மேற்குலகின் முப்பெரும் மதங்களாக கிறிஸ்தவத்தை, இஸ்லாமை, யூத மதத்தை முன்வைப்பதானது ஐரோப்பிய மையவாத சிந்தனை முறைமை ஆகும்.. இந்த வரலாற்றுப் புரட்டு ஐரோப்பாவின் மேலாளுமை உருவாக்கத்தை நிகழ்த்த அவசியமாகவே அவர்களுக்கு இருந்தது.
யூதமதம் தோன்றிய இஸ்ரேல் ஐரோப்பிவிலா இருக்கிறது?
கிறிஸ்தவ மதம் தோன்றிய ஜெரூசலம் ஐரோப்பிவிலா இருக்கிறது?
இஸ்லாம் மதம் தோன்றிய மத்திய கிழக்கு ஐரோப்பாவிலா இருக்கிறது?
ரோமப் பேரரசின் அரசியல் ஆளுகைக்குள் மத்திய கிழக்கு உள்ளடக்கப்பட்டடிருந்தது என்பதை வைத்து இந்த மதங்களை மேற்குலக மதங்களாக நிறுவுவது அபத்தமானது.
நாகரிகமடையத் தொடங்கிய சமூகத்திடம் இயற்கை குறித்து, பிரபஞ்சம் குறித்து, மனிதஜீவி குறித்து கேள்விகள் எழும்புகின்றன. அதன்போது கடவுளர்கள் பற்றிய கருத்தாங்கங்கள் தவிர்க்க முடியாமல் உருவாகின்றன. இந்த மூன்று மதங்களுடன் இந்து மதம், புத்த மதம் என ஐந்து பெரும் மதங்களும் ஆசியாவிலேயே பிறந்துள்ளன. தன்னை முதலில் நாகரிகமடைந்த இனமாக நிலைநிறுத்துகிற ஐரோப்பிய மையவாதத்தின் முயற்சிக்கு இந்த மதங்களை மேற்குலக மதங்களாக வரலாற்று மாற்றம் செய்வது அவசியமாகிறது.
காலனியம் பொருளாதாரச் சுரண்டலை மட்டுமல்ல, ஐரோப்பிய மையவாதத்தின் கருத்தியல் தளத்தை கட்டியமைப்பதிலும் மும்முரமாகவே செயற்பட்டன. வரலாற்றுத் திரிபுகளை செய்தன என்பதற்கு இந்த மதங்கள் குறித்த வரலாற்றுப் புரட்டும் ஒரு சாட்சி.
வெக்கையில் அவியும் பெத்லகேமில் பிறந்த யேசுவை வெள்ளை மேனிகொண்டவராக பிம்பப்படுத்தியதும் இதே அடிப்படையில்தான். போதாததுக்கு இயேசு உயிர்த்தெழுந்த அந்த சுடுமணலின் குடிசைக்கு வெளியே snow உம் கொட்டியாயிற்று.
கிறிஸ்தவத்தின் பரம்பல் பலஸ்தீனத்தில் தொடங்கி ஆசியா மைனர் (Constanti Nobel, இன்றைய இஸ்தான்புல்) ஊடாக றோமை அடைந்தது. பிறகு அங்கிருந்து எல்லா இடங்களுக்கும் விரிந்தது. ரோமப் பேரரசும் பின்னரான காலனித்துவமும் இதில் மிகப் பெரும் பங்காற்றியது. பூர்வீகக் கடவுளர்களை யெல்லாம் காவுகொண்டு இராட்சத மதமாக அது மாறியது. இன்று உலகின் மிகப் பெரிய மதமாக கிறிஸ்தவம் உள்ளது.
மேற்குலக கிறிஸ்தவ இறையியல் கோட்பாட்டில் அதிக தாக்கம் விளைவித்த, 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த அகஸ்ரைன்கூட ஐரோப்பியர் அல்ல. அவர் ஒரு அல்ஜீரியர். அகதியாக ஐரோப்பா வந்தவர்.
இப்போ கிறிஸ்தவத்தின் பரப்புரை மையமாக அதிகார மையமாக வத்திக்கான் விளங்கி வருகிறது. உண்மையில் முதல் 4 நூற்றாண்டுகளுக்கும் கிறிஸ்தவத்தின் பரப்புரை மையம் சிரியாவாக இருந்தது. றோம் அல்ல. கிறிஸ்தவத்தின் செல்வாக்கு செலுத்திய மையங்களில் எதுவுமே ஐரோப்பாவில் இருந்ததில்லை. ஆசிய ஆபிரிக்க நகரங்களிலேயே அவை இருந்தன. டமாஸ்கஸ் (சிரியா), அலெக்ஸாண்டிறியா (எகிப்து), அக்சிம் (எதியோப்பியா) என்பவையே அவை. அரசியல் நோக்கில் பார்த்தால் 4ம் நூற்றாண்டு இறுதியில் ரொமானியக் காலம் அதாவது அரசியல் ஆட்சி முடிந்து போனது. ஆனால் றோமன் கத்தோலிக்க திருச்சபை படிப்படியாக உலகில் கிறிஸ்தவ அதிகாரம் பெற்ற மையமாக மாறியது.
7ம் நூற்றாண்டில் இஸ்லாமின் வரவுவரை ஈராக் மிகப் பெரிய கிறிஸ்தவ மையமாக இருந்தது. அத்துடன் பலஸ்தீனம், சிரியா என்பனவும் கிறிஸ்தவத்தின் மையங்களாக இருந்திருக்கின்றன. 7ம் நூற்றாண்டு ‘Tang Dynasty’ இல் சிரியாவினூடாக சீனாவுக்கு கிறிஸ்தவம் வந்திருந்தது.
ஈராக், சிரியா மீதான போர்களில் கிறிஸ்தவத்தின் காலச்சுவடுகளாக இருக்கும் தேவாலயங்கள் மற்றும் (மியூசியம் உட்பட) தடயங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டது தற்செயலானதல்ல. கிறிஸ்தவத்தின் வரலாற்றை அதன் சுவடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கும் ஒரு சூழ்ச்சிகரமான செயற்பாடு நடந்தேறியது. வரலாற்றுப் புரட்டுகளை கேள்விக்கிடமில்லாமல் எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல அது தேவையாக இருக்கிறது அவர்களுக்கு.
இன்று வெள்ளைக்காரர்களின் மதம் கிறிஸ்தவம் என தவிர்க்க முடியாத படி நாம் சொல்லியேயாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது ஒரு வரலாற்று அவலம்.
இயேசு பிறந்த மண்ணிலேயே நத்தார்தினக் கொண்டாட்டம் இல்லையென்றாகும் நிலை இன்று !
17082018
fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/3044310472306693