தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் தொடர் அராஜகமும் கோரமான சம்பவங்கள் மட்டுமே. காஸ்மீர் போல ஒரு போராட்டச் செயல்நெறி தொடர்ச்சியில் நடந்த நடக்கிற சம்பவத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. காஸ்மீரியர்கள் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்திய நாட்கள் கடக்கப்பட்டுவிட்டன. தமிழகம் அப்படியல்ல. தம்மை இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் உணர்கிற நிலையிலுள்ள சமூகம் அது.
இந்த இரு உணர்வு நிலைகளுக்குமிடையில் தூத்துக்குடி சம்பவம் வேண்டுமானால் ஒரு சிறு வெடிப்பை ஒரு கீறலை ஒரு சிறு விலகலை ஏற்படுத்தலாம். முள்ளிவாய்க்கால் முடிவுக்கு அருகில் கூடாரமடித்து இருத்தவேண்டியதில்லை. அந்த ஒப்பீடு ஓர் அபத்தம். 60 ஆண்டுகால அகிம்சை, பின் ஆயுதம் என ஒரு தொடர் போராட்ட செயன்முறையில் முள்ளிவாய்க்கால் உச்சம் பெற்று வீழ்ந்த வரலாறு கொண்டது.
தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துகிற தளத்தில் தமிழக உறவுகள் மானசீகமாக உணர்வுரீதியாக முள்ளிவாய்க்கால் படுகொலையில் துவண்டுபோனார்கள் என்பதும் உண்மை. இந்தியர்கள் என்ற அடையாளத்தில் காயத்தை அது ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தில் அமைதிப்படையின் செயற்பாடு மற்றும் தமிழக மீனவர் படுகொலைகளை கண்டுகொள்ளாமை, தற்போதைய தூத்துக்குடி படுகொலை எல்லாமும் இந்தியா என்ற அடையாளத்துக்கு மேலால் தமிழர் என்ற அடையாளத்தை அழுத்தமாக நேசிக்கவைக்கும் அரசியல் போக்குக்கு வழிசமைப்பவையாக உள்ளன.
இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என ஒரு கருத்து முன்வைக்கப்படுவதுண்டு. இந்திய தேசம் நீண்ட காலப்போக்கில் உடைந்து நொருங்குவதற்கான அபாயத்தை இந்திய தேசியவெறியை அல்லது தேசிய உணர்வை ஊட்டி தக்கவைக்கிற முயற்சிகள் உத்திகள் அரசியல் அரங்கில் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். அது கிரிக்கெற் விளையாட்டையும் அந்தக் களத்தில் நிறுத்திவைத்திருக்கிறது. இந்திய சினிமாக்களும் அந்த வேலையை கச்சிதமாகச் செய்கின்றன.
தூத்துக்குடி சம்பவத்தை ஏதோ புரட்சிக்கு அருகாமையில் கொண்டுவந்து நிறுத்தி, தமிழக மக்களை நிறுத்திவைச்சு கேள்விகேட்கிற முட்டாள்தனத்தை சில ஈழத்தவர் பதிவுகள் செய்வது நகைப்புக்கிடமானது. விடுதலை அரசியலை புரிந்துகொள்ளாத தன்மை அது. திரைப்படங்கள் தொலைக்காட்சிகள் என எல்லா தொடர்புசாதனமும் இந்திய மனநிலையை தமிழக மக்களிடம் வளர்க்கவோ தக்கவைக்கவோ முயற்சித்தபடிதான் இருக்கிறது. தமிழக மக்கள் அதை கழட்டிவிட்டு வருவதற்கு இந்திய அடையாளம் ஒரு சட்டையல்ல. அது ஓர் உணர்வு. அது இந்திய அரசின் தமிழக மக்கள் மீதான செயற்பாடுகளைப் பொறுத்தே வளரும் அல்லது தேயும். எடுத்த எடுப்பிலே ஈழத்தை அடியொற்றிய பார்வையில் தமிழ்நாடு தனிநாடாக உருவாகிற கனவை வளர்ப்பது அதீதம்.
தூத்துக்குடி படுகொலை ஒரு இனப்படுகொலை அல்ல. அது உலகமயமாதலுள் இயங்குகிற பல்தேசிய கம்பனிகளின் நலனை காப்பாற்றுகிற – அவர்களின் எடுபிடி – அரசின் வன்முறை. அதனால் இதற்கெதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டம் தனிய அவர்களின் நலனுக்குள் மட்டும் அடங்குவதில்லை. இந்த உலகை ஆட்டிப்படைக்கும் பல்தேசியக் கம்பனிகளின் கொடுமைக்கு எதிரான சர்வதேசப் போராட்டங்களின் ஒரு அங்கம். அதனால் அதை ஒவ்வொரு மனிதஜீவியும் மானசீகமாக ஆதரவளிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது. அவர்கள்மேல் நிகழ்த்தப்படுகிற திட்டமிட்ட கொலைகளுக்கும் கைதுகளுக்கும் தொடர் அநியாயங்களுக்கும் எதிராக நாம் எல்லோருமே குரல் கொடுத்தாக வேண்டும்.
தமிழரை தமிழர் ஆண்டால் எல்லா பிரச்சினைகளும் தீரும் என்ற எளிய சமன்பாடுகள் செல்லுபடியாவதில்லை. ஒரு இனத்தை அதே இனம் ஆளுவதால் விடுதலை பெற்றுவர்களாவதில்லை என்பதற்கு உலக வரலாறு நெடுகிலும் உதாரணங்கள் உள்ளன. ஆதாரத்துக்கு நீண்ட தூரம் போகத் தேவையில்லை. முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு 1971 இலும் 1985 இலுமாக இரு கட்டமாக ஜேவிபியை வேட்டையாடி அறுபதாயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர் யுவதிகளை – இந்திய அரசின் துணையோடு- படுகொலை செய்தது. ஐம்பத்தி ஆறாயிரம் பேர்வரை காணாமலாக்கப்பட்டனர்.
அரசுவடிவம் எப்போதுமே முதலாளிகளின் நலன்களை காக்கிற அமைப்பு. ஜனநாயகம் என்ற போர்வைக்குள் பதுங்கியிருக்கும் கிரிமினல் அமைப்பு. அந்த நலன்களைக் காக்க பொலிஸ் இராணுவம் என தன் வன்முறை இயந்திரங்களை அது பயன்படுத்தியே தீரும். தொழிலாளர்களும் விளிம்புநிலை மக்களும் அரசுக்கு ஒரு மந்தைக் கூட்டமாகவே தெரியும். அது மேய்ப்பராக தன்னை கட்டமைத்து இயங்கும். அது நிகழ்த்துகிற வன்முறையும் ஒடுக்குமுறையும் எதிர்விளைவாக மக்களிடம் அசைவசைவாக எதிர்மனநிலையை, போராட்டக்குணத்தை விளைவாக்கியபடி இருக்கும். இயற்கை விஞ்ஞானத்திலோ சமூகவிஞ்ஞானத்திலோ இயங்குகிற இயங்கியல் விதி அது. இந்திய அரசு வன்முறையால் விதைக்கிறது. தூத்துக்குடி படுகொலை இன்னொரு விதைப்பு.
- 24052018