புலிகள் அரசு இடையிலான இறுதிப்போரில் போரை ஆதரிக்கிறோம். இன்னும்மேலே போய் புலிகளை அழித்ததுக்கு இலங்கை அரசாங்கத்துக்கும் ராஜபக்சவுக்கும் நன்றியும் சொல்கிறோம்.
பிறகொருநாள் போருக்கு எதிராக பொதுமையாக குரல்கொடுக்கிறோம்.
*
புலிகள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்கிறோம்.
பிறகொருநாள் புலி அமைப்பிலிருந்த போராளிகள் குறித்து கவலைப்படுகிறோம்.
*
அவர்கள் களத்தில் போராடியபோது போராளிகள் என சொல்ல மறுக்கிறோம்.
பிறகொருநாள் வாயைக் கொப்பளித்துவிட்டு போராளிகள் பெண்போராளிகள் என்றெல்லாம் அழைக்கிறோம்.
*
போர்நிறுத்தத்தை எதிர்க்கிறோம். பிறகொருநாள் போர்ப்பட்டு சின்னாபின்னப்பட்ட மக்கள் குறித்து கரிசனையாகப் பேசுகிறோம்.
ஓர் அரசியல் மிருகமாகவும், இரத்தமும் சதையும் கொண்ட மனிதஜீயாகவும் மாறிமாறி வகிக்கிற இப் பாத்திரத்துக்கிடையில் நாம் ஏதாவது புதிய படிப்பினைகளைக் கண்டோமா. எமது தவறான பார்வைகளை பகிரங்கமாக சுயவிமர்சனமாக ஏற்றுக் கொண்டோமா. திருத்தினோமா.
போர் என்பதே இரண்டு தரப்புகளுக்கு இடையிலான சண்டையாக பிரதியிட்ட எளிய சமன்பாட்டில் வெகுஜனத்தை எதுவாக பிரதியிட்டோம்.
மனித சமூகம் தன் உழைப்பால் படிப்படியாகக் கட்டியமைத்த இயல்புநிலையை வாழ்வாதாரத்தை அது எவ்வாறு அழித்தொழிக்கவல்லது என பார்த்தோமா
பண்பாட்டை மனித விழுமியங்களை போர் எவ்வாறு தாக்குகிறது மாற்றிவிடுகிறது என யோசித்தோமா.
வாழ்வை வாழத் தொடங்குகிற குழந்தைகளையும் இளம் சந்ததிகளையும் எவ்வாறு உளவியல் ரீதியில் நிர்மூலமாக்கப் போகிறது என யோசித்தோமா.
மனிதவாழ்வின் இருப்பில் தவிர்க்க முடியாத சுற்றுச்சூழலை அது எவ்வாறு அழித்தொழிக்கிறது என யோசித்தோமா.
இலங்கை என்ற நாட்டை போரானது வல்லரசுகளிடம் அடைவு வைப்பதிலுள்ள மீளமுடியா பொருளாதார அடிமைவாழ்வு குறித்து யோசித்தோமா.
ஏந்த ஜனநாயக வழிமுறைக்கும் புலிகள் தடையாக இருக்கிறார்கள் என்ற ஆதங்கம் 2009 க்குப் பின் செயலில் எதைக் கிழித்துக்கொண்டு மேலெழுந்து காட்டியது.
வெறும் புலியெதிர்ப்பின் அரசியலிலிருந்து மேற்கொண்ட மேற்சொன்ன நிலைப்பாடுகளை சந்தடியில்லாமல் பூனைக்காலால் கடந்து செல்லல் ஓர் அறமா?
*
சில கோட்பாட்டாளர்கள் போர்நிறுத்தத்தை கோரினார்கள். இரண்டு தரப்புமே ஆயுதத்தைக் கீழே போடவேண்டும் என்றார்கள். புலிகள் தாக்குதல் நிலையிலிருந்து தற்காப்பு நிலைக்குள் குறுகிப்போய்விட்டபின் தாக்கிற தரப்பைப் பார்த்து ஆயுதத்தை கீழே போடு என்பதா. இல்லை இரண்டு தரப்பையுமே கீழே போடு என்பதா. எது அறம்?
*
அரச பயங்கரவாதத்தின் விளைபொருள்தானே புலிகளும் மற்றைய இயக்கங்களும். விளைபொருளை இல்லாமலாக்கினால் அரச பயங்கரவாதம் இல்லாமல் போய்விடுமா?. இந்த விளைபொருளுக்கான எதிர்ப்பரசியலை தோற்றுவித்தது அரசின் பேரினவாத அரசியல்தானே. அதை இல்லாமலாக்கினால் எதிர்ப்பரசியலின் தளம் என்று ஒன்று இருந்துவிடுமா?. ஆக பேரினவாதம் கடந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை கண்டடைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் புலிகள் உட்பட விடுதலைப்போராட்ட அமைப்புகளின் தேவையை அரசியல் ரீதியில் படிப்படியாக இல்லாமலாக்குவதா அல்லது இராணுவ ரீதியில் அழிப்பதா ஓர் அரசின் அறம்?
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு சமாதானத்துக்கு புலிகள்தான் தடையாக இருக்கிறார்கள் என்ற அரசு அந்தத் ‘தடையை’ உடைத்து ஒன்பது ஆண்டுகள் நகர்ந்திருக்கின்றது. எங்கே அரசியல் தீர்வு எங்கே சமாதானம். இதுவா ஓர் அரசின் அறம்.
*
மக்களுக்காகவே போராடியதாக சொல்லிக்கொள்ளும் ஓர் இயக்கம், கெரில்லாப் போரிலும் நேரடி யுத்தத்திலும் சாதனைகள் படைத்த ஓர் இயக்கம் அதே மக்களை முள்ளிவாய்க்கால்வரை குறுக்கிச் சென்று, செய்வதறியாது அடுத்த கட்டமாக மக்களைக் கேடயமாக பிரதியிட்டு இறுதிமூச்சை தக்கவைக்க முயற்சிசெய்து, கடைசியில் தாமும் பலியாகிப் போக வைத்த அரசியலை முறையாக ஆய்வுக்கு உட்படுத்தாமலிருப்பது, அதை பேசுபவர்களினது வாயை -உணர்ச்சி அரசியலால்- அடைப்பது விடுதலையை உச்சரிப்பவர்களுக்கு ஓர் அறமா?
*
தனிநபர் கொலையில் தொடங்கிய கொலைக் கலாச்சாரத்தின் பாதையில் முன்நகர்ந்த புலிகள் சகோதர இயக்கங்களை அழித்தொழித்த முறைமையும் காட்சிகளும் கொடுமையானவை. விடுதலையின் பெயரால் இவை நடத்தப்பட்டது குறித்தும் அது விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு மாற்றியமைத்தது என எதுவும் பேசாமல் நழுவிச் செல்வது ஒரு அறமா.
பேரினவாதத்துக்கு எதிராக போராடிய ஒரு சிறுபான்மை இனத்திற்காக போராடிய புலிகள் தன்னுடன் வேருற்று வாழ்ந்த இன்னொரு சிறுபான்மை இனத்தை பெயர்த்தெறிந்தது ஓர் அறமா.
*
உணர்ச்சி அரசியலையே பேசிப் பேசி சாமான்ய மக்களை உசுப்பேத்தும் இயக்கவாதிகளும் தேர்தல் அரசியல்வாதிகளும்; இவளவு அழிவுக்குப் பின்னும் அதே பாணியில் பேசிக்கொண்டிருப்பது ஓர் அறமா.
*
புகலிடத்தில் கடின உழைப்பும் குறைந்த கூலியும் பெற்ற அகதித் தமிழரிடமிருந்து பெற்ற பெருந்தொகைப் பணத்தை 2009 க்குப் பின் தத்தமதாக்கி, வியாபார நிறுவனங்கள் ,ஆடம்பர கார்கள், வீடுவளவுகள் என்றெல்லாம் வாங்குவது மட்டுமல்ல, கோமாளித்தனமாக திருமண விழாக்கள் பூப்பு நீராட்டு விழாக்கள் 50 வது பிறந்தநாள் என்றெல்லாம் பவுசு காட்டுவது விடுதலையின் பெயரால் இயங்கிய வெளிநாட்டு புலிப் பொறுப்பாளர்களின் அறமா.
இந்த அற பட்டியல் இப்படியே நீண்டுகொண்டே போகும். இந்த எல்லா அறங்களையும் கேள்விகேட்பதை எதன் பெயரால் மறுத்துவிட முடியும். அழிவுகளை பரிசளித்தவை அவை. ஆதலினால், இவ்வாறான எல்லா கேள்விகளையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையோடு சேர்த்து நினைவுகூர்வோம்! படுகொலை செய்யப்பட்டும், தப்பிப்பழைத்து அங்கவீனர்களாகவும் வாழ்வாதாரத்தின் விளிம்பில் சறுக்கிவிழுந்து எழும்பிக்கொண்டும் இருக்கும் எல்லா மனிதர்களும், மனித விழுமியங்களும் வரலாற்றுச் சுவரில் விட்டுச் சென்றிருக்கிற வடுவானது தமது அடையாளத்தைத் தேடிக்கொண்டிருக்கிற ஓர் இனத்தின் துயர ஓவியம்.
21052018
FB link : https://www.facebook.com/ravindran.pa/posts/2040463362691414