பொதுப்புத்தியின் பொது நீரோட்டத்தோடு வெகுமக்களில் பெரும் பகுதியினரும் (கேள்விகளின்றி) பயணிப்பதுதான் வாழ்க்கை ஒழுங்காக மனித ஒழுக்கமாகப் பேணப்படுகிறது. பொதுப்புத்தி இன்றி பொதுமக்கள் என்ற கட்டமைப்புக் கிடையாது. இது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். எனவே பொதுப்புத்தியை நிராகரிக்க முடியாது. அதை விமர்சிக்க முடியும். அதிர்ச்சிக்குள்ளாக்குவதன் மூலம் அதை கேள்விக்கு உட்படுத்தி மேம்படுத்த முடியும். பொதுப்புத்தி என்பது வெகுமக்களின் தத்துவம் என்பார் கிராம்சி. எனவே அதை அறிவார்ந்த தளத்திலும் பண்பாட்டுத்தளத்திலும் மேல்நிலைக்குக் கொண்டுவருவதே மாற்றத்தை நேசிப்பவர்களின் கடமையாக இருக்க முடியும். இங்குதான் (அரசியல், சமூக) அமைப்புகள் மட்டுமல்ல, கலகக்காரர்களும் எதிர்மறுப்பாளர்களும் தமது பங்கை ஆற்றவேண்டியிருக்கும்.
எதிர்மறுப்புக்கும் கலகத்துக்கும் பெரியார் ஒரு அசல் உதாரணம். அவரது எதிர்மறுப்புகள் கருத்தியல் தளத்திலும் நடைமுறைத்தளத்திலும் செயற்படுத்தப்பட்டதால் அது பெரும் விளைவை -நேரடியாகவோ மறைமுகமாகவோ- கொடுத்திருக்கிறது. அதுவும் களத்திலேயே நிகழ்த்தப்பட்டவை. ஆனால் புகலிட எதிர்மறுப்பாளர்கள் அல்லது கலகக்காரர்கள் என தம்மை நினைத்திருப்பவர்கள் அல்லது நினைக்க கோருபவர்கள் இந்த அணுகுமுறையை கடைப்பிடிப்பதில்லை. இன்றைய நாட்டு நிலைமை புகலிடத்தாரை நாட்டுக்குள் தடையின்றி உலாவ விட்டிருக்கிறபோதும், அவர்களது களம் எழுத்து மட்டுமே. அதுவும் முகநூலுக்குள் பெரும்பாலும் சுருங்கிப் போயிருக்கிறார்கள். எனவே அது அவர்களுக்கான அடையாமாக பிம்பமாக உருமாற்றப்படுகிற போக்கு -திட்டமிட்டோ திட்டமிடப்படாமலோ- நிகழ்ந்துவிடுகிறது.
புகலிட சமூகம் 80 களில் பெயர்த்துவந்த சாதியம் பெண்ணொடுக்குமுறை மதம் உட்பட்ட எல்லாவற்றையும் பண்பாடாக வரையறுத்துக்கொண்டு அதை வளர்த்தெடுத்திருக்கிறது. அந்நிய தேசத்தில் தமது அந்நியமாதலை எதிர்கொள்ள தமிழ் அடையாளத்தை நிறுவுகிற ஒரு கருவியாக இதை பயன்படுத்தியது. தமிழ்ப் பண்பாடு குறித்து தெளிவான வரையறை எதுவும் அதற்குத் தெரியாததால் வக்கிரமான அல்லது பவுசுக் கலாச்சாரமாக அதை வளர்த்துச் செல்கிறது. சாமத்தியச் சடங்குகள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் திருமணக் கொண்டாட்டங்கள் எல்லாம் இதற்குள் சிக்கிச் சுழல்கின்றன. வானத்திலிருந்து கெலியில் வந்து இறங்குவது, பல்லக்கில் மணமகளைச் சுமப்பது, வீதிவழியே சப்பறம் கட்டி (கடவுளைக் கலைத்துவிட்டு) இழுத்து வருவது, பாகுபலி ஸ்ரைலில் அட்டகாசம் பண்ணுவது என அது பவுசுகொண்டு ஆடுகிறது.
இதன் மீதான எதிர்வினை ஆற்றல் அல்லது எதிர்மறுப்பு என்பது தேவையான ஒன்றுதான். அதை நாம் எப்படி நிகழ்த்துகிறோம். அது பிரக்ஞைபூர்வமானதா என்பதுதான் கேள்வி. இந்த புகலிடக் கலாச்சாரம் நுகர்வுக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதை சிலர் யாழ் மனோபாவமாக வரையறுப்பர். கிழக்கு ஐரோப்பா உட்பட மற்றைய கீழைத்தேய சமூகங்களோடு வாழும் அனுபவமானது அதை யாழ் மனோபாவமாக மட்டும் குறுக்கி வரையறுப்பதை கேள்விக்கு உள்ளாக்குகிறது. அது இருக்கட்டும்.
எது எப்படியோ இந்த புகலிட பித்தலாட்ட பண்பாட்டு விகாரங்களின் மீது எதிர்மறுப்புச் செய்யும் ஒருவர் அதேவகையான நுகர்வுக் கலாச்சாரத்தை இன்னொரு வடிவில் அனுபவிக்கிறபோது இந்த எதிர்மறுப்பு மீதான பிரக்ஞை கேள்விக்கு உள்ளாகிறது. உதாரணமாக நாட்டைப் பொறுத்தவரை தனிமனிதருக்கான வாழ்க்கை உத்தரவாதம் பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு சார்ந்தும் அரசினால் வழங்கப்படுவதில்லை. அது ஒரு சமூகநல அரசு அல்ல. அதனால் தமக்கான வாழுமிடம் (நிலம், வீடு) அவர்களுக்கு முக்கியமானது. ஆனால் மேற்குலகில் சமூக, தனிமனித உத்தரவாதங்கள் தேர்ந்த முறைமைக்குள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் பெரும்பாலான தமிழர்களும் தமது பொருளாதார சாத்தியப்பாட்டையும் மீறி வீடுகளை வாங்குகின்றனர். (வாங்குவது பிழையா சரியா என்ற விவாதத்துக்குள் வரவில்லை. ஒரு உதாரணமாக மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன்). பொதுப்புத்தியின் மீதான எதிர்மறுப்பாளர்களில் பலர் தாமும் இதற்கு (நுகர்வுக் கலாச்சாரத்துக்கு) பலியாகி இருப்பதை உணர்வதில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. நாட்டில் போரால் அல்லது வறுமையால் அல்லது சாதிய பிரச்சினையால் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் குறித்து அவர்கள் பேசும்போது, தடாலடியாக கருத்தை வீசும்போது இதற்குள்ளால் ஒரு முரண் எழுவதை அவர்கள் கவனிப்பதில்லை.
ஒருவகை நுகர் கலாச்சாரத்துக்குள் அகப்பட்டு அதற்காகவே தமது வேலை நெருக்கடிகள், நேர நெருக்கடிகள், ஓட்டங்கள், குடும்பத்துள் நேரம் செலவழிக்க முடியாமை என மற்றவர்கள் போலவே அதற்குள் பலியாகிக்கொண்டு -அடிப்படை வாழ்வாதார வசதியின்றி தவிக்கும்- விளிம்புநிலை மக்கள் மீதான கரிசனைப்பாட்டை எழுத்தில் மட்டும் காட்டுவதில் எதிர்மறுப்பின் செயல்முறைப் பாத்திரம் என்ன. (இந்த நுகர்கலாச்சாரத்தின் பொருளாதார பங்கில் ஒரு துளியைத் தன்னும் இந்த விளிம்புநிலை மக்களுக்காக வழங்க முடியாத அல்லது வழங்க முன்வராத நிலைமைக்குள் தம்மை சிறைப்படுத்தி வைத்துள்ளார்கள்). அவர்கள் விதந்துரைக்கும் பெரியாரை இந்த இடத்தில் நிறுத்திக் காட்டுவதைவிட ஒரு தெளிவான பதிலை எழுத முடியும் என நான் நம்பவில்லை.
240072019