ரகுமான் ஜானின் தொகுப்புகள் குறித்து..
கடந்த 18.08.2019 அன்று சூரிச் இல் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை, மூலோபாயம் தந்திரோபாயம் பற்றிய பிரச்சினைகளை உள்ளடக்கி மூன்று பகுதிகளாக வந்திருக்கும் -ஜான் மாஸ்ரர் தொகுத்தளித்துள்ள- நூல் பற்றிய அறிமுகம் நடந்தது. அதில் நான் வழங்கிய அறிமுகவுரையை பதிவாக்குகிறேன்.
தனது பால்ய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு தொடங்கிய அரசியல் தொடர்பு பின்னர் புளொட் இயக்கம், பின்னர் தீப்பொறி குழு, பின்னர் அதுவே கட்சியாக (தமிழீழ மக்கள் கட்சி) மாறியதான ஒரு நீண்ட அரசியல் வாழ்வுடன் தோழர் ரகுமான் ஜான் பயணம் தொடர்ந்திருந்தது. இன்று எல்லாம் உதிர்ந்துபோன நிலையிலும் தொடர்ச்சியாக கோட்பாட்டு ரீதியில் தன்னை வளர்த்துக்கொண்டிருப்பவர் அவர். அவர்கள் தீப்பொறி குழுவாக தலைமறைவு வாழ்வில் இருந்தபோது, புளொட் இன் உள் அராஜகங்களை அடிப்படையாக வைத்து கோவிந்தனால் “புதியதோர் உலகம்” நாவல் வெளிவந்து மக்களிடம் அதிர்வை ஏற்படுத்தியது.
தமிழீழ மக்கள் கட்சியின் கட்சிப் பத்திரிகையாக உயிர்ப்பு என்ற சஞ்சிகை வெளிவந்திருந்தது. ஏழு வருடங்களில் ஆறு இதழ்கள் வெளிவந்திரந்தன. பல கட்டுரைகள் கோட்பாட்டு ரீதியில் எழுதப்பட்டிருந்தன. இவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக ரகுமான் ஜான், மகா உத்தமன், நொபேட் (கோவிந்தன், கேசவன்) ஆகிய மூவரும் குறிப்பிடத்தக்கவர்கள். வேறு தோழர்களின் கட்டுரைகளும் அதில் இடம்பெற்றிருந்தன. அவர்களது 1985 பெப்ரவரியிலிருந்தான தலைமறைவுக் காலகட்டத்தில் அவர்களின் மிகக் கடினமான தேடலானது அவர்களின் சிந்தனை முறைகளை மாற்றியமைத்திருந்தது. இத் தொகுப்பு அதை ஆவணமாக்கியிருக்கிறது என சொல்ல முடியும்.
தொகுப்பிலுள்ள கட்டுரைகள் (ஒன்றைத் தவிர) எல்லாம் 1996 க்கு முன்னானவவை. மூன்று தொகுதிகளினதும் முகவுரைகள் மட்டும் இப்போ ரகுமான் ஜான் இனால் தமது அமைப்புப் பற்றிய ஒரு வரலாறாக, சுயவிமர்சனமாக எழுதப்பட்டிருக்கிறது. இத் தொகுப்புகளை அகநிலையானதும் வரலாற்று ரீதியிலானதுமான -கோட்பாட்டு அடிப்படையிலான ஆய்வாக கொள்ள முடியும்.
ஏன் முக்கியமானது.
இலங்கையில் தமிழ்மக்களின் வாழ்வானது அரசு இயந்திரம் தொடுத்த போராலும் எமது போராட்ட முறைமைகளாலும் நாராய்க் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மக்கள் களைத்துவிட்டார்கள். அவர்கள் இன்னொரு போராட்டத்தை இதே வழிமுறையில் யோசிக்கக்கூட தயாராக இல்லை. இதுவே நிகழ்காலம்.
எதிர்காலம் எப்படியிருக்குமென யாராலும் ஆருடம் சொல்ல முடியாது. வரலாறு சீராக நேர்கோட்டில் இயங்குவதில்லை. ஏற்ற இறக்கங்கள் கொண்டது. கிளர்ச்சிகள் கொந்தளிப்புகளையும் அவை பிரசவிக்கக்கூடியது என்பது வரலாறு பூராகவும் நிரூபிக்கப்பட்டே வருகிறது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகள் வழங்கப்படாமல் தொடர்ந்தும் பேரினவாதம் ஒடுக்கிக்கொண்டிருக்கும் வரை தமிழ் மக்கள் தமது புறநிலையானதும் அகநிலையானதுமான இருத்தலை தக்கவைக்க முனைந்து கொண்டிருப்பது நிகழும்.
இதற்கான இயங்குதளம் சமூகத்தின் பொதுப்புத்தியிலிருந்தே தோற்றம் பெறுகிறது. எமது இயக்கங்களின் தோற்றமும் தோல்வியும்கூட இதற்குள்ளால் நிகழ்ந்தவைதான். எனவே மக்கள் திரளின் பொதுப்புத்தி எப்போதும் வளர்ச்சிநிலையில் இருக்க வேண்டும். அதை குடும்பம் பாடசாலை போன்ற சிவில் சமூக நிறுவனங்கள் கவனத்தில் எடுக்கும் கல்விமுறையோ வாழ்முறையோ எம்மிடம் இல்லை. இந்தவகையில் அரசியல் சார்ந்த பொதுப்புத்தி மட்டத்தை இடையீடு செய்து சிந்திக்கவைக்க இதுபோன்ற தொகுப்புகள் முக்கியமானவை.
பொதுப்புத்தி
பொதுப்புத்தி என்பதை கிராம்சி இப்படி வரையறுக்கிறார். அது மதம், வரலாறு, ஐதீகம், மூடநம்பிக்கைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், அனுபவங்கள் என்பவற்றை உள்ளடக்கியிருக்கிற அதேநேரம், ஒவ்வொரு தத்துவ, சித்தாந்தப் போக்குகளின் அனுபவத் தொகுப்புகளின் வரலாற்று ரீதியிலான விளைவு பொதுப்புத்தி என்கிறார். பொதுப்புத்தி என்ற வடிவத்தில்தான் தத்துவம் பரந்துபட்ட மக்களிடையே நிலவுகிறது. அதனால் அதற்கு ஒரு உலகக் கண்ணோட்டம் இருக்கிறது என்பார் கிராம்சி.
அதனால் பொதுப்புத்தி நிராகரிக்க முடியாதது. அதேநேரம் மாறக்கூடியது. புறநிலையிலிருந்து தரப்படுகிற விஞ்ஞானக் கருத்துகள், தத்துவங்கள், சித்தாந்தங்கள் அதன்மேல் தாக்கம் செலுத்துகிறது. அதை மாற்றி வளர்ச்சிநிலைக்கு இட்டுச் செல்கிறது. இந்தவகையில் ரகுமான் ஜானின் இந்த தொகுப்புகளுக்கான தேவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வது என்பது, அந்த அனுபவங்களை முறையாகவும் ஆழமான கண்ணோட்டத்துடனும் ஆவணப்படுத்தி எதிர்கால சந்ததியிடம் கருத்தியல் தளத்தில் கையளித்தலுமாகும்.
மேலாளுமை
அதிகார சக்திகள் மக்கள் மீதான மேலாதிக்கத்தை வன்முறை இயந்திரங்களைக் கொண்டு மட்டும் நிலைநாட்டுவதில்லை. அது மக்கள் மத்தியிலுள்ள இந்த பொதுப்புத்திக்குள் அதற்கான நியாயத்தை கருத்தியல் ரீதியில் அல்லது தர்க்க ரீதியில் நிலைநாட்டி அதை அவர்கள் ஏற்கச் செய்வது அல்லது இசையச் செய்வதிலும் தங்கியிருக்கிறது. இதன்மூலம்தான் ஒடுக்குமுறை என்பது செயற்பட முடியும். இந்த அம்சத்தை கிராம்சி மேலாளுமை என்கிறார். இன்னொருவகையில் சொன்னால் அதிகாரம் செலுத்தலும் ஏற்றுக்கொள்ள வைத்தலும் இசைவாக இயங்கும் என சொல்லலாம். (அதை தமிழில் மேலாண்மை என ஆண்மொழியில் பெயர்த்துவிட்டார்கள். நான் அதைஉளவியல் தளத்தில் மேலாளுமை செய்து மேலாளுமை என குறிக்கவே விரும்புகிறேன்.)
இதன் அடிப்படையில் ஈழப்போராட்டம் தமிழ் மக்களிடையே நிலவிய பொதுப்புத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அரசு மற்றும் சிங்கள மக்கள் மட்டுமல்ல, மரபுப் புத்திஜீவிகளும் ‘மனிதாபிமானம்’ கொண்டவர்களும் தமிழ் மக்களின் தோல்வியுற்ற போராட்டத்தை உருமாற்றி, தமிழ்ச் சமூகத்தை “தோல்வியுற்ற சமூகமாக” உருவகிக்கிறார்கள். இதன்மூலம் உளவியல் தளத்தில் மேலாளுமை செய்து, அதிகாரத்துக்கு சேவகம் செய்கிற மனப்போக்குக்கு மக்களை ஆளாக்க முயற்சிக்கிறார்கள். இதில் தலையீடு செய்ய வேண்டியது சமூகப் புத்திஜீவிகளின் வரலாற்றுக் கடமையாக உள்ளது.
எனவே ஈழப்போராட்டத்தை புறநிலையில் நின்று கோட்பாட்டு கருவியுடன் பார்த்தல் என்ற அம்சத்தோடு மட்டுமல்லாமல், அதன் அகநிலையில் நின்று பார்க்கிற பார்வைகள் இன்னும் அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. ஈழப்போராட்டத்தில் கலந்துகொண்ட நீண்ட அனுபவமும் கோட்பாடு தத்துவம் என்ற தளங்களில் தன்னை தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவருமான தோழர் ரகுமான் ஜான் ஒரு வரலாற்றுப் பணியை இத் தொகுப்பின் மூலம் ஆற்றியிருக்கிறார்.
• தமது இயக்கம் அல்லது அமைப்பு குறித்தான சுயவிமர்சனப் பார்வைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
• தமிழீழக் கட்சியின் முதலாவது காங்கிரஸ் 1998 (13 ஆண்டுகால உழைப்பு)
• 1991 இல் கேவசன் கைது, கொலை
• தலைமறைவு வாழ்க்கை (புலி, புளொட், இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் என்பவற்றிடமிருந்து)
• அமைப்பை தலைமறைவாக்குவதா அடையாளம் காணப்பட்ட தோழர்களை தலைமறைவாக்குவதா என்ற பிரச்சினை. அதில் நடந்த தவறுகள்
• மக்கள் யுத்தம் குழு தோழர் கோதண்டராமனனின் தொடர்புகள், கோட்பாட்டுப் புரிதல்கள்
• வெளிநாட்டுக் கிளைகள் செயற்பாடுகள் விமர்சனங்கள்
• மனிதம், தூண்டில், சமர், சரிநிகர் போன்ற புகலிட சிறுபத்திரிகைகளில் வந்த அரசியல் விவாதங்களில் உயிர்ப்பும் பங்குகொண்டமை (அவை குறித்த கட்டுரைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன)
• மார்க்சிய தத்துவ கோட்பாட்டு தேடல்கள்
என விரிவான அனுபவங்களும் சிந்தனை மாறுதல்களும் பேசப்படுகின்றன.
பொதுவில் ஒரு போராட்ட அமைப்பு சார்ந்த கலாச்சாரம் ஒன்று உருவாக வேண்டும் என்பது அவசியம் என்றளவில் இந்த தொகுப்பு அல்லது ஆவணம் ஒரு சொத்துத்தாக எதிர்காலத்துக்கு விட்டுச் செல்லப்படுகிறது எனலாம்.
மாக்சியம்
இடதுசாரிக் கட்சிகளுக்கு வெளியே வைத்துப் பார்த்தால் மார்க்சியம் போராட்டத்தோடு இளைஞர்களிடம் அறிமுகமாகிறது. மார்க்சிய புத்தகங்களை காவித் திரிவது ஒரு புத்திஜீவித அந்தஸ்தாக படிப்படியாக மாற்றமடைந்தது. பொருளாதாரம் அடிக்கட்டுமானமாகவும் அரசியல் கலை இலக்கியம் பண்பாடு என்பன மேற்கட்டுமானமாகவும் மார்க்ஸ் வரையறுத்ததை அப்படியே வரட்டுச் சூத்திரமாக எல்லாவற்றையும் பொருளாதாரம்தான் நேரடியாக தீர்மானிக்கிறது என்ற வியாக்கியானம் பலமாக வெளிப்பட்டது. (இதை பொருளாதாரவாதம் என்பர்). அடிக்கட்டுமானமும் மேற்கட்டமானமும் ஒன்றோடொன்று பரஸ்பரம் தாக்கம் செலுத்துவதை முற்றாக புறக்கணித்து, வரட்டு மார்க்சியமாக அதை புரிந்துகொண்டனர்.
இந்த விசயம் மார்க்சின் காலத்திலேயே முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட போதும் அது எம்மை ஒரு நூற்றாண்டு கடந்து வந்தடைந்திருக்கிறது. இந்த பொருளாதாரவாதத்தை மார்ச்சியமாக புரிந்து அதை முன்வைத்தவர்களைப் பார்த்து “இதுதான் மார்க்சியம் எனில், நான் ஒரு மார்க்சியவாதி இல்லை” என சொன்னார் கார்ல் மார்க்ஸ்.
இந்த பொருளாதாரவாத பார்வைகள் பற்றிய விவாதங்கள் இத் தொகுப்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மேற்கட்டுமானங்கள் என வரையறுக்கப்படுபவை தன்னளவில் சுயாதீனமாகவும் செயற்படுகிற களங்கள் பற்றி இந்நூலில் விளக்கமாக எழுத்துகள் இருக்கின்றன.
மார்க்சைக் கடந்து லெனின், ஸ்ராலின், மாவோ ஆகிய சிந்தனையாளர்களைக் கற்பதும் அதைத் தொடர்ந்து மார்க்சியத்துக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சிய அல்லது அதன் போதாமைகளுக்குள் சென்ற அல்தூசர், அந்தோனியா கிராம்சி என தேடலை மேற்கொண்டு அவைபற்றி விவாதித்து தமது சிந்தனையை வளம்படுத்தியது பற்றியும் அதன் வெளிச்சத்திலும் இத் தொகுப்பில் கட்டுரைகள் வந்திருக்கின்றன.
அல்தூசர்
மேற்கட்டுமானங்கள் என வரையறுக்கப்படுபவை அடிக்கட்டுமானத்துக்கு வெளியே தன்னளவில் சுயாதீனமாகவும் செயற்படுகிறதை விளக்கும் கோட்பாடான “அமைப்பியல்வாதம்” அல்தூசரின் கொடை எனலாம்.
சமூக உருவாக்கம் என்பது கட்டமைப்புகளின் இணைவு என்ற அவர் அவைகளை இவ்வாறு வரையறுக்கிறார்.
1. பொருளாதாரக் கட்டமைப்பு
2. அரசியல் கட்டமைப்பு
3. சித்தாந்தக் கட்டமைப்பு
4. கோட்பாட்டுக் கட்டமைப்பு
5. அழகியல் கட்டமைப்பு
இந்த கட்டமைப்புகள் சார்பளவிலான சுயாதீனம் கொண்டவை. தனித்தனியான பண்புகளுடன் தனக்கேயுரிய விதிகளுடன் தத்தமது தளங்களில் இயங்குபவை என்றார்.
அதனடிப்படையில் சாதியம் பெண்ணியம் போன்ற சமூக ஒடுக்குமுறைகளின் மீதான பார்வைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை வளர்த்துச் செல்லப்படுவதற்கான தளத்தை இத் தொகுப்பும் முன்வைக்கிறது.
சாதியம்
சாதியமைப்பானது இந்தியாவில் சிறுபான்மை (பார்ப்பனர்) பெரும்பான்மையை (தலித்துகளை) ஒடுக்குதலாகவும், இலங்கையில் அது பெரும்பான்மை (வேளாளர்) சிறுபான்மையை (தாழ்த்தப்பட சமூகத்தை) ஒடுக்குதலாகவும் நிலவுகிறது. அதாவது பிரமிட்டின் தலைகீழ் வடிவம். இந்தியாவில், மனுதர்ம சாத்திரமானது பிராமணர், சத்திரியர், வைசிகர், சூத்திரர் என்ற வகைப்பாடுகளை கொண்ட அதேநேரம், இலங்கையில் பிராமணர்-சூத்திரர் என்ற வகைப்பாடுகளை அது கொண்டிருந்தது. இங்கு ஆமுகநாவலரின் பங்கானது தனது சித்தாந்த மேலாளுமை மூலம் சூத்திரரை சற்சூத்திரர் (வேளாளர்) அசற்சூத்திரர் (தாழ்த்தப்பட்ட மக்கள்) என்ற வகைப்பாடுகளை உருவாக்கி பேணியதாக அமைந்தது.
ஆறுமுகநாவலர் பற்றிய பார்வைகள் இத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க ஒன்று. அவரது ஆங்கிலமொழி மற்றும் கிறிஸ்தவ மத எதிர்ப்பானது கொலனித்துவத்துக்கு எதிரான தேசியத்தன்மை வாய்ந்தது என்ற கருத்து குறித்து பேசப்படுகிறது. சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவையான சித்தாந்த மேலாளுமையை சூழ்ச்சிகரமாக நாவலர் செய்து முடித்தார் என்பதையும் சொல்கிறது.
சாதியம் நிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்சம் எனவும் மேல்கட்டுமானம் எனவும் சமன்பாட்டு ரீதியில் தமிழ் மார்க்சியவாதிகளால் முன்வைக்கப்பட்டு அணுகப்பட்டது. இதன் அடிப்படையில் சோசலிச சமூகத்தில் சாதி (பெண்ணொடுக்குமுறைளும் கூட) இல்லாமல் போய்விடும் என அவர்கள் கருதினார்கள்.
முதலாளித்துவ நிலைக்கு வளர்ச்சியடைந்த அரசியல் வடிவத்துள் சாதியத்தின் தீண்டாமை பெருமளவு ஒழிந்துபோனதற்கு சணமுகதாசனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டமும் ஒரு முக்கிய காரணம். சோசலிசப் புரட்சிவரை காத்திராமல் அதை அவர்கள் தனித்தளமாக கருதி முன்னெடுத்தார்கள். இது இடதுசாரிகள் மீதான மேற்படி (பொருளாதாரவாத) கருதுகோளுக்கு முரண்நிலையாக இருந்ததாக கொள்ளலாமா என்பதை உரையாடலுக்கு விட்டுவிடுகிறேன்.
தமிழ்த் தேசிய போராட்டத்தில் சோசலிச தமிழீழம் கிடைத்தால் சாதி ஒழிந்துவிடும் என இயக்கங்கள் கூறின. புலிகளைப் பொறுத்தவரை முதலில் தமிழீழம் பிறகு சமூக ஒடுக்குமுறைகளை களைவது அல்லது அதுவாகவே காணாமல் போய்விடும் என்பதான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தேசியவிடுதலையையும் சமூகவிடுதலையையும் ஒருசேர எடுத்துச் செல்வது பற்றிய நிலைப்பாட்டை ஒருசில இயக்கங்கள் முன்வைத்தன. அந்த நிலைப்பாட்டை தமிழீழ மக்கள்கட்சியும் எடுத்திருந்தது.
பெண்ணியம்
எமது விடுதலைப் போராட்டத்தில் ஆயுதமேந்திப் போராடுவது பெண்விடுதலையாகக் காட்டப்பட்டது.
ஒடுக்கப்படும் சக்திகளை மன்னர்கள் மட்டுமல்ல நிலப்பிரபுக்கள்; தேசிய அரசுகள், கொலனித்துவ அரசுகள் எல்லாமே பயன்படுத்தியிருக்கின்றன. புலிகளும் இதை செய்திருக்கின்றன. அந்த ஒடுக்கப்பட்ட பிரிவினர் தங்கள் நலனுக்காக அன்றி ஆதிக்கசக்திகளின் நலனுக்காகவே போராடினார்கள். அதில் சித்தாந்தத்தின் பங்கு பற்றி நூல் பேசுகிறது.
ஓரிடத்தில்,
“வரலாற்றுப் போக்கில் பெண்களை ஒரு ஒரு சமூகசக்தியாக கருத்தில் எடுத்து செயற்படுமாறு வரலாறு புலிகளை நிர்ப்பந்தித்தது.“ என நூலில் வருகிறது.
“பெண்கள் இரகசியங்களை காப்பாற்ற முடியாதவர்கள்” என்பது உட்பட, பெண்கள் மீதிருந்த ஆணாதிக்க கருத்துநிலையில் நின்ற விடுதலைப் புலிகள் அமைப்பானது தலைவரது திருமணம், ஆட்பற்றாக்குறை, பண்பாட்டுப் புகலிடம் போன்ற காரணிகளால் தவிர்க்கமுடியாதபடி பெண்களை போராட்டத்தில் இணைத்துக் கொண்ட அம்சங்களை கவனத்தில் எடுக்காது, மேற்படி கருத்து முன்வைக்கப்படுவது என்னளவில் விவாதத்துக்கு உரியது.
வுரலாற்றுப்போக்கு பெண்களை ஒரு சமூகசக்தியாக மாற்றியிருந்திருக்குமானால் அந்த வரலாற்றுப் போக்கு புலிகளின் வீழ்ச்சியின்பின் பெண்போராளிகளை சமூகத்திலுள்ள பெண்களுக்கு அடுத்த இடத்துக்குள் தள்ளிவிட்டதை எப்படி விளங்கிக் கொள்வது.
எனவே நூலில் வரும் மேற்படி கூற்று ஒரு விவாதத்துக்குரிய கருத்து என்றே நினைக்கிறேன். இதை உரையாடலுக்கு விட்டுவிடுகிறேன்.
இந்த விடுதலையானது,
• தலைமைப் பண்பு
• வழிநடத்தும் சித்தாந்தம்
• யுத்தம் முன்வைக்கும் சமூகபொருளாதார தீர்வுகள்
என்பவற்றைக் கொண்டு முன்வைக்கப்படுகிறது
“முற்றிலும் தனிநபரது கரங்களில் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டிருக்கிற ஒரு எதேச்சாதிகார அமைப்பானது இந்த திசையில் ஓர் அடியைத் தன்னும் எடுத்து வைப்பது சாத்தியமா என்பது தர்க்க ரீதியில் எழும் கேள்வியாகிறது” என்கிறது நூல்.
சீதனம் குறித்து நூல் என்ன சொல்கிறது.
சீதனத்தையும் டொனேசனையும் வேறுபடுத்துவதோ சீதனத்தை தாய்வழிச் சொத்தின் இயல்பான பகிர்வு என்பதோ சுத்த மோசடித்தனம் என்று சொல்கிறது. இதுகுறித்து தேசவழமைச் சட்டத்தில் பெண்களின் சொத்துரிமையானது சீதனம் என்ற பெயரிலாவது உத்தரவாதப்படுத்தப் பட்டிருப்பது குறித்து சொல்லும்போது, முதலாளித்துவ நாடுகளில் போராடிப் பெற்ற சொத்து குறித்த அம்சங்கள் தே.வ.ச இல் உத்திரவாதப்படுத்தப்பட்டதை நேரான அம்சமாகக் காண்கிறது. கடைசியில் இதன்பெயரால் சீதனத்தை நியாயப்படுத்தவும் முடியாது என்கிறது.
என்னதான் சொல்ல வருகிறது என்பதை விவாதத்துக்கு விடுகிறேன்.
முஸ்லிம் மக்கள் குறித்து
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் என ஒரு கட்டுரை வருகிறது. நீண்ட கட்டுரை. மிக விரிவாக முன்வைக்கப்படுகிறது. இது முன்னர் தனி நூலாகவும் வெளிவந்திருந்தது.
அவர்களை ஒரு தனித் தேசிய இனமாக தமிழீழ மக்கள் கட்சி அங்கீகரித்திருந்தது. அவர்கள் தம்மை தனித்துவமான அம்சங்களைக் கொண்டதாக உணர்கிறார்கள் என்கிறது.
விடுதலைப் போராட்டத்துக்கும் அவர்களுக்கும் நிலவிய அந்நியத்தன்மை குறித்தும், அதேநேரம் போராளிகளுடனான அவர்கள் உறவு குறித்தும், போராளிகள் நடத்திய படுகொலைகள் குறித்தும் பேசுகிறது.
முஸ்லிம் மக்களை யாழிலிருந்து பிடுங்கி எறிந்தது ஒரு தேசியக் கொலை என்பதில் என்னிடம் மாறுபட்ட கருத்தில்லை. வரலாற்றுக் கறை அது. தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஒரு இனம் இன்னொரு தேசிய இனத்தை ஒடுக்குவது என்பது ஓர் அறமேயல்ல. மன்னிக்க முடியாதது என்பதை திரும்பத் திரும்ப சொல்லவேண்டியே இருக்கிறது.
ஆனால் “முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்டபோது தமிழ் மக்கள் மௌனமாக இருந்தனர்… அதற்குக் காரணம் யாழ் சைவ வேளாள ஆதிக்க மனப்பான்மை” என்பதை இந் நூலும் முன்வைக்கிறது. அது ஒரு முக்கியமான காரணம்தான். அதேநேரம் தமிழ் மக்கள் சக இயக்கப் படுகொலையின் போதும் உட்படுகொலையின் போதும்கூட தமது பிள்ளைகளுக்காக வீதியில் இறங்க முடியாத ஒரு சர்வாதிகார சூழலுக்குள் அகப்பட்டு மௌனிகளாக இருந்தனர். பலவந்தமாக அவர்களிடமிருந்து நிதி உட்பட பங்கர் வெட்டுதல் ஈறாக பங்களிப்புகள் கோரப்பட்டபோதும் மறுத்தவர்களை சிறையில் அடைத்தபோதும்கூட அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். இந்த மௌனத்துக்கு எந்த சித்தாந்தம் வழிவிட்டது. அதிகாரம் … அது ஏற்படுத்தி வைத்திருந்த அரசியல் சூழல் என்பன கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. ஓர் ஆய்வு மனம் ஒரு தனிக் காரணியோடு திருப்தியடைய முடியாதுதானே.
ஒல்லாந்தர் காலத்தில் முஸ்லிம் மக்களை நல்லூரிலிருந்து வெளியேற்றும்படி சைவ சித்தாந்திகள் கவர்ணரிடம் மனுக்கொடுத்தார்கள். அது கவர்ணரால் மறுக்கப்பட்டபோது அவர்களின் கிணறுகளில் பன்றி இறைச்சியை வீசினார்கள். இந்த மனோநிலை வளர்ச்சியடைந்து பின் இராமநாதன் உடன் தொடங்கி இயக்கங்கள்வரை அது தொடர்ந்த ஓர் முஸ்லிம் எதிர்ப்பு வரலாற்றை இந் நூல் கவனம்கொள்ள வைக்கிறது.
மலையக மக்கள் குறித்து
மலையக மக்களை ஒரு தனித் தேசிய இனமாக ஏற்றுக்கொள்கிறது. மலையகம் குறித்தான கட்டுரை தனியாக இல்லை. ஆனால் அவர்கள் குறித்த பதிவுகள் மற்றைய கட்டுரைகளில் ஆங்காங்கு வருகின்றன. 1970 களுக்கு முற்பட்ட காலம்வரை மொத்த தேசிய வருமானத்தில் 75 வீதத்தினை ஈட்டிக் கொடுத்தனர் மலையகத்தவர்கள். இதைக் கொண்டு, மலையகம் தவிர்ந்த சிங்கள பிரதேசங்களின் வளர்ச்சி (நெடுஞ்சாலை.. சமூகநலத் திட்டம் போன்றவை) மேற்கொள்ளப்பட்டன என்பதை நூல் பதிந்திருக்கிறது.
புலிகளை அடையாளம் காண்பது குறித்து
அநேகமாக எல்லாக் கட்டுரைகளும் கோட்பாட்டு ரீதியிலான ஆய்வுப் போக்கில் முன்வைக்கப்படுகிறது. சம காலத்தில் மனிதம், சமர், தூண்டில் ஆகிய புகலிட சஞ்சிகைகளிலும் சரிநிகர் பத்திரிகையிலும் இந்த விடயம் குறித்து விவாதங்கள் நடந்தன. புலிகள் யாருடைய நலனை பிரதிபலிக்கிறார்கள் என்ற கேள்விக்கு தரகு முதலாளிகளின் நலனை எனவும் தமது குழுநலனை எனவும் என பல பார்வைகள் பலதரப்பட்டவர்களாலும் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்த மிக ஆழமான விவாதங்கள் இந் நூலில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
“குழுநலன்” என்ற கருத்துநிலையை புலிகள் குறித்தான விடயத்தில் நூல் நிராகரிக்கிறது. “புலிகள் தாம் விரும்பியபடியெல்லாம் செயற்படும் திறமையுள்ள, சமூக இயங்குவிதிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு குழுவாகக் கருத முடியாது” என்கிறது. அதனால் குழுநலன் என்ற கருத்தாக்கம் தவறானது என்கிறது.
ஆனால் இன்னொரு இடத்தில்,
“புலிகள் தாமே ஒரு சமூகசக்தியாக உருவாகி, சமூக அடுக்கின் உயர்ந்த அடுக்கில் தம்மை நிலைநிறுத்தினார்கள்” என்ற கருத்தை முன்வைக்கிறது. பிறிதோர் இடத்தில், “முற்றிலும் தனிநபரது கரங்களில் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டிருக்கிற ஒரு எதேச்சாதிகார அமைப்பு“ என்கிறது.
குழுநலன் என்பதற்கு எதிராக மேலே வைக்கப்படுகிற வாதமானது இந்தக் கூற்றால் அடிபட்டுப் போகிறது என நினைக்கிறேன். இது விவாதத்துக்குரிய ஒன்றாகும். இதை உரையாடலுக்காக விடுத்து கடந்து செல்கிறேன்.
மேலும், “புலிகள் அமைப்பினுள் யாழ் சைவ வேளாள ஆணாதிக்க சித்தாந்தம் மேலாளுமை செலுத்துவதால் அவர்கள் தாமே ஆகிய சமூகசக்தியாக இருக்கின்றனர். தமக்கான சமூகசக்தியாக இல்லை.” என்று மயக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது.
வன்முறைக் கூறுகளைக் கொண்ட சமூக இயங்குவிதிமீது அதிகாரம் அல்லது மேலாதிக்கம் செலுத்தி பெறப்பட்ட பாசிசத்தன்மைகள் இச் சமூகசக்திகளின் இயல்பான இயங்குவிதிகளை இடையூறுசெய்தன அல்லது தீவிரமாக்கியது என நான் நினைக்கிறேன். தமிழ்ச் சமூகத்தில் இருந்த வன்முறை மனோபாவத்தை கூர்மையாக்கி கொலைகள் அரிதாக நிகழ்ந்த பண்பாட்டை கொலைக் கலாச்சாரமாக மாற்றியதில் -மற்றைய இயக்கங்களுடன் சேர்த்து- புலிகளுக்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது. இவற்றை புறந்தள்ளி, இயல்பான சமூக இயங்குவிதிகளின் போக்கிற்கு உட்பட்டு புலிகள் இயக்கமுற்றதாக நான் கருதவில்லை.
புலிகளின் போராட்டத்தில் தமிழ் மக்களின் தேசிய நலன்கள் இருந்தன. அந்த உண்மையே புலிகளின் இருத்தலை முக்கியமாக தீர்மானித்தது. இன்றும்கூட புலிகளை ஆதரிப்பதற்கான அல்லது அனுதாபத்துடன் நோக்குவதற்கான நியாயத்தை அந்த பொருந்திப்போகிற தேசிய நலன்களே வழங்குகிறது.
“புலிகளை நிராயுதபாணியாக்குவது என்பது அவர்களை சித்தாந்த ரீதியில் நிராயுதபாணியாக்குவதை முன்நிபந்தனையாகக் கோருகிறது“ என்கிறது. அதாவது அது மறைமுக அர்த்தத்தில் போரை பரிந்துரைக்கவில்லை. அதேபோல் அதை எதிரியின் கைகளில் ஒப்படைக்கவுமில்லை. இது குறிப்பிடத்தக்க கோட்பாட்டு ரீதியிலான பார்வை எனச் சொல்ல முடியும்.
இந்த இடத்தில் 2009 காலகட்டத்தில் பல மாற்று கருத்தாளர்கள் தவறிழைத்திருந்ததும், அதனால் இந்த யுத்தத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரித்ததும் ஒரு துயரம். பொதுவில் யுத்தத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் அவர்கள், இந்த யுத்தத்தை ஆதரித்தது அவர்களது கோட்பாட்டுக்கு முரணாக வந்து நின்றதை கவனிக்காததன் மூலம் வெறும் வெறுப்பு அரசியலை முன்னெடுத்தார்கள். யுத்தத்துள் அகப்படப் போகிற மக்கள் குறித்தோ மற்றைய காரணிகள் குறித்தோ அவர்கள் கவனம் செலுத்தவில்லை. உடனடி விளைவுகளை பார்க்க துடித்தனர். ஒரு தர்க்கமாக அரசு கொன்றதை விடவும் புலிகள்தான் அதிகளவு மக்களை கொலைசெய்திருந்தார்கள் என எந்த ஆய்வுமற்ற எடுகோளால் தற்காப்பு நிகழ்த்தினார்கள்.
புலிகள் பேரினவாத ஒடுக்குமுறையின் ஒரு விளைபொருள். புலிகளை அரசியல் தளத்தில் இல்லாமலாக்குவது அரசின் கையில்தான் இருந்தது. புலிகளின் அழிவின்பின் பேரினவாதம் இன்னமும் பலமாகிக்கொண்டு போகிறது. புலிகளின் அழிவின் பின் பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. அரசியல் தீர்வுக்கு புலிகள் மட்டுமே தடையாக இருந்தார்கள் என்ற குரலுக்கு என்னவாயிற்று.
இதற்கு மாற்றான கோணத்தில் தேசியவிடுதலைப் போராட்டத்தை முற்போக்கு சக்திகள் அரசியல் ரீதியில் புலிகளிடமிருந்து கைமாற்றிக்கொள்வதன் அவசியம் பற்றிய கருத்துகள் வழிமுறைகள் இந் நூலில் அழுத்தமாகப் பேசப்பட்டிருக்கின்றன.
தேசியவாதம் குறித்து
இதுகுறித்து பலமான விவாதங்கள் 80 களிலிருந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. புகலிட சஞ்சிகைகளோடு உயிர்ப்பு இதழும் பங்குபற்றியிருந்தது. அது இந் நூலில் உள்ளடங்கியிருக்கிறது.
அடிப்படையில் தேசியவாதம் பிற்போக்கானது எனவும், தேசியம் என்பதே ஒரு கற்பிதம் எனவும் கருத்துகள் தற்காலத்தில் ஒரு பகுதியினரால் முன்வைக்கப்படுகிறது.
• தேசியவாதம் பிற்போக்கானதுதான் என்றால் கொலனித்துவத்துக்கு எதிராக நடந்த தேசியப் போராட்டங்கள் பிற்போக்கானதா
• ஆக்கிரமிப்பகளுக்கு எதிரான போராட்டம் பிற்போக்கானதா
• இன்று பலஸ்தீனத்தில் நடப்பதும் ஒரு தேசியப் போராட்டம்தான். அதை எப்படி ஆதரிக்க முடியும்.
• நவகாலனியத்துக்கு எதிரான போராட்டங்களை ஆதரிப்பதா விடுவதா?
போன்ற கேள்விக்கு என்ன விடை இருக்க முடியும்.
இந்த நூலைப் பொறுத்தவரை, தேசியவாதத்தை முற்போக்குத் தேசியம், பிற்போக்குத் தேசியம் என இரண்டாகப் பிரிக்கிறது. “தேசிய அரசை அமைப்பது -மற்றைய தேசிய இனங்களை ஒடுக்காதபோது- முற்போக்கு தேசியவாதமாகிறது. மற்றைய தேசிய இனங்களை ஒடுக்கிறபோது பிற்போக்கு தேசியமாகிறது“ என்கிறது.
“தமக்கான தேசிய அரசை கொண்டுள்ளவர்கள் பேசும் தேசியவாதத்துக்கும் தமக்கான தேசிய அரசுக்காகப் போராடும் தேசியவாதத்துக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது“ என்பதையும் பதிவுசெய்கிறது.
நான்கு வகைத் தேசியங்களை வரையறுக்கிறது.
1. ஐரோப்பிய மாதிரித் தேசியவாதம்
2. குடியேற்றவாதிகளின் தேசியவாதம்
3. உத்தியோகபூர்வத் தேசியவாதம்
4. கொலனித்துவத்திலிருந்து விடுதலை பெறும் தேசியவாதம்
இலங்கையின் தேச உருவாக்கம் சிங்கள தேச உருவாக்கமாக பரிணமித்ததை உத்தியோகபூர்வ தேசியவாதம் என்கிறது.
தமிழீழ மக்கள் கட்சியின் அரசியல் திட்டம்
தமிழீழ ஜனநாயகக் குடியரசை நிறுவுவதே அதன் இலக்காக சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கான மூலோபாயம் தந்திரோபாயம், அமைப்பு வடிவம், கோட்பாட்டுருவாக்கம் குறித்தெல்லாம் மிக ஆழமாகப் பேசப்பட்டிருக்கிறது.
தரப்படுத்தல்
பல்கலைக் கழக அனுமதியானது,
1970 இல் 40 வீதம் தமிழர்கள் 58 வீதம் சிங்களவர்கள்
1975 இல் 19 வீதம் தமிழர்கள் 78 வீதம் சிங்களவர்.
என்றவாறாக இருந்ததாக புள்ளிவிபரத்தைத் தருகிறது.
கல்வி தமிழர்களுக்கு மூலதனமாக எப்படி மாறியது, ஏன் மாறியது, தரப்படுத்தலின் தாக்கம் என்பது பற்றியெல்லாம் பேசுகிறது.
இங்கே எனது கருத்தொன்றை பதிவுசெய்கிறேன்.
“யாழ்ப்பாணத்தார்தான் பாதிக்கப்பட்டது. இலங்கையின் மற்றைய பகுதிகளிலிருந்தவர்கள் நன்மையடைந்தார்கள். கிழக்கு, வன்னி, மலையக மக்கள் பயனடைந்தார்கள்” என்ற வாதங்கள் தொடர்ச்சியாகவே இருக்கிறது. உண்மைதான்.
அதேநேரம், இதற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது.
1970 இல் கொண்டுவரப்பட்ட இனரீதியிலான தரப்படுத்தலானது, 1971 இல் பிரதேச வாரியான தரப்படுத்தலாக மாற்றப்பட்டது. இந்த இரு நிலைகளிலும் யாழ் வேளாளர் மட்டும் பாதிப்படையவில்லை. சாதிய அமைப்பை கறாராகப் பேணிய பிரதேசம் யாழ்ப்பாணம் எனும்போது, அங்கு வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட நேர்ந்ததை யாரும் கண்டுகொண்டதில்லை. வேளாளர் அளவுக்கு சமூக பொருளாதார வசதிகள் கொண்டிராத விளிம்புநிலை மக்கள் அவர்கள். அவர்களின் பாதிப்பை கண்டுகொள்ளாமல், அல்லது நிகழ்காலத்திலோ எதிர்காலத்திலோ வைத்துப் பார்க்காமல் வேளாளர் பாதிக்கப்பட்டதை கொண்டாடுகிற ஒரு மனநிலை சாதியத்துக்கு எதிராக குரல்கொடுப்பவர்களுக்கும் அதை தாம் பிரதிநிதித்துவப் படுத்துவதாக நம்பச் சொல்பவர்களுக்கும் எப்படி வந்தது என்பது கேள்விகேட்கப்பட வேண்டிய ஒன்று !
குழப்பம்
“சக்திகளின் பலம் பலவீனம் பற்றிய பிரச்சினை“ என்ற கட்டுரை நூல் முழுவதும் புலிகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருந்ததை ஒருவித குழப்பத்துக்கும் மயக்கத்துக்கும் உள்ளாக்குவதாக அமைந்திருக்கிறது.
பலம் என்ற அட்டவணைப்படுத்தலுள்..
• ஈழத் தமிழர் மத்தியில் மேலாண்மை செலுத்தம் சித்தாந்தத்தை தாமும் முன்னெடுப்பது.
• தமக்கு போட்டியாக வரக்கூடிய சக்திகளை முன்கூட்டியே முளையில் களையெடுத்து விட்டிருப்பது
என வருகிறது.
இவை பலமா என்ன?
பிறகு, பலவீனம் என்பதற்குள்…
• புலிகள் வரலாற்றில் மிகவும் பிற்போக்கான ஒரு சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்வது.
• தவறான ஆதிக்க சித்தாந்தத்தால் -அதாவது யாழ் சைவ வேளாள ஆணாதிக்க சித்தாந்தத்தால்- வழிநடத்தப்படுவது
என சரியாகவே குறிப்பிடுகிறது.
இந்த பலவீனங்களை சொல்லிவிட்டு,
“உறுதியான கூட்டாளிகள்” என்ற வரிசையில் விடுதலைப் புலிகளையும் சொல்கிறது.
பிறகு மீண்டும் அடுத்த வரியில் “உறுதியற்ற கூட்டாளிகள்” என்ற வரிசைப்படுத்தலில் யாழ் சைவ வேளாள பிரிவை உள்ளடக்குகிறது.
நூல் முழுவதும் தனது சாராம்சத்தில் அழுத்தமாகவும் கோட்பாட்டு ரீதியிலும் முன்வைத்த விடயங்களை குழப்பத்துக்கு உள்ளாக்குகிறது இக் குறிப்பான கட்டுரை.
• புரட்சிகர சக்திகள் அரசியல் செய்வதற்கான அடிப்படை ஜனநாயக உரிமையை புலிகளிடம் எதிர்பார்த்தல்
• புலிகளுடன் ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டுதல்
என ஒரே குழப்பமாக… இந்தக் கட்டுரை நூற் தொகுதியிலிருந்து துருத்திக்கொண்டு வெளியே நிற்கிறது. இக் கட்டுரையின் 180, 181 ம் பக்கங்களில் இந்த முரண்நிலைக் குழப்பங்கள் தொடர்ந்தபடியே இருக்கிறது.
“இன்றுள்ள நிலையில் புலிகளை பலவீனப்படுத்துவது என்பது ஈழத் தமிழரது போராட்டத்தை பலவீனப்படுத்துவதாகவே அர்த்தப்படும்” என்கிறது. ஏற்கனவே முற்போக்கு சக்திகள் புலிகளை அரசியல் அரங்கிலிருந்து அகற்றி போராட்டத் தலைமைப் பாத்திரத்தை கையேற்பது பற்றி பேசிவிட்டு இப்போ முரணாக பேசுகிறது.
வேறு கருத்துகளுக்கு களம் கொடுத்தே இக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டது என்ற நியாயப்படுத்தலை முன்வைத்தால் அதை ஏற்றுக்கொள்வதா விடுவதா என்ற விவாதத்துக்குமுன்,
ஒரு கட்டுரை தனக்குள்ளேயே முரண்களை கொண்டு பேசுவது போதையேறிய ஒருவரது உளறல் போல இருக்கிறது.
போதாதததுக்கு “ஒரு சூடான அப்பத்தை சாப்பிடுவது போல விடுதலைப் புலிகளின்; பலவீனமாக உள்ள ஓரப் பகுதிகளில் தொடங்கி படிப்படியாக சூடான மையப் பகுதியை நோக்கி எமது செயற்பாடுகள் முன்னேறிச் செல்ல வேண்டும்“ என்று ஒரு எளிமைப்படுத்தல் விளக்கத்தைத் தருகிறது. 186ம் பக்கத்திலும் குழப்பமான தர்க்க நியாயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழீழ மக்கள் கட்சி இறுதிக் காலகட்டத்தில் ஒரு குழப்பகரமான அரசியல் நிலைப்பாட்டுள் சிக்கியிருந்ததா என கேட்க வைக்கிறது.
முடிவாக
புரட்சிகரமான அரசியல் என்பது வரலாற்றில் செயலூக்கம் மிக்க வகையில் தலையீடு செய்வதுதானேயன்றி, தாம் சரியானவை என நம்பும் நிலைப்பாடுகளை மேற்கொள்வதும், அது சரியானவைதான் என நிரூபிக்கப்படப் போகும் நாளுக்காகக் காத்திருப்பதுமல்ல. என்றார் கிராம்சி.
இதற்கான காலம் எப்போது எப்படி என யாராலும் சோதிடம் சொல்ல முடியாது. ஒடுக்குமுறைகள் அதற்கு எதிர்வினையாக போராட்டத்தையும் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் என்ற சமூக இயங்கியல் இயற்கை விஞ்ஞானத்திலும் பொருந்திப் போகிற ஒன்று. நிகழ்காலத்தை வைத்து பேசுகிற அரசியலின் தேவை எந்தளவு முக்கியமோ அந்தளவுக்கு முக்கியம் எதிர்காலத்தின் அரசியல் சாத்தியப்பாடுகளை கண்டறிய முனைவதும். இதை கோட்பாட்டுக் கருவிகொண்டும் புதிய பார்வைகள் கொண்டும் மாறிவரும் உலக ஒழுங்குகள் கொண்டும் பிராந்திய வல்லரசுகளின் நகர்த்தல்களைப் புரிந்துகொண்டும் மதிப்பிடுவது முக்கியம். இதை கண்டறிவதற்கான கருத்தியல், கோட்பாட்டு, அனுபவப் பங்களிப்புகளை வழங்குவது என்பது முக்கியமானது. இந்த இடத்தில் ரகுமான் ஜானின் இத் தொகுப்புகளுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது.
இந்தத் தளத்தில் இத் தொகுப்பு கோட்பாட்டு ரீதியில் மட்டுமன்றி, மிக முக்கியமான அனுபவத் தொகுப்பாகவும், ஆவணமாகவும், எதிர்கால சந்ததிக்கு விட்டுச் செல்வதற்கான படிப்பினைகளும் என ஒரு கனதியைக் கொண்டுள்ளது.
குறைகள்
இதிலுள்ள சொல்லாடல்கள் சில விமர்சனத்துக்கு உரியவை.
• “முன்னேறிய பிரிவினர்” என்ற சொல் குறித்து..
மக்கள் என்பதே ஒரு பருண்மையான சொல். சமூகம் மீது அக்கறை வைத்து செயற்படுபவர்கள், சமூக மாற்றத்துக்காக தம்மை அர்ப்பகுறைகளைணிக்க முன்வருபவர்களை இச் சொல் குறிப்பதாகக் கருதுகிறேன். அவர்களை பிரக்ஞை பெற்றவர்களாக வரையறுக்கிற ஒரு போக்கு இருப்பதையும் காண்கிறேன். முனைப்பும் பிரக்ஞையும் ஒன்றல்ல. போராட்டங்கள் இல்லாமலாகிறபோது இந்த பிரக்ஞை பெற்றவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் (முன்னேறிய பிரிவினரில்) பெரும்பகுதியினரும் தமது தனிப்பட்ட வாழ்வில் எல்லா கசடுகளோடும் சங்கமிக்கின்றனர். தம்மை வெளிப்படுத்துகின்றனர். சிறு பகுதியினரே அரசியல் நேர்மையை, பிரக்ஞையைக் கொண்ட வாழ்முறையை தொடர்ந்து பேணுகின்றனர் என்பது நாம் காண்கின்ற ஒன்று.
இந்த இடத்தில் காந்தி முன்வைத்த கருத்தொன்றை பதிவுசெய்ய விரும்புகிறேன். அவர் தன்னுருவாக்கம் (தனிப் பிரக்ஞை), கூட்டுருவாக்கம் (கூட்டுப் பிரக்ஞை) என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கிறார். இயக்கங்களில் அதன் இலக்கு நோக்கி செயற்படுவதில் தம்மை அர்ப்பணிப்பதில் காட்டப்படும் கூட்டு மனநிலையானது கூட்டுப் பிரக்ஞையை உருவாக்குகிறது. அது தனிப் பிரக்ஞையை கட்டாயம் உருவாக்கும் என்ற நியதி கிடையாது. தனிமனிதர்களாக பிரிந்துகொள்கிறபோது தனிப்பிரக்ஞைதான் செயற்பட முடியும்.
இயக்கங்களில் இணைந்து செயற்பட்ட (அதிகார மனநிலை கொண்டவர்களைத் தவிர) போராளிகள் பலரும் கூட்டுப்பிரக்ஞை கொண்டவர்களாகவே இருந்தனர். முரண்பாடுகளாலோ அல்லது தோல்விகளாலோ தனியாளாக கைவிடப்படும்போது அவர்களது தனிப் பிரக்ஞையே அவர்களை வழிநடத்த முடியும். உதிரியாகிப்போயிருக்கும் போராளிகள் பலரும் இதிலிருந்து விலகியவர்களாக சமூகத்துள் போய்விடுகின்றனர். தாமே முரண்பட்டு மீறல்களைச் செய்த இந்தப் போராளிகள் இப்போ நிலவும் பண்பாடு கலாச்சாரம் சிந்தனைமுறை என்ற எல்லைகளுக்குள் மீண்டும் தம்மை பொருத்திக்கொண்டு விடுகின்றனர். எனவே முன்னேறிய பிரிவினர் என்பது பிரக்ஞையை வைப்பதற்குப் பதில் அதிகாரத்தை அதனிடத்தில் முன்வைக்கிற நிலையே காணப்படுகிறது. எனவே அச் சொல்லாடல் கேள்விகேட்கப்பட வேண்டியது என்பது என் அபிப்பிராயம்.
• “மேலாண்மை” என்ற சொல் ஆணாதிக்கவழிச் சொல் என அமைப்பினுள் சுட்டிக்காட்டப்படதாக வருகிறது. அதைப் புரிந்துகொண்ட அதேநேரம் அதே சொல்லை பாவித்திருப்பது விமர்சனத்துக்கு உரியது. அதற்கான மாற்றுச் சொல்லொன்றை உருவாக்கியிருக்க வேண்டும். உதாரணத்துக்கு மேலாளுமை என்ற சொல்லை நான் முன்வைக்கிறேன். (இதைவிடவும் மிகப் பொருத்தமான சொல் யாரிடமிருந்தும் வரல்கூடும்).
• பெண்ணியவாதிகள் ஏற்கனவே கறாராக நிராகரித்த சொல்லான “விபச்சாரம்” என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது.
• நிறவெறிக்கெதிரான போராளிகள் எதிர்த்துநின்ற சொல்லுருவாக்கங்களில் ஒன்றான “கள்ளச்சந்தை” என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது.
இவை குறித்து கவனம் செலுத்துவது அவசியம்.
• அதிகளவு எழுத்துப் பிழைகள் நேர்ந்திருக்கின்றன.
• பொதுவில் புத்தகங்கள் மீது புலனுணர்வு முதல் உள்ளடக்க மதிப்பீட்டை வழங்கவல்லது. அது தேவையும்கூட. இதற்கேற்ப நூலின் அட்டை (முகப்பு) அமைந்திருக்க வேண்டியது அவசியம். இத் தொகுதிகளில் அது தென்படவில்லை. நிகழ்காலம் வரையான ஒரு காலத்துள் (ஈழப்போராட்டம் என்ற) அதன் தலையங்கங்களின் பொதுமை அழைத்துச் சென்றுவிடுகிறது. 2009 இனை தவிர்த்து எவராலுமே ஈழப்போராட்டம் என்ற பொதுமைப்படுத்தப்பட்ட சொல்லை குறுக்கிவிட முடியும் என நான் நம்பவில்லை. எனவே அதற்கு முன்னரான “உயிர்ப்பு” கட்டுரைகளின் தொகுப்பு என்பது அட்டையில் குறிப்பிடப்படுவது நல்லது என நினைக்கிறேன்.
• கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்தை ஒவ்வொரு கட்டுரையின் கீழும் இட்டிருந்தால் இந்தக் காலகட்டத்துக்கு நகரும் தயார்நிலையை வாசகருக்கு அது கொடுக்கும்.
• புனைபெயர்களின் தேவை அற்றுப்போயிருக்கும் இந்த காலகட்டத்தில் எல்லோரினதும் சொந்தப் பெயர்களை பயன்படுத்தியிருக்கலாம்.
இத் தொகுப்பை தனியாளாக நின்று தொகுப்பதிலுள்ள கடினமான பணியை நாம் புரிந்துகொண்டே ஆகவேண்டும். அதேநேரம் இதை செறிவாகத் தொகுத்திருக்க முடியும் என்ற பார்வையை முன்வைக்கிறேன்.
ரவி 18092019
18.09.2019 இன்னும் வரவே இல்லை 🙂