பத்து வருடங்களுக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் ‘உலகம் முடிகிற இடமாக அமைந்து’ காவுகொண்ட உயிர்களை நினைவுகூர்கிறேன். அது ஓர் இனப்படுகொலை என (என்போல்) வரைபுசெய்பவர்களோ, கூட்டுப் படுகொலை என வரைபுசெய்பவர்களோ எவர்களாகிலும் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்வதில் ஒரே புள்ளியில்தான் நிற்க முடியும்.
சக மனிதர்களை மதிக்க வேண்டும் என ஜனநாயக மனப்பான்மையை பிரக்ஞைபூர்வமாக வலியுறுத்துகிற ஒரு மனித உயிரிக்கு சக மனிதர்களின் மீதான படுகொலை என்பது உயிரிழையை அரிந்துகொள்வதான வலி மிகுந்ததாக இருக்கும். எதன்பெயரில் நடத்தப்பட்டாலும் எல்லா படுகொலைகளுக்கும் இது பொருந்தும். தனது பிள்ளைகளை, சகோதரரை, குழந்தையை, பெற்றோரை, நண்பரை… என இழந்துபோய்விடுகிறபோது, இந்த சமூக உறவுகளால் பின்னி அமைந்துகொள்கிற ஒரு சமூகம் அந்த உறவிழை அறுத்துப் போடப்பட்ட வலியை இலகுவில் மறக்கா. பத்துவருடம் ஒரு பொருட்டல்ல அதுக்கு. முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களின் நினைவுகூரலுக்கான வரலாற்றுப் புள்ளி. அது அழியா.
“போரில் எவருமே வெற்றிபெற்று விடுவதில்லை” என்ற வாசகத்தில் புதைந்திருப்பது அது ஒரு சண்டை மட்டுமல்ல என்பதே. பண்பாடு, மனித உறவுகள், கூட்டுப்பிரக்ஞைகள், தான் சார்ந்த இயற்கை, வாழ்வாதாரம்… என எல்லாவற்றிலும் அது நிகழ்த்துகிற தாக்கம் மீட்டுக்கொள்ள முடியாதவை என்ற செய்தி அதற்குள்ளால் சொல்லப்படுகிறது. அதனாலேயே போரை நடத்திய மகிந்தகூட தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என முள்ளிவாய்க்கால் இரத்தம் காயமுன் பேசவேண்டியுமிருந்தது.
ஒரே நாட்டுக்குள் தனது மக்களின் ஒரு பகுதியினரை கொன்றதை போர் வெற்றியாக அறிவித்து, பால்சோறு வார்த்து கொண்டாடும் நிலையை அரசு மட்டுமல்ல (சிங்கள) சமூகத்தின் ஒரு பகுதியினரும் செய்து காட்டினர். இப்போ போர்தின்ற வன்னிநிலப் பரப்பின் தலைநகராக விளங்கும் கிளிநொச்சியில் முஸ்லிம் சமூகத்தின் ஒரு குழுவினர் இந்த படுகொலையை நிகழ்த்திய இராணுவத்தை நினைவுகூர்கின்றனர். முள்ளிவாய்க்கால் உயிர்களுக்கு அந்த தளத்தில் இடமில்லை. எங்கே வாழ்கிறது இங்கு பொது மனிதநேயம் மற்றும் சகமனிதர் மீதான பொது நேசிப்பு.
இந்த சித்துவிளையாட்டு அரசியல் சார்ந்தது. அந்த நிலைப்பாடு முஸ்லிம் மக்களின் பொதுமையல்ல, அவர்தம் பொது மனங்களுமல்ல. அதேநேரம் குறித்த சம்பவம் தமிழ் மக்களின் மனங்களை வெல்லாது. அதை நடத்தியவர்களின் நோக்கமுமல்ல அது. இந்த பிழைப்புவாதம் தாம் சார்ந்த சமூகத்தின் மீது மற்றைய சமூகத்தின் (தமிழ்ச் சமூகத்தின்) பகையுணர்வை வளர்க்கும் வஞ்சக அரசியல்.
போரில் அநியாயமாகப் பலியாகியதில் இரண்டு தரப்பிலும் வறுமைப்பட்ட மக்களே அதிகம். அவர்களை இன மத மொழி கடந்து நினைவுகூர்கிற ஒரு மனம் அல்லது நிலைக்கு இடையில் இழுபறிப்படுகிற அரசியலுக்குள் இலங்கை மக்கள் விடப்பட்டிருப்பதான அவலம் பொதுமைப்படுத்தலுக்கு உரியதல்ல. தனித்துவம் சார்ந்த, வித்தியாசங்கள் சார்ந்த, இருப்பு சார்ந்த கேள்விகளால் பின்னப்பட்டவை. ஒரு நாட்டின் தலைமை இவைகளை எதிர்கொண்டு தீர்க்க வக்கற்று இருக்கும்போது அடையாள அரசியலுக்கு சாவு கிடையாது. இதுக்குள்ளை ஓடிப்பிடிச்சு இடம்பிடிச்சு “தேசியவாதம்” “மனித உரிமை மீறல்” அது இது… என அறிவை எழுதிக்கொண்டிருக்கிற புத்திசீவிகள் குறித்து பேசாமல் இருக்க முடியவில்லை.
இந்தப் போரிலே எந்த பாதிப்பும் அடையாத அல்லது அந்நியமாக இருந்த புத்திசீவித்தனம் தனது கோட்பாடு கோதாரி என களமாடும்போது கோமாளித்தனம்தான் வெளிப்படுகிறது. அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஒரு மனிதஉயிரியின் உணர்வை புரிந்துகொள்ளாது, அதன் மனங்களை வெல்லாது, கோட்பாட்டு சிக்கலுக்குள் அவதிப்படுகிற புத்திசீவித்தனம் அடிப்படையிலேயே (மக்களை முன்வைத்துப் பேசுகிற) கோட்பாடுகளுக்கு எதிரானது. இலையானை அடிக்க பீரங்கி தூக்கித் திரிவது அது! அது கடைசியில் bloody society என்று சுட்டி.. வீடேகும் வெற்று அறிவதிகாரம் கொண்டது.
புலிகளின் தவறான அரசியலை முன்வைத்து, இந்த முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் முரண்படுவது அல்லது கண்டுகொள்ளாமல் விடுவது என்னளவில் அவசியமற்ற ஒன்று. சோவியத் யூனியனுக்கு எதிரான முதலாளித்துவ நாடுகளின் போரை எதிர்த்து குரலெழுப்பிய
சார்ளி சப்பிளினை கம்யூனிஸ்ட் என ‘அவதூறு’ பேசிய அமெரிக்காவுக்கு அவரளித்த பதில் இதுதான்,
“தனது பிள்ளையை இழந்த தாயின் கதறலை உணர்ந்துகொள்ள, அதற்காக பேச நான் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும் என்பதில்லை. உனது தாய்போலவே அவளும் கதறுகிறாள். அதை உணர்ந்துகொள்ள நான் ஒரு மனிதஜீவியாகஇருத்தல் போதுமானது” என்பதுவே!
ரவி 20052019