நான் படித்த பாடசாலைக்கு சுமார் 100 மீற்றருக்குள் கடலில் அலைகள் ஓயாது நீந்திக்கொண்டிருக்கும். அவை நீர்த்திவலைகளை பாறைகளின் மேல் அள்ளி வீசியபடி இருக்க, நீர்மேவி வரும் காற்று சிலிர்த்தெழுந்து அலையின் ஓசையை எனது பாடசாலைவரை காவிவரும். எமது இரசனைக்காக ஏங்குவதுபோல் அலைகள் மூச்செறிந்து அழைக்கும் ஓசைக்கு எதிர்த்திசையில் நடந்து பக்கத்து கோவிலின் தேர்முட்டிப் படியில் எமது மதிய உணவை உட்கொள்வோம். மூடி தனியே அகலா அந்த சதுர பிளாஸ்ரிக் பெட்டியை அரசமர சலசலப்புக்குக் கீழே வாசனையை முகரத் துடிக்கும் காற்றினை விலத்தி, திறந்து சாப்பிட்டுக்கொண்டிருப்போம்.
அருகில் பொலிஸ் நிலையம். வீதிக்கு அப்பால் விளிம்பைப் பிடித்தபடி நீதிமன்றம்.. கவலை தோய்ந்த முகங்களும் பொலிஸ் பயமேறிய முகங்களுமாக அந்த வீதி தரித்திரத்தைச் சுமந்தபடி எப்போதும் இருக்கும். அன்றொருநாள் நண்பன் மதிய சாப்பாடு முடிய பிளாஸ்ரிக் பெட்டிகொள் நீரை ஏந்தியபடி பாடசாலை நோக்கி எம்முடன் வந்துகொண்டிருந்தான். “எதுக்கடா” என கேட்க கள்ளச் சிரிப்பை எறிந்தபடி வந்தான். சந்தியில் சீமெந்தால் கட்டப்பட்டிருந்த தபால் பெட்டிக்குள் அவன் திடீரென நீரை கவிழ்த்தான். எனக்கு வெறி தலைக்கேறியது. கண்டபடி திட்டினேன். அடிக்கவும் போனேன்.
பின்னரான காலங்களில் அவன் பாடசாலை ஆசிரியன் ஆனான் என கேள்விப்பட்டேன்.
இப்படியான ஓர் பாடசாலை மதியப் பொழுதில் நகரின் அச்சகமொன்றுக்கு இடையிடையே கடதாசித் துண்டுகளை சேகரிப்பதற்காக செல்வோம். பாடக் கணக்குகளை உதிர்த்து, தாள் துண்டுகளில் தூவி விடை தேடுவதற்கு அது உதவியது. அன்று நாம் மூன்று பேர் பாடசாலை சீருடையில் அச்சகத்தில் நின்று பிச்சை கேட்டோம். பேப்பர் துண்டுப் பிச்சை. அச்சகக்காரர் வழமைபோல் தாள் துண்டுகளை கைநிறையத் தந்தார்.
தந்தவருக்கு இன்று ஒரு கேள்வி பிறந்தது. “நீங்கள் எந்த ஊர்” என கேட்க, நானோ குறும்புக்காக அவரது ஊரை இழுத்துப் போர்த்திக் காட்டினேன். ஒரு புன்னகையை விட்டெறிந்த அவர், “தம்பி இங்கை வா” என யாரையோ அச்சகத்துக்குள்ளிருந்து அழைத்தார். எம்மைவிட வயதில் குறைந்த ஒரு சிறுவன் பாடசாலை சீருடையுடன் வந்தான். அச்சகக்காரர் தனது வழுக்கையை தடவியபடி “இவங்களைப் பார்க்க வல்வெட்டித்துறை ஆட்கள் மாதிரியா இருக்கு” என எம்மை சுட்டிக் காட்டி கேட்டார். எந்தத் தாமதமுமில்லாமல் அச் சிறுவன் ‘இல்லை’ என்றவாறாக தலையை ஆட்டிவிட்டு அச்சகத்துள் சென்றுவிட்டான். அச்சகக்காரர் திரும்ப ஒரு புன்னகையை விட்டெறிந்தார்.
நான் குறும்பாய் மெல்ல பறக்கவிட்ட பகிடி சிறகொடிந்து எமது குழந்தை முகத்தில் வந்து விழுந்தது. கீறல்களுடன் நாம் மெல்ல நழுவிய அந்த நாளுக்குப் பின் அந்த அச்சக ஒழுங்கையை ஏக மனம் மறுத்துவிட்டிருந்தது.
அந்த சிறுவன் பின்னரான காலங்களில் ஒருவேளை இயக்கமொன்றில் ஒரு தளபதியாக ஆகியிருத்தல் கூடும் !
fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/3079343605470046