தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு இளைஞர்களில் ஒரு பகுதியினரை அழைத்துச் சென்ற காரணிகளில் தரப்படுத்தலும் ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை. தேசிய இன அடிப்படையில் ஒடுக்கப்பட்ட ஓர் இனம் போராட்டத்தில் முன்முனைப்புடன் சம்பந்தப்பட்டதற்கான பன்மைக் காரணங்களில் அதுவும் ஒன்று. ஆனாலும் “யாழ்ப்பாணத்தார் தமது நலனின் அடிப்படையில் தரப்படுத்தலுக்காக தமிழீழப் போராட்டத்தைத் தொடங்கி, (தரப்படுத்தலால் நன்மையடைந்தவர்களை) மற்றவர்களை இந்த போராட்டத்துள் இழுத்துப் போட்டார்கள்” என்று அதை மொழியாக்கம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
காய்ஞ்சுபோன பூமியைக் கொண்ட யாழ்ப்பாணத்தின் வளம் கல்வியாகவே இருந்தது. இதை சரியாகவே கணித்தனர் காலனித்துவவாதிகள். இலங்கையின் பெரும்பான்மை சிங்கள இனத்தோடு சிறுபான்மையினங்கள் சேர்ந்து போராடக்கூடிய களங்களை அடையாளம் கண்டு அதை இல்லாமலாக்க தமிழினத்துக்கு கல்வியில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இதன் மூலம் காலனியத்துக்கு எதிரான இரு இனங்களின் ஐக்கியப்பட்ட எழுச்சியை தடுப்பதற்கான அரணை அமைத்தார்கள்.
பண்டைய ஆபிரிக்க நாடுகளில் உள்ளக அடிமை முறை (வேறொரு சமூகப் பரிமாணத்தில்) நிலவியதை அடையாளம் கண்ட காலனித்துவவாதிகள் அடிமை முறைமையை ஆபிரிக்காவிலிருந்து தொடங்கினார்கள். இது அவர்களின் வெற்றிபெறுகிற சூழ்ச்சிகரமான அணுகுமுறை. அதே அடிப்படையில் இலங்கையில் இரு இனங்களையும் பிரித்துவைக்க உள்ளகக் காரணிகளை அவர்கள் தேடிக் கண்டடைந்தார்கள். அதில் கல்விமுனைப்பை கண்டார்கள்,பயன்படுத்தினார்கள்.
பெருந்தேசிய இனத்தின் ஆட்சியதிகாரத்துடன் எழுந்த பாரபட்சங்களை எதிர்கொள்ள யாழ் வேளாளர்களுக்கு கல்வி ஆயுதமாகியது. ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியான இந்த கல்வி நடவடிக்கை அவர்களிடத்தில் ஒரு பண்பாட்டு அம்சமாக இணைந்துகொண்டது.
இந்த கல்வி நடிவடிக்கையை ஆதிக்கசாதியினரான வேளாளர் தமது பண்பாட்டுக்கு மட்டும் உரியதாக ஆதிக்கப்படுத்தி வைத்திருந்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதை மறுத்தார்கள். அந்த சமூகங்களிலிருந்து கல்வியில் தம்மை ஈடுபடுத்துவது, மற்றும் அதற்கான சந்தர்ப்பங்களைப் பெறுதற்காகப் போராடுவது, அப்படிப் போராடிப் பெற்ற கல்வியிடங்களிலும் இழிவுகளை ஒதுக்கல்களை சந்தித்து எல்லாவற்றையும் வெற்றிகொண்டு தமது இலக்கை அடைவது என்பது இலகுவான விசயமல்ல.
இந்த எதிர் நடவடிக்கை அவர்கள் பொருளாதார ரீதியில் தம்மை உயர்த்த போராடுவதைவிடவும் கல்வியை முதன் நிலையில் வைக்கப் பண்ணியது. அதனால் ஆதிக்க சாதியினரான வேளாளர்கள் மட்டுமல்ல,அதே ஆதிக்க சாதியால் ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படுகிற தாழ்த்தப்பட்ட சமூக மக்களிடமும் கல்வி பண்பாடாகவே இருக்கிறது.
புகலிட வாழ்வில் தமது அந்நியமாதலை வெற்றிகொண்டு, தமது வேர்களை ஊன்ற வேளாளர்கள் எடுத்திருக்கிற ஆயுதம் கல்வி என்றாகியிருக்கிறது. ஆனால் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ இந்தக் காரணியுடன் சேர்ந்து, ஆதிக்கசாதியினருக்கு சமமான தமது சமூக உருவாக்கத்தை நிகழ்த்திக் காட்டுகிற ஆயுதமாகவும் இருக்கிறது. அதற்கான எல்லா சந்தர்ப்பங்களும் வசதிகளும் திறந்தே இருக்கிறது. அதை அவர்கள் நிரூபித்தும் வருகிறார்கள். இந்த வெற்றிகரமான மாற்றம் மேற்குலக ஜனநாயக சிந்தனை முறைமைக்குள் எமது அடுத்தடுத்த சந்ததிகளை தகவமையப் பண்ணியே தீரும். அப்போ சாதியக் கருத்துநிலையும் தகரவே செய்யும். இந்த விரைவான சாத்தியம் இலங்கையில் இல்லை.
புகலிடத்தில் இந்தத் தலைமுறை வேளாளர்கள் மட்டுமல்ல, அடுத்த சந்ததியின் ஒரு பகுதியினரும் சாதியக் கருத்தியலை விடாப்பிடியாக தம்முடன் வைத்திருப்பதே சமகால நிகழ்வு. அடுத்தடுத்த சந்ததிகளின் எதிர்காலம் அவ்வாறு அமைய சாத்தியமேயில்லை. இந்த வேறுபாடுகளை புரிந்துகொள்ளாமல் சாதியப் போராட்டத்தை -வேலைமுறைகள்கூட இல்லாமல்- முகநூலில் மட்டும் நடத்துவதில் பிரயோசனமில்லை. அதற்கான முழுத் தேவையும் அவசியமும் இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்துள் இருக்கிறது. அங்கு கள்ளு மட்டுமில்லை கண்டுகொள்ள !
1970 இல் இலங்கையின் மொத்த சனத்தொகையுள் சுமார் 30 வீதமாக இருந்தனர் தமிழர்களும் முஸ்லிம்களும். ஆனால் அவர்களுக்கு 40 வீதம் பல்கலைக் கழக அனுமதி கிடைத்தது. சிங்கள மக்கள் சுமார் 70 வீதமாக இருந்தனர். ஆனால் 58 வீதம் மட்டுமே பல்கலைக் கழக அனுமதி கிடைத்தது. இதை மாற்றியமைக்க 1971 இல் இனரீதியிலான தரப்படுத்தலை அறிமுகமாக்கியது அரசு. 1972 இல் பிரதேச ரீதியிலான தரப்படுத்தலாக அதை மாற்றியமைத்தது. இது பாரிய மாற்றத்தை விரைவிலேயே ஏற்படுத்தியது. 1975 இல் 19 வீதம் தமிழர்கள் 78 வீதம் சிங்களவர் என்ற அடிப்படையில் பல்கலைக் கழக அனுமதி மாற்றியமைக்கப் பட்டன.
“யாழ்ப்பாணத்தார்தான் பாதிக்கப்பட்டது. இலங்கையின் மற்றைய பகுதிகளிலிருந்தவர்கள் நன்மையடைந்தார்கள். கிழக்கு, வன்னி, மலையக மக்கள் பயனடைந்தார்கள்” என்ற ஒற்றை வாதங்கள் தொடர்ச்சியாகவே இருக்கிறது. இது கணிசமானளவு உண்மைதான்.
இந்த இரு நிலைகளிலும் யாழ் வேளாளர் மட்டும் பாதிப்படையவில்லை. இதற்கு இன்னொரு பக்கம் இருப்பதை இற்றைவரை பலர் கண்டுகொள்ளவில்லை. அப்போ கிளிநொச்சியும் யாழ்மாவட்டமாக இருந்தது. அதனால் வன்னி மக்களில் ஒரு பகுதியினரும் இன ரீதியலும், பிரதேச ரீதியிலும் பாதிக்கப்பட்டனர். அதைவிடக் கொடுமையாக சாதி ரீதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதற்குப் பலியானார்கள்.
சாதிய அமைப்பை கறாராகப் பேணிய பிரதேசம் யாழ்ப்பாணம் எனும்போது, அங்கு வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மிக மோசமாக -பிரதேச, இன ரீதியிலான தரப்படுத்தலால்- பாதிக்கப்பட நேர்ந்ததை பலரும் கண்டுகொண்டதில்லை. வேளாளர் அளவுக்கு சமூக பொருளாதார வசதிகள் கொண்டிராத விளிம்புநிலை மக்கள் அவர்கள். அவர்களின் பாதிப்பை நிகழ்காலத்திலோ எதிர்காலத்திலோ வைத்துப் பார்க்காமல், வேளாளர் பாதிக்கப்பட்டதை மட்டும் பொறுக்கியெடுத்து, கொண்டாடுகிற ஒரு மனநிலை சாதியத்துக்கு எதிராக குரல்கொடுப்பவர்களுக்கும் அதை தாம் பிரதிநிதித்துவப் படுத்துவதாக நம்பச் சொல்பவர்களுக்கும் எப்படி வந்தது என்பது கேள்விகேட்கப்பட வேண்டிய ஒன்று.
யாழ் வேளாள மாணவன வைத்தியராகவோ பொறியியலாளராகவோ வருவதை இலக்காக வைத்தான். தாழ்த்தப்பட்ட மாணவனோ பல்கலைக் கழகத்துள் காலடி வைப்பதை இலக்காகக் கொண்டான். இதிலும்கூட தோற்றுப்போன -என்னுடன் கூட்டாக படிப்பை (combined study) மேற்கொண்ட- பால்ய காலத்து நண்பன் புஸ்பராஜாவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் !
- 21082019