வாசிப்பும் உரையாடலும் -17

01.07.2018 (சுவிஸ்)

// பிரெஞ்சு இத்தாலி யேர்மன் என பல மொழிகளுக்கூடாகவும் அடுத்த தலைமுறைக்கு தன்னை வாசிக்க ஒப்புக்கொடுத்த “சோபியின் உலகம்” இப்போ தமிழில் ஓர் உரையாடலை செய்யவைத்தது. மரவீட்டு முன்றலில் இருக்கிறோம். அந்த வெளிக்கு சுவர்கள் இருக்கவில்லை. கதவுகள் இருக்கவில்லை. ஜன்னல்களும் இருக்கவில்லை.//

36176870_1095311473956918_1272366941700358144_n

சோஃபியின் உலகம் (நாவல்)
1991
நூலாசிரியர் : யொஸ்டைன் கார்டெர் Jostein Gaarder
மூலம் : நோர்வேஜிய மொழி.
தமிழில் ஆர்.சிவகுமார் (2011- காலச்சுவடு பதிப்பகம்)
இதுவரை சுமார் 60 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள நூல். 40 மில்லியனுக்கு மேற்பட்ட பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கின்றன.
கதைக்களம் : நோர்வே. காட்டை அண்டிய தொங்கல் வீடும் காட்டுக்குள் இருக்கிற மரவீடும்.
முக்கிய பாத்திரங்கள்
1. சோபி அமுன்ட்சென்
2. கில்டே மோலர் க்னாக்
3. ஆல்பேர்ட்டோ க்னொக்ஸ் (சோபியின் தத்துவாசிரியர்)
4. ஆல்பேர்ட் க்னாக் (கில்டேயின் தந்தை)
5. கிர்மீஸ் (நாய் -ஆல்பேர்ட்டோவின் தூதர்.)

sophies world

தத்துவத்தை தளமாகவும், தத்துவ வளர்ச்சிப் போக்கையும் தத்துவாதிகளையும் (அறிமுகப் பரப்பில்) உள்ளுடனாகவும் கொண்டு, அதனடிப்படையிலான இலக்கிய உத்தியுடனும் எழுதப்பட்ட நூல் இது. யொஸ்டைன் கார்டெர் எழுதிய இந் நாவலிற்குள் ஒரு பாத்திரமான ஆல்பேர்ட் (ஆல்பேர்ட்டோ அல்ல) தனது மகளின் பிறந்தநாள் பரிசாக ஒரு தத்துவ நூலை எழுதுகிறார். அந் நூலுக்கான பாத்திரங்கள்தான் சோபியும் ஆல்பேர்ட்டோவும். நூலுக்குள் நூலாக விரிகிறது.

*
2018 யூலை முதலாம் திகதி. ஆர்வாங்கன் (Aarwangen, சுவிஸ்) என்ற பெயர்கொண்ட ஒரு கிராமத்திற்கு பச்சை இரத்தம் ஊட்டிக்கொண்டிருந்த அந்த காட்டுப் பகுதிக்குள் நிற்கிறோம். வானமற்ற ஓர் இயற்கையை கற்பனை செய்து பார் என்பதுபோல் நெடிய மரங்கள் பிரபஞ்சத்தை கிளைகளாலும் இலைகளாலும் மறைத்துவிட்டிருந்தது. ஒருவேளை, “உயிரோடு இருப்பது எத்தனை வியப்பூட்டும் விடயம்” என உணரவைக்க அது முயற்சித்திருத்தல் கூடும். சோபியின் உலகத்தில் வருகிற மேஜரின் மரவீடும் முற்றமும் எமதானது. என்ன.. இது முற்றத்தில் ஏரியற்று இருந்தது.

எமது புலனுணர்வில் முக்கியமான ஒன்றான எமது பார்வையை கண்ணைச் சுற்றி கட்டிக்கொண்ட துணியினுள் அணைத்துவிட்டு ஒருவர் தோளை ஒருவர் பிடித்தபடி வரிசையாய் நடக்க விதிக்கப்பட்டோம். ஆல்பேர்ட்டோவையும் சோபியையும் அவர்களின் செயல்களையும் பேச்சுகளையும் கண்காணித்துக்கொண்டும் வழிநடத்திக்கொண்டும் இருக்கிற தொலைதூரத்து ஆல்பேர்ட் இப்போ தரையிறங்கி எம்மை வழிநடத்துகிறார்.

// நாம் கேட்பதிலிருந்தும் பார்ப்பதிலிருந்தும்தான் நம்முடைய எல்லாச் சிந்தனைகளும் எண்ணங்களும் நம் உணர்வுநிலைக்குள் வந்துசேர்கின்றன என்றார் அரிஸ்டாட்டில். நமக்கு ஓர் உள்ளார்ந்த பகுத்தறிவு ஆற்றல் இருக்கிறது. புலன்கள் சார்ந்த எல்லா மனப்பதிவுகளையும் வகைகளாகவும் பிரிவுகளாகவும் ஒழுங்கமைக்கும் உள்ளார்ந்த இயல்திறன் நமக்கு உண்டு. இப்போ அந்த புலன்களில் ஒன்றை நீங்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கிறீர்கள். அதை உணர்கிறீர்களா?// என கேட்கிறார் ஆல்பேர்ட். எதுவோ ஒன்றை மனப்பதிவில் இழந்துதான் இருக்கிறோம் என தோன்றிற்று.

இப்போ கண் கட்டுகள் அவிழ்க்கப்படுகின்றன. ஈடன் தோட்டத்தை அடைந்திருந்தோம். மரத்தில் அப்படி எழுதப்பட்டிருந்தது. ஆங்காங்கு உதிரியாய்க் கிடந்த முகக் கண்ணாடிகளில் அவரவர் தமது நிஜ உருவையும் நிழல் உருவையும் இணைத்தும் பிரித்தும் பார்வைப்புலத்துள் வெட்டியொட்டுகின்றனர், இயற்கையையும் (மரங்களையும்) சேர்த்துத்தான். ஏற்கனவே தான் காட்டுக்குள் கண்டுபிடித்த மேஜரின் மரவீட்டில் மாயக் கண்ணாடியொன்றை காண்கிறாள் சோபி. தனது நெருங்கிய தோழி யொயன்னாவுடன் பொழுதுபோக்குக்காக காட்டுக்குள் கூடாரம் அடித்து தங்கிய இரவொன்றில் மரவீட்டுக்குள்ளிருந்து அந்தக் கண்ணாடியை அவள் தன்னுடன் எடுத்துச் சென்றுவிடுகிறாள். இப்போ அது பலவாகி எம்முடன் இருந்தன. ஆல்பேர்ட் எல்லாவற்றையும் கண்காணிக்கிறார். எம்மையும்தான்.

 

ஆல்பேர்ட் இப்போ பேசிக்கொண்டிருந்தார். “நீ; யார்… யார் நீ” என்ற அவரது இடையறாத குரல்கள் வேர்களாக ஊரத் தொடங்கி. படிப்படியாக வளர்ந்து, இலைப்பரப்பின் காற்றசைவாய் உச்சமாய் மேலெழுந்தது. பின் ஓய்ந்தது.

சோபிக்கு முதன்முதலில் மர்மமாய் தபால் பெட்டிக்குள் வந்த முதல் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வரிகள்தான்,
// நீ யார்?
உலகம் எங்கிருந்து வந்தது?// என்ற இரண்டும்.

பின்னர் ஆல்பேர்ட்டோவின் தூதரான கெர்மீஸ் (நாய்) வருகிறது. கண்கட்டு அவிழ்க்கப்பட்டவர்களில் அரைவாசிப் பேர் கெர்மீஸ்கள் ஆகின்றனர். ஒன்றுவிட்டொருவர் அப்படியாகினர். கெர்மீஸ்கள் ஒவ்வொன்றும் தனக்குப் பின்னால் வரும் ஆண், பெண் சோபிகளுக்கு (கண்கட்டுடன் நடப்பவர்களுக்கு) வழிகாட்டின. சோபியின் வீட்டுவளவுள் ஒதுக்குப்புறமாய் இருந்த பற்றைக்குள்ளிருந்த சோபியின் சிறு இரகசிய இடத்தை கெர்மீஸ் அறிந்திருந்தது. சோபிக்குரிய அல்பேர்ட்டோவின் (தத்துவப் பாட) அஞ்சலட்டைகளை அங்கு கெர்மீஸ் கொண்டுவருகிற ஒரு நாளில் கெர்மீஸை பின்தொடந்து சோபி காட்டுவழியாக ஓடினாள். அதன்போது அந்த மரவீட்டை அவள் கண்டுபிடித்தாள். இன்னொரு நாளில் சோபியை அல்பேர்ட்டோவினது நகரப் பகுதி வீட்டுக்கு கெர்மீஸ் வழிகாட்டி அழைத்துச் சென்றது. இப்போ எங்களையும் கெர்மீஸ்கள் அழைத்துச் சென்றன.

“அஞ்சலட்டைகள்” என மரத்தில் எழுதித் தொங்கவிடப்பட்ட அந்த பற்றைக் குடாவுக்குள் நிற்கிறோம். நெடிதுயர்ந்த மரங்கள் இப்போதும் வானத்தையும் சூரியனையும் மறைத்துக்கொண்டுதான் நின்றன. அஞ்சலட்டைகள் தரப்படுகின்றன. தோன்றும் கேள்விகளை நாம் அஞ்சலட்டைகளில் எழுத விதிக்கப்பட்டோம். எழுதுகிறோம். காலடியில் சருகுகள் நொருங்கும் சத்தம் கேட்கிறது.

கெர்மீஸ்கள் தமக்கு சன்மானமாக வழங்கப்பட்ட துண்டு பிஸ்கெற்றுகளுடன் ஓடிமறைந்தன. இப்போ மீண்டும் கண்கள் கட்டப்படுகின்றன. பார்வைப் புலனுணர்வை எல்லோரும் இழந்தனர். அவர்களை தொடுகைப் புலனுணர்வு (தோள்களை கைகள் இணைத்துக்கொண்டு) சங்கிலித் தொடராய் முன்னேறி நடக்கவைத்தது. சமூகம் தாண்டிய வாழ்தலின் சாத்தியமின்மையுடன் தனிமனிதர்கள் இணைந்தும் முரண்டுபிடித்தும் ஒரே திசையில் இயங்கிக்கொண்டிருந்தனர். ஆல்பேர்ட் கண்காணித்தார். வழிநடத்தினார்.

வானமற்ற காட்டுக்குள்ளிருந்து வெளியே நழுவி விழுந்துவிட்டோம் என்ற அறிவிப்பை அடர்ந்த மரங்களின் உலகிலிருந்து விடுதலைசெய்யப்பட்ட சூரியனின் கதிர்ச் சூட்டில் நாம் உணர்ந்தோம். கட்டப்பட்ட கண்கள் அவிழ்த்துவிடப்படுகிறது. இப்போ ஓர் பசுமையான வெளியில் நிற்கிறோம். ஆல்பேர்ட் தனது கதையின் நிழல் பாத்திரங்களான அல்பேர்டோவையும் சோபியையும் அறிமுகப்படுத்துகிறார். கதையை சுருக்கமாக சொல்லத் தொடங்குகிறார். தற்செயலாக அவ்வழியால் வந்த நாயொன்று எமது காலடியை மோப்பமிட்டு திரும்புகிறது. எல்லோரும் “கெர்மீஸ்… கெர்மீஸ்” என ஒருசேர அழைத்ததை நாயின் சொந்தக்காரி புன்னகையால் வரவேற்றாள். ஒருவேளை அவளும் “ஸோபீஸ் வேல்ற்” (Sofies Welt) இனை வாசித்திருக்கவும் கூடும். பெரும்பாலான இளவயது மாணவ மாணவியர்களும் ஒருமுறையல்ல பலமுறை இந்நூலை வாசித்துவிடுகிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆல்பேர்ட் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவர் சோபியினதும் ஆல்பேர்ட்டோவினதும் கில்டேயினதும்; கெர்மீஸ் இனதும் கதையை மிக சுருக்கமாகச் சொல்கிறார். மறைந்துவிடுகிறார். தொலைவிலிருந்து சோபியையும் ஆல்பேர்ட்டோவையும் கண்காணிக்கத் தொடங்கியிருப்பார், அவர்களை வழிநடத்திக் கொண்டும் இருப்பார் அவர். ஆல்பேர்ட்டோவும் சோபியும் “சோபியின் உலகம்” நூலுக்குள் புகுந்துகொண்டனர். மேஜரின் மரவீட்டில் “சோபியின் உலகம்” வாசிப்பும் உரையாடலும் குழுவுக்காக காத்துக்கொண்டிருந்தது.

நாம் நாமாகி இப்போ மரவீட்டை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறோம். இலைமேகங்களைப் பிரித்து ஊடுருவும் ஒளிக்கீற்றுகளில் தூசிகள் சுழல, பச்சை நிறமும் வெளிறிய மஞ்சள் நிறமும் ஒழுகிக்கொண்டிருந்தது. ஒளிப்புள்ளிகள் அழகு மச்சங்களாக தரையை காட்சிப்படுத்தியது. ஆல்பேர்ட்டோ சோபிக்கு எழுதிய அஞ்சலட்டைகள் சில வழிநெடுகிலும் மரங்களில் சொருகப்பட்டிருந்தன. “தத்துவவாதிகளையும் தத்துவப் போக்கின் காலப் பிரிப்புகளையும் அதன் பெயர்களையும்” வாசித்தபடி நடக்கிறோம்.
// சாக்கரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், தெய்கார்த், ஸ்பினோஸா, லாக், பார்க்கிலி, க்யூம், காண்ட், கெகல், கீர்க்ககார்ட், மார்க்ஸ்…//
// இடைக் காலம்.. மறுமலர்ச்சிக் காலம், பரோக் காலம் அல்லது இருண்ட காலம், அறிவொளிக் காலம், கற்பனை நவிற்சிக் காலம் (றொமான்ரிக் காலம்)…//

மரவீட்டை வந்தடைகிறோம். பயணத்திற்கு முன்னரான பொழுதில் இறைச்சியை வாட்டிவதக்கித் தந்த விறகுக் கட்டைகளின் தணலை சாம்பல் மூடியிருந்தது. உணவூட்டிய வாழையிலைத் துண்டுகள் வெதும்பி தரையில் கிடந்தன.
இப்போ கூழ் குடிக்கும் நேரம். ஒடியல் கூழ், சிரட்டை, புற்தரை என இறைந்திருந்த இயற்கையின் கொடைக்கு சவால் விடுவதான முடிவுடன் நின்ற பிளாஸ்ரிக் கரண்டிகளை ஏந்தி நாம் கூழ் குடித்தோம்.

மரவீட்டின் முன்றலில் புற்தரையில், மரவாங்கிலில், பாறைக் கல்லில், மரப்படிகளில் எல்லோரையும் அமரவைத்த “சோபியின் உலகம்” நூல் லெபனானில் ஐநா படைப்பிரிவில் மேஜராக பணிபுரியும் கில்டேயின் அப்பா ஆல்பேர்ட் அவர்கள் தனது மகளின் 15 வது பிறந்தநாள் பரிசாக தத்துவ அறிவூட்டுகிற ஒரு நூலை வடிவமைத்த சங்கதியைச் சொன்னது. அதற்காகவே சோபியையும் தத்துவ ஆசிரியர் ஆல்பேர்டோவையும் பாத்திரங்களாக ஆல்பேர்ட் (கில்டேயின் அப்பா) வாழவைத்ததையும், ஆல்பேர்ட் இன் கண்காணிப்புக்குள் ஆல்பேர்ட்டோவும் சோபியும் எப்போதுமே இருத்திவைக்கப்பட்டதையும், ஆல்பேர்ட்டோ சோபிக்கு தத்துவத்தின் வரலாற்றை சோபிஸ்டுகள் தொடங்கி இயற்கைத் தத்துவவாதிகள் பின்னர் சாக்கரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிளாசிக் தத்துவவாதிகளினூடாக கார்ல் மார்க்ஸ் வரையும் எளிதான முறையில் சொல்லிக்கொடுக்க வைத்ததையும் இந் நாவல் சொல்லியது. விஞ்ஞான கண்டுபிடிப்புகள், பிராய்ட்டின் உளவியல் பகுப்பாய்வுகள், உயிர்களின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் பற்றிய டார்வினின் கண்டுபிடிப்புகள், அவையெல்லாம் ஏற்படுத்திய அதிர்வுகள் என எல்லாமும் வந்துபோகிறதால் தான் கனமேறிப்போயிருப்பதையும் இந் நூல் சொல்லியது. யொஸ்டைன் கார்டெரின் தத்துவ அறிவிலும் இலக்கிய உத்தியிலும் அதன்வழி அழகியலிலும் தான் வடிவமைக்கப்பட்டிருப்பதால் உங்களை மேலும் கவர்ந்திருக்கிறேன் என நினைக்கிறேன் என்று சற்று பெருமிதமும் அடைந்தது.

எல்லா சாத்தியப்பாடுகளையும் அதிசயங்களையும் காணும் திறந்த மனத்துடன் நீங்கள் என்னை அணுகினால் நீங்களும் ஒருவகையில் தத்துவாதிகள்தான் என்றது. வெள்ளைக் காகங்களையும் காணும் சாத்தியப்பாடுகளை மறுக்காதிருங்கள் என்று அறிவூட்டியது.

கில்டேயின் பிறந்தநாளுக்காக ஊர் திரும்பும் தந்தை ஆல்பேர்ட்டின் கவனம் (கண்காணிப்பு) தம்மிலிருந்து திசைதிரும்பிய சந்தர்ப்பம் பார்த்து, தத்துவாசிரியர் ஆல்பேர்ட்டோவும் சோபியும் சேர்ந்து ஆல்பேர்ட்டின் “சோபியின் உலகம்” கதைக்குள்ளிருந்து தப்பியோடிவிடுகின்றனர். அதாவது தம்மை எப்போதுமே கண்காணித்துக்கொண்டும் வழிநடத்திக்கொண்டும் இருக்கிற வல்லமை படைத்த ஆல்பேர்ட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து அல்லது சிறைக்குள்ளிருந்து தப்பியோடுகின்றனர். இப்போ யொஸ்டைன் கார்டெரின் “சோபியின் உலகம்” நாவலிற்குள்  உருவமற்றவர்களாக (ஆவியுருக்களாக) ஆல்பேர்ட்டோவும் சோபியும் சுதந்திரமாக உலவுகின்றனர்

பின்னரான உரையாடலில், தத்துவத்தை பிரெஞ்சு மொழியில் பல்கலைக்கழகத்தில் பயின்ற இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த இளைஞனூடாக -சோபியின் உலகத்துக்கு வெளியில்- மீண்டுமொருமுறை புதுப்பித்தலுடன் “தத்துவ வளர்ச்சிப் போக்குடன் தத்துவவியலாளர்கள்” பிரெஞ்சு மொழிக்குள்ளால் புகுந்து தமிழ் மொழிக்குள்ளால் வெளிவந்தனர். அறிவொளிக்காலத்தில் வாழ்ந்த தத்துவவாதி க்யூம் மட்டுமன்றி, மொந்தேஸ்க்யூ, வால்டேயர், ரூசோ போன்றவர்களும் வந்துபோயினர். நீட்சே சார்த்தர், அல்தூஸர் ஆகியோரும்தான்.

பிரெஞ்சு இத்தாலி யேர்மன் என பல மொழிகளுக்கூடாகவும் அடுத்த தலைமுறைக்கு தன்னை வாசிக்க ஒப்புக்கொடுத்த “சோபியின் உலகம்” இப்போ தமிழில் ஓர் உரையாடலை செய்யவைத்தது. மரவீட்டு முன்றலில் இருக்கிறோம். அந்த வெளிக்கு சுவர்கள் இருக்கவில்லை. கதவுகள் இருக்கவில்லை. ஜன்னல்களும் இருக்கவில்லை.

இரு தலைமுறைகளின் சந்திப்பிலும் உரையாடலிலும் “வாசிப்பும் உரையாடலும்” குழு இன்றும் இணைந்திருந்தது. சந்திப்பு முடிவில், பரஸ்பர உரையாடல்கள், உறவாடல்கள் குதூகலங்கள் எல்லாம் இணைந்த வானவில்லின்; நிறங்கள் ஒழுகி, தலைமுறை இடைவெளியை ஓர் ஏரியாய் நிறைத்த பொழுதில் மரவீட்டின் முன்றலில் மிதந்த படகு அல்லது மிதவை விமானம் கில்டேயினதா அல்லது எங்களதா? கில்டேக்கு 15 வது பிறந்தநாள். சோபிக்கும்தான். “வாசிப்பும் உரையாடலும்” க்கு நான்காவது பிறந்தநாள் !

– ரவி (வா.உ சார்பில்) 14.07.2018

photos : Amarathaas

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: