சுடுமணல்

நூலிழை

Posted on: April 11, 2019

“சொன்னேனில்லை” என்ற ஓர் அனுபவப் பகிர்வை சில நாட்களுக்குமுன் எழுதியிருந்தேன். அந்த முன்னாள் போராளி கேட்டுக்கொண்டதுக்கிணங்க பெயர் படம் மட்டுமல்ல, இடத்தையும்கூட நான் தவிர்த்திருந்தேன். இப்போ இன்னொரு பகிர்வை அதேபோலவே தவிர்த்து இங்கு எழுதுகிறேன்.)

*bird

2019 மாசி மாதம்.

போரில் அங்கவீனர்களாக்கப்பட்ட மேலும் சிலரை அவரவர் வீடுகளுக்குச் சென்று சந்தித்துவிட்டு வருகிறோம். நிழல்களையும் பொசுக்குகிற வெயில். கடைசியில் இந்த வீட்டை அடைகிறோம்.

அவள் நிலத்தில் போடப்பட்டிருந்த பாயில் பக்கவாட்டில் படுத்திருந்தாள். அருகில் ஒரு கட்டில் வெறுமையாய் இருந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்றாள். இளவயது அவளுக்கு. அவளால் தெளிவாக பேச முடிந்தது. சிந்திக்க முடிந்தது. தனது உணர்வுகள் உணர்ச்சிகளோடு வாழ்வைப் பிடித்துவைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் உடல் அவளிடமிருந்து அந்நியமாகியிருந்தது.

கழுத்துக்கு மேலே மட்டும் அவளது அசைவு இருந்தது. கழுத்துக்குக் கீழ் அவளால் அசைக்க முடியாது. அவளது உணர்வு நரம்புகள் வேலைசெய்தன. சதைகளை தாங்கிப் பிடிக்கிற நரம்புகள் செயலற்று இருந்தன. சதைகள் செயலற்று இருந்தன.

அவளது முகத்தில் இலையான்களின் பறத்தலும் இருத்தலும் அவளை தொந்தரவு செய்தபடி இருந்தன. கைகளும் துணையற்றுப்போன நிலையில் தலையை அப்படி இப்படியாக அசைத்தபடி பேசிக்கொண்டிருந்தாள். பதின்மூன்று வயது மகள் வேப்பிலை கொப்பு ஒன்றால் இடையிடையே இலையான்களை விரட்டிக்கொண்டாள். அவளது உடல் சரிந்துவிடாதபடி முதுகுப் புறத்தில் சிறிய மண்சாக்கு அணைக்கப்பட்டிருந்தது. எதிர்ப்புறத்தில் ஒரு சிறிய தொலைக்காட்சி இருந்தது. படுக்கையிலிருந்து பார்க்கக்கூடியவாறு அது கோணப்படுத்தப்பட்டிருந்தது.

எனது கமராவை நான் வெளியே எடுத்து படம் பிடிப்பதை குற்றமாக உணர்ந்தேன். அதனால் அது தோள்ப்பையுள் அடக்கமாக இருந்துவிட்டது.

ஒரு நுளம்பு வந்து அவளது உடலில் இருந்தால்கூட அவளால் உணர முடியும் ஆனால் எதுவும் செய்ய முடியாது. உடலை சிறிதாகக்கூட அசைக்க முடியாது. ஒரு கொசுவால்கூட அவளது உடலை வெற்றிகொள்ள முடிகிறது என்றானபோதும் தனது வாழ்வை அவள் நேசித்தாள். மரணத்தை அவள் வெறுத்தாள்.

பாதத்தில் ஒரு விறைப்புப் போல முளைவிட்ட அந்த நோய் படிப்படியாக வளர்ந்து இப்போ அவளது உடலின் கழுத்துப் பகுதிவரை ஆக்கிரமித்துவிட்டிருந்தது. அது தொடர்ந்து உடல் முழுவதுமாக ஆக்கிரமிக்கலாம் என வைத்தியர்கள் சொல்லிவிட்டார்கள். அதற்கு இன்னும் மருத்துவ உலகில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதையும் வைத்தியர்கள் அவளிடம் சொல்லிவிட்டிருந்தார்கள். cell-disease என பொதுவாக அழைக்கப்படுகிற அந்த நோயின் உக்கிரம் அவளை படுக்கையில் கிடத்திவிட்டிருந்தது.

மூன்று பிள்ளைகளின் தாய். தனக்கு அருகில் நின்ற தனது 13 வயது மகள் பற்றி அவள் விபரித்துக்கொண்டிருந்தாள். அவளது காலையில் குயில்கள் கூவுவதில்லை. மலர்கள் மலர்வதில்லை. கடமையும் பாசமும் அவளை தாயருகில் அழைத்துவிடுகிறது. அவள் பாடசாலைக்கு போவதற்கு முதல் தனது காலையை இப்படித்தான் தொடங்க முடியும். தனது தாயை சுத்தப்படுத்தி உணவூட்டிவிட்டு வீட்டு அலுவல்களை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக பாடசாலைக்குப் போகிறாள். மறக்காமல் தொலைக்காட்சியை இயங்கச்செய்துவிடுகிறாள். தனிமையில் விடப்படுகிற தனது தாயின் உலகம் அது. நடமாடும் நிழல் மனிதர்கள் குழந்தைகள் இயற்கை இசை நிறங்கள் உரையாடல்கள் எல்லாமும் அதற்குள்தான் இருந்தன.

இரண்டு மணிக்குப்பின் பாடசாலை முடிந்து பிள்ளைகள் வரும்வரை அந்தத் தாய் தனிமையில் இந்த நிழல் உலகத்துள் உலவிக்கொண்டிருப்பாள். தாகமேற்பட்டால்கூட அதை அவள் தீர்த்துக்கொள்ள முடியாது. ஒரு நுளம்பையோ ஒரு இலையானையோகூட அவளால் வெற்றிகொள்ள முடியாது.

பிள்ளை பாடசாலையால் வருகிறது. அவசரமாக புத்தகத்தை வீசிவிட்டு தாயிடம் ஓடி வருகிறது. தாயை கவனிக்கத் தொடங்குகிறது. உணவூட்டுகிறது. நீர்பருகச் செய்கிறது. தாயை சுத்தப்படுத்துகிறது. தாயின் கண்களில் நீர்உலர்ந்து போயிருக்கலாம் அல்லது புதிதாக துளியுடைந்து அது வழியத் தொடங்கியுமிருக்கலாம். அவளது இயங்காத உடலுக்குள் உட்புகும் காற்று பெருமூச்சாக வெளியேறியுமிருக்கலாம். உணர்வு வலயங்களுக்குள் அந்தக் குழந்தையும் தாயும் கடக்கமுடியாத தூரத்துள் வைக்கப்பட்டிருந்தார்கள். பிள்ளையின் குழந்தைமை முகத்தை அது பறித்துவிட்டிருந்தது என்பேன்.
அவளது முகம் பெரியவளாகிவிட்டிருந்தது. அவளது குழந்தைமை பறிபோன முகம் பார்ப்பவர்க்கு வலி தரக்கூடியது.

பின்னர் சமையல் வேலையை பிள்ளை தொடங்குகிறது. பல சந்தர்ப்பங்களில் எதைச் சமைப்பது என இருக்கும். போதிய சமையல் பொருட்கள் இல்லாமலிருக்கும். வீட்டுவேலை, பாடசாலை வீட்டுப்பாடம் என எல்லாமும் சேர்ந்து அந்த பிஞ்சு விடலைப் பருவத்தை கொறித்துவிட்டு படுக்கைக்கு அனுப்புகிறது.

அவளது சக போராளியாக இருந்த கணவன் அவள் நோய்வாய்ப்பட்டபின் அவளைவிட்டு, குழந்தைகளை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டான். அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என இன்றுவரை தெரியாது. இறந்தவர்களின் பட்டியலில் இணைப்பதா அல்லது காணாமல் போனவர்களின் பட்டியலில் இணைப்பதா… அவன் உயிருடன் இருந்தால் இது அடுக்குமா, அவன் குடும்பத்துக்கு தலைமறைவாக இருந்தால் இது அடுக்குமா? என்ற மனக்குழப்பம் எந்த உதவித் திட்டத்துக்குக் கீழும் தாயையும் பிள்ளைகளையும் பதியவிடாத உதவியறு நிலையை ஏற்படுத்திவைத்திருக்கிறது.

தாயின் மருத்துவ அறிக்கைகளை பிரதிபண்ணிக் கொண்டு புறப்படுகிறோம். இதற்கு மேற்குலகில் ஏதாவது மருந்து கண்டுபிடித்திருக்கிறார்களா என்ற அவளது கேள்வியையும், குறைந்தபட்சம் அது கழுத்துக்கு மேலே பரவாதபடி தடுத்து நிறுத்த வழிவகை இருக்குமா என்ற அவளின் ஏக்கத்தையும் ஒரு மனச்சுமையாக ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். எந்த வாக்குறுதியையோ நம்பிக்கையையோ ஆறுதலையோகூட சொல்லிக்கொள்ள முடியாத ஒரு மௌனம் எவளவு கொடுமையானது. இந்த நிலையிலும்கூட அவள் சிரித்து சிரித்து மிக தெளிவாக பேசிக்கொண்டிருந்த ஈர்ப்பலை மகிழ்வைத் தருவதற்குப் பதில் வலியையே தந்தது.

நாம் போயிருந்த காலப்பகுதியில் தொலைக்காட்சி வேறு பழுதாகியிருந்தது. அதை திருத்துவதற்கு 4000 ரூபா செலவாகும் என்றார்களாம். அதனால் அதுவும் நோயாளியாக இருந்தது. அந்த தொலைக்காட்சியை திருத்துவது தொழில்நுட்ப ரீதியில் உத்தரவாதமில்லாதது என்பதால் புதிய தொலைக்காட்சியொன்றை கொஞ்ச நாட்களுக்கள் வாங்கி அன்பளிப்புச் செய்தான் என்னுடன் வந்திருந்த சகதோழன்.

எமது “ஆதரவு” (aatharavu.com) அமைப்பு அங்கவீனர்களாகியோருக்கான சுயதொழில் முயற்சிக்கு உதவுகிற அமைப்பு. அதன் சார்பில் அவளை போய்ப் பார்த்தோம். இந்த விடயத்தில் சுயதொழில் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதற்கு நாம் வேறுவகையில் உதவ முடிவுசெய்திருக்கிறோம்.

சகதோழன் இலண்டனில் இந்த நோய் பற்றி தனது வைத்திய நண்பனிடம் விசாரித்தான். ஒரே பதில்தான் கிடைத்தது. இந் நோய்க்கு மருந்து ஏதும் மருத்துவ உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எமது “வாசிப்பும் உரையாடலும்-சுவிஸ்” சந்திப்புக்கு வருகின்ற தோழி ஒருவர் Neurology துறையில் ஒரு மருத்துவ நிபுணராக இருக்கிறார் . அவரிடம் விசாரித்தபோதும் அதே பதில்தான் கிடைத்தது. என்றபோதும் ஓர் அற்ப நம்பிக்கையை அவர் தந்தார். இந்த நோய் சிலவேளை கழுத்தோடு நின்றுவிடும் சாத்தியத்தையும் கொண்டது என்பதே அது. இது அவளுக்கு வாய்க்கப்பெறவேண்டும் என்ற அவா ஒரு நூலிழைபோல் எமைப் படர்ந்துபோய்விட்டிருக்கிறது.

– ரவி (11042019)

*

குறிப்பு :

இப் பதிவுகளை எழுதுவதா விடுவதா என யோசித்தபடி இருந்தேன். எழுத உந்திய காரணிகள் எந்த உள் நோக்கமும் கொண்டதல்ல. எமது எல்லா அரசியல் சார்புநிலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, கற்றறிந்த தத்துவங்களையும் பொருத்தல்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு மனிதஜீவியாக நின்று பார்க்கக் கோருகிற சம்பவங்கள் இவை. விளிம்புநிலை மாந்தர்களினதும் முன்னாள் போராளிகளினதும் போருக்குப் பின்னான யதார்த்த வாழ்வை பதிவுசெய்கிற சம்பவங்களில் நாமறிந்தது சில துளிகள் மட்டுமே. எமது சிறு உதவி அவர்களின் வாழ்வில் எவளவு பெரிய மாறுதலை அல்லது ஆறுதலை வழங்கக் கூடியது என்பதை நேரில் காண்கிறோம்.

 

FB Link :  https://www.facebook.com/photo.php?fbid=2712834142120996&set=a.146932932044476&type=3&theater

2 Responses to "நூலிழை"

நன்றி ரவி இப்பதிவை இட்டதற்கு, முன்னாள் போராளிகள் பலரும் ஆயுதந்கள் மூலம் ஒரு அதிகாரத்தை பெறுவதற்கே போராடினர் இவர்களுக்கு
மனிதநேயமாவது…..மக்களாவது…..
இதனால் தான் மக்களை விட்டு
அந்நிய மாகினர்…அழிந்துபோயினர்,…

“நூலிழை : பிறப்பின் துன்பத்தை குறுக்கும் நெடுக்குமாக படம் பிடித்துக காட்டுகிறது

Sent from Mail for Windows 10

________________________________

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Follow சுடுமணல் on WordPress.com

Archives

Blog Stats

  • 22,212 hits
%d bloggers like this: