இலங்கையின் குடிமக்கள் அனைவரும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவுகள் என்கின்றனர் சிலர். தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். தமிழர்கள் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். இந்த குடிமக்கள் பெயர்ந்து இலங்கைத் தீவுக்கு வந்தபோது அல்லது இச் சிறுதீவு இயடு பிரிந்து இலங்கையானபோது இந்தியா என்றொரு தேசம் இருந்ததா என்ன.
இப்போ தொப்பூழ்க்கொடி உறவு என்பதும் தாய்த் தமிழகம் என்பதும் ஈழத் தமிழர்களையும் தமிழகத் தமிழர்களையும் பிணைக்கிற ஒரு சொல்லாடலாகத்தான் வழக்கில் உள்ளது. சுவிஸ் நாட்டில் யேர்மன் மொழி பிரெஞ்சு மொழி இத்தாலி மொழி பேசுகிற மாநிலங்கள் அந்தந்த மொழி பேசுகிற தனித்தனி நாடுகளின் எல்லைப்புறத்தே இருக்கின்றன. இத்தாலியோ அல்லது யேர்மனியோ அல்லது பிரான்சோ தொப்பூழ்க் கொடி உறவு என இந்த பல்மொழி பேசும் சுவிஸ் மக்களை விழிப்பதுமில்லை. அடையாளப்படுத்துவதுமில்லை. சுவிஸ் நாட்டவர்; எல்லோரும் தம்மை தனித்த அடையாளத்துடனான சுவிஸ் பிரசையாகவே உணர்கின்றனர். பேச்சுவழக்குகளும் மாறுபாட்டுடனேயே காணப்படுகின்றன.
உணர்ச்சி அரசியல் இந்த பதங்களுக்கு (தொப்பூழ்க்கொடி உறவு, தாய்த் தமிழகம் என்ற பதங்களுக்கு) இரத்தம் பாய்ச்சுகிறது. இந்தியாவானது ஈழத்தமிழர்கள் மீதான ஒரு மேலாண்மையை தக்கவைக்கிற உறவதிகாரம் (அல்லது பாச அதிகாரம்) இவற்றுக்குள்ளால் ஓடுகிறது. இந்த உறவதிகாரம் சிங்களத் தேசிய இனத்திற்கு காலம்காலமாக ஓர் அச்ச உணர்வை ஊட்டியபடியே இருந்திருக்கிறது. இனவாதத்தின் இருப்பை அது தக்கவைத்தபடி இருக்கிறது. இலங்கையை விட்டால் சிங்கள மொழி பேசுகிற ஒரு நாடு வேறொன்றும் இல்லை என்ற அவர்களின் தர்க்கம் அந்த அச்ச உணர்விலிருந்து வெளிப்படுவது.
தமிழ் மக்களுக்கு சிங்கள பேரினவாதம் குறித்தான அச்சம் இருக்கிறது. முஸ்லிம் மக்களுக்கு சிங்கள பேரினவாதம் தமிழ் இனவாதம் என்பன அச்சவுணர்வைத் தருகிறது. இப்படியே பரஸ்பரம் அச்சவுணர்வுடன் இலங்கையின் குடிமக்கள் வாழுகிற நிலை இனவாதம் ஒழிய வாய்ப்பைத் தரப்போவதில்லை.
13ம் திருத்தச் சட்டத்தை இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசிடம் இந்தியா ஒருவகை திணிப்புடன் ஏற்றுக்கொள்ள வைத்தது. சாப்பாட்டுப் பொதியை வடக்கில் வானிலிருந்து வீசிவிட்டு அமைதிப்படை என்ற பெயரில் இலங்கையின் இறையாண்மையை புறங்கையால் தட்டிவிட்டு இந்திய இராணுவம் அந்த மண்ணில் தரையிறங்கியது. மாகாண சபைக்கான பொலிஸ் படையை இலங்கையின் விருப்பத்துக்கு மாறாக நிறைவேற்ற முயற்சி எடுத்தது. பிள்ளைபிடி முறையின் மூலம் பொலிஸ்படைக்கு ஆள்வலுச் சேர்த்து பயிற்சியும் கொடுத்தது. இந்த இறையாண்மை மீறல்; சிங்களத் தேசிய இனத்தின் அச்சவுணர்வை அதிகரிக்கவே வழிகோலியது. அது கடைசியில் தமிழர்களுக்கும் நன்மையளிக்காமலே முடிவடைந்தது.
மேற்சொன்ன அச்சவுணர்வை தணிப்பதில் இலங்கை அரசினது நலனும், 13 வதை குழப்பி தமது அதிகாரத்தை வேறுவகையில் (தனிநாட்டை உருவாக்குவதன் மூலம்) நிறுவ எத்தனித்துக்கொண்டிருந்த புலிகளினது நலனும் ஒரு புள்ளியில் சந்தித்தது. அதுவே பிரேமதாச புலிகள் இடையிலான கள்ள உறவாக அமைந்தது.
இடதுசாரிய சிந்தனையுடன் உதித்த ஜேவிபி இனவாதத்தையும் தம்முடன் இணைத்துக்கொள்ள அந்த அச்சவுணர்வும் காரணமாக அமைந்தது. ஏற்கனவே 1971 ஜேவிபி கிளர்ச்சியை இந்திய இராணுத்தின் உதவியோடு இலங்கை (சிறீமா) அரசு எதிர்கொண்டது. பல்லாயிரக் கணக்கான இளைஞர் யுவதிகளை பலியாக்கிய இந்தியாவின் மீது ஜேவிபி க்கு கடுப்பு இருப்பது இயல்பு. 13வதை (மாகாணசபை முறைமையை) வடக்கு கிழக்கில் இந்தியா அமுல்படுத்த எடுத்த அணுகுமுறையானது இலங்கையின் இறையாண்மை மீதான மீறலாக ஜேவிபியும் எடுத்துக்கொண்டது.
சிங்களத் தேசிய இனத்துக்கு தொடர்ந்து இருந்துகொண்டிருந்த இந்த அச்சவுணர்வை எதிர்கொள்ளும் நோக்கில், அரசியலை ராஜபக்ச திறம்பட அரசதந்திர ரீதியாக கையாண்டதன் விளைவே சீனா இலங்கைக்குள் ஆழக் கால்பதித்த வரலாறு.
மலையகத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்ற சுட்டலிலிருந்து விடுவித்து அவர்களும் இலங்கைப் பிரசைகள்தான் என சொல்கிறோமே. அவர்களின் உரிமைகளுக்காக இந்தத் தளத்தில் வைத்து குரல்கொடுக்கிறோமே. இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என சொல்கிறோமே. வடக்குக் கிழக்கு தமிழர்கள் தொப்பூழ்க்கொடி உறவு என்றால் மலையகத் தமிழர்கள் இரத்தம் காயாத தொப்பூழ்க்கொடி உறவா என்ன. (சிங்களத் தேசிய இனத்துக்கு இது மேலதிக அச்சவுணர்வை தரவல்லது). இல்லை. அவர்கள் இலங்கைத் தமிழர்கள். இலங்கைப் பிரசைகள்.
இவ்வாறு அச்சவுணர்களை தேசிய இனங்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு இனவாதத்தை களைய முடியாது. மூன்றாம் தரப்பு என எவர் வந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. அதுவும் இந்தியா வந்தால் இன்னும் நிலைமை சிக்கலடையும்
தாய்த் தமிழகம், தொப்பூழ்க்கொடி உறவு என்ற பதங்களை உச்சரித்து உணர்ச்சி அரசியல் பேசுவது இன்னும் நீறை ஊதி ஊதி நெருப்பை அணையாமல் பாதுகாக்கும் வேலையைத்தான் செய்யும். அதற்கேற்றாற்போல் இந்தியா போகும் சிங்கள மக்கள், பௌத்த பிக்குகள் மீது தமிழ் உணர்ச்சியாளர்கள் சண்டித்தனம் பண்ணுவதும் ஒத்திசைந்து போகிறது..
இன்னொருபுறம் ஈழத் தமிழர்கள்மீதான இந்திய மேலாண்மையை இச் சொற்பதங்கள் வெளிப்படுத்துகிறதா என்ற கேள்வியும் உண்டு. இந்த தொப்பூழ்க் கொடிக்குள்ளால் ஈழத் தமிழர்களை வந்தடைந்தது இந்துத்துவமும், இந்திய சினிமாக்களும் சீரியல்களும்தானோ என ஈழத்தில் மாற்றமடையும் பண்பாட்டுத் தளம் எண்ணவைக்கிறது.
தமிழகத்தோடு மொழியால் ஒத்திருப்பதில் பெருமைப்படும் அதேநேரம் -ஐக்கிய இலங்கைக்குள்தான் தீர்வு சாத்தியம் என கருதுபவர்கள்- ஈழத் தமிழர்கள் தனித்த அடையாளம் கொண்டவர்கள், இலங்கைப் பிரசைகள் என்ற மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிங்களத் தேசிய இனத்துக்கு இருக்கிற அச்சவுணர்வை இதன்மூலம் இல்லாமலாக்கும் பொறுப்பு தமிழ்த் தரப்புக்கு உள்ளது. முஸ்லிம் மக்களுக்கான அச்சவுணர்வை இல்லாமலாக்கும் பொறுப்பு சிங்கள, தமிழ்த் தரப்புக்கு உள்ளது. தமிழ்மக்களின் அச்சவுணர்வை இல்லாமலாக்கும் பொறுப்பு சிங்களத் தரப்புக்கு உள்ளது. மலையக மக்களுக்கு இருக்கிற அச்சவுணர்வை இல்லாமலாக்குகிற பொறுப்பு சிங்கள தரப்புக்கு உள்ளது.
இதற்கு தாய்த் தமிழகம், தொப்பூழ்க்கொடி உறவு என்ற உணர்ச்சி அரசியல் சொல்லாடல்கள் பாதகமான விளைவையே தரவல்லது.
இந்த அச்ச உணர்வுகளை அழிக்காமல் பேணிக்கொண்டு ஈழத் தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வை எட்டுவது சாத்தியம் ஆகுமா?
*
-ரவி
07062018
FB link : https://www.facebook.com/ravindran.pa/posts/2067262526678164