ஐயர் (கணேசன்) இன் நூல்
– தாமதமான வாசிப்பு
1985 ஆரம்பகாலப் பகுதி. கருக்கல் பொழுது. எமது ஊர் அதிகாலை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது. செய்தி ஒரு உட்புயலாக ஊருக்குள் வேகமாக பரவுகிறது. முதலில் வாசிகசாலை மையத்துக்கு ஓடுகிறேன். அங்கு மற்றைய நண்பர்கள் பரபரப்புடன் நிற்கிறார்கள். எல்லோருமாக சுற்றிவளைப்பின் கெடுபிடியை கடப்பு ஒன்றினூடான பதுங்கிக் கடந்து அயல் ஊருக்குள் ஓடிக்கொண்டிருந்தோம். பயிற்சி எடுத்தவன் எடுக்காதவன் ஆதரவாளன் என அந்த இளைஞர் குழாம் பல இயக்க வாடையை காவியபடி பறந்துகொண்டிருந்தது. கையில் ஒரு பிஸ்ரலுடன் ரெலோ இயக்க போராளி ஒருவன் எம்முடன் ஓடிக்கொண்டிருந்தான். “என்னடாப்பா நாமதான் ஆயுதமில்லாமல் ஓடுறமெண்டால் நீ ஆயுதத்தோடை ஓடுறாய்” என கடித்தேன் நான். அவன் சிரித்தபடியும் ஓடிக்கொண்டும் சொன்னான் “ இந்த ஜே.ஆர் க்கு பகிடி வெற்றி தெரியாது. சும்மா பேச்சுக்கு தமிழீழம் எண்டு கேட்டால் அதுக்கு இப்பிடியே கலைக்கிறது என்றான். எனக்கு என்னவோ இன்றுவரை இதற்குள் சிந்தனையை கிளறுகிற ஒரு அரசியல் இழை பின்னியிருப்பதாகவே படுகிறது.
இயக்க ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான ஐயர் என்பவரினால் எழுதப்பட்டு (2011) இனியொரு இணையத்தளத்தினரால் தொகுக்கப்பட்ட ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற நூலை இவளவு காலம் தாழ்த்தி வாசித்தபோது அந்த ரெலோ தோழன் ஓடிக்கொண்டேயிருந்தான்.
ஒரு வெள்ளைக் காகத்தைக் காணும் சாத்தியத்தை எப்போதுமே மறுக்காமலிருக்கக் கற்றுக்கொள் என்ற சோக்கரட்டீஸ் இன் வாசகம் நினைவுக்கு வருகிறது. தமிழீழம் சாத்தியமா இல்லையா அதை ஆதரிக்கிறியா எதிர்க்கிறியா என்ற ஆம் இல்லை கேள்விளை நாம் கடந்தேயாக வேண்டும். தமிழீழம் என்ற முடிந்த முடிபான அரசியல் இலக்கை நாம் எப்படி வந்தடைந்தோம் என்பதற்கு தெளிவான அரசியல் தத்துவார்த்த வழிமுறையிலோ அறிவுபூர்வமாகவோ விளக்கம் சொல்ல முடியாத நிலையே இருப்பதாக நான் கருதுகிறேன். மணவிலக்கல் உதாரணம் உட்பட வெறும் தர்க்கங்களின் எல்லைக்குள் வைத்தே விளக்கங்கள் தரப்பட்டன. அதன்வழி தரப்படுத்தல்தான் போராட்டத்தை தோற்றுவித்தது என்று ஒற்றைவிளக்கம் வைக்க எம்மில் பலரால் முடிகிறது.
ஐயரின் அனுபவங்களைக் கொண்ட வெளிப்படையான முன்வைப்புகளை பார்க்கிறபோது தரப்படுத்தலை தாண்டி ஈழப் போராட்டம் போய்க்கொண்டிருந்திருக்கிறது. பிரபாகரனின் 17 வயது விடலைப் பருவத்தை ஆட்கொண்ட உணர்ச்சி அரசியல் தரப்படுத்தல் இல்லாமல் இருந்திருந்தாலும் அணைந்திருக்க முடியாது என்பதை நூல் தெளிவாகவே சொல்லித் தருகிறது. செய்தியாளர் அனிதா பிரதாப் க்கு பிரபாகரன் 1958 கலவரம் ஏற்படுத்திய பாதிப்பே தான் போராட்டப் பாதைக்குள் நுழைந்ததாகச் சொன்னார். அவர் சிறுவனாக இருந்தபோது இதை எவ்வாறு உணர முடிந்தது என்ற கேள்வியைக் கடந்து அதற்குள்ளால் அவர் சொல்லவந்த சேதி அவரை உணர்ச்சி அரசியல் ஆட்கொண்டது என்பதே.
அதாவது பாராளுமன்றவாத உணர்ச்சி அரசியலும் இளம்பராய சாகச மனப்பான்மையும் பிரபாகரன்களை தோற்றுவித்ததே வரலாறாக உள்ளது. இரண்டும் சமாந்தரமாக ஓடி பின்னர் எதிர்நிலைக்கு மாறியது. பின் அது இயக்கவாதமாக உருவெடுத்து எல்லா இயக்கங்களையும் ஆட்டிப் படைத்தது. உட்கொலைகளை வளர்த்தெடுத்தது. சகோதர இயக்கப் படுகொலைகளை நிகழ்த்தியது. உணர்ச்சி அரசியலை முன்வைத்து பாராளுமன்றம் சென்றவர்களையும் கொலைசெய்தது.
தனிமனிதனாக சிவகுமாரனால் தொடக்கிவைக்கப்பட்ட துரோகிகள் அழித்தொழிப்பும் சயனைட் தற்கொலையும் புதிய புலிகளாக உருவெடுத்த சிறு இயக்கத்தினூடு தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கடைசிகாலம் வரை பயணித்தன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிரியாக வரையறுக்கப்பட்ட அல்பிரட் துரையப்பாவை துரோகி என தீர்ப்பளித்து மூன்றுமுறை கொலை செய்ய எத்தனித்து தோல்விகண்டான் சிவகுமாரன். அதை தானே களத்தில் நின்று முதல் முயற்சியிலேயே கொலைசெய்த பிரபாகரனின் சாகசம் சிவகுமாரனிய துரோகி பட்டியல்களோடும் சயனைட் குப்பிகளோடும் தொடர்ந்துகொண்டே இருந்தன.
தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்தை பலமுறை சந்தித்திருக்கிறார் பிரபாகரன். தமது அரசியல் எதிரிகளை அழிக்க பிரபாகரனை அவர்கள் பயன்படுத்தினர். இறுதியில் அவர்களே அதற்குப் பலியாகினர். இந்த துரோகி வரையறுப்புக்கான தமிழரசியல் அல்லது உசுப்பேத்தும் அரசியலுக்கு இலங்கை பேரினவாதம் ஒருபுறம் காரணமாக இருக்க மறுபுறம் வெகுஜனங்களின் பொதுப்புத்தி அங்கீகாரம் வழங்கி குதூகலித்தது:
பொதுப்புத்தி என்பது நிராகரிப்புக்கு உரியதல்ல. விமர்சனத்துக்கு உரியது. அது வெகுமக்களின் உலகக் கண்ணோட்டம். அதன்மீது செலுத்தப்படுகிற (கருத்துநிலைசார்ந்த அல்லது தத்துவம் சார்ந்தவை உட்பட) புறத்தாக்கங்களால் அந்த கண்ணோட்டம் மாறுபடக் கூடியது. பெரும்பாலும் மரபுகள் நம்பிக்கைகள் சார்ந்து மனிதர்களில் கட்டமைகிற கூறுகளைக் கொண்ட அதேநேரம் மாறிவரும் தனது உலகக்கண்ணோட்டத்தில் மரபுகள் நம்பிக்கைகளை தாண்டி அல்லது எதிர்நிலையில்கூட செயற்படக்கூடிய உள்ளக ஆற்றல் கொண்டது.
இந்த புரிதலை அடிப்படையாகக் கொண்டே “மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளங்கள். திருப்பி மக்களுக்கு கற்றுக் கொடுங்கள்” என்றார் மாவோ. இந்த கற்றுக்கொள்ளலுக்கும் கற்றுக் கொடுத்தலுக்கும் இடையில் நிகழ்த்தப்படுகின்ற பகுப்பாய்வுக்கான அறிவுத்தளம் போராளிகளிடம் விரிந்து காணப்படல் வேண்டும் அல்லது அதை நோக்கிய தேடல் இருக்க வேண்டும். அது நிகழவில்லை. இன்னொருபுறம் பொதுப்புத்தியை அறிவுசார் தளத்தில் செழுமைப்படுத்தி உயர்த்துகிற, சமூகம்சார் கல்வி முறைமைகளோ சமூகநடைமுறைகளோ தர்க்க விஞ்ஞானங்களோ தேடல்களோ மந்தமாகியிருந்த, இருக்கின்ற சமூகமாக ஈழத் தமிழ்ச் சமூகத்தை நோக்க வைக்கிறது இந்த நூல்.
இந்த சமூகநிலைமைகள் இயக்கத்தை அதன் பாதுகாப்புக் கருதி இன்னமும் தலைமறைவு நிலைக்கும் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட நிலைக்கும் ஆரம்ப காலங்களில் தள்ளியது எனலாம். இந்த மூடுண்ட இயக்கவாழ்வு அந்த இளம் போராளிகளுக்கு கடினமான வாழ்வை பரிசளித்திருந்தது. அது அதிக அர்ப்பணிப்பைக் கோரியது. அவர்களது இளமை இதற்குள் கரைந்தழிகிற சம்பவங்களை இந் நூல் நெடுகிலும் பேசித் தீர்க்கிறார் ஐயர்.
பிரபாகரனின் இராணுவவாதத்துக்கான ஆதரவும் இதற்குள்ளால்தான் கிடைக்கிறது. மக்கள் அமைப்புகளை தோற்றுவிப்பதும் அணிதிரட்டுவதும் அவருக்கு சாத்தியமற்றதாக வேலைமினைக்கேடாக தெரிகிறது. அவர் கிற்லரின் இராணுவ கட்டமைப்பு ஒழுக்கவாதம் அழித்தொழிப்பு என்பவற்றை மட்டுமல்ல சல்யுட் முறையையும் அறிமுகப்படுத்துகிறார். கூட்டு முடிவுகளை மேற்கொள்ளும் மத்தியகுழு அல்லது கூட்டுத் தலைமை முறைமைகளில் நம்பிக்கையில்லாத பிரபாகரன் இயக்கத்தை ஒரு இராணுவக் கட்டமைப்பின் வடிவமாக காண்கிறார். தனித் தலைமை ஒன்றே அவசியமானது என்ற கருத்தை முன்வைக்கிறார். இந்த இராணுவாதப் போக்கு வெகுஜனங்களுக்கு மேல் அதிகாரம் செலுத்தத் தொடங்கி அவர்களை அடிமைப்படுத்துவதுவரை வாய்மூடி மௌனிகளாக்குவதுவரை வந்து கடைசியில் முள்ளிவாய்க்காலை வந்துசேர்ந்தது.
இயக்கங்களுக்குள் ஆரம்பத்திலிருந்து இறுதிவரையும் நடத்தப்பட்டிருக்கிற உட்கொலைகளும் அந்த தீர்ப்புகளை வந்தடைந்த முறைமைகளும் விவாத முறைமைகளும் அதில் முன்வைக்கப்பட்ட அரசியல் கருத்துநிலைகளும் அன்றைய சூழலில் வைத்து புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதை கனிவோடு பார்க்க முடிந்தாலும், அந்தக் கனிவு நாம் இருபதாம் நூற்றாண்டில்தான் வாழ்ந்தோமா என எண்ணுவதை தவிர்க்க போதுமானதல்ல. உலகு தழுவிய காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள், ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள், தேசியவிடுதலைப் போராட்டங்கள், நிறவெறிக்கெதிரான போராட்டங்கள், பெண்ணுரிமைப் போராட்டங்கள், சோசலிசத்தை நோக்கிய புரட்சிகள், மாற்றங்கள், விவாதங்கள் என இருபதாம் நூற்றாண்டு கனதியாக கழிந்தது. அது இந்த இளைஞர்களை அறிவுத்தளத்தில் சென்றடையாதது அவலமானது.
பிரபாகரனைப் பொறுத்தளவில் தேநீர் கோப்பி போன்றவற்றைக்கூட அருந்தாத தூய ஒழுக்கவாதியாக காணப்பட்டார். அவரைப் பின்பற்றிய எம்மில் பலர் இந்த ஒழுக்கவாதத்தை கடைப்பிடித்திருந்தனர் என எழுதுகிறார் ஐயர். ஒழுக்கவாதம் இறுகிப்போன சிவில் சமூகக் கட்டமைப்புகளை பண்பாட்டு ரீதியில் இன்னும் கெட்டியாக்கவே பயன்படும். உருக்குலையும் தகைமையற்ற சிவில் சமூகத்தில் மாற்றமோ புரட்சியோ நடக்காது என்பார் கிராம்சி.
கொலைசெய்து பழக்கப்பட்டால்தான் மனதில் உரமேறும் என்கிறார் பிரபாகரன். 1985 இல் புளொட் அமைப்பின் உளவுப் படையின் சித்திரவதைக் குறூப் இன் பொறுப்பாளராக இருந்த மொட்டை மூர்த்தி செய்த சித்திரவதையில் சவுக்கம் காட்டுக்குள்ளிருந்து இரவு 2 மணிக்கு அமைதியை நொருக்கி எழுந்த மரண ஒலி கேட்டு மயங்கி வீழ்ந்தான் சென்றி பொயின்ற்றில் நின்ற சக தோழன் பரமானந்தன். அடுத்தநாள் பரமானந்தனுக்கு துணிவேற்றும் படலமாக -தலைகீழாக கட்டித் தொங்கவிடப்பட்ட- மதனை கொட்டனால் அடிக்கும்படி கட்டளையிடுகிறான் மூர்த்தி. “உனக்கு துணிவு காணாது. எப்பிடி போராடப் போறாய். துணிவு வரவேணும். அடி…” என்கிறான். திரும்பிவரும்போது பரமானந்தன் அழுதபடி வந்தான். நடுங்கினான். ஆக இந்த சிந்தனைப் போக்கு புலிகளிடம் மட்டும் இருந்ததில்லை.
போராளிகளின் பாத்திரம் பொதுப்புத்தி மையநீரோட்டத்தை இடையீடு செய்து அறிவூட்டுவதிலும் அரசியல்மயப் படுத்துவதிலும் இருக்கவில்லை. மாறாக அதை பயன்படுத்திக் கொண்டதுதான் அவலம். இதையே இராணுவவாதம் செய்துமுடித்தது. இதற்குள்ளாலும் வெகுஜனங்களை அணிதிரட்டுவது பற்றிய விழிப்புணர்வும் வலியுறுத்தலும் முன்வைப்புகளும் சில போராளிகளால் முன்வைக்கப்பட்டிருப்பதை வாஞ்சையோடு வாசிக்க நேர்கிறது. வெகுஜன அணிதிரட்டலும் இராணுவ வழிமுறையும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற இன்னொரு குரல் நடைமுறையை அண்மித்து எழுந்தபோதும் அதுவும் பலிக்காமல் போயிருக்கிறது. அரசியல் தத்துவ (மார்க்சிய) புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிற பழக்கம்கூட துளிர்விட ஆரம்பித்திருந்தது. அந்த போக்கு தோற்றுப் போனது மிகப் பெரிய இழப்பு. அது வளர்ச்சியடைந்திருந்தால் அரசியல் வெற்றிகள் மட்டுமல்ல (அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்றவாறான) தமிழீழக் கோரிக்கையும்கூட பிரிந்துபோகிற சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்குள் ஒரு பகுதியாக மாறியிருக்கலாம். அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் வேறு வடிவங்களில் மேலெழுந்திருக்கலாம்.
துரோகி என தீர்ப்பளித்து கொலைசெய்யப்பட்டதிலிருந்து எதிர்காலத்தில் ஆபத்தானவர்களாக வருவார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையிலும்கூட (சந்ததியார் போன்றோரை) கொலைசெய்ய முடிவுசெய்யுமளவுக்கு பிரபாகரனின் எச்சரிக்கையுணர்வு பிசாசுபோல் ஆட்டிப்படைத்தது. “பற்குணம், மைக்கல் ஆகியோரை கொலைசெய்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்தக் கொலைகள் தவறு என்று கருதினால் நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு நான் தயார்” என்கிற அளவுக்கு பிரபாகரனின் அறிவு இருந்தது.
மத்தியகுழுவை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்று மற்றைய எல்லோரினதும் நிலைப்பாட்டை ஏற்காமலும், ஏற்கனவேயான முரண்பாடுகளாலும், குட்டிமணி தங்கத்துரை உறவுநிலைகளாலும் புலிகள் அமைப்பை விட்டு ரெலோவில் சேர்கிறார் பிரபாகரன். இயக்கத்திலிருந்து விலகியவர்களுக்கு மரணதண்டனை என்பதை கடைப்பிடித்த பிரபாகரனியம் -இயக்கத்திலிருந்து விலகிய- பிரபாகரனை உயிரோடு விடுதலை செய்தது. 1983 இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதற்கு சற்று முற்பட்ட காலப் பகுதி வரைக்கும் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே பிரபாகரன் இருந்தார்.
“மார்க்சிய நூலை வாசித்துக்கொண்டிருந்த போராளியிடமிருந்து புத்தகத்தைப் பறித்தெறிந்த பிரபாகரன் இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஆயுதங்களை கழற்றிப் பூட்ட கற்றுக்கொள்ளுங்கள் என்றார்” என பதிவு செய்கிறார் ஐயர்.
அரசியலின் அரிச்சுவடிகூட தெரியாத அதேநேரம் அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் கொண்ட போராளிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே பொருள்முதல்வாதம் இயக்கவியல்வாதம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என வகுப்பெடுத்த அன்ரன் பாலசிங்கத்திலிருந்து, சோசலிஸ்டுகளாக கட்டமைக்கப்பட்ட உமா மகேஸ்வரன், சுந்தரம், மனோ மாஸ்ரர் வரை ஏற்றிவைத்திருந்த கொஞ்சநஞ்ச அரசியல் மதிப்பீடுகளும் ஐயரின் நூலை (அனுபவங்களை) வாசிக்கிறபோது உதிர்ந்து கொட்டுகிறது. “எமது தவறுகளை நியாயப்படுத்துவதிலிருந்தே அன்ரன் பாலசிங்கத்தின் அரசியல் தொடங்குகிறது” என்கிறார் ஐயர். இந்த நியாயப்படுத்தலை கடைசிகாலம்வரை செய்து முடித்தார் இந்த ‘சோசலிச சிந்தனையாளர்’. இவரை இந்த நூற்றாண்டின் அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவராக சான்றிதழ் கொடுத்து பேசுமளவுக்கு இலங்கையின் அரசியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் என்பது இன்றைய சுவாரசியம்.
வர்க்கப் போராட்டத்தை பெயரளவில் முன்வைத்துக்கொண்ட இலங்கையின் இடதுசாரிகள் தேசியப் பிரச்சினையில் எடுத்த நிலைப்பாடு இயக்கப் போராளிகளை அரசியல்மயப்படுத்த அவர்களை அனுமதிக்கவில்லை. உள்ளுர ரசித்தபடி பார்வையாளர்களாக இருந்தனர். புளொட் இலிருந்து விலகியபின் கொழும்பில் சண்முகதாசனை நாம் சந்தித்தபோது நாம் அம்பலப்படுத்திக்கொண்டிருந்த இயக்க அராஜகங்களை அவர் நடைமுறைத் தவறுகளாக மட்டும் பார்த்து விளக்கமளித்துக் கொண்டிருந்தார். தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு முன்னேறுவதுதான் ஒரே வழி என்று வேறு விளக்கம் கொடுத்தார். இயக்கங்களோ இராணுவாதங்களாலும் பாசிசக் கூறுகளாலும் உருக்குலைந்து கொண்டிருந்ததை அவர்கூட சரியாக அடையாளம் காணத் தவறினார். அனுபவங்களை புறக்கணித்தார்.
ஒருபுறம் தமிழர்விடுதலைக் கூட்டணியின் உணர்ச்சி அரசியலும் இன்னொருபுறம் இடதுசாரிகளின் கள்ளமௌனமும் பங்களிப்பின்மையும் தமது இளமையை அர்ப்பணித்து காடுவழி அலைந்து கடினமாக (பண்ணைகளை உருவாக்கி) உழைத்தும் தலைமறைவு வாழ்க்கையின் கொடுமைகளை அனுபவித்தும் விடுதலையைக் கனவுகண்ட இளைஞர்களை தவிக்கவிட்டன. அரசியலை பின்னுக்குத் தள்ளிய இராணுவவாதத்துக்கு தம்பி பிரபாகரன் சண்டியன் செட்டி மற்றும் கள்ளக்கடத்தல்காரர்கள் குட்டிமணி தங்கத்துரை மட்டுமல்ல, இவர்களும் ஒருவகையில் காரணம்தான்.
இயக்கத்தில் இருந்த ஒரேயொரு பெண்தோழரான ஊர்மிளாவுடன் உமா மகேஸ்வரனுக்கு இருந்த தொடர்பால் இயக்கத்திலிருந்து விலகி இருந்தார் உமா மகேஸ்வரன். ஏற்கனவே கொழும்பில் உத்தியோகம் பார்த்த (படித்த) உமா மகேஸ்வரனை யாழ் மேலாதிக்க சிந்தனை மரபு ஒரு புரட்சியாளனாக கற்பிதம் செய்தது. “அவன் (உமா மகேஸ்வரன்); படிச்சவன் கொழும்பிலிருந்து தொடங்கிறான்ää இங்கை எட்டாம் வகுப்பு படிச்சது (பிரபாகரன்) வதிரியிலை மதவடிக்கு குண்டு வைக்குது” என புளொட்டின் நிக்கவரெட்டியா பொலிஸ்நிலைய தாக்குதலின்போது ஒரு பெரியவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
“உமா மகேஸ்வரனைப் பொறுத்தவரை இடதுசாரி அரசியலில் எந்த ஆர்வமும் கொண்டவராக இருந்ததில்லை. ஓய்வு கிடைக்கும் நேரங்களில் கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற நூல்களை வாசிக்கும் உமா தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலின் வன்முறை தொடர்ச்சியாகவே காணப்பட்டார்” என்று எழுதுகிறார் ஐயர். “சில இடதுசாரிகளின் தொடர்புகளினூடாக சில விடயங்களைத் தெரிந்து வைத்திருந்த சுந்தரம் கூட, கண்ணன் உமா மகேஸ்வரன் ஆகியோருடன் சேர்ந்து தூய இராணுவ வழிமுறையை முன்னிலைப்படுத்தினார்” எனவும் எழுதுகிறார்.
ஆக புலிகளின் இடத்தில் (இராணுவவாதத்தை கடைப்பிடித்த) புளொட் இயக்கமோ ரெலோ இயக்கமோ இருந்திருந்தாலும் ஏதோவொரு வகையில் கூடிய அல்லது குறைந்த இழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை மௌனமாக்கித்தான் இருப்பர். இதற்கு ஐயரின் நூல் மட்டுமல்ல எமது அனுபவங்களும் சாட்சிகள்தான்.
புலிகளிலிருந்து வெளியேறி புளொட் அமைப்பை ஒரு தரப்பு தோற்றுவித்திருந்தது. அதன் வளர்ச்சிப் போக்கில் சோசலிசப் புரட்சி செய்யப் புறப்பட்டதான தோற்றத்தை தாங்கிவைத்திருந்த புளொட் அமைப்பின் உள்ளுடன் போலியானது அல்லது போதாமை நிறைந்தது என்பதை காலம் காட்டத் தவறவில்லை.
சுமூகத்தில் நிலவும் பாசிசக் கூறுகளும், அறிவு என்பதை கல்வித் தகைமையாக குறுக்கிவைத்திருந்த பவுசுகளும் பிரசவித்த இளைஞர்கள் பட்டாளத்துள்ளிருந்து விடுதலைக்காக தம்மை ஈடுபடுத்த முன்வந்த ஒரு சிறு பகுதியினர்தான் இந்த போராளிகள். என்றபோதும் அந்த பொதுப்புத்தி மட்டத்தை வளப்படுத்தி மேம்படுத்த தகைமையற்றுப்போன அறியாமையும் இராணுவவாதமும் கொண்ட இயக்கப் போக்குகள் எதையுமே சாதிக்காது என்பதையும் இன்னமும் சமூகத்தினை பொருளாதார ரீதியிலும் உளவியல் ரீதியிலும் பண்பாட்டு ரீதியிலும் கீழ்நிலைக்குத் தள்ளும் என்பதையும் ஈழப் போராட்ட வரலாறு காட்டியிருக்கிறது.
ஐயரின் நூல் ஒரு வரலாற்று ஆவணம். அனுபவ வழி எடுத்துரைப்பும் அரிய தகவல்களும் கொண்ட நூல் இது. அது கோட்பாட்டு வழிப்படுத்தப்பட்டு எழுதப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். அதற்கான சிறு முயற்சிகள் தொக்கிநிற்கிறபோதும் சலிப்பூட்டும் விதத்தில் திரும்பத் திரும்ப மாவோவின் மக்களமைப்புப் பற்றிய எடுத்துரைப்புகளை மட்டுமே சொல்லிச் செல்கிறது. இருந்தபோதும் ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றை இயக்கவாதக் கண்கொண்டு பார்க்கிற பார்வைகளும் தகவல் புரட்டுகளும் அறியாமைகளும் தமிழ்த் தேசியத்துள் மட்டும் நின்று உழல்கிற ஆய்வுமுறைகளும் நிலவுகிற இன்றைய மந்த சூழலை எதிர்கொள்வதில் இந் நூலுக்கு முக்கிய ஒரு பங்கு இருக்கிறது.
ரவி (12072019)