- நூல் மீதான வாசிப்பு
01.07.18 அன்று வாசிப்பும் உரையாடலும் (சுவிஸ்) -நிகழ்வு 17 இல் முன்வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.
சோபியின் உலகம்.
நோர்வேயைச் சேர்ந்த யூஸ்டேய்ன் கோர்டர் எழுதிய நூல் இது. இவர் தத்துவம் கற்பிக்கும் ஆசிரியர். இந் நாவல் ஐரோப்பிய தத்துவத்தின் தோற்றத்தையும் தடங்களையும் அதன் வளர்ச்சியையும் அதன்வழியான தத்துவவாதிகளையும் அறிமுகப்படுத்துகிற பணியை 14 வயது சிறுமியொருத்திக்கு புரியவைக்கிற எல்லைக்குள் சொல்ல முயற்சிக்கிறது.
இவ்வாறான ஒரு தத்துவத் தளத்தில் வைத்து ஒரு நாவல் வடிவத்தை பரீட்சித்துப் பார்க்கிறார் நூலாசிரியர். 1991 இல் தனது தாய்மொழியான நோர்வேஜிய மொழியில் அவர் இதை எழுதினார். மில்லியன் கணக்காக அது விற்பனையாகியது. இதுவரை சுமார் 60 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 40 மில்லியனுக்கு மேற்பட்ட பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கின்றன. இந் நூலை தமிழில் ஆர்.சிவகுமார் 2011 இல் மொழிபெயர்த்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கதைக்களம் – நோர்வே. காட்டை அண்டிய தொங்கல் வீடும் காட்டுக்குள் இருக்கிற மரவீடும்.
முக்கிய பாத்திரங்கள்
1. சோபி
2. கில்டே
3. ஆல்பேர்ட்டோ க்னொக்ஸ் (சோபியின் தத்துவாசிரியர்)
4. ஆல்பேர்ட் க்னாக் (கில்டேயின் தந்தை)
5. கெர்மீஸ் (நாய் -ஆல்பேர்ட்டோவின் தூதர்.)
பாத்திரங்களுக்கான பெயரிடல்
சோபி – கிரேக்க நம்பிக்கைகளின்படி கடவுளுக்கு பெண் சார்ந்த ஒரு பகுதி உண்டு. இந்த பெண்சார்ந்த பகுதி கிரேக்க மொழியில் சோபியா என அழைக்கப்படுகிறது. சோபியா அல்லது சோபி என்பதற்கு விவேகம் என்றொரு பொருளும் உண்டு.
கில்டே – 1098-1179 றைன் பள்ளத்தாக்கில் வாழ்ந்த பெண் துறவி கில்டே கார்ட். போதனையாளர், நாலாசிரியர், மருத்துவர், தாவரவியல் நிபுணர், இயற்கையியலாளர்.
பெண்கள் பெரும்பாலும் அதிக செயற்திறம் மிக்கவர்கள் மட்டுமல்லாமல் அதிக விஞ்ஞானச் சார்பு உடையவர்கள் என்பதற்கு துறவி கில்டே கார்ட் உதாரணம் என்கிறார் யூஸ்டேய்ன் கோர்டர். சோபியின் உலகமும் அதற்குள் இயங்குகிறது.
சோபிக்கும் கில்டே யுக்கும் பிறந்தநாள் ஒரே நாள்தான் வருகிறது.
சோபியின் தந்தை கப்பலில் வேலை செய்கிறார். கில்டேயின் தந்தை லெபனானில் ஐநா சமாதானப்படையின் மேஜராக இருக்கிறார். அதாவது இருவரும் தொலைவிலேயே இருக்கின்றனர்.சோபியின் தத்துவ ஆசிரியரின் பெயர் அல்பேர்ட்டோ க்னொக்ஸ். கில்டேயின் அப்பாவுக்குப் பெயர் அல்பேர்ட் க்னாக்.
இவ்வாறான ஒற்றுமைகள் நாவலில் உருவாக்கப்படுவது தற்செயலான ஒன்றல்ல எனப் படுகிறது.
தனது மகள் கில்டேயின் 15வது பிறந்தநாளுக்கு தந்தை அல்பேர்ட் ஒரு பரிசொன்றை அளித்து ஆச்சரியமூட்ட முடிவுசெய்கிறார். அது ஒரு தத்துவ நூல். அத் தத்துவ நூலிற்கான பாத்திரங்களாக சோபியையும் தத்துவாசிரியர் அல்பேர்ட்டோவையும் உருவாக்குகிறார், அல்லது அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள்ளும் கண்காணிப்புக்குள்ளும் இயங்குகிற மனிதர்களாக வைத்திருக்கிறார். இவர்கள் எல்லோரது கதையையும் யூஸ்டேய்ன் கோர்டர் எழுதுகிறார். இரண்டினது பெயரும் “சோபியின் உலகம்” தான்.
*
சோபி பாடசாலையால் வீட்டுக்கு வருகிறாள். தபால் பெட்டிக்குள் அவளது முகவரியிடப்பட்ட தபாலுறையொன்றை காண்கிறாள். அதற்குள் அவளை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இரண்டு கேள்விகள் வருகின்றன. “நீ யார்? உலகம் எங்கிருந்து வந்தது? “. தத்துவ அறிவை திறக்கிற சாவியாக அது அவளிடம் வந்துசேர்ந்தது. பிறகும் யாரிடமிருந்து வருகிறது என தெரியாத வகையில் அஞ்சலட்டைகள் வரத் தொடங்குகிறது. சோபியின் பெயருக்கு சோபியின் முகவரி இடப்பட்டோ அல்லது கில்டேயின் பெயருக்கு சோபியின் முகவரியிடப்பட்டோ அவை வருகின்றன. தத்துவ உரையாடலாக அவை தொடர்கின்றன.
அவளின் இரவுநேர காத்திருத்தலில் ஓர் உருவம் தபால்பெட்டிக்கு விரைவாக வந்துபோனதை ஒருநாள் காண்கிறாள். அதன்பின் அவளது இரகசிய இடத்துக்கு அஞ்சலட்டைகள் வரத் தொடங்குகிறது. வீட்டுவளவுள் மூலையிலிருந்த பற்றை மறைப்புக்குள் அவள் விளையாட்டுத்தனமாக உருவாக்கிவைத்திருந்ததுதான் அந்த இரகசிய இடம். தபாலுறையை கொண்டுவருவது ஒரு நாய். கெர்மீஸ். ஒருநாள் கெர்மீஸைப் பின்தொடர்ந்து சோபி ஓடுகிறாள். காட்டுப் பகுதிக்குள் அது விரைந்து மறைந்துவிடுகிறது. அதன்போது அவள் ஒரு கைவிடப்பட்ட மரவீட்டை காண்கிறாள். தனது தத்துவாசிரியர் அந்த வீட்டுக்குள் வசிப்பதாக அவள் ஊகிக்கிறாள்.
தாயிடம் அவள் விசாரித்தளவில் அந்த மரவீட்டில் மேஜர் ஒருவர் முன்னர் வசித்ததாக அறிகிறாள். தனது பள்ளிச் சினேகிதி யொயன்னாவுடன் ஒருநாள் காட்டுக்குள் பொழுதுபோக்காக கூடாரம் அடித்து தங்கிய பொழுதொன்றில் அந்த மரவீட்டுக்குள் இருவரும் இரகசியாக உட்புகுகின்றனர். அங்கு தபாலுறைகளை காண்கின்றனர். சோபியின் முகவரிக்கு அல்லது கில்டேக்கு (மே.பா சோபி என்று) எழுதப்பட்டு இருக்கும் உறைகளை கண்டெடுத்துவிடுகின்றனர். அவற்றில் சிலவற்றை வாசித்தும் விடுகின்றனர். அந்த மரவீட்டினுள் இருந்த பழமை தோய்ந்த கண்ணாடியொன்றையும் எடுத்துச் சென்றுவிடுகிறாள் சோபி.
தத்தவாசிரியருக்கு எல்லாம் தெரிந்துவிடுகிறது. அவர் அதை அவளுக்கு கடிதத்தில் தெரிவித்துக்கொண்டு, இயல்பாக எடுத்து கடந்து சென்றுவிடுகிறார்.
பிறகொருநாள் வீடியோ கசெற் வருகிறது. அதில் ஒரு தாடிக்கார நடுத்தரவயதானவர் ஏதென்ஸ் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விபரிக்கிறதை சோபி பார்க்கிறாள். அவர்தான் அல்பேர்ட்டோவாக இருக்கலாம் என நம்புகிறாள். அவர் அல்பேர்ட்டோதான். பிறகொருநாள் கெர்மீஸ் நகர்ப்பகுதியிலிருக்கும் அல்பேர்ட்டோவின் வீட்டுக்கு சோபியை அழைத்துச் சென்றுவிடுகிறது. அல்பேர்ட்டோ நேரில் அறிமுகமாகிறார். பின்னர் அஞ்சலட்டைகள் நின்றுபோய், நேரடி உரையாடல்கள் தத்துவப் பாடத் தொடர்ச்சியாக வளர்கிறது.
இயற்கைத்தத்துவவாதிகளில் தொடங்கி சோக்கரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்ரோற்றல்.. என தொடர்ந்து கெகல், மார்க்ஸ் என தத்துவ வளர்ச்சிப் போக்கை அல்பேர்ட்டோ சோபிக்கு சொல்லிக் கொடுக்கிறார். டார்வின், சிக்மண்ட ப்றொய்ட் ஆகியோர் பற்றியும் விஞ்ஞானிகள் கலீலியோ கலிலி, நியூட்டன் பற்றியும் என அவரது பாடங்கள் விரிவடைந்துவிடுகின்றன. இயற்கை குறித்து பிரபஞ்சம் குறித்து மனிதஜீவி குறித்து கடவுள் குறித்து எழுகிற எல்லாக் கேள்விகளினூடாகவும் அந்த தொடர் உரையாடல் பயணிக்கிறது.
இறுதியில் சோபியும் அல்பேர்ட்டோவும் கதாசிரியர் அல்பேர்ட் இன் கதையிலிருந்து தப்பியோடுகின்றனர். நாவலிலிருந்து பாத்திரங்கள் தப்பியோடுகிற ஒரு வித்தையை யூஸ்டேய்ன் கோர்டர் நிகழ்த்திக் காட்டுகிறார். இந்த நாவலின் புனைவு பகுத்தறிவை தளமாகக் கொண்டது.
தொடர்ச்சியாக கேள்விகளை உற்பத்தியாக்குவதும் அதற்கான விடைகளைத் தேடி தத்துவத்தை வளர்த்துச்செல்வதுமான புதிர்கள் இயற்கை பிரபஞ்சம் மனிதஜீவி மூன்றிலும் அள்ள அள்ள குறையாததாக இருக்கின்றன. தத்துவத்தின் ஒரு குழந்தையாக விஞ்ஞானம் வளர்ச்சியுறத் தொடங்கியது. பரிசோதனை முடிவுகளை நோக்கி ஆதாரப்படுத்தல் செயற்பாடாக அது வளர்ச்சியுற்றது. இயற்கைவிதிகளுக்குள் உள்ளடங்கி தமது வாழ்வை அமைத்திருந்த மனிதர் இயற்கை மீது வினைபுரியவும் அதை தமக்கானதாக மாற்றியமைக்கவும் முயற்சிசெய்தனர். அதன் விளைவாக தொழில்நுட்பம் உருவாகி வளர்ச்சியுறத் தொடங்கியது. அதன் கட்டற்ற வளர்ச்சியும், நிலவுகிற அரசியல் முறைமைகளும் இன்று இயற்கை மீதான வெளித்தெரியாத போரை செய்து நாசமாக்கிக்கொண்டிருக்கிறது.
நாவலுக்கு வருவோம்.
இந் நாவல் மீது பலவிதமான வாசிப்புகள் சாத்தியமாகலாம். என்னளவில் இரு வேறுபட்ட வாசிப்பை அடையாளம் காட்டுகிறேன். முதல் வாசிப்பானது உளவியல் தளத்திலானது. (சிக்மண்ட் ப்றொய்ட் பற்றியும் இந் நூலில் பேசப்படுகிறது). இரண்டாவது வாசிப்பானது பகுத்தறிவு தளத்திலானது.
1. கில்டேயின் நினைவு மனத்தில் வாழுகிற நிழல் பாத்திரங்கள் அல்பேர்ட்டோவும் சோபியும். கதையின் இறுதியில் கில்டேயின் நினைவு மனத்திலிருந்து நினைவிலி மனதுக்குள் (ஆழ்மனதுக்குள்) சோபியும் அல்பேர்ட்டோவும் போய்விடுகின்றனர் என்பதான புனைவு. சோபி கில்டேயின் ‘நான்’ ஆகவும் அல்பேர்ட்டோ அந்த ‘நான்’ மீது பாதிப்புச் செலுத்துகிறவராகவும் (தூரமாய் இருக்கும் தந்தை அல்பேர்ட் இன் நிழலாகவும்) கில்டேயின் நினைவு மனத்தில் இயக்கமுறுகின்றனர்.
2. கடவுள் குறித்தது. கடவுள் மறுப்பு அல்லது ‘கடவுளைத்’ தாண்டி வாழ்தல்.
முதல் வாசிப்பு குறித்து..
நினைவு மனத்தின் நிழல் பாத்திரங்கள்
– கெர்மீஸ் ஒரு சந்தர்ப்பத்தில் “பிறந்தநாள் வாழ்த்துகள் கில்டே” என சோபியைப் பார்த்து சொன்னது. அல்லது அப்படி சோபிக்கு கேட்டது என எழுதுகிறார் நாவலாசிரியர் யூஸ்டேய்ன் கோர்டர். (கவனிக்க கில்டே என்று நாய் விளிக்கிறது, சோபி என்றல்ல). இங்கே சோபிக்கு அப்படிக் ‘கேட்டது’ என்பதை கவனத்தில் கொள்ளலாம். கில்டேயின் நினைவு மனத்தில் (சோபி வாழும் உலகத்துள்) அந்த விளிப்பு இயல்பானதாக பதியப்படுகிறது.
– இதேபோலவே அல்பேர்ட்டோ ஒருசில சந்தர்ப்பத்தில் சோபியை “கில்டே” என விளித்துவிடுகிறார்.
– சோபி தனது கட்டிலுக்கு அடியில் கில்டே என பெயரிடப்பட்ட கழுத்துத் துணியை கண்டெடுக்கிறாள். அது எப்படி கட்டிலுக்கு அடியில் வந்தது என சோபி ஆச்சரியப்படுகிறாள். என்றோ ஒருநாள் நிகழ்ந்துவிடுவதை நாம் சிலவேளைகளில் மறந்துவிடுகிறோம். ஆனால் அது நினைவிலி மனத்தில் பதிவாகியிருக்கும். அதை நினைவு மனத்துக்கு (ஞாபகத்துக்கு) மீட்ட முடியாத சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. அதுவும் இப்படியான முக்கியத்துமற்ற சிறு சம்பவங்களை நினைவுமனத்துக்கு மீட்டுக் கொண்டு வருவது நிகழ்வதில்லை அல்லது அரிதாகவே நிகழ்கிறது. அதாவது அந்த கழுத்துத் துணி கில்டேயினது. கில்டே அதை தொலைத்துவிட்டிருந்து மறந்தும் போய்விட்டாள். அதை அவளால் நினைவிலி மனத்திலிருந்து நினைவுமனத்துக்குள் (சோபி வாழும் உலகத்துள்) கொண்டுவர முடியவில்லை.
– ஒரு சந்தர்ப்பத்தில் ஆல்பேர்ட்டோ சோபிக்கு சொல்கிறார்…
“கில்டேயின் அப்பா கில்டேக்கு அனுப்பப்போகும் பிறந்தநாள் பரிசான ஒரு புத்தகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது இப்போது எமக்குத் தெரிகிறது.” என்றதோடு மட்டும் அவர் நிறுத்தவில்லை. “…நான் சொன்னதைக் கேட்டாயா? அதை சொல்லிக்கொண்டிருந்தது நான் இல்லை” என்கிறார்.
பொதுவில் நாம் நினைவு மனத்திலிருந்துதான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒருசில சந்தர்ப்பங்களில் வார்த்தைகள் நினைவிலி மனத்திலிருந்து நினைவு மனத்தைத் தாண்டி (பிரக்ஞையற்று) வெளியே வந்துவிடுகின்றன. நினைவிலி மனம் இப்படியாக சில சந்தர்ப்பங்களில் மீறல்களைச் செய்து விடுகின்றன. அல்லது தொடர்பைக் கொண்டிருக்கிறது. இதை நாம் ‘வாய்தடுமாறிச் சொல்லிவிட்டோம்’ என்கிறோம். அல்லது அவ்வாறான வார்த்தைகளின் எதிர்பாராத வெளியேறலை நாம் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்காக வியப்படைகிறோம்.
நினைவிலி மனத்தில் இருப்பது நினைவுமனத்துக்கு வரும்போது செயல் என்ற வடிவத்துக்கு வர முடியும். அந்தச் செயல் பிரக்ஞை பூர்வமாகவோ பிரக்ஞையற்றோ நிகழக் கூடியது. சோபியும் அல்பேர்ட்டோவும் செயல்புரிகிறார்கள். நிஜ பாத்திரங்கள் போல் அவர்களை நாம் வாசிப்பின்போது பின்தொடர்கிறோம்.
அரிதான சந்தர்ப்பங்களில் நினைவுமனத்தை மீறி நினைவிலி மனம் வார்த்தைகளை சொல்ல வைக்கிறது அல்லது தடாலடியாக செயலுக்குத் தள்ளிவிட்டு மறைந்துவிடுகிறது. உளவியல் ரீதியில் தாக்கமான பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் இந்த கட்டுப்படுத்த முடியாத செயல் நிகழ்ந்துவிடுவது இயல்பு.
– கதையின் இறுதியில், கில்டேயின் தந்தை அல்பேர்ட் அவளை -நீண்ட கால இடைவெளியின் பின்- சந்திக்க வருகிறபோது, அல்பேர்ட்டோவும் சோபியும் அல்பேர்ட்டின் கதையிலிருந்து தப்பியோடுகின்றனர். பின் கில்டேயின் நினைவிலி மனம் அவர்களின் இருப்பாகிவிடுகிறது. அவர்களை சக மனிதரால் மட்டுமல்ல கில்டேயின் பிரக்ஞையாலும் காணமுடியாது போகிறது. இது புனைவாக படைப்பில் உருவாக்கம் பெறுகிறது. ஆவியுரு போல் அல்லது ஆன்மவுரு போல் இதை கற்பனை செய்துகொள்ளலாம். பிறகான கதையும் அப்படியே (சோபியும் அல்பேர்ட்டோவும் ஆவியுருவாகவே) நகர்கிறது.
“சோபி தரையில் படுத்து மிதவை விமானத்தை தள்ள முயன்றாள். ஆனால் அது அசையவில்லை. அல்லது ஒரு மிமீ தூரத்துக்கு அதை நகர்த்திவிட்டாளா?” என்கிறார் நாவலாசிரியர் யூஸ்டேய்ன் கோர்டர். நினைவிலி மனத்தால் நேரடியான செயற்பாட்டை செய்ய முடியாது என்பதும், அதன் மீறல் சிறிதாக நினைவுமனத்தை வந்தடையும்போது, அதன் செயற்பாடும் சிறிதாக நிகழ்ந்துவிடுகிறது என்பதையும் ‘மி.மீ அரக்கல்’ அர்த்தப்படுத்துகிறது என கொள்ள இடமுண்டு.
– கில்டேயும் தந்தை அல்பேர்ட் உம் ஏரிக்கரையில் இருக்கிறார்கள். சோபி அருகில் போகிறாள். அவர்களால் மிக அருகிலிருக்கும் அவளை காணமுடியவில்லை. அவள் கில்டேயின் கன்னத்தில் அறைகிறாள். “ஐயோ” என்றாள் கில்டே. (ஆனால் அவள் சோபியைக் காணவில்லை.) கில்டேயின் நினைவிலி மனத்தின் நினைவுமனத்துடனான தொடர்பை (உணர்தலை) அல்பேர்ட்டால் உணரமுடியாது. கில்டேக்கு அதை உணர முடிகிறது. யாருடையதோ அசுமாத்தம் தெரிவதாகவும் கில்டே சொல்கிறாள். அல்பேர்ட் அதை நம்பவில்லை. ஏனெனில் அவர் அதை உணர வாய்ப்பில்லை.
– பிறகு கட்டியிருந்த படகை (ஆவியுரு அல்லது ஆன்மவுரு போன்று மாறியிருக்கும்) சோபியும் அல்பேர்ட்டோவும் அவிழ்க்க முயற்சிசெய்கிறார்கள். முடியவில்லை. செயல்புரிய முடியவில்லை. தான் படகை ஏற்கனவே கட்டியதை தந்தை அல்பேர்ட் க்கு அழுத்தமாக கில்டே சொல்கிறாள். ஆனால் படகு கட்டவிழ்க்கப்பட்டு தண்ணீரில் மிதக்கிறதை அவர்கள் காண்கிறார்கள். தந்தை அல்பேர்ட் இன் வரவை காணும் அதீத ஆவலில் இருக்கும் கில்டே பிரக்ஞையற்று படகை அவிழ்த்துவிட்டிருக்கலாம்.. அது அவளுக்கு நினைவிலில்லை. அதாவது நினைவுமனத்தில் இல்லை.
இரண்டாவது வாசிப்பு குறித்து..
கடவுள் மறுப்பு அல்லது ‘கடவுளை’ கடந்து வாழ்தல்.
கில்டேயின் அப்பா அல்பேர்ட் கடவுள் நிலையின் ஒரு குறியீடு. “இந்த உலகை கட்டுப்படுத்தும் சர்வ வல்லமை பெற்றவர் அவர்” என எழுதுகிறார் நாவலாசிரியர் யூஸ்டேய்ன் கோர்டர். அதன்படியே சில அதிசயங்களும் ‘நிகழ்கின்றன’. உதாரணமாக, அல்பேர்ட்டோவின் வீட்டில் சோபி வாழைப்பழத்தை உரிக்கும்போது, உட்தோல் பகுதிக்குள் “கில்டேக்கு பிறந்தநாள் வாழ்த்து” என எழுதப்பட்டிருப்பதை சோபி காண்கிறாள். கெர்மீஸ் ஒருமுறை பேசுகிறது. சோபியைப் பார்த்து “பிறந்தநாள் வாழ்த்துகள் கில்டே” என்கிறது. கடவுளால் எந்த அதிசத்தையும் செய்ய முடியும் என உரைக்கப்படுதலுக்கான குறியீடுகள் இவை என கொள்ள இடமுண்டு.
தனது மகள் கில்டேக்கான 15 வது பிறந்தநாள் பரிசாக கொடுக்க எழுதிய நூலில் சோபியினதும் அல்பேர்ட்டோவினதும் கதையின் முடிவை அல்பேர்ட் எழுதவேண்டிய நிலைக்கு வருகிறார். எழுதியும் இருந்தார். அல்பேர்ட்டோ புத்தகக் கடையில் இளவயதினருக்கான தத்துவப் புத்தக வரிசையில் “சோபியின் உலகம்” என்ற நூலை சோபிக்காக வாங்கிக் கொடுத்திருந்தார். அதன்போதே தாம் அல்பேர்ட்டால் கண்காணிக்கப்படுவதையும் இயக்கப்படுவதையும் காண நேர்கிறது. அந்த கதையின் முடிவு நூலில் சொல்லப்பட்டிருந்தபடி நடந்து முடியவில்லை. அல்லது அதை சோபியும் அல்பேர்ட்டோவும் மாற்றியமைத்தார்கள்.
இதுவரை அல்பேர்ட்டின் கண்காணிப்புக் கீழேயே இயங்கிய இரு பாத்திரங்களும் அவரது படைப்புலக ஆளுகைக்குள்ளேயே (கண்காணிப்புக்குள்ளேயே, விதிக்கப்பட்டபடியே) இயங்கிக்கொண்டிருந்தன. மகளை சந்திக்க லெபனாலிருந்து வருகிற அல்பேர்ட் இன் கவனம் அதன்மீது குவியமாக இருக்கிறது.
மகள் கில்டே சோபியினதும் அல்பேர்ட்டோவினதும் மீதான தந்தையின் கண்காணிப்பில் ஒருவித மென்வெறுப்பு அடைகிறாள். அதேபோன்ற ஒரு சிறு செயலை அவள் தகப்பன் கொப்பன்காகன் விமானநிலையத்தில் காத்திருந்தபோது (தமது குடும்ப நண்பிகளின்) உதவியோடு நிகழ்த்தி அவரை சஞ்சலப்படுத்துகிறாள்.
அல்பேர்ட் இன் (தந்தையின்) இந்த இரு கவன திசைதிரும்பல்களின் போது சோபியும் தத்துவாசிரியர் அல்பேர்ட்டோவும் அல்பேர்ட் இன் கதையிலிருந்து -கண்காணிப்பிலிருந்து- தப்பியோடுகின்றனர். அவர்களின் கதையை இந்த “சோபியின் உலகம்” நூலாசிரியர் யூஸ்டேய்ன் கோர்டர் தொடர்கிறார். இப்போ அல்பேர்ட்டின் பார்வைக்குள் சோபியும் அல்பேர்ட்டோவும் இல்லை.
“ஒரு நபரால் கட்டுப்படுத்தப்படும் உலகில் மிகச் சிறந்த கண்காணிப்பு முறைக்கு வரம்புகள் உண்டு” என்று சோபிக்கு சொல்கிறார் அல்பேர்ட்டோ. “நாம் நம்முடைய பகுத்தறிவை பயன்படுத்தும்வரை அவர் நம்மை ஏமாற்ற முடியாது. ஏனென்றால் ஒருவகையில் நாம் சுதந்திரமானவர்கள்” என்கிறார் அல்பேர்ட்டோ. இங்கு அல்பேர்ட்டை (கில்டேயின் தந்தையை) ஒரு கடவுளின் நிலையில் வைத்தால் ‘கடவுளைத்’ தாண்டிய வாழ்தலின் சாத்தியத்தை இது குறிப்புணர்த்த வல்லது.
உண்மையில் கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவர் அப்படியேதான் இயங்குகிறார் என்பதை அவரது அன்றாட வாழ்வு இயக்கத்தில் வைத்துப் பார்க்க முடியும். நாள் பூராவும் சதா கடவுள் தன்னை கண்காணிக்கிறார் என்றவாறான நினைப்புடன் எவரும் வாழ்வதில்லை. தன்மீதான நம்பிக்கையின், சுய ஆற்றலின், சுய முயற்சியின், சுய செயற்பாட்டின், சுய விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் மட்டுமல்ல, சக மனிதர்களுடனான இணைவாக்கத்துடன், தங்கியிருத்தலுடன், அவர்கள் மீதான நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மையுடன் ஒவ்வொரு நாளின் பெரும்பகுதி அல்லது முழுவதுமாக வாழ்தல் என்பது கழிந்து போகிறது. தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லது அப்படியாகக் காட்டிக் கொள்பவர்களும் இவ்வாறுதான் இயங்குகிறார்கள்.
கடவுள் மறுப்பு அல்லது ‘கடவுளைத்’ தாண்டி வாழ்தல் என்பது அவர்களிடத்திலும் சூட்சுமமாக நிகழ்கிறது. தமது ஆன்மீகத் தளத்துள் கடவுளை இருத்திவிட்டு, தமது வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். இதையே அல்பேர்ட்டோ “நாம் எமது பகுத்தறிவை பயன்படுத்தும்வரை அவர் எம்மை ஏமாற்ற முடியாது. ஏனென்றால் ஒருவகையில் நாம் சுதந்திரமானவர்கள்” என்கிறார் என கொள்ள சாத்தியம் உண்டு.
ஒருவகையில் மனிதர்கள் சுதந்திரமானவர்கள்தான். அது கடவுள் என்ற கண்காணிப்பாளராயிருந்தாலென்ன அல்லது குடும்பம், பாடசாலை, அரசு, அரச வன்முறை இயந்திரங்கள் என எந்தவகை அதிகார அல்லது மேலாண்மைக் கண்காணிப்பாளராக இருந்தாலென்ன, இதற்குள்ளாலும் மனிதர்கள் வெவ்வேறு அளவுகளில் சுதந்திரமானவர்களாகவே இயங்குகின்றனர். அல்லது அதற்காகப் போராடுகின்றனர்.
அல்பேர்ட்டோவின் தத்துவ உரையாடல் மனித உடல், ஆன்மா, உயிருரு, ஆன்ம உரு, உலக உயிருரு, எண்ணங்கள் என்பன பற்றியெல்லாம் ஒரு படிப்படியான வளர்ச்சிப் போக்கை காண்கிறது. கடவுளை எப்படி வரையறுத்தார்கள் அல்லது கண்டறியப்படாத இயங்குசக்தியை எப்படி கடவுளாக பிரதியீடு செய்தார்கள் என தொடர்கிறது. விஞ்ஞானமும் அறிவியலும் பகுத்தறிவும் உளவியலும் தொழில்நுட்பமும் என வளர்ந்த மனித சமூகம் இயற்கை விதிகளை கட்டவிழ்த்துப் பார்ப்பதும், இயற்கை பிரபஞ்சம் மனிதஜீவிகள் என்பன குறித்து எழும் கேள்விகளை விடுவிப்பதும் மீளத் தோன்றும் புதிய கேள்விகளை எதிர்நோக்குவதுமென முன்னேறிக்கொண்டிருந்த நிலையானது ‘கடவுளை’ இன்னும் சுருக்கப்பட்ட நிலைக்கு -ஒரு ஆன்மீகத் தளத்துக்குள்- கொண்டுவந்து நிறுத்தியது. அதாவது மனிதரை மையப்படுத்துகிற (மனித மையவாத) போக்கிற்கு வெளியே எவரும் இயங்குவதில்லை.
எனவே இத் தளத்தில் வைத்து “சோபியின் உலகம்” படைப்புருவாக்கம் செய்யப்பட்டதான ஒரு வாசிப்புக்கு இவை உரம் சேர்க்கிறது.
நாவலின் அழகியல்
மனிதஜீவியின் ஒளிபாய்ச்சப்படாமல் உறைந்திருக்கும் உள்ளுணர்ச்சிப் பகுதிக்குள் அல்லது புறக்காரணிகளால் வெளிப்படுத்த முடியாமல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உணர்ச்சிப் பகுதிக்குள் ஓர் எழுத்தாளர் நுட்பமாக புகுந்துகொள்கிறபோது அங்கு வாசகரை ஆகர்சிக்கிற ஓர் அழகியல் உருவாகும். அதற்கான உத்திகளில் புனைவு பெரும் பாத்திரம் வகிக்கிறது.
இந் நாவல் உணர்ச்சிப் பகுதிக்குள் ஊடுருவதற்குப் பதிலாக மனித சிந்தனையில் உள்ளுறைவாக வைக்கப்பட்டிருக்கிற அல்லது ஒழுங்குபடுத்தப்படாமல் குழம்பிப் போயிருக்கிற பகுத்தறிவில் ஒளிபாய்ச்சிக் காட்டுகிறது. ஒழுங்கமைக்கிறது. அதாவது மனித உணர்ச்சியின் தளத்துக்குப் பதிலாக அது மனிதப் பகுத்தறிவை தளமாகக் கொள்வது ஒரு வியப்பூட்டும் அனுபவமாக விரிகிறது. அழுகை மகிழ்ச்சி கோபம் காதல்.. அது இது என நாவல் பயணிக்க இடமில்லை. பகுத்தறிவில் அது கிளர்ச்சியூட்டும் அனுபவமாக விரிகிறது.
நாவலின் கதாமாந்தர்களான சோபியும் அல்பேர்ட்டோவும் கதையின் கதைக்குள்ளிருந்து தப்பியோடும் ஓர் அற்புதமான உத்தி தத்துவச் சிந்தனையிலிருந்து உதித்த ஒரு புனைவு . அதனால் இந்த நாவலை திரும்ப இரண்டாம் முறை வாசித்தபோதும் அது ஒரு புதிய நாவலாகவே வாசிப்பில் விரிந்தது. இருவேறு வாசிப்புகளும் சாத்தியமாகியது.
விமர்சனம்
இந் நாவலை வாசிக்கிறபோது ஒருசில இடங்களில் ஐரோப்பிய மையவாதத்தையும் அடையாளம் காண நேர்கிறது. நூலில் ஐரோப்பிய தத்துவ முறைமையின் வளர்ச்சிப் போக்கே காணப்படுகிறது. அது கீழைத்தேய தத்துவப் போக்குகளை வெளியே விட்டிருக்கிறது. முக்கியமாக மனிதஜீவி குறித்த உள்ளார்ந்த தேடலை முன்வைத்த புத்தர் குறித்தவை ஒருசிறு குறிப்புகளுடன் கடந்து போகிறது. இதை இந் நாவலின் உள்ளடக்கத்துள் வைத்து புரிந்துகொள்வதில் சிரமமில்லை என்றொரு பக்கமும் இருக்கவே செய்கிறது.
ஆனால் அவர் மதம் குறித்து சொல்ல வருகிறபோது, மேற்குலகின் முப்பெரும் மதங்களாக கிறிஸ்தவத்தை, இஸ்லாமை, யூத மதத்தை முன்வைக்கிறார். இதன் மூலம் அவரது ஐரோப்பிய மையவாத சிந்தனை முறைமை துலங்குகிறது. இந்த வரலாற்றுப் புரட்டு ஐரோப்பாவின் மேலாண்மை உருவாக்கத்தை நிகழ்த்த அவசியமாகவே அவர்களுக்கு இருந்தது. அந்த மரபை இங்கு யூஸ்டேய்ன் கோர்டரும் அழுத்தமாகப் பின்தொடர்கிறார்.
யூதமதம் தோன்றிய இஸ்ரேல் ஐரோப்பிவிலா இருக்கிறது?
கிறிஸ்தவ மதம் தோன்றிய ஜெரூசலம் ஐரோப்பிவிலா இருக்கிறது?
இஸ்லாம் மதம் தோன்றிய மத்திய கிழக்கு ஐரோப்பாவிலா இருக்கிறது?
ரோமப் பேரரசின் அரசியல் ஆளுகைக்குள் மத்திய கிழக்கு உள்ளடக்கப்பட்டடிருந்தது என்பதை வைத்து இந்த மதங்களை மேற்குலக மதங்களாக நிறுவுவது அபத்தமானது.
நாகரிகமடையத் தொடங்கிய சமூகத்திடம் இயற்கை குறித்து, பிரபஞ்சம் குறித்து, மனிதஜீவி குறித்து கேள்விகள் எழும்புகின்றன. அதன்போது கடவுளர்கள் பற்றிய கருத்தாங்கங்கள் தவிர்க்க முடியாமல் உருவாகின்றன. இந்த மூன்று மதங்களுடன் இந்து மதம், புத்த மதம் என ஐந்து பெரும் மதங்களும் ஆசியாவிலேயே பிறந்துள்ளன. தன்னை முதலில் நாகரிகமடைந்த இனமாக நிலைநிறுத்துகிற ஐரோப்பிய மையவாதத்தின் முயற்சிக்கு இந்த மதங்களை மேற்குலக மதங்களாக வரலாற்று மாற்றம் செய்வது அவசியமாகிறது.
காலனியம் பொருளாதாரச் சுரண்டலை மட்டுமல்ல, ஐரோப்பிய மையவாதத்தின் கருத்தியல் தளத்தை கட்டியமைப்பதிலும் மும்முரமாகவே செயற்பட்டன. வரலாற்றுத் திரிபுகளை செய்தன என்பதற்கு இந்த மதங்கள் குறித்த வரலாற்றுப் புரட்டும் ஒரு சாட்சி. வெக்கையில் அவியும் பெத்லகேமில் பிறந்த யேசுவை வெள்ளை மேனிகொண்டவராக பிம்பப்படுத்தியதும் இதே அடிப்படையில்தான்.
கிறிஸ்தவத்தின் பரம்பல் பலஸ்தீனத்தில் தொடங்கி ஆசியா மைனர் (Constanti Nobel, இன்றைய இஸ்தான்புல்) ஊடாக றோமை அடைந்தது. பிறகு அங்கிருந்து எல்லா இடங்களுக்கும் விரிந்தது. ரோமப் பேரரசும் பின்னரான காலனித்துவமும் இதில் மிகப் பெரும் பங்காற்றியது. பூர்வீகக் கடவுளர்களை யெல்லாம் காவுகொண்டு இராட்சத மதமாக அது மாறியது. இன்று உலகின் மிகப் பெரிய மதமாக கிறிஸ்தவம் உள்ளது.
மேற்குலக கிறிஸ்தவ இறையியல் கோட்பாட்டில் அதிக தாக்கம் விளைவித்த, 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த அகஸ்ரைன்கூட ஐரோப்பியர் அல்ல. அவர் ஒரு அல்ஜீரியர். அகதியாக ஐரோப்பா வந்தவர்.
இப்போ கிறிஸ்தவத்தின் பரப்புரை மையமாக அதிகார மையமாக வத்திக்கான் விளங்கிவருகிறது. உண்மையில் முதல் 4 நூற்றாண்டுகளுக்கும் கிறிஸ்தவத்தின் பரப்புரை மையம் சிரியாவாக இருந்தது. றோம் அல்ல. கிறிஸ்தவத்தின் செல்வாக்கு செலுத்திய மையங்களில் எதுவுமே ஐரோப்பாவில் இருந்ததில்லை. ஆசிய ஆபிரிக்க நகரங்களிலேயே அவை இருந்தன. டமாஸ்கஸ் (சிரியா), அலெக்ஸாண்டிறியா (எகிப்து), அக்சிம் (எதியோப்பியா) என்பவையே அவை. அரசியல் நோக்கில் பார்த்தால் 4ம் நூற்றாண்டு இறுதியில் ரொமானியக் காலம் அதாவது அரசியல் ஆட்சி முடிந்து போனது. ஆனால் றோமன் கத்தோலிக்க திருச்சபை படிப்படியாக உலகில் கிறிஸ்தவ அதிகாரம் பெற்ற மையமாக மாறியது.
7ம் நூற்றாண்டில் இஸ்லாமின் வரவுவரை ஈராக் மிகப் பெரிய கிறிஸ்தவ மையமாக இருந்தது. அத்துடன் பலஸ்தீனம், சிரியா என்பனவும் கிறிஸ்தவத்தின் மையங்களாக இருந்திருக்கின்றன. 7ம் நூற்றாண்டு ‘Tang Dynasty’ இல் சிரியாவினூடாக சீனாவுக்கு கிறிஸ்தவம் வந்திருந்தது.
ஈராக், சிரியா மீதான போர்களில் கிறிஸ்தவத்தின் காலச்சுவடுகளாக இருக்கும் தேவாலயங்கள் மற்றும் (மியூசியம் உட்பட) தடயங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டது தற்செயலானதல்ல. கிறிஸ்தவத்தின் வரலாற்றை அதன் சுவடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கும் ஒரு சூழ்ச்சிகரமான செயற்பாடு நடந்தேறியது. வரலாற்றுப் புரட்டுகளை கேள்விக்கிடமில்லாமல் எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல அது தேவையாக இருக்கிறது அவர்களுக்கு.
மேலும் இடைக்காலம் முழுவதும் கணிதம், வேதியல், வானியல் மற்றும் மருத்துவம் போன்ற விஞ்ஞானங்களில் அரேபியர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பதை ஒப்புக்கொள்ளும் யூஸ்டேய்ன் கோர்டர், கிரேக்க விஞ்ஞானம் அரேபியர்களால் மரபுரிமை ஆக பெறப்பட்டது என்று வேறு சொல்லி வைக்கிறார்.
இன்றுகூட அரேபிய எண்களையே நாம் பயன்படுத்துகிறோம் என்பதையும் பல களங்களில் கிறிஸ்தவப் பண்பாட்டைவிட அரேபியப் பண்பாடு மேல்நிலையில் இருந்தது என்பதையும் யூஸ்டேய்ன் கோர்டர் ஒப்புக்கொள்கிறார். வானியல் பற்றிய ஆரம்பகால கண்டுபிடிப்புகள் கூட பாலைவனப் பூமியின் நாடோடிப் பண்பாட்டைக் கொண்ட அரேபிர்களால்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்க சாத்தியம் உண்டு, இந்திய பார்ப்பனர்களால் அல்ல என்றொரு ஆய்வும்கூட தற்கால ஆய்வாளர்கள் சிலரால் முன்வைக்கப்படுகிறது.
முடிவாக…
எல்லா விமர்சனங்களையும் தாண்டி “சோபியின் உலகம்” தனக்கான ஓர் இடத்தை நிறுவியிருக்கிறது. நாவலுக்குள் இலக்கிய வகைமைகளை மட்டுமல்ல, நேர்காணலை, கட்டுரைகளைக்கூட உள்ளகப்படுத்தலாம் என்கிறார் அறியப்பட்ட நாவலாசிரியரான ஓர்கான் பாமூக். இங்கு தத்துவத்தையும் உட்படுத்தலாம் என நீரூபித்துவிடுகிறார் யூஸ்டேய்ன் கோர்டர். இதன்மூலம் இலக்கியத் தளத்திலும் இது ஓர் குறிப்பிடக்கூடிய நாவலாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது. கதாமாந்தர்களே கதையிலிருந்து தப்பியோடுகிற ஓர் அற்புதத்தை அவர் தத்துவத் தளத்தில் வைத்து புனைவாக்கியிருப்பது வியப்பைத் தருகிறது.
அத்தோடு தத்துவ வாயில்களை திறந்துவிடுகிற வல்லமை கொண்டது இந் நூல். பகுத்தறிவை, சிந்தனை முறையை, தத்துவ வளர்ச்சிப் போக்கை, அறிவை, அறிவின் ஒழுங்குபடுத்தலை செய்கின்ற நூல் என்பதில் கேள்விகளில்லை. பகுத்தறிவின் மீதான இந்த ஆகர்சிப்பு பல பாடசாலை மாணவர்களையும் வாசிக்கத் தூண்டியபடி இருக்கிறது. ஆசிரியர்கள் சில பாடசாலைகளில் சோபியின் உலகத்தை மாணவர்களிடம் அறிமுகப்படுத்தியும் விடுகிறார்கள். இலங்கையிலும் இது மாணவர்களை சென்றடையட்டும்!
*
தொடர்பாக சில.
மனித மையவாதம்.
- மனிதஜீவியை வெறும் இயற்கையின் ஒரு பகுதியாக மட்டும் பார்க்க முடிந்த நிலைமை மாறி, மனிதர் இயற்கையின் போக்கில் தலையிட்டனர். கட்டுப்படுத்த முயற்சித்தனர். மனிதரை மையப்படுத்திய போக்குகள் வலுத்தன.
- “அறிவே ஆற்றல்” என்றார் பிரான்சிஸ் பேக்கன்.
“எவற்றை அளவிட முடியுமோ அவற்றை அளவிடுங்கள். அளவிட முடியாதவற்றை அளவிட முடிகிறவையாக மாற்றுங்கள்” என்றார் 17ம் நூற்றாண்டின் விஞ்ஞானி கலீலியோ. - “நான் நிற்பதற்கு ஒரு வலுவான புள்ளியைக் கொடுங்கள். பூமியை நகர்த்திக் காட்டுகிறேன்” என்றார் ஆர்க்கிமிடீஸ்.
- விஞ்ஞான வளர்ச்சிகள் கண்டுபிடிப்புகள் குறிப்பாக பெண்களின் கரு முட்டைகள் பற்றிய கண்டுபிடிப்புகள் எல்லாம் தத்துவத்தை இறையியலிருந்து விலகிச் செல்ல வைக்கிறது.
மறுமலர்ச்சிக்கால விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சிகள், விண்வெளி ஆராய்ச்சிகள் என்பன மனிதகுலம் குறித்த புதிய பார்வைகளை வளர்த்தது. மனிதப் பெறுமதி அதிகரித்தது. - உடற்கூற்றியல் வளர்ந்தது.
- இயற்கை தெய்வீகமானது எனப்பட்டது.
பிரபஞ்சம் குறித்து விஞ்ஞானம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது.
இவையெல்லாம் திருச்சபையால் வன்மமாக எதிர்கொள்ளப்பட்டது. கடவுள் இயற்கை வடிவில் இருக்கிறார். பிரபஞ்சம் அதன் சாத்தியப்பாட்டில் எல்லையற்றது என சொன்னதால் கியார்டனோ புரூனோ எரித்துக் கொல்லப்பட்டார். - உயிரினங்களின் தோற்றம் பரிணாமம் குறித்த டார்வினின் கண்டுபிடிப்பு பகுத்தறிவிலும் விஞ்ஞானத்திலும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. மதவாதிகளை கலக்கம் கொள்ள வைத்தது.
- பிறகு உளவில் தளத்தில் பிராய்ட் வருகிறார். நினைவிலி மனம் நினைவு மனம் இடையிலான தொடர்புகள் குறித்து விளக்கமளிக்கிறார். கிப்நாட்டிச முறையில் அதை நிரூபித்ததோடு உளவியல் மருத்துவத்தில் ஒரு புதிய வழிமுறையையும் தருகிறார்.
இவ்வாறாக மனிதஜீவி தனது எல்லா இடர்ப்பாடுகளையும் வெறும் நம்பிக்கைகளையும் தாண்டிய ஒரு ‘நான்’ என்பதை முதன்மைப்படுத்திய வாழ்முறைக்குள் பரிணாமம் பெற்றது. நம்பிக்கைக்கும் காரணகாரியத் தொடர்புக்கும் இடையிலான விலகலை தத்துவமும் விஞ்ஞானமும் ஏற்படுத்திக் கொடுத்தது.
நாம் அரசால் கட்டுப்படுத்தப்படுகிறோம். சட்டத்தால் பண்பாட்டால் ஒழுக்கவாதத்தால் குடும்பமுறைமையால் கட்டுப்படுத்தப்படுகிறோம். அதன் பார்வைப் புலத்துள் அகப்பட்டிருக்கிறோம். கண்காணிக்கப்படுகிறோம். ஆனாலும் இந்த இடர்ப்பாடுகளையும் தாண்டி ஒரு ‘நான்’ என்பது தனது இருப்புக்காகத் திமிறிக்கொண்டுதான் இருக்கிறது. சுயமாக செயற்பட்டுக்கொள்ளும் வெளியையும் உருவாக்குகிறது. கடவுள் நம்பிக்கை உடையவர்களும்கூட கடவுளுக்கு வெளியே அன்றாட வாழ்வில் இவ்வாறுதான் இயங்குகின்றனர். அதாவது மனிதரை மையப்படுத்துகிற போக்கிற்கு வெளியே எவரும் இயங்குவதில்லை.
அந்த உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
– ரவி (29072018)