அறிமுகமும் அப்பாலும்
கெய்சாக்களின் தோற்றம்
யப்பானின் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகத் தோன்றியவர்கள்தான் கெய்சா. இசை நாட்டியம் நடனம் காதல் காமம் என எல்லாமுமான கலைவடிவம் அவள். சிறுபான்மையாக ஆண் கெய்சாக்களும் இருந்தனர். அவர்களும் பெண் உடையிலேயே தோற்றமளித்தனர். பெண்கள் மிக உயரமான வெள்ளை மரக் காலணியையும் கிமோனோ என்ற பாரமான உடையையும் அணிந்திருப்பார்கள். கெய்சா ஆண்கள் வெள்ளை காலுறைகளைகளையும் கிமோனோவையும் அணிந்துகொள்வர். முகம் முற்றாக வெள்ளைப் பூச்சால் நிறைந்திருக்கும். கண் இமைகள் புருவங்கள் இதழ்கள் எல்லாவற்றையும் வெள்ளை, சிவப்பு, கறுப்பு என பூச்சுகள் மேய்ந்திருக்கும். தலை முடிகள் கொண்டையாக வாரிக் கட்டப்பட்டு குச்சிகள் சொருகப்பட்டு, தொங்கும் அலங்காரங்கள் கொண்டவளாய் காட்சியளிப்பாள். மொத்தத்தில் அவள் ஒரு அழகுப் பொம்மைபோல இருப்பாள். சாமிசென் இசைக்கருவி உட்பட மேள இசையையும் வாசிப்பதில் கடுமையான பயிற்சி பெற்ற விற்பன்னர்களாக இருந்தனர். அரங்கியலிலும்கூட அவர்கள் தம்மை கலைஞர்களாக நிரூபித்துக்கொண்டவர்கள். நறுமணங்களை ஊகித்தறியும் ஆற்றலிலும் கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் என அவர்கள் ஒரு கலைப் பொக்கிசமாக இருந்தனர்.
பல ஆண்டுகால உள்நாட்டுப் போராலும் காட்டிக்கொடுப்புகளாலும் சின்னாபின்னப்பட்டுப்போன யப்பான் தன்னை கட்டுப்பாடான இறுக்கமான சமூகமாக கட்டியமைக்க வேண்டிய தேவையை உணர்ந்தது. சீனத் தத்துவவாதியான சூகிசியின கன்பியூசனிச தத்துவத்துவத்தை வரித்துக்கொண்டது. இந்த இறுக்கமான நிலைமையில் வசதிபடைத்தவர்களுக்கான ஒரு உளவியல் ஆற்றுப்படுத்தலுக்கான களத்தில் கெய்சாக்களின் தோற்றம் எழுந்தது. இந்த ஆற்றுப்படுத்தல் அந்த வசதி படைத்தவர்களின் பெண்களுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான சாமான்ய அல்லது கீழ்த்தட்டு ஆண்களுக்கும் இவ் வழியில் கிடைக்கவில்லை.
250 ஆண்டுகளாக யப்பான் வெளிநாட்டினரின் ஊடுருவலுக்கும் தாக்கத்துக்கும் உட்படாமல் இருந்தது. ஒரு வளமான ‘விசித்திரமான’ கலாச்சாரத்தை மேம்படுத்திக்கொண்டிருந்தனர். வெளிக் கருத்தியல் மற்றும் மெய்யியல் தம்மைப் பாதிக்காத தன்மையைப் பேணினர். இப் பின்னணியில்தான் அழகிய யோசிவாரவில் கெய்சாக்களும் மலர்ந்தனர் என்கிறார் கெய்சா நாவலின் ஆசிரியர் லெஸ்லி டவுணர் (Lesly Downer) என்ற பிரித்தானிய நாட்டுப் பெண்மணி.
மேற்கில் கெய்சாக்கள் பற்றிய அறிமுகம்
1997 இல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் கோல்டன் எழுதிய Memoirs of a Geisha என்ற நூல். பல இலட்சம் பிரதிகள் விற்பனையாகி மேற்குலகுக்கு கெய்சாவை பரபரப்பாக அறிமுகப்படுத்தியது. இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு கெய்சாவை மேற்குலகுக்கு காட்சிப்படுத்தியது. ஆனால் யப்பானில் இந் நூல் புத்தக அலுமாரியின் பின் அடுக்குகளில் இடம்பிடித்தது. யப்பானியர்களால் அது கொண்டாடப்படவில்லை. கீழைத்தேயத்தை அதன் பண்பாட்டியலை மேற்கத்தைய பார்வையில் புரிந்துகொண்டு மேற்குலகத்துக்காக எழுதப்பட்ட நூலாக யப்பானியர்கள் அதைக் கண்டனர் என்கிறார் மத்திய புளோரிடா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிமிக்கோ அகீற்றா (Kimiko Akita) என்ற யப்பானிய ஆய்வாளர். ஆனால் மேற்குலகில் கெய்சா பிரலமாகியது.
லெஸ்லி டவுணரின் “கெய்சா”
“கெய்சா” நூலின் ஆசிரியர் லெஸ்லி டவுணரின் தாயார் சீன நாட்டவர். தந்தை கனடாவில் பிறந்த சீன பேராசிரியர். லெஸ்லி இப்போ வட இங்கிலாந்தில் வசிக்கும் பிரித்தானிய எழுத்தாளர். 1978 இல் யப்பானுக்கு தொழில் ரீதியில் தொடங்கிய பயணம் சுமார் 15 வருட கால யப்பான் வாழ்வனுபவத்தைக் ஏற்படுத்திக் கொடுத்தது. யப்பான் மொழியை கற்றவர். ஆர்தர் கோல்டனின் நூலின் பரபரப்பின் தொடர்ச்சியாக, லெஸ்லி டவுனர் கெய்சா உலகைத் தரிசித்து ஆய்வுசெய்து தனது ஆறு மாத கால வாழ்வனுபவத்தை “கெய்சா“ என்ற நூலாக எழுதியிருக்கிறார். இது ஒரு நாவலல்ல. அவர் கெய்சாக்கள் குறித்து (நாவல் சிறுகதை உட்பட) வேறு நூல்களும் எழுதியுள்ளார். மிக அதிகமான தரவுகள் கொண்ட ஒரு நூல் இது. கெய்சா பற்றிய ஒரு முழு அறிமுகத்தைத் தருகிறது. (தமிழ் மொழிபெயர்ப்பில் 12 வருடங்களாக லெஸ்லி ஆய்வுசெய்ததாக உட்புறத்திலும், பின் அட்டையில் 20 ஆண்டுகால ஆய்வு என்றும் பொறுப்பற்று எழுதப்பட்டுள்ளது).
Memoirs of a Geisha நூலில் ஆர்தரின் மேற்குலகப் பார்வை மிக கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தது. அதை கவனத்தில் எடுத்து லெஸ்லி பயணிப்பதுபோல் தெரிந்தாலும் அவரது மேலைத்தேய வாழ்வு கற்றுக் கொடுத்த கீழைத்தேசம் மீதான சிந்தனைப் போக்கும் (Exotism)) அதற்குள்ளால் பயணிப்பதை நூலை வாசிக்கிறபோது உணர முடிகிறது.
மேற்குலக தலையீடு
16ம் நூற்றாண்டு தொடக்கம் ஐரோப்பிய மிசனரிகளும் வியாபரிகளும் யப்பானுக்கு பயணம் செய்தனர். ஆனால் கெய்சா பற்றிய ஆகர்சப்படுத்தல் (fantasy) 19ம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. 1853 இல் அமெரிக்காவின் முதல் கப்பற்படை ஈடோ குடாவை (Edo Bay -இன்றைய ரோக்கியோவை) வந்தடைந்தது. யப்பானிடம் எந்த கப்பற்படையும் அப்போ இருக்கவில்லை. அமெரிக்க வர்த்தகம் மற்றும் இராசதந்திர தொடர்பு ஏற்படுத்தப்படுகிற முதல் நிகழ்வு இதுதான். 2 வருடங்களுக்குப் பின் அமெரிக்க ராஜதந்திரியாக வந்த ரவுண்சென்ட் கரிஸ் (Townsend Haris) 5 வருடங்கள் யப்பானில் தங்கினான். தனக்கு பெண்துணையொன்றை வழங்குமாறு யப்பானை கேட்டான். இராசதந்திர அழுத்தத்தின் காரணமாக யப்பான் 17 வயது கெய்சா ஒக்கிச்சி (Okichi) என்பவளை அவனிடம் அனுப்புகிறது. அவள் காலப்போக்கில் கரிஸின்மீது காதல் கொண்டாள். ஆனால் கரிஸ் நாட்டைவிட்டு புறப்படும்போது அவளை கைவிட்டுச் சென்றான்.
1800 இன் நடுப் பகுதிக்குப் பின் மேற்குலகத் தலையீடுகள் ஏற்படுகின்றன. தொழிற்புரட்சியின் இரகசியங்கள், ஜனநாயக முறைமைகள், சட்டங்கள், இராணுவ முறைமைகள், பொருளாதாரம், விவசாயம், தொழில்நுட்பம் போன்ற தமது முறைமைகளை யப்பானுக்கு கற்றுக்கொடுத்தனர். இந்த வெளிநாட்டவருக்கான இன்ப மாளிகை சிமபார (இன்றைய கின்சா) வில் 1869 இல் திறக்கப்படுகிறது. யோசிவாரவிலிருந்து பாலியல் தொழிலாள விடுதிகள், தேநீர் இல்லங்கள், அரசவை அணங்குகள், கெய்சாக்கள் யோசிவாரவிலிருந்து கொயோட்டோ வந்தடைந்தனர்.
இவ்வாறாக யப்பானின் பாலியல் கருதுகோள்களுக்குள் அதன் பண்பாட்டுக்குள் மேற்கத்தையவர்களின் இடையீடு ஏற்படுகிறது. இது பாலியல் குறித்த கீழைத்தேசங்களின் அறிவுமீதும் வெளிப்படைத்தன்மை மீதும் முறைமைகள் மீதும் பாதிப்பை செலுத்தியது.
“திருமணம், காதல், பாலியல் மற்றும் உறவுகள் என அனைத்தையும் பற்றி மேலைநாட்டினர் முற்றிலும் மாறான கருத்தோட்டம் கொண்டிருந்தனர்” என்கிறார் லெஸ்லி.
1850 களில் யப்பானிய பொதுக் குளியல் முறை (public bathing system) ஐரோப்பியர்களை ஆகர்சித்தது மட்டுமல்ல அதிர்ச்சியடையவும் வைத்தது. யப்பானிய ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் குளித்ததை அவர்கள் கண்டனர். அவர்கள் குளித்தபின் ‘நிர்வாணமாக’ வீடு திரும்பினர் என எழுதினர். அவர்கள் nacked என்ற வார்த்தைப் பிரயோகத்தை உபயோகித்தனர். ஆண்களுக்கு கோவணமும் (fundoshi), பெண்களுக்கு இடுப்பைச் சுற்றிய சிறிய ஸ்கேர்ட் (koshimaki) உம் உள்ளாடையாக பாவனையில் இருந்தன. இதற்குமேல் அவர்கள் மெல்லிய பருத்தியினாலான கிமோனோக்களை (yukata) அணிவது வழமை. குளியலின்பின் வீடு திரும்பும்போது கிமோனோவை கையில் காவியபடி உள்ளாடையுடன் போனார்கள். அல்லது மிக வெப்பமான நேரத்தில் கிமோனோவை இடுப்பில் சுற்றிபடி போனார்கள். இவர்கள் உள்ளாடையுடன் போவதுதான் nacked என்ற வார்த்தையால் குறிக்கப்பட்டது.
இப் பொதுக்குளியலுக்கு செல்லும் பெண்கள் பணக்காரர்களாக, வசதிபடைத்தவர்களாக இருந்தனர். பெரும்பாலும் கெய்சாக்களாக, அல்லது சாமுராய்க்களின் மனைவியராக, அவர்களின் பிள்ளைகளாக இருந்தனர்.
இந்த உள்ளாடைத் தோற்றம் பாலியல் நுகர்வுக்கு உரியவர்களாக (available) யப்பானிய பெண்களை பிம்பப்படுத்தியிருக்கலாம் என்பதும் கீழைத்தேய பாலியல் கருதுகோள்கள் மேற்குலகத்துக்கு அதிர்ச்சியும் அதேநேரம் ஆகர்சம் (fantacy) அளிக்குமளவுக்கு சுதந்திரமாக இன்னொரு தளத்தில் இயங்கின என்பதையும் ஊகிக்க இடமுண்டு.
ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் பாலியல் உறவு கொள்வது தவறு என்பது மட்டுமல்லாமல், அதை மேற்குலகத்தார் கொலைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதியது யப்பானியர்களுக்கு ஆச்சரியமளித்தது. பாலுறவு பற்றிய யப்பானிய கருதுகோளுக்கு அது மாறானதாக இருந்தது என்கிறார் லெஸ்லி.
உடலுறவை கற்பு நிலையில் வைத்து போற்றாத சமூகமாக யப்பான் இருந்தது. ஆனால் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறைமைக்குள் கடுமையான ஆணாதிக்கப் போக்கை கொண்டிருந்த ஒருவித மூடுண்ட சமூகமாக இருந்தது. மனைவி என்பவள் வீட்டுவேலை செய்வதற்கும் பிள்ளைபெறுதல் பராமரித்தல் என தமது உலகை அமைத்துக்கொள்ள வேண்டியவர்கள் என்பதில் தீவிரமாக இருந்தது. இது பல சமூகங்களிலும் நாடுகளிலும் நிலவிய முறைமைதான். இந்த மனோபாவம் நவீன உலகிலிருந்தும் மறைந்துவிடாத ஒன்று.
கீழைத்தேயம் மீதான மேலலைத்தேய மனோநிலை
கீழைத்தேய மாந்தரை ‘அந்நியர்கள், மற்றவர்கள், வெளியாட்கள், நாகரிகம் அடையாதவர்கள்’ என வரைவுசெய்தது மட்டுமல்லாமல், அந்த உடல்கள் மீது அதிகாரம் செலுத்தவும் அதை தொடவும், நுகரவும், பண்டமாகப் பார்க்கவும், பாலியல் கிளர்ச்சியூட்டுவதாக காணவும் (exotism) ஊறிப்போன மரபு மேற்கத்தையர்களது. இந்த அந்நியம் தம்மை வளர்ச்சியடைந்தவர்களாக, கீழைத்தேசங்களை வளர்ச்சியடையும் நாடுகளாக பொருளாதார ரீதியில் மட்டுமல்ல, நாகரிகம் என்ற கருத்தாக்கத்திலும் வைத்து நோக்குகிறது. அதன்வழி கீழைத்தேசங்களை காலனியாக்கவும் அதன்மீது அதிகாரம் செலுத்தவுமான ஞாயத்தை மேற்குலக சாமான்யருக்கு வழங்க உதவியது. இந்த தூரப்படுத்தி நோக்கும் போக்கு ‘பின்நவீனத்துவ அமெரிக்க கீழைத்தேயவியல்’ (Postmodern American Orientalism) போக்கின் ஒரு அம்சமாகவும் இருக்கிறது.
எக்சோட்டிச (exoticm) மனநிலை கீழைத்தேசங்களை இன்று பாலியல் சுற்றுலாத்தலங்களாக காண்பதிலிருந்து மேற்குலக வீதியில் நடந்து செல்கிற ஒரு கறுப்புநிற அல்லது பிரவுண்நிற மகளிரை காணும்போது, காரை நிற்பாட்டி எந்த சலனமுமின்றி “என்னுடன் படுக்க வாறியா” என கேட்குமளவுக்கு இன்றும் வேர்பாய்ந்திருக்கிறது.
அதற்குள்ளிருந்து லெஸ்லியும் வெளிவர முடியாமல் இருக்கிறார். கெய்சாவை ஒரு பாலியல் பொம்மையாக அதையே அழகாக காணுகிற அவரது போக்கும், இந்த கலாச்சார கூறை -அதாவது கெய்சாவை- புனிதப்படுத்துகிற போக்கும், கெய்சாக் காதலை புனிதக் காதலாக தூய்மையான காதலாக இலட்சியக் காதலாக காண்கிற போக்கும் கீழைத்தேய உடலின்மீது மேலைத்தேயம் கொண்டிருக்கிற பார்வையிலிருந்து வெளிவராதவை.
“ஜப்பானிய ஆண்கள் இரத்தமும் சதையுமான உண்மையான பெண்களிடம் காதலில் வீழ்ந்தனர்” என்றும்.
“கேய் என்ற அந்தக் கலைகள் அழிந்தால் ஜப்பானிய பாரம்பரிய கலாச்சாரமும் அழிந்துவிடும். இசை, நடனம், தேநீர் இல்ல வாழ்க்கை முறை அனைத்தும் அழிந்துவிடும் என்றும் கவலைகொள்கிறார். கெய்சா முறைமைகள் அழிந்துபோவதைப் பற்றிய கவலையும், கெய்சாக்களின் உலகாக விளங்கிய இடங்களில் (யோசிவாரா, கொயோட்டா பிரதேசங்களில்) சென்ரிமென்ராக உலவி வார்த்தைகளை உதிர்ப்பதும் எக்சோட்டிச இரசனை மிக்கது. சமூகவளர்ச்சியில் உதிர்ந்து போய்விடுகிற அமைப்பு முறைமைகள் மீது கழிவிரக்கம் கொள்ள எது அவரை ஆட்கொண்டிருக்கிறது.
“சாதாரண வேலை செய்கிற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் கெய்சா. ஆனால் அவர்கள் ஒப்பனை செய்யப்பட்டு பின் ஆண்களின் இன்பத்திற்காகவே படைக்கப்பட்ட கனவுலகின் கற்பனைப் பாத்திரங்களாக மாறிவிடுவர். அங்கு அவர்கள் பெண்மையின் முழுவடிவமாக மயக்கும் பொம்மைப் பெண்களாக இருப்பர்” என்றெல்லாம் எழுதுகிறார் லெஸ்லி.
பெண்ணியப் பார்வைகளையும், மனித உரிமைகளையும், குழந்தைமையின் உலகத்தையும, சமூகவளர்ச்சியையும் தம்வழியில் வளர்த்தெடுத்திருக்கிற மேற்கத்தைய ஜனநாயகமும் அறிவியிலும் கெய்சா மீதான அவரது பார்வையில் ஓரத்தில் வைக்கப்படுகிறது. எக்சோட்டிச பார்வை மேலெழுந்துவிடுகிறது. அந்த உடல்கள் நுகர்வுக்கானதாகிவிடுகிற காட்சியை தந்துவிட்டு கடந்து செல்கிறார்.
இதற்கான பதிலை தேடி எங்கும் செல்லவேண்டியதில்லை. ஒரு கெய்சாவின் குரல் அதற்குப் போதுமானது.
“கெய்சாவாக இருப்பது சாதாரண வேலையில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிக அழகாகத் தெரியும். இது அவ்வளவு அழகானதல்ல. இது வெறும் நடிப்பு உலகம். நான் யதார்த்தமான வாழ்க்கைக்கே போக விரும்புகிறேன்.” என்றும்
“இந்த உலகத்தில் அவ்வளவு வெளிப்படையாகப் பேசுவது நல்லதல்ல. இங்கு தேவைப்படுவது நம் அழகு மட்டுமே. நம் புத்திசாலித்தனம் அல்ல.” என்றும் கூறுகிறார் ஒரு கெய்சா. நூலில் லெஸ்லி அதை வெறும் ஒரு கூற்றாக சொல்லிச் செல்கிறார்.
கெய்சாவின் பின் அரங்கு
தேநீர் இல்லங்கள் கெய்சாக்களின் இயங்குதளமாக இருக்கிறது. வறுமைக்கோட்டில் உழன்ற யப்பானியர்களுக்கு தமது வறுமை காரணமாக பெண் குழந்தைகளை தேநீர் இல்லங்களில் ஒப்படைக்கிற ஒரு நிலைமை இருந்தது. இந்த சிறுமிகள் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் வெளியுலகம் தெரியாதவாறு ஒரு மூடுண்ட நிலைமைக்குள் வைத்து வளர்க்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகிறார்கள். கொஞ்சல் மொழி தொடங்கி, தலையலங்கார கலை, ஒப்பனைகள், இசைக்கருவிகளை வாசித்தல், நடனமாடுதல், பாரமான கிமோனோ உடை மற்றும் உயர்ந்த பாதணிகளுடன் பரிச்சயமாதல் என கடுமையான பயிற்சிகள் பெறுகின்றனர். குடும்பத்துடன் தொடர்புகொள்ள முடியாது. வெளி உலகு இவர்களை பாதிக்காதவாறு வளர்க்கப்படுவதன் மூலம் கொண்டாட்ட மனநிலையிலும் மகிழ்ச்சியை பரிசளிப்பவர்களாகவும் உருவாக்கப்படுகிறார்கள்.
14 வயதில் ‘கன்னி’கழிக்கும் (மிஸ்வேஜ்) சடங்குக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ‘கன்னி’கழிப்பவர்கள் மிக வசதிபடைத்தவர்களாக இருக்கிறார்கள். மேற்குலகில் அறியப்பட்ட கலையரசியான சடயாக்கோ என்ற கெய்சா அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் தனது அழகாலும் கலைத்திறமையாலும் பிரபலமாக அறியப்பட்டவர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தியவர். பிக்காசோவால் ஓவியமாக வரையப்படுமளவுக்கு பிரபலமாக இருந்தார். இவரே யப்பானின் முதல் நடிகையுமாவார். இவர் மெய்க்கோவாக இருந்தபோது அன்றைய பிரதமரால் ‘கன்னி’கழிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மெய்க்கோ ஆரம்பப் படிநிலையிலிருந்து கெய்சாவாக மாறுவதற்கு கன்னிகழிக்கப்பட வேண்டியது அவசியம்.
தேநீர் இல்லங்களில் உணவு கிடையாது. வாடிக்கையாளர் உணவு கேட்டால் அது வேறிடத்திலிருந்து தருவிக்கப்படும். கெய்சாக்களை சந்திக்கும் இடமாக, களிப்பூட்டும் இடமாக வசதிபடைத்த ஆண்களுக்கு இந்த இல்லங்கள் அமையும். கெய்சாக்களை வாடிக்கையாளருக்கு ஒழுங்கு பண்ணும் தொடர்பாடல்களையும் அது மேற்கொள்ளும். கெய்சாவின் ஒப்புதலின்றி உடலுறவு கொள்ள முடியாது என்பது விதி. வாடிக்கையாளர் இறுதியில் செலுத்தும் பணத்தை தேநீர் இல்ல எசமானி தனது பங்கை எடுத்துக்கொண்டு, மெய்க்கோ கெய்சா நிறுவன அமைப்புக்கு அனுப்புவாள். அந்த அமைப்பு தனது பங்கை எடுத்துக் கொண்டு பதிவு அலுவலகத்துக்கான பணத்தை செலுத்தும். மிகுதி கெய்சா இல்லத்துக்கு வந்து சேரும்.
புனிதம்
கன்பியூசனிசக் கருத்தியல்வழி யப்பான் பயணித்தததை புரிந்துகொண்டு கெய்சாக்கள் மிக கட்டுப்பாடானவர்கள் இரகசியம் பேணுபவர்கள் என்கிறார் லெஸ்லி.
கெய்சா என்பது தொழில் முறையில் இயங்கிய வடிவம். அது உடலுறவை மையப்படுத்தியதொன்றல்ல. அதேநேரம் மறுத்ததுமல்ல. பாலியல் துய்ப்பை மையப்படுத்தியது. அதை ஆதாரப்படுத்துகிற வெளிக்குள் நடனத்தை, இசையை, உடலசைவுகளை, பேச்சுமொழியை, பாடலை என கடுமையான பயிற்சிகளின் மூலம் உருவாக்கிப் பேணியது அது. எனவே கலையரசிகள் என அவர்கள் விளிக்கப்பட்டார்கள்.
பாலியல் துய்ப்பு என்பது மனிதர் உட்பட ஜீவராசிகளுக்கு மறுக்கப்பட முடியாதது. காமசூத்திராவின வெளிப்பாடும் கோவில் சிலைகளில்கூட பாலியல் துய்ப்புடன் கூடிய பெண் ஆண் உடல் சார்ந்த வடிப்பும் கீழைத்தேசத்தின் பாலியல் குறித்தான அறிவினதும் புரிதலினதும் இன்னொரு வெளிப்பாடுகள். ஆனால் இந்த துய்ப்பை உயர்குடி பணக்கார ஆண்கள் மட்டும் அங்கீகாரத்துடன் பெற்றார்கள். சாமான்ய மனிதர்க்கு -அது ஆணோ பெண்ணோ- இந்த அங்கீகாரம் இருந்ததில்லை. கெய்சா விடயத்திலும் அதுவே நடந்தது. நடக்கிறது.
தேநீர் இல்லங்களையும் கெய்சாவையும் தரிசிப்பது என்பது செலவு மிக அதிகமான நடப்பு. தேநீர் இல்லத்தில் போய் குந்துவதிலிருந்து மீற்றர் ஓடத் தொடங்குகிறது. தேநீர் இல்லம் கையளிக்கும் கணக்கு கேள்விக்கு அப்பாற்பட்டது. அதனால் அதற்கான சந்தர்ப்பங்களை பொருளாதார ரீதியில் உயர்நிலையிலுள்ள ஆண்கள் பெற முடிந்தது. இங்கு வரும் அரசியல்வாதிகள், சமூகத்தில் பொருளாதார ரீதியில் உயர்நிலையில் இருப்பவர்கள் ஆகியோர் தம்மைச் சுற்றி கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பம் கலைக்கப்படாமல் இருத்தல் அவசியமாகிறது. அதனால் தொழில்முறையில் அவர்களது இரகசியங்கள் பேணப்படுவது கெய்சாவுக்கு ஒரு கட்டுப்பாடாக இருந்திருக்கிறது. அதாவது தொழில் சார்ந்தே இரகசியம் பேணப்பட்டதாக கருதலாம். பண்பு சார்ந்து அல்ல. அது கெய்சாவாக இருப்பதற்கான அல்லது நிலைப்பதற்கான கட்டுப்பாடு. லெஸ்லி புனைவதுபோல் அது புனிதமல்ல. பிரக்ஞையுமல்ல.
இந் நூலின் பின் பகுதி முழுவதும் முன்னைய கெய்சாக்களின் வாக்குமூலம் நிறைந்திருக்கிறது. அதில் தம்முடன் சம்பந்தப்பட்ட மேட்டுக்குடிகள் அரசியல்வாதிகள் பற்றிய இரகசியங்களை வெளியிடுகிற கெய்சாக்களை காண்கிறோம். தொலைக்காட்சியில்கூட வந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எனவே கெய்சா இரகசியம் பேணுவது என்பது பிரக்ஞையோ பண்போ சார்ந்ததல்ல.
அவர்களின் இசை, நடனம் எல்லாமும் இந்த வெளிக்குள்தான் இயங்குகிறது. அதனால்தான் கெய்சாவின் அழிவோடு அவையும் மறைந்துவிடுகிற ஆபத்தும் சேர்ந்து இயங்குகிறது. என்றபோதும் இப்படியொரு பண்பாட்டு பாரம்பரியம் இருந்ததது என்பதை அடையாளப்படுத்தலும், அந்த கலையின் நுணுக்கத்தை தமது பண்பாட்டு அடையாளமாக மாற்றி புதிய வடிவில் வழங்குதலும் என சமூகப் பண்பாடு இயங்கிக்கொண்டேயிருக்கும். அரண்மனை அணங்குகளின் கலையாகவும் அரசகுலமும் அதன் உயர் பரிவாரங்களும் துய்ப்புற்ற கலையாகவும் இருந்த அரண்மனை அணங்குகளின் பரதநாட்டியம் அதன் புனிதங்களையும் துய்ப்பையும் இழந்து ஒரு பண்பாட்டு கலையாக இன்று கடைசி மனிதரையும் எட்டிவிட்டிருப்பது ஒரு நல்ல உதாரணம்.
கலாச்சாரத்தின் வன்முறை
சமூக ஆதிக்கசக்திகள் தமது மேலாதிக்கத்தை அல்லது மேலாண்மையை காப்பாற்றிக்கொள்ள வகுத்த புனிதங்கள் கட்டுப்பாடுகள் கலாச்சாரத்தின் வன்முறை எனப்படுகிறது. அது பெண்களை கலாச்சாரகாவிகளாக மாற்றியது. கெய்சாக்களும் அதற்குள் அகப்பட்டவர்கள்தான்.
கெய்சா என்பதன் பிம்பம் பெண்கள்தான். மிகச் சிறு பகுதியான ஆண்கெய்சாகூட பெண் உடையில்தான் தோற்றமளிக்கிறார்கள். பாலியல் பண்டம் என்பதை சுற்றித்தான் கெய்சாவின் அழகியல் கட்டமைக்கப்படுகிறது. ஆணாதிக்கம் கோலோச்சிய நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் ஒரு அங்கம் கெய்சா என சொல்லலாம். அதாவது ஆணாதிக்க முறைமையின் கீழான கலாச்சாரக் கூறு கெய்சா.
“திருமணம் முடித்த கணத்திலிருந்து மனைவியை தாயாக யப்பானியர்கள் கண்டதான ஒரு தகவலை நூலாசிரியா தருகிறார்.
இது கெய்சாக்களை தேடி போகிற ஆண்கள் தமக்கான ஒரு நியாயத்தை உருவாக்கிக் கொண்டதாக கொள்ளலாம்.
மனைவிமாருக்கு வெளியுலகம் தெரியாது. சமையல் குழந்தைகள் என கட்டுண்டு கிடந்தனர். வீட்டு விவகாரங்கள்தான் அவர்களுடனான உறவாக இருந்தது. மற்ற உலக நடப்புகள் பற்றிப் பேச ஒரு மேம்பட்ட வித்தியாசமான துணையாக, தங்களை மகிழ்ச்சியூட்டி உற்சாகப்படுத்துகிற அறிவாளியான நன்கு படித்த பெண்கள் தேவை. ஒரு கெய்சா இருக்க வேண்டியதும் அப்படித்தான்” என்ற கருத்தும் அல்லது ஒருவித நியாயமும் நிலவியதை நூலாசிரியர் பதிவு செய்கிறார்.
கெய்சாக்களுக்கான கடுமையான பயிற்சி அலங்காரம், நடனம், உரையாடல் மொழி குறித்து இருந்திருக்கிறது. அறிவு குறித்து இருந்ததாக நூலில் எங்குமே காணவில்லை. அதற்கான சாத்தியமும் இல்லை. “நிதர்சன வாழ்வின் கடுமையான பக்கங்களை ஒருபோதும் அறியாதவர்களாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறாள்” என்கிறார் நூலாசிரியர்.
வெளிச் சமூகத்திலிருந்து துண்டாடப்பட்டு, மூடுண்ட உலகத்துள் வைத்து சிறுபருவத்திலிருந்து வளர்க்கப்படும் மெய்க்கோ (கெய்சாவின் முதல் படிநிலை) ஓர் அறிவார்ந்த நிலையை எட்டுவது அரிதானது, அசாதாரணமானது.
“புல்லின் நிறம் கறுப்பு என்று ஒருவர் சொன்னால். இல்லை பச்சை என்று வாதிடாமல், அதை கறுப்பாகவே ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல அழகான கறுப்பு… அது.. இது.. என கெய்சா உரையாட வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறாள்” என்பதையும் நூலாசிரியர் பதிவு செய்கிறார்.
இந்த முரணை நூலாசிரியர் கண்டுகொள்ளாமல் போவது தற்செயலானதல்ல. எக்சோட்டிச மனநிலைதான் காரணம்.
இங்கும் ஆணாதிக்க சமூக அமைப்புமுறை ஆண்களை உழைப்பாளிகளாகவும், பெண்களை உழைப்பற்றவர்களாகவும் பிரதியீடு செய்கிறது. வீட்டு வேலைகளை குழந்தை வளர்ப்பை குடும்பத்தை நிர்வகித்தலை ஒரு உழைப்பாக கருதவில்லை. அவர்களுக்கான உள அழுத்தங்களை கணக்கில் எடுக்கவில்லை.
உடல் உள ரீதியில் ஆண்களுக்கு ஒருவித ஆற்றுப்படுத்தும் சக்தியாக கெய்சா உருவாகிறாள். அதன் களம் பாலியல் சார்ந்தது. அது மறுதலையாக பெண்களுக்கு வாய்ப்பதில்லை.
முடிவாக,
இந்த ஆணாதிக்க சமூகத்தின் அடிப்படையான கருத்தியலில் மனோநிலையில் உலகளவில் பெரியளவு மாற்றம் ஏற்பட்டதாக நம்புதற்கில்லை. ஆனால் அது உருவாக்கிப் பேணிய கலாச்சார வன்முறை படிப்படியாக தகரத் தொடங்கி பல காலமாகிவிட்டிருக்கிறது.
பெண்கள் தமது அறிவு மற்றும் திறமைகளை பெற்றுக்கொள்வதற்கான வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம், உலக பொருளாதார இயங்கு முறைமை, கல்வி வேலைவாய்ப்பு, சட்டரீதியிலான பாதுகாப்பு, பொருளாதார உத்தரவாதம் எல்லாமும் ஆணாதிக்கத்தின் கலாச்சார வன்முறை மனோபாவத்தை நொருக்கியிருக்கிறது. இந்த மாற்றங்கள் கெய்சாவின் உலகையும் கடந்துவரப் பண்ணுகிறது.
கெய்சாவின் தேநீர் இல்லங்கள் நவீன இரவு விடுதிகளாக மாறிவிட்டிருக்கிறது.
– ரவி (03022019)