சுடுமணல்

ஜெயந்தன் என்ற இந்த கலைஞனுக்கு இன்று பிறந்தநாள் !

Posted on: August 18, 2018

கடைசியாக வந்த விலைகூடிய கமராவென தமது புகைப்பட வல்லமைகளை கல்யாணவீடு பிறந்தநாள் என களம்காணுகிற தமிழ்ப் புகைப்படக்கலை அந்த விழாக்களிலெல்லாம் அந்த விற்பன்னர்களின் குண்டிகளையே நமக்குக் காட்டிக்கொண்டிருக்கும். மேடையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமலிருக்கும். கமராக்களுடன் அப்படி ஒரு கூட்டம் குறுக்கும் மறுக்குமாக ஓடித்திரியும். குனிஞ்சு எடுப்பார்கள்… படுத்து எடுப்பார்கள்… வளைஞ்சு எடுப்பார்கள்… த்றோன் (Drone) பறக்கவிட்டு எடுப்பார்கள்.

புகைப்படக் கலை என்பது எமது சமூகத்தில் பொதுவில் சரியாக விளங்கிக்கொள்ளப் படுவதில்லை. ஓவியம் போன்றே புகைப்படத்தையும் வாசிக்க நாம் கற்றுக்கொள்வதில்லை. அழகு, தெளிவு என்ற அளவுகோல்கள்தான் பொதுப்புத்தியுள் உண்டு. அற்புதமான ஓர் இயற்கைக் காட்சியை புகைப்படமாகக் கண்டால் “இதிலை ஒரு ஆளை விட்டு எடுத்திருக்கலாமே” என சொல்பவர்கள் உண்டு. ரசனை அப்படி.

அதனால் புகலிடத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய புகைப்படக் கலைஞர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். நோர்வேயில் தமயந்தி, அமெரிக்காவில் ரமணீதரன், சுவிசில் ஜெயந்தன், அமரதாஸ் ஆகியோர், டென்மார்க்கில் முரளி, கனடாவில் கருணா வின்சென்ற், இலண்டனில் ராஜா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

சுவிசில் புகைப்படத்தில் புனைவுகளை நிகழ்த்திக் காட்டுகிற ஒரு கலைஞன் ஜெயந்தன்.அவனுடன் தற்செயலாகத்தான் அறிமுகமானேன். சுவிசில் நாம் நடத்தும் “வாசிப்பும் உரையாடலும்” நிகழ்ச்சியொன்றுக்கு வந்திருந்தான். ஒரு தத்துவவாதியின் முகக்களையும் ஒரு கலைஞனின் முகக் களையும் என்னை யார் என்று தீர்மானித்துக்கொள் என்பதுபோல் அறிமுகமானான் அவன். சந்தேகமேயில்லாமல் ஒரு கலைஞன்தான் என அவன் நிரூபித்துக் காட்டிக்கொண்டான். தீவிர வாசகனாகவும் கண்டேன் என்பது இன்னொரு பக்கம். அதுமட்டுமல்ல ஓவியப் பக்கமொன்றும் அவனிடம் இருப்பதை அறிந்துகொண்டேன். இலங்கையின் அறியப்பட்ட ஓவியர் மார்க் இன் மாணவன் என்பதையும் அறிந்தபோது எனை ஆகர்சித்த ஒரு மனிதனாக மாறிக்கொண்டிருந்தான்.

தன்னை பிம்பமாகக் கட்டியெழுப்புவதில் நாட்டமில்லாத ஒரு எளிமையான கலைஞன் அவன். புகைப்படமானால் என்ன காணொளிப் படப்பிடிப்பானால் என்ன எனை அவை ஆகர்சித்தபடியே இருக்கின்றன. தற்போது இலங்கையிலிருந்து -நான் அலைந்து திரிந்த- ஒழுங்கைகளையும் இடங்களையும் அதன் அழகை இன்னொரு கோணத்திலும் பரிமாணத்திலும் தந்துகொண்டிருந்தான். தனது கமராவை செதுக்கி உருவாக்கிய அப் புகைப்படங்களை அவனது முகநூல் பக்கத்தில் நீங்கள் கண்டிருக்கக் கூடும்.

நிறப் புகைப்படங்களும் கறுப்புவெள்ளைப் புகைப்படங்களும் தமக்குள் தனித்துவங்கள் கொண்டவை. அவைகள் வாசிக்கப்படுதலில் வெவ்வேறு பரிமாணங்களை தருகிறது. வெவ்வேறு குவிமையங்களில் பார்வையாளரை நிறுத்தி கதைசொல்கிறது. ஒரே காட்சியிலேயே இந்த வித்தியாசங்களை பார்வையாளரிடம் நிகழ்த்திக் காட்டவல்லவை, இருவகை புகைப்படங்களும்!

அதேபோல் கடந்தகாலத்தை புனைவாக்கித் தருவதில் கறுப்புவெள்ளைப் புகைப்படங்கள் ஒரு பெரும் ஊடகம். அது ஒரு நிறவிளையாட்டல்ல. அதற்கான பரிமாணத்தை கலைஞன் அதற்குள் வழங்க வேண்டும். பழைய காலத்தின் சுவடுகளை அதற்குள் நிகழ்த்திக் காட்டுகிற வித்தையை பார்வையாளரிடம் அது செய்து காட்ட வேண்டும். அதை இவன் லாவகமாகவே கையாள்வதுபோல் தெரிகிறது. புதிய கமராக்களை மட்டுமல்ல காலமாகிய சந்ததியில் தப்பிப் பிழைத்திருக்கும் கமராக்களையும் அரவணைத்து அவன் எடுத்துவரும் புகைப்படங்கள் பிரமிக்கத்தக்கவையாக அமைந்துவிடுகின்றன. படச்சுருள்களுள் தேங்கியிருப்பது படம் மட்டுமல்ல காலமும்தான் என கூட்டிச் சென்று காட்டியும் விடுகிறான். நவீன கமராக்களுக்கு உன் நிறவுடலுக்கு அப்பால், இளமைக்கு அப்பால், உனக்குள்ளும் உன் மூதாதையர் வாழ்கின்றனர் என நிரூபித்தும் விடுகிறான். கறுப்புவெள்ளையில் அதை நிகழ்த்திக் காட்டுகிறான்.

விளம்பரமற்ற கலைஞனாக இருக்கிறான் அவன். சமூகச் செயற்பாடுகளில் தனது கமராவை ஏந்தியபடி வந்து பதிவுசெய்யும் ஜெயந்தனுக்கான ஒரு குறிப்பை இன்றைய பிறந்தநாளிலாவது எழுதிவிட நினைத்தேன். எழுதியிருக்கிறேன்.

2018

fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/3047017212036019

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Follow சுடுமணல் on WordPress.com

Archives

Blog Stats

  • 26,889 hits
%d bloggers like this: