மணல் யுத்தம் (Sand war)

இந்த பத்தியை கணனியில் நான் எழுதிக்கொள்ள பாவிக்கும் ‘எழுத்தடங்கி’ (keyboard) மட்டுமல்ல, கணனித் திரை… ஏன் கணனியின் உடலழகுகூட மணல் இன்றி உருவாகியிருக்க சாத்தியமில்லை. பாவிக்கும் கைபேசிகள், தொலைக்காட்சிகள், அதன் சிம் கார்ட்டுகள், சிப்ஸ்கள் மட்டுமல்ல, பற்பசை மற்றும் அழகுசாதனங்கள்கூட மணலின்றி சாத்தியமில்லை. அந்தளவுக்கு வாழ்வோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது மணல்.

இருந்தும் நம்மில் பலராலும் கண்டுகொள்ளப்படாமல் நடக்கும் யுத்தம் மணல் யுத்தம் (sand war).


வல்லிபுரக்கோவிலில் நடக்கும் கடல்தீர்த்தத் திருவிழா மதத்தை ஏற்பவர்களுக்கு மட்டுமல்ல மதத்தை மறுப்பவர்களுக்குமான ஒரு பெரும் கொண்டாட்ட நாள். ஆனைவிழுந்தானிலிருந்து 4 கிமீ தூரத்துக்கும் மணல் வெளியினூடே கால்கள் புதைந்தெழ கடற்கரையை நோக்கி மக்கள் கூட்டம் நடந்துசெல்வதையும் மணலுடனான வெறுங்காலின் ஸ்பரிசிப்பையும் அனுபவித்து செல்லும் அனுபவம் தனி. நமது இளமைக்காலத்தில் நிறங்களாலான யுவதிகள் மணலின் வெப்பத்தை குளிர்வித்து அசைந்துசென்றபடி உள்ளொளியை மணலில் பரவிச் செல்வர். அதை இரசிக்க கூட்டமாகச் செல்வோம் நாம். இருக்கட்டும். விசயத்துக்கு வருகிறேன்.

இந்த கடற்கரையை நாம் சாதாரணமாக அண்மித்துவிட முடியாது. மூன்று பெரும் மணல் கும்பிகளை -சரியாகச் சொன்னால் மணல்மலைகளை- தாண்டி அலைகளை தரிசிக்க வேண்டும். பாறைகளோ கற்களோ அற்ற வெறும் மணல் காடு அது. இப்போ அந்த கும்பிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது மட்டுமல்ல, தாழ்வாகி புல்முளைக்குமளவுக்கு போய்விட்டிருப்பதை புகைப்படத்தில் பார்த்தேன். மணல் களவும் மணல் பாவனையும் இயற்கையை இப்படியாய் ஆக்கிக்கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் கடற்கரைகள் மட்டுமல்ல சிறுதீவுகள்கூட மறைந்து போகிற அளவுக்கு இந்த மணல் யுத்தம் கட்டுமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை 25 க்கு மேற்பட்ட தீவுகள் இல்லாமலாகியிருக்கின்றன. இந்தோனேசியா இந்த பாதிப்புக்கு உட்பட்ட முக்கிய நாடாகும்.

sandwar-singapur 1

சிங்கப்பூரானது தனது கடற்கரையை அரக்கி தனது எல்லையை பெருப்பித்தபடி இருக்கிறது. இதுவரை அது 130 சதுர கி.மீ பரப்பளவு கடலை களவாடியுள்ளது அல்லது தரையாக மாற்றியுள்ளது. 2030 க்குள் இன்னும் 100 சதுர கி.மீ பரப்பளவு கடலை அது ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான மணல்தேவையை அது அண்டை நாடுகளான கம்பூச்சியா, வியட்னாம், இந்தோனேசியா போன்ற இடங்களிலிருந்து மலிவாக “மணல் மாபியாக்கள்” மூலம் பெற்றுவருகிறது. இதன்மூலம் அந்த நாடுகளின் இயற்கை வளத்தை நிர்மூலமாக்கி தனது இலக்கை நோக்கி பயணிக்கிறது.

கொங்கிறீற் காடாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் உலக நகரங்கள் இந்த இயற்கை வளத்தையும் இயற்கையின் சமநிலையையும் பாதிக்கிற, ஒருபோதுமே அதை சரிசெய்துவிட முடியாத அழிவை சாதித்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு வீட்டை நிர்மாணிக்க சராசரியாக 200 தொன் மணல் தேவைப்படுகிறது. ஒரு தொடர்மாடிக் கட்டடத்துக்கு 3000 தொன் தேவைப்படுகிறது. ஒரு கி.மீ  வேகவீதியை அமைக்க 330 ஆயிரம் தொன் தேவைப்படுகிறது. ஒரு அணுநிலையத்தை நிர்மாணிக்க 12 மில்லியன் தொன் தேவைப்படுகிறது. ஒரு வருடத்தில் சராசரியாக 15 பில்லியன் தொன் மணலை கையகப்படுத்தி இந்த உலகை கட்டடங்களால் நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது.

கடற்கரை மற்றும் ஆற்றங்கரையை மட்டுமல்ல, அதன் நீர்ப்பரப்புக்குள்ளும் சமுத்திர ஆழ்கடலுக்குள்ளும் தோண்டி எடுக்கிற தொழில் முதலின்றிய மிகப்பெரும் இலாபமீட்டுகிற தொழிலாக மாறியுள்ளது. சாதாரண மனிதர்களிலிருந்து பெரும் கொம்பனிகள் வரை இதில் ஈடுபடுகிறார்கள். மணல் மாபியாக்களையும் அது உருவாக்கியிருக்கிறது.  கழுதைப்பொதியாக கடற்கரை மணலை வாரி எடுப்பதிலிருந்து இராட்சத கப்பல்கள் மூலம் சமுத்திரங்களினுள் அகழ்ந்தெடுப்பதுவரை இந்த மணல் யுத்தம் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறிய கப்பலிலிருந்து இராட்சத கப்பல்வரை தோண்டி எடுக்கிற மணல் நாளொன்றுக்கு நாலாயிரம் கனமீற்றரிலிருந்து நாலு இலட்சம் கனமீற்றர் கொள்ளளவு வாய்ந்ததாக மதிப்பிடப்படுகிறது.

sandwar-bombay-donkey1

sand war-robbing ship

இன்று சர்வதேச வர்த்தகத்தில் மணல் வர்த்தகம் வருடமொன்றுக்கு எழுபது பில்லியன் டொலரை எட்டியிருக்கிறது. முன்னணியில் நிற்கிற கம்பனிகளில் அவுஸ்திரேலிய கம்பனிகள் (3500 கம்பனிகள்) அரபுநாடுகளுக்கான பெருந்தேவையை பூர்த்திசெய்கின்றன. வருடத்துக்கு 5 பில்லியன் டொலரை அவை சம்பாதிக்கின்றன.

டுபாயில் 2010 இல் திறக்கப்பட்ட  Burj Khalifa என்ற உலகின் அதி உயர கட்டடம் 830 மீற்றர் உயரமானது. இது 330’000 கன.மீற்றர் கொங்கிரீற்றினால் உருவானது எனும்போது, எத்தனை மில்லியன் தொன் மணலை அது தின்றிருக்கும். அந்த கட்டட அறைகள் 90 வீதமானவையும் பாவனையின்றி வெற்றிடமாகவே இருக்கிறது.

khalifa

சீனாவில் 65 மில்லியன் கட்டடத் தொகுதிகள் பாவனையின்றி வெறுமையாக இருக்கிறது. அண்மையில் சுவிசில் எடுத்த கணக்கெடுப்பின்படி 72 ஆயிரம் வீடுகள் அல்லது கட்டடத் தொகுதி அறைகள் வெறுமையாக இருக்கிறது. இவ்வாறு பணக்கார நாடுகள் தேவைக்கதிகமாக கட்டடங்களையும் பாலங்களையும் வீதிகளையும் நிர்மாணித்தபடி இருக்கின்றன. தமது பொருளாதாரம் காசாக வங்கியில் தேங்கிவிடக்கூடாது என்ற அடிப்படையில் பழுதடையாத வேகவீதிகள் அடிக்கடி உடைத்தெறியப்பட்டு நிர்மாணிக்கப்படுவது இங்குள்ள வழமையாகவே போய்விட்டது.

அமெரிக்காவில் 80 ஆயிரம் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது அது ஐக்கிய அமெரிக்க இராச்சியமாக சுதந்திரப்பிரகடனம் செய்யப்பட்ட 1776 இலிலிருந்து இன்றுவரை சராசரியாக நாளொன்றுக்கு ஒரு பாலம் என்ற விகிதாசார அடிப்படையில் இது இருக்கிறது. மற்றைய உலக நாடுகளில் மொத்தம் 845 ஆயிரம் பாலங்கள் இருக்கின்றன. தேவைக்கதிகமாகவும் ஆற்றுநீரை மறித்து கட்டப்படும் அணைகள் பாலங்கள் மீதான இயற்கைப் பாதிப்புப் பற்றிய கவனமின்றியும் இவற்றில் பெரும் பகுதி இருப்பதாக சொல்லப்படுகிறது.

palm islands

டுபாயின் பால்ம் தீவுகள் (Palm Islands) 94 மில்லியன் கனமீற்றர் மணலை இதுவரை தின்று செரித்திருக்கிறது. இன்னும் நிர்மாணிப்பு முடிவுக்கு வரவில்லை. இதோடு சேர்த்து பாறைகள், சுண்ணாம்புப் பாறை என மொத்தம் 210 மில்லியன் கனமீற்றர் இயற்கையை ஏப்பம் விட்டிருக்கிறது. இதே வகையில் இலங்கை காலிமுகத்திடலில் சீனா அமைத்துக்கொண்டிருக்கிற தீவும் இருக்கிறது. நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற மண்தரையிலே போதிய இடம் இருந்தும் இப்படி ஊதாரித்தனமாக இயற்கையோடு போர்புரியும் கருங்காலிகளின் செயலுக்கான விளைவை ஒட்டுமொத்த மதனிதகுலமும் எதிர்நோக்கியே தீரும் என்பதை இயற்கையின் அண்மைக்காலத்தைய பெரும் தாக்குதல்களும் காலநிலை மாற்றங்களும் சுட்டிநிற்கின்றன.

sandwar-maldive-underwater

sandwar-maldives

உலகம் பூராகவும் 100 மில்லியன் மக்களின் இருப்பிடம் கடல்மட்டத்திலிருந்து ஒரு மீற்றர் உயரத்தில் இருக்கிறது. மாலைதீவில் தனது வீட்டை கடல்நீரின் தொடுகையை மறிக்க தகரங்களால் தடுப்பரண் போடுகிற கையறுநிலையில் நிற்கின்றன மீனவ குடும்பங்கள். தாம் அந்த வீட்டை கட்டியபோது கடற்கரை அதிலிருந்து சுமார் 60 மீற்றருக்கு அப்பால் இருந்ததாகவும் தாம் அதில் கால்பந்து விளையாடியதாகவும் நேர்காணலில் சொல்கிறார் ஓர் இளம் குடும்பஸ்தர். இப்போ அலைகள் அவரது வேலியோரத்தில் வந்து எட்டிப் பார்க்கிறது.

அங்கு கரையோரங்கள் ஆழமாக இல்லாததால் சாதாரண மனிதர்கள் நீருக்கள் புகுந்து உரப்பைகளுடன் கடலின் தரையைத் தொட்டுச் சென்று மணலை வாரியள்ளி வெளிவருகின்றனர். அந்த மணல் இலத்திரனியல் சாதனங்களுக்கு உபயோகப்படுகிற பெறுமதிமிக்கதாகவும் இருக்கிறது.

sandwar-bombay-donkey2

sandwar-bombay-lorry

மும்பாயில் மணல் மாபியாக்கள் சாதாரண மக்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதுபோலான முறைமையில் அவர்களிடமிருந்து மணலை சேகரித்து பெரும் இலாபமீட்டும் கொள்ளையர்களாக இருக்கின்றனர். கடற்கரைகளில் கழுதைகளின் மீது பொதியாக பொதியாக ஏற்றியோ அல்லது லொறி மூலமோ அவர்கள் கொண்டுவருகின்றனர். உள்நாட்டில் மட்டுமன்றி கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த மண்கடத்தலில் மாபியாக்களும் பொலிசாரும் அரசியல்வாதிகளும் மும்முனை கொள்ளையர்களாக செயற்படுகின்றனர். இதன்மூலம் அரச அதிகாரங்கள் வரை அரசியல் தாக்கத்தையும இந்த மாபியாக்கள் உண்டுபண்ணுகிறார்கள்.

விரிந்து பரவிய பாலைவனங்களைக் கொண்டிருக்கிற அரபு நாடுகள் பெருமளவில் இந்த மணல் தேவையை இறக்குமதி மூலமாக பெறுகின்றன. பாலைவன மணலால் கடற்கரை அல்லது ஆற்றங்கரை மணலின் தேவையை இடம்பெயர்க்க முடியாது. இரண்டு மணல் துணிக்கைகளுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது.

sand wars- desertsand&sand

பாலைவன மணல் காற்றின் அசைவியக்கத்துள் தொடர்ந்து அகப்பட்டிருப்பதால் அது உராய்வு நீக்கப்பட்ட துணிக்கைகளாக இருக்கின்றன. மிக ‘அந்தீசாக’ (உராய்வு மிகக் குறைந்ததாக,பளபளப்பாக ) இருக்கிறது. அவை கங்குகளாக உடைக்கப்பட்ட நிலையில் இல்லை. இதன் காரணமாக அது சீமெந்துடனோ அல்லது வேறு பொருட்களுடனோ ஒட்டும் தன்மை இல்லாமல் இருக்கிறது. எனவே பாலைவனங்கள் இந்த மணல்கொள்ளைக்கு அகப்படாமல் பாதுகாப்பாக இருக்கிறது. அணுவை உடைத்த தொழில்நுட்பம் இந்த மணல் பந்துத் துகள்களை உடைத்து உராய்வுத்தன்மையாக்கி பாவனைக்கு கொண்டுவந்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

இந்த மணல் கொள்ளை இயற்கையோடு போர் புரிவதால் அது மணல்யுத்தம் என சுட்டப்படுகிறது என நினைக்கிறேன். தேவைக்கதிகமாக உற்பத்தியாக்கி இலாபத்தையே குறியாகக் கொண்டு இயங்கும் இந்த முதலாளித்துவ அமைப்பு முறைமைக்குள் மனிதர்கள் மீதான போர், மண்மீதான ஆக்கிரமிப்புப் போர், இயற்கை மீதான போர் எல்லாவற்றுக்கும் உலக மனிதர்கள் தகவமைந்து போகிற அவலம் தொடர்கிறது. இதற்கெதிராக குரல்கொடுக்கிற பிரக்ஞை கொண்ட மனிதர்கள் அல்லது அமைப்புகள் சிறிய பகுதியாக இருந்தாலும் இந்த உலகத்தை அவர்கள்தான் உயிர்ப்புடன் வைத்திருக்கிற விதைகளை நாட்டிக்கொண்டிருப்பவர்கள்.

வளர்ந்துவரும் விஞ்ஞான அறிவு வாழ்நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியபடி நகரும். ஆதனால் முழுவதுமாக பழைய நிலைக்கு திரும்புதல் என்பது சாத்தியமில்லை. ஆனால் மாற்றுவழிமுறைகளை கண்டுபிடித்தல் அதற்கு முன்னாலுள்ள சவால் என்பதும் அதைச் செய்யும் ஆற்றல்வாய்ந்தது என்பதும்தான் விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையாக இருந்துவருகிறது. மணல் பயன்பாட்டு விடயத்திலும் குறிப்பாக கொங்கிறீற் தேவையை குறைத்து வேறு கட்டடக்கலை நுட்பங்களை அது கண்டறிந்து பிரதியிட வேண்டிய அவசியம் உள்ளது.

தொழில்நுட்ப ரீதியில் கழிவுப் பொருட்களை மீள பயன்படுத்துகிற முறைகளை முயற்சிக்கலாம். அரசுகளும் மாடிக்கட்டடங்களின் தேவையையும் கேளிக்கைக்கான கட்டடங்களின் தேவையையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். தவிர்க்கப்பட வேண்டிய பாலங்கள் அணைகளை கட்டுவதை கைவிடுவதையும் புதிய தீவுகளை உருவாக்குதல் அல்லது கடற்கரையை தரை எல்லையாக விரிவுபடுத்துதல் என தேவையற்ற விடயங்களையும் கைவிடல் வேண்டும். இன்றைய உலகில் அது எதிர்ப்புப் போராட்டங்களின்றி சாத்தியமாகும் என கருதவும் முடியாது.

பிளாஸ்ரிக் கழிவுகள் அணுக் கழிவுகள் உட்பட இயற்கைமீது நாம் நடத்தும் போருக்கான தனது பதிலை மிக மோசமான வழியில் இயற்கை திருப்பித் தரும் என்பது நிச்சயம். பூமி இயற்கைச் சங்கிலியின் சமநிலையில் இயக்கம் கொள்கிற ஒன்று. அது தன்னை தகவமைத்துக்கொள்ள முடியாத எல்லைக்கு போகிறபோது அழிவு தவிர்க்க முடியாதது. அது இயற்கையின் இயங்கியல்.

– ரவி 28072019

(உசாத்துணை : Sand Wars -Caleb Keogh)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: