03.06.1924 – 07.08.2018
ஊடுருவும் மொழியோசையை தமிழில் துய்ப்பதானால் கலைஞர் கருணாநிதியின் குரலுக்கும் வார்த்தைகளுக்கும் இலக்கிய நயத்துக்கும் கட்டுண்டு போகிறேன்.
கையில் நூலுடன் வாசகனாய்த் தோன்றும் கருணாநிதி வாசகர்களாயிருக்கும் நமக்கெல்லாம் ஓர் சக வழிப் பயணி.
அரசியலும் இலக்கியமும் அவரது தளமாக இருந்தது வியப்புக்குரியதுதான். இரண்டிலுமே; அவர் ஓய்வின்றியும் செயற்பட்ட கடின உழைப்பாளி.
பகுத்தறிவை முன்வைத்த அவரது விளக்கங்களும் செயல்களும் நடைமுறைப்படுத்திய விடயங்களும் பார்ப்பனியத்திற்கு தடைக்கல்லாய் நின்றதும் அவரை நிராகரிக்க முடியாதவராய் ஆக்கியதும் உண்மை.
*
ஒட்டுமொத்த ஈழத்தமிழர் சார்பாக அஞ்சலி செலுத்தவோ அல்லது விமர்சிக்கவோ ஈழத் தமிழர்களின் ‘கடவுளரல்ல’ எவரும். குறைந்தபட்சம் ஈழத் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியலை பிரதிநிதித்துவப் படுத்துகிற தலைமையுமல்ல எவரும்.
அதிகாரத்தை எட்டிப்பிடிக்க முடியாத ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை (இந்திய அளவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது) வைத்திருந்த கருணாநிதி நினைப்பில்; ஒரு நிழல் தலைவராக தெரிந்திருக்கவும் கூடும். ஈழப் பிரச்சினையில் அவரை எதிர்பார்ப்புக்குரியவராக -தமிழர் என்ற அடையாளத்துள் வைத்து- ஒருவர் காணுதல் கூடும். கருணாநிதி தவிர்க்கமுடியாதபடி தமிழர் மட்டுமல்ல இந்தியர் என்ற அடையாளத்தையும் கொண்டவர் என்பதை மறந்து, தன்னை இலங்கையராக உணராத (அல்லது உணர முடியாத) தமிழர்கள் அவர்மீது ஏற்றிவைத்த எதிர்பார்ப்பு ஒருவகையில் அப்பாவித்தனமானது.
அந்த எதிர்பார்ப்பை வலுவூட்டக்கூடிய விதத்ததில் கலைஞரும் மற்றும் தமிழக அரசியலாளர்களும் ‘தொப்பூள்கொடி உறவு’, ‘தாய்த் தமிழகம்’ என்றெல்லாம் வார்த்தைகளை கொண்டாடியது புறக்கணிக்க முடியாதது. அதேநேரம் தமிழக மக்கள் ஈழத்தவருக்காக வீதிகளில் இறங்கி நடத்திய போராட்டங்களின் கேள்விக்கிடமற்ற தார்மீக ஆதரவும் ஈழத்தவர்களுக்கான எதிர்பார்ப்பிற்கு நியாயத்தை வழங்கக் கூடியது. மக்களையும் அரசியல்வாதிகளையும் பிரித்துப் பார்க்க வேண்டிய இடங்களில் நிற்கத் தெரியாமல் அவதிப்படும் ஒருவருக்கு இது இன்னமும் கருணாநிதி போன்ற தலைவர்கள் மீது அதீதமாக எதிர்பார்ப்பை தரவல்லது.
கறுப்பின மக்களின் (அதிகாரத்தைக் கைப்பற்றிய) ஓர் தலைவனாக ஒபாமாவை பலர் கண்டனர் அல்லது எதிர்பார்த்தனர். கட்சி அரசியலுக்கு அப்பால் வைத்து அதேவகைப்பட்ட தலைவராக கருணாநிதியை பகுத்தறிவாளர்கள் அல்லது பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் கண்டனர் அல்லது எதிர்பார்த்தனர். ஈழத்தவரும் ஈழப் பிரச்சினையில் அவ்வாறு உளவழி நினைத்திருத்தல் கூடும். அதேபோலவே தமிழருக்கென்றொரு நாடில்லை என்ற ஆதங்கத்தை தமிழகத் தமிழ் மக்கள் ஈழத்தவர்மேல் ஏற்றிப் பார்த்த உளவியலையும் புரிந்து கொள்ள முடியும்.
ஆதிக்க சக்திகள் கட்டமைத்து நிலைநிறுத்தி வைத்திருக்கிற அரசியல் அதிகார முறைமைக்குள் பங்கேற்று, அதற்குள்ளால் சாதிக்க முடிகிறவைகளை அவர்கள் செய்தார்களா இல்லையா என்பதும், தம்மை எதிர்பார்த்த மக்கட் பிரிவினரிடம் -அதிகாரத்தின் மீதான தலைமைப் பங்கேற்பின் மூலம்- உளவியல் ரீதியில் பலத்தைக் கொடுத்தார்களா இல்லையா என்பதிலும் பல்வேறுபட்ட மதிப்பீடுகள் எழலாம். ஆனால் புறக்கணிக்க இடமில்லை என நம்புகிறேன்.
*
ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதி என்ன செய்தார் என்று கேட்பவர்களிடம் இயக்கத் தலைவர்கள் என்ன செய்தார் என கேட்கவே செய்வேன். ஈழப் போராட்டம் வீழ்த்தப்பட்டது என்பதைவிட வீழ்ந்தது என்பதுதான் என் பெருவழி மதிப்பீடு. அதனால் கருணாநிதியிடம் கேள்வி கேட்க என்னிடம் எதுவுமில்லை.
புகலிடத்தில் வியர்வை சிந்தி உழைத்த பணத்தையெல்லாம் தமிழீழப் போராட்டத்தின் பெயரில் திரட்டி, 2009 வீழ்ச்சியின்பின் அவையெல்லாம் அவரவர் வங்கிக் கணக்குக்கே சேர்ந்த மகிழ்ச்சியில் திளைத்தனர், புலிகளின் பொறுப்பாளர்கள்!. இன்னொரு வகையில் சொன்னால் புலிகளின் வீழ்ச்சியை – இச் சொத்தை கையகப்படுத்துவதற்காக- வீணிவடிய காத்திருந்ததும் அவர்களேதான். அது நடந்தும் விட்டது. எந்த போராளிகளைக் காட்டி பணத்தை கறந்தார்களோ அதே போராளிகள் இன்று வாழ்வாதாரத்துக்குப் போராடுகிற அதிவிளிம்பு நிலை வாழ்வை ஈழத்தில் வாழ்ந்துகொண்டிருக்க, அந்தப் பணத்தில் வெளிநாடுகளில் மூன்று நாலு என வீடுகள் வாங்கவும் விலையுயர்ந்த கார்களில் பயணம் செய்யவும் ஒரு கல்யாண வீட்டுக்கு போட்ட நகையை இன்னொரு கல்லாண வீட்டுக்கு போடாதது பற்றி மனைவிமார் பீற்றிக்கொள்ளவும், பூப்பு நீராட்டு விழாவுக்கே வானத்தைப் பிரித்து கெலிகொப்ரரிலிருந்து மகளை இறக்கவும், கல்யாணவீடுகளை பிறந்தநாளை புலிகேசி அரண்மனைகளில் கொண்டாடவுமென பவுசு காட்டித் திரிகின்றனர் இந்த முன்னாள் பொறுப்பாளர்கள். குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட இல்லாமல், தாம் சுருட்டிய ஒரு பகுதி பணத்தைத் தன்னும் முன்னாள் போராளிகளுக்கு கொடுக்க இடமில்லாத மனச்சாட்சியற்றவர்களாக அவர்கள் இருக்கின்றனர். விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் இவர்கள். இவர்களுக்கு எதிராக விரலசைக்க ஈழவிசுவாசிகள் யாருமில்லை. ஆனால் கருணாநிதியிடம் பேச அவர்களுக்கு ஏதாச்சும் இருந்துகொண்டே இருக்கிறது.
*
கருணாநிதி சேர்த்த சொத்துக்கு (கடவுள் மறுப்புக்கு வெளியேயான) பகுத்தறிவில் விளக்கம் இருக்குமா என்ன. அது ஒரு கொள்ளை. (குடும்ப) அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்ளை. பெரியாரின் கைத்தடியை பற்றிக்கொள்ள இந்த மனநிலை அனுமதிக்காது. அனுமதிக்கவும் இல்லை. அதனால் அவர் பகுத்தறிவுக் கோட்பாட்டாளரல்ல. பகுத்தறிவுவாத தலைவருமல்ல. தவறுகளுடன் கூடிய நடைமுறைவாதி.
உலகத் தமிழர்களின் தலைவர் என்பதெல்லாம் அதீதம்.
கருணாநிதியிடமும் கற்றுக்கொள்ள வேண்டியதை கற்றுக் கொள்வோம்.
மரணித்தவரை ஈரம் காயமுன் விமர்சிக்கவோ எதிரம்சங்களைச் சொல்லவோ கூடாது என்பதை ஒருவேளை பண்பாட்டு ரீதியில் விளங்கிக் கொள்ள முடிந்தாலும்கூட, சகட்டுமேனிக்கு புகழ்வதை எந்தப் பண்பாட்டுக்குள் வைத்து நிகழ்த்துவது என பிடிபடுதில்லை. அதுவும் அரசியல் பண்பாட்டுக்குள் அதற்கு இடமிருக்காது என்றே நம்புகிறேன்.
தமிழர்கள் நடத்துகிற உணர்ச்சி மதிப்பீடுகள் அல்லது அரசியல் அவர்தம் வீழ்ச்சிகளுக்கு தொடர்ச்சியாக பங்களித்தபடியே இருக்கிறது. அது தமிழகமானால் என்ன. ஈழமானால் என்ன. இந்த வழியொற்றிய பயணம் அயல்வீட்டு கந்தசாமியிலிருந்து தமிழக தலைவர் கருணாநிதிவரை இறப்பின்பின் தவறுகளற்ற அல்லது தவறுகளை மேவிய மனிதராக அடையாளம் காட்டிக்கொள்வது தவிர்க்க முடியாதது.
*
கலைஞருக்காக கண்ணீர்விடும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்பளிப்பதில் எந்தத் தயக்கமுமில்லை.
அஞ்சலிகள் !
09.08.2018
FB link : https://www.facebook.com/ravindran.pa/posts/2211227978948284