15.4.19 அன்று பாரிஸ் Notre Dame பற்றியெரிந்து சுற்றாடலை புகைமூட்டங்களாலும் சாம்பல் புழுதிகளாலும் மூடிய அதிர்ச்சியும் துயரமும் பலர் மனங்களை ஊடுருவிச் சென்றுகொண்டிருந்தது. ஐரோப்பிய வரலாற்றின் ஒரு குறியீடு தீயில் எரிந்து நாசமாகிக்கொண்டிருந்த துயரம் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, நாம் எப்படியான உலகத்தில் வாழ்கிறோம் என்பதை இரு பெரும் பணக்காரர்கள் நிறுத்திவைத்து சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் Arnault and Pinault.
இச் சம்பவம் நடந்து 6 மணித்தியாலத்துள் அவர்கள் இருவரும் 300 மில்லியன் யூரோவை Notre Dame இன் மீளமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்கள். உலகின் மிகப் பெரிய ஆடம்பரப் பொருட்களை உற்பத்திசெய்கிற கம்பனியின் சொந்தக்காரரான Arnault ஐரோப்பாவின் மிகப் பெரும் பணக்காரரும் உலகின் நான்காவது பெரும் பணக்காரரும் ஆவார். 91.3 பில்லியன் டொலருக்கு அதிபதியாவார் இவர். மற்ற நன்கொடையாளர் Pinault. இவர் 30 பில்லியன் யூரோவுக்கு அதிபதியாவார். இவர்கள் இருவரிடமும் உள்ள பணமானது கொராற்சியா, சேர்பியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளில் உள்ள பணத்தைவிட அதிகமானது.
இந்த பெருந்தொகை அன்பளிப்பு அவர்களுக்கு ஒரு பொருட்டான தொகையல்ல. உதாரணமாக உங்களிடம் இப்போ 3000 யூரோ பணம் இருக்குமாயின் நீங்கள் ஒரு பத்து யூரோவை .. மீளமைவுக்கு நன்கொடையாக அளிப்பீர்களானால் அது இந்த இரு பணக்காரர்களினது நன்கொடைக்கு விகிதாசாரத்தில் சமமானது.
இது எப்படியான உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. 7 பில்லியன் மக்களைக்கொண்ட இந்த உலக உருண்டையில் ஒரு 6 மணித்தியாலத்துள் 300 மில்லியன் யூரோக்களை இரு மனிதர்கள் அன்பளிப்பு செய்யக்கூடியதாக இருக்கிறது. இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் போதிய உணவும், வாழ்வதற்கான குடியிருப்பும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கான கல்வியும் வழங்க போதுமான பணம் இவ்வாறான சில பணக்காரர்களிடம் முடங்கிப்போய் உள்ளது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.
கலைப் படைப்புகளும் கட்டடக்கலை வரலாறும் அழகும் மக்களின் உழைப்பிலும் அவர்களின் சாதுரியத்திலும் உருவாகியவை. எனவே அவை எல்லாவற்றுக்கும் முதலில் அவர்கள்தான் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். செங்கற்களும் சுண்ணாம்புக் கலவைகளும் கண்ணாடிகளும் எரியலாம். ஆனால் அவை இரத்தம் சிந்தாது. பட்டினியால் சாகாது.
உலகில் -பாரிஸ் உட்பட- எல்லா இடங்களிலும் ஒவ்வொரு நாளும் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது முன்பக்கத்தில் செய்தியாக முக்கியத்துவப்படுத்தப் படுவதில்லை. அன்பளிப்புக்கான உணர்வுத்தூண்டலை உலகின் பணக்காரர்களிடம் ஏற்படுத்துவதில்லை.
பிரான்சில் இப்போ 140’000 வீடற்ற மக்கள் இருக்கிறார்கள். இதில் 30’000 பேர் குழந்தைகள். 2018 இல் வெளியான அறிக்கையொன்றின்படி மொத்தம் 8.8 மில்லியன் மக்கள் பிரான்சில் (2017 இல்) வறுமைக் கோட்டின்கீழ் இருக்கிறார்கள். அதாவது மாத வருமானம் 1026 யூரோவுக்கு குறைவான சம்பளம் பெறுகின்றனர். எட்டு பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் (பிரான்சில்) வறுமையில் வாழ்கின்றனர். இப்படியிருந்தும் உலகின் ஆறாவது பெரும் பணக்கார நாடாக பிரான்ஸ் இருக்கிறது.
ஆக பணம் அங்கே இருக்கிறது. சுட்டுவிரலில் காத்துக் கிடக்கிறது. ஆனால் அது மக்களின் கையில் இல்லை !
*
அயர்லாந்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளரான Carl Kinsella இன் ஆக்கத்திலிருந்து உருவப்பட்ட தரவுகள்தான் இவை. அந்த ஆக்கம் இதுதான்.
https://www.joe.ie/life-style/notre-dame-feature-665670
FB Link : https://www.facebook.com/photo.php?fbid=2728637213874022&set=a.146932932044476&type=3&theater