அறம்
Posted April 26, 2019
on:இலங்கையின் கடந்தவார (21.04.2019) தொடர் குண்டுவெடிப்புகளின் அகோரமும் அழுகைகளும் ஒருபுறத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க கொஞ்சப் பேர் விடுதலைப் புலிகளின் ‘அறம்’ குறித்து சந்தர்ப்பம் பார்த்து பேசத் தொடங்கினர். இந்த 21 ஏப்ரல் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் கேள்விக்கிடமற்ற பயங்கரவாதிகள். அப்படியொரு கூட்டத்தோடு தாம் புனிதமாக கொண்டாடுகிற விடுதலைப் புலிகளை அற ஒப்பீடு செய்தார்கள். அதாவது ஒரு பயங்கரவாதத்தையும் ஒரு விடுதலைப் போராட்டத்தையும் ஒரே களத்தில் நிறுத்தி ஒப்பீடு செய்தார்கள். இங்கு இரண்டும் ஒப்பிடப்பட வேண்டிய எந்தத் தர்க்கத்தை இவர்கள் கண்டுபிடித்தார்களோ தெரியாது. விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் பயங்கரவாதம் ஒரு கூறாக இருந்தது என்ற உண்மை -அவர்களை அறியாமலே- இந்த ஒப்பீடுட்டுக்கான தளத்தை உருவாக்கிக் கொடுத்தது என்பதை அவர்கள் உணரத் தவறியதுதான் அவலம்.
விடுதலைப்புலிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடுத்ததில்லை, கொலைசெய்ததில்லை என -இந்தத் தலைமுறையில் வைத்தே- சொல்ல துணிவது புரியவேயில்லை.
எண்பதுகளின் கடைசியில் ரெலோ, ஈபிஆர்எல்எப் இயக்கங்களை தடைசெய்து அந்தப் போராளிகளை ஈவிரக்கமின்றி கொலைசெய்து உயிரோடு ரயர் போட்டு கொழுத்திய வரலாறு பொய்யா என்ன.
கிட்டு மீதான எறிகுண்டுத் தாக்குதலையடுத்து நடத்தப்பட்ட கந்தன் கருணைப் படுகொலை என்பது பொய்யா என்ன
அனுராதபுர நகரத்துள் 150க்கு மேற்பட்ட சிங்கள பொதுமக்களை படுகொலை செய்தது பொய்யா என்ன.
காத்தான்குடி பள்ளிவாசலினுள் நூற்றுக் கணக்கான முஸ்லிம்களை தொழுகையில் இருந்தபோது படுகொலை செய்தது பொய்யா என்ன
கருணா புலிகளுடன் முரண்பட்டு பிரிந்து சென்றபோது மட்டக்களப்புக்கு படைநடத்திச் சென்று வெருகலில் சக போராளிகளாக இருந்தவர்களைக் கொன்றார்கள்.
ராஜினிதிரணகம, தீப்பொறி அமைப்பின கேசவன், செல்வி, விஜிதரன்… போன்ற புத்திஜீவிகளை கொன்றார்கள். சக இயக்க தலைவர்கள் பத்மநாபா (EPRLF), சிறீ சபாரட்ணம் (TELO) ஆகியோரைக் கொன்றார்கள். புகலிடத்தில் தம்மை விமர்சித்த சபாலிங்கத்தை படுகொலை செய்தார்கள். இவ்வாறான தனிநபர் கொலைகளை உரிமை கோர அவர்களுக்கு ஒரு தர்க்க நியாயம்கூட இருக்கவில்லை.
இந்த கறைபடிந்த படுகொலை வரலாற்றை மறைத்து அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை, அவர்களைக் கொல்லவில்லை, அது அவர்களின் அறம் என்று சாதிக்கிறார்கள்.
30 வருட போராட்டம் ஒரு பெரும் தோல்வியில் முடிந்ததுக்கான புறக் காரணிகளை பேசுமளவிற்கு அதன் உள்ளக காரணிகளை பேசவேயில்லை. இன்றுவரை தோல்விக்கான காரணகாரியங்களை மதிப்பிடாமல் இப்போதும் புனிதம், அறம், தூய்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு என ‘சென்றிபொயின்ற்’ வைத்து காவல்காத்துக் கொண்டிருக்கிறோம். வெற்றியையும்விட தோல்வியிடமிருந்தே கற்றுக்கொள்ள பல இருக்கின்றன. எல்லா மூடிமறைப்புகளும் அதை சாதிக்கவிடாமலே வைத்திருக்கிறது.
அறம் பற்றி பேசுகிறார்கள். இந்த அறம் தமிழினியின் தாயார் கோவில் திருவிழாவில் கடலை விற்று வாழ்வாதாரம் தேடியதுவரை எப்படி கொணர்ந்து விட்டது.
இன்று தப்பிப்பிழைத்து அங்கவீனர்களாக இருக்கும் போராளிகள் வாழ்வாதாரத்துக்கு அல்லலுறுகிறார்கள். அத்தோடு பெண்போராளிகளை ஆணாதிக்கச் சமூகம் கீழ்நிலைக்கு தள்ளிய மனஉளைச்சலுக்கு இந்த அறம் எதை வழங்கியிருக்கிறது.
புகலிடத்தில் பட்டையடி அடித்து வேலைசெய்து விடுதலைப் போராட்டத்துக்கென வழங்கிய நிதி புலிகளின் அழிவுக்குப்பின் என்னவானது. இந்த பணத்தை மடக்கி ஒவ்வொரு புகலிட நாட்டிலும் இரண்டு மூன்று வீடு பங்களா விலையுயர்ந்த வாகனம்..அது இது என சுகபோகம் அனுபவிப்பவர்களிடம் இந்த அறம் எதைப் பயிற்றுவித்து கொடுத்திருந்தது.
தோல்விகளிலிருந்து பாடம் கற்று தம்மை சுயவிமர்சனம் செய்து தம்மை மீட்டெடுத்து முன்னேறியது யேர்மனியும் ஜப்பானும். முள்ளிவாய்க்காலில் வீழ்ந்து 10 வருடங்கள் ஆகப்போகிறது. ஏதை நாம் பாடமாகப் படித்தோம். சரிகளோடும் தவறுகளோடும் இயங்குதல் என்பது வேறு. சரிகளாகவே இருந்தோம் இருக்கிறோம் என்று சாதிப்பது வேறு. சுயவிமர்சனமற்ற வெளிப்படைத்தன்மையற்ற இந்த அறம் பாடல் தமிழ் மக்களை முன்னோக்கி ஒருபோதும் நகர்த்தப் போவதில்லை, வருடாவருடம் ஜெனீவா நோக்கித்தான் நகர்த்தும்!
*
// எதிர்காலத்தில் என்னைப் பின்பற்ற விரும்புபவர்கள் எவராக இருப்பினும் எனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். வேறு பாதையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். // – Phan Boi Chau (வியட்நாமின் மூத்த தலைமுறைப் போராளி பான் பாய் சௌ).
*
( இலங்கை அரசு புரிந்த உதிரிப் படுகொலைகளும் -முள்ளிவாய்க்கால் உட்பட்ட- கூட்டுப் படுகொலைகளும் அதியுச்சப் பயங்கரவாதம். மற்றைய இயக்கங்களின் உதிரிப் படுகொலைகள் உட்படுகொலை எல்லாமும் பயங்கரவாதம்தான்.இந்தப் பதிவு அவை பற்றியதல்ல.)
Ravi 25042019
FB Link : https://www.facebook.com/ravindran.pa/posts/2746027658801644
Leave a Reply