வெனீசில் வரையப்பட்ட) உருவத்தை உற்று நோக்கிவிட்டு, “ஆச்சரியம் என்னவென்றால் இவளவு காலம் ஒன்றாக வாழ்ந்தும் நீ அவரால் சற்றும் பாதிக்கப்படாமல் இருக்கிறாய்” என்கிறான். இங்கு எதிர்நிலை வெளிப்படுகிறது.
பிறகு மீண்டும் முரணாக “நீ இத்தாலிக்கே போனதில்லை என தெரிகிறது” என்கிறான் பயணி. பயணி கொச்சை துருக்கியிலும் ‘அவன்’ (வெனீசியன்) கொச்சை இத்தாலியிலும் பேசுகிறான்.
இவ்வாறாக ஒருவர் மீதே எதிரெதிர் அடையாள மதிப்பீட்டை வைப்பதன் மூலம் தனது மரபார்ந்த அடையாளத்துக்கும் வேறொரு சூழலில் வாழநேர்ந்து மாற்றமடைகிற அடையாளத்துக்குமான சிக்கலுக்குள் பிரதி செல்கிறது.
கீழைத்தேய – மேலைத்தேய முரண்
எதையுமே கடைசிவரை முயன்று பார்த்துவிடுவது என்ற மனோதிடம் ஹோஜாவுக்கு உண்டு. கனவு காணும் ஆற்றலும் அதை சாதித்துவிடும் வெறியும் அதற்கான அறிவுத் தேடலும் விடாமுயற்சியும் கொண்ட ஹோஜா அரசனைச் சூழ்ந்து பிழைப்பு நடத்துபவர்களை முட்டாள் கூட்டம் என்கிறான். இந்த ‘முட்டாள் கூட்டத்தின்’ பொதுப்புத்தியின் மீதான வெறுப்பு மற்றும் விசனம் எல்லாவற்றையும் கொண்டிருந்தாலும், “இவர்களையெல்லாம் மாற்றுவதற்கு இறுதிவரை முயன்று பார்க்கப் போகிறேன்” என்கிறான்.
தன்னை ஒரு ஞானிபோல அவன் உணர்கிறான். சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் ஒரு கோள் இருப்பதாக அவன் நம்புகிறான். முசூதி தொழுகைக்கான நேரத்தை அடையாளப்படுத்தும் பெரிய கடிகாரமொன்றை உருவாக்குகிறான். வெனிசிய மாணவன் -அதாவது தனது அடிமை- இடமிருந்து அவனது விஞ்ஞான அறிவையும் தனதாக்கிக் கொள்கிறான். ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் அது தனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று போலவும் அல்லது அதற்குமேலே தனக்கு தெரியும் என்பது போலவும் ஹோஜா எதிர்மறுப்புடன் நடந்துகொள்கிறான்.
மேற்கத்தைய -பரிசோதனைகள் மூலம் பெறப்படுகிற- விஞ்ஞான அறிவின் முன்னரே கீழைத்தைய அறிவானது அவதானிப்புகளின் மூலமும் தர்க்க சாத்திரத்தின் மூலமும் இயற்கை மீதும் மருத்துவம் மீதும் நம்பமுடியாத சாதனைகள் செய்துள்ளன. கிரகங்களை கண்டுபிடித்ததாயினும் சரி, கால அளவு கோல்களை மற்றும் கலண்டர்களை உருவாக்கியதாயினும் சரி, நூற்றாண்டுக்கும்கூட உடலை ‘மம்மி’ உருவாக்கம் செய்து பாதுகாத்து வைக்கும் முறையிலும் சரி, கட்டடக்கலையிலும் சரி, கடதாசி உருவாக்கத்திலும் சரி… என அதற்கு ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியில்கூட வெடிமருந்துகளை கண்டுபிடித்தது மற்றும் பற்சில்லு (அதுவன்றி இன்று எந்த இயந்திரமும் இயங்காது) போன்றவையும் (சீன) கீழைத்தேய வார்ப்புகள். இந்த அறிவுச் செல்வங்களின் நீட்சியாக மேற்குலகின் விஞ்ஞானம் பரிசோதனைகளுடனும் தர்க்கவியல் சிந்தனை முறையுடனும் வளர்ந்தது. ஆனால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ‘வெள்ளை மேலாதிக்கம்’ அதை ஏற்காது. கீழைத்தேய விஞ்ஞான மருத்துவ அறிவுத்தொடர்ச்சி காலனிய முறைமையின் மூலமும் அறுத்தெறியப்படது மட்டுமன்றி, அவை அவர்களால் சூட்சுமமாக களவாடவும் பட்டன.
இந்த முரண்கள் ஹோஜாவுக்கும் வெனீசியனுக்கும் இடையில் நடக்கிற உரையாடலின்போது ஹோஜாவின் எதிர்மறுப்புகளினூடாக அழகாக பின்னப்பட்டிருக்கிறது. (ஆனால் ஹோஜா வெனீசியனின் அறிவை உள்வாங்கிக் கொண்டும் இருக்கிறான்). அதாவது மேலைத்தேய மேலாளுமையை எதிர்மறுக்கிற போக்கு புத்திஜீவியான ஹோஜாவிடம் வெளிப்படுகிறது. இவையிரண்டும் இருவரிடமும் பரஸ்பரம் தாக்கம் புரிவதாகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்குள் ஊடாடுவதாகவோகூட வாசிப்பை நிகழ்த்த முடிகிறது.
இந்த எதிர்மறுப்பு மட்டுமன்றி ‘அவனின்’ (வெனீசியனின்) மேலாளுமையைவிட தனது மேலாளுமையை சுல்தான் மீது காப்பாற்றுகிற விதமாக, தனது பிரமாண்டமான பீரங்கி ஆயுதத்தை பல மாதங்களாக தானே உருவாக்குகிறான். அதற்குள் ‘அவன்’ (வெனீசியன்) மூலம் பெற்ற அறிவுச் செல்வமும் உள்ளடங்கியே இருக்கிறது. (இந்த காலகட்டத்தில் ஹோஜாவிற்குப் பதிலாக ‘அவன்’ அரண்மனைக்கு தொடர்ச்சியாக சென்று வருகிறான்.)
முடிவாக,
கதையின் கடைசியில் வெண்ணிறக் கோட்டை மீதான தாக்குதல் அதன் விளைவு ‘அவன்’ (வெனீசியன்), ஹோஜா ஆகிய இரு பாத்திரங்களின் அடையாள மாற்றம் என அத்தியாயம் முடிகிறது. (அதன் வாசகர்களுக்காக முடிவை தவிர்த்துவிடுகிறேன்)
அடுத்துவருகிற இறுதி அத்தியாயம் வாசகரை ஒரு சுழிக்குள் இழுத்து அலைக்கழிக்கிறது. மீண்டும் மீண்டும் அந்த அத்தியாயத்தை வாசிக்காமல் ஒரு தேர்ந்த வாசகர் கடந்துசெல்ல சாத்தியமில்லை என நினைக்கிறேன். நான் என்ற சுட்டலானது ‘அவன்’ இன் தன்னிலையில் தொடங்கி, அதே ஓட்டத்தில் ஹோஜாவின் தன்னிலையாக மாறி கதைசொல்லல் தொடர்கிறது.
அவனைத் தேடி வரும் வரும் பயணக் கட்டுரை ஆசிரியர் எவ்லியாவிடம்,
“இரண்டு பேர் தமது வாழ்க்கையை பரிமாற்றம் செய்துகொண்ட கதை என்னிடம் இருக்கிறது” என்கிறான் துருக்கியில் தனது இறுதிக்காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் அவன்.
“என்னால் இயன்றவரை என்னையும் என்னோடு பிரிக்க முடியாதபடிக்கு கலந்துவிட்டிருந்த அவனையும் இக் கதையில் உயிரோடு கொண்டுவர முயன்றேன்.”
“எல்லாவற்றையும்விட என்னை நானே அறி;ந்துகொள்ளும் மூடத்தனமான அருவருப்போடும் மூடத்தனமான பரவசத்தோடும் அவனை நேசித்தேன்” என்கிறான்.
இந்த அற்புதமான அனுபவத்தை, வாசிப்புப் பரவசத்தை அளவற்று அள்ளித் தந்திருக்கிறார் ஓரான் பாமுக்.
(காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்த இந் நாவலை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார் ஜி.குப்புசாமி.)
– ரவி 07092019
வாசிப்பும் உரையாடலும்-23 photos