// ஈழ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் எல்லோருமே பிம்பக் கட்டமைப்புகள்தான். அவர்கள் சமூகம் குறித்து, விடுதலை குறித்து, பொருளாதாரம் குறித்து, சுற்றுச்சூழல் குறித்து, சமூகவிடுதலை குறித்து, தத்துவம் குறித்து, வரலாறு குறித்து தீவிரமாகவும் ஆய்வுத்தன்மையுடனும் பேசிய, எழுதிய, பேட்டியளித்த கருத்துகளை கண்டடைய முடிவதேயில்லை.// – 06.05.18, FB
இந்த முகநூல் குறிப்பு இயக்கத்தை அகநிலையில் வைத்துப் பார்த்து எழுதப்பட்ட ஒன்று. இதற்கு வந்திருந்த பக்குவமான பின்னூட்டங்கள் ஒரு விரிவான பதிவை செய்ய வைத்திருக்கிறது.
33 வருடங்களுக்குப் பிறகு புளொட் காணொளியொன்றை பார்க்க நேர்ந்தது. அதில் உமா மகேஸ்வரன் பேசுகிற பேச்சொன்றை கேட்டு இடைநடுவிலேயே நிற்பாட்டிவிட்டு எழுதிய குறிப்பு அது. உணர்ச்சி அரசியலும் உணர்ச்சி மதிப்பீடுகளும்தான் எமது அரசியலின் வேர்களாக பரவியிருக்கிறது. புரட்சிகர அரசியல் அல்லது விடுதலை அரசியலை சிந்தனைத் தளத்தில் வைத்து பல இயக்கத் தலைவர்களும் பேசிக் கேட்டதில்லை. எழுத்தில் பார்த்தில்லை. ஒப்பீட்டு ரீதியில் வேறுபாடுகள் இருக்கின்றனதான். அதைவைத்து பெயர்களை அடுக்குவதில் என்னதான் இருக்கிறது. தீவிரமான அவர்களின் சிந்தனைகளை ஆய்வுப் போக்குகளை -விடுதலையைப் பெறுகிற ஓர் மிகப்பெரும் கடினமான பணியின் வழிகாட்டிகளாக இருந்தவர்களிடமிருந்து- எதிர்பார்ப்பது பிழையா என்ன. சிந்தனைத் தளத்தில் விவாதத்தை நடத்துகிறளவுக்கு அவர்கள் எதை பதிவாக விட்டுச் சென்றுள்ளனர். மேற்கோள்களை மட்டும் உச்சரித்தால் போதுமானதா. அந்த மேற்கோள்களில் பிரதி செய்யப்பட்டவையும் உண்டு என்பதை அரசியல் நூல்களை கற்கும்போது காண நேர்கிறது.
சேகுவேராவை திரும்பத் திரும்ப படித்து விளங்கவேண்டியிருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங், மல்கம் எக்ஸ் என இன்றும் அவர்கள் பேசியதை கோட்பாட்டு ரீதியில் உரைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. எழுத்தில் வைத்தவைகளை இப்போதும் படிக்கவேண்டியிருக்கிறது. மண்டேலாவை அவரது அணுகுமுறைகளை படித்து விமர்சனத்தினூடாக நிறவெறி பற்றிய, தென்னாபிரிக்க விடுதலை பற்றிய பார்வையை சீரமைக்க வேண்டியிருக்கிறது. ஒச்சலானின் நீதிமன்ற உரையை உன்னிப்பாகக் கேட்கவேண்டியிருக்கிறது. பிடல் கஸ்ரோவை படிக்கவேண்டியிருக்கிறது. இப்படியே பட்டியல் நீளும்.
இவர்களையெல்லாம் பட்டியலிட்டு ஒப்பிட்டு புனிதர்களாக்க எழுதவில்லை இங்கு. விவாதங்களைத் தூண்டுகிற, சிந்தனைக்கு வேலைவைக்கிற அவர்களின் விடுதலை அரசியல் குறித்துத்தான் பேசுகிறேன். எமது இயக்கத் தலைவர்கள் ஏன் (தமது தனித்துவமான சிந்தனைக் களத்தில்) அவ்வாறு இல்லாமல் போனார்கள் என்ற தவிப்பு இருக்கிறது. இதை முன்வைத்தல் என்பது அவர்களுக்கான தகுதிகளாக அல்லது கோடுபிரித்து அதற்குள் அவர்களை நான் அழைப்பதாக அர்த்தப்படாது.
ஒவ்வொரு நாளையும் உயிரோடு வாழ்ந்து முடிப்பதே சவாலாக (நான் சார்ந்த இயக்கத்தால் ஆக்கப்பட்ட) சூழ்நிலையில் இரவில் தலைமறைவாகவும் பகலில் ஆள்நடமாட்டமுள்ள ஊர் வாசிகசாலையிலும் என கழிந்த பொழுதுகள் ஒன்றிருந்தது. 1985 காலப்பகுதி அது. புளொட் அமைப்பு உள்ளுக்குள் உக்கிப்போய்க்கொண்டிருந்ததை ஊரில் எவரும் அறிந்திலர். அரசியல் பிரிவில் சேர்ந்தியங்கிய உற்ற தோழர்களுக்குக்கூட பின்தள நிலைமையை எப்படி புரியவைப்பது என்பது சவாலாக இருந்த நிலைமை. அவளவு பலமாக இயக்கம் பற்றியும் தலைமை பற்றியும் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன. அந்த பிம்பங்களை வைத்து நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டிருந்தன.
இயக்கத்துக்கு போகமுன் இருந்தது போலன்றி இப்போ வார்த்தைகளை தொலைத்துவிட்டு ஆலமர வேர்களில் (பின்தளத்திலிருந்து வந்த) நாம் இருவரும் குந்தியிருப்போம். எங்களது மௌனத்துக்கு அவர்கள் வேறு அர்த்தம் கொண்டார்கள். “எப்ப தம்பி தொடங்கப்போறியள்” என்று கேட்டார்கள். ‘என்னத்தை’ என கேட்கவேண்டும் போலிருக்கும். ஆனால் மெல்லிய புன்னகையை பதிலாயளித்தோம். அதற்கும் அவர்கள் அர்த்தம் கொண்டார்கள். நிக்கரவெட்டியா பொலிஸ் நிலையத்தை புளொட் தாக்கியது. இரும்புமதவடியில் புலிகள் கண்ணிவெடி வைத்தார்கள். வாசிகசாலைக்குள் பேப்பர் வாசிச்சுக்கொண்டிருந்த ஒரு முதியவர் “அங்கை பார் எட்டாம் வகுப்புப் படிச்சது மதவுக்கு கண்ணிவெடி வைக்குது. அவன் உமாமகேஸ்வரன் கொழும்பிலையிருந்து தொடங்கிறான் பார். அவன் படிச்சவன்..” என்று ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தார். கடைக்கண்ணால் எங்களையும் பார்த்தார். அதற்கும் நாம் புன்னகையையே பதிலாயளித்தோம். “இவங்கள் சத்தம்போடாமல் இருக்கிறாங்கள். ஏதோ செய்யப்போறாங்கள் போலை” என்று சுவருக்குப் பின்னால் அவர்கள் கதைச்சது காதில் விழும்போதும் புன்னகைத்தோம். எமது புன்னகைக்கு எம்மிடம் வேறு அர்த்தம் இருந்தது. நாம் அகநிலையில் இயக்கத்தையும் தலைமையையும் கண்டோம். அவர்கள் (வெகுமக்கள்) புறநிலையில் அவற்றைக் கண்டார்கள். நாங்கள் நம்பிக்கையை இழந்திருந்தோம். அவர்கள் நம்பிக்கையோடிருந்தார்கள்.
இதுதான் இயக்கங்கள் பற்றி தலைவர்கள் பற்றி அப்போ மக்களிடமிருந்த அறிவும் மனநிலையும் ஆகும். மற்றைய இயக்க தோழர்களோடு நடந்த (அகநிலையான) உரையாடல்களையும் வைத்து, எல்லா இயக்கங்களுக்குமான ஒரு வகை மாதிரியாக நான் இதைக் காண்கிறேன். அது இயக்கங்களுக்கு இடையிலான அல்லது தலைவர்களுக்கு இடையிலான வித்தியாசங்களை அழித்தல் என்பதாகாது.
கல்வித் தகுதியை தனிமனித ஆளுமைக்கு மேலால் அறிவுக்கு மேலால் உயர்த்திக் காட்டுகிற மனநிலையை காட்டமாக விமர்சிக்கிறவர்கள்கூட, இதற்கு ஆதாரமாக இருக்கிற கல்விமுறையையும் அதை கெட்டியாக தாங்கிப்பிடிக்கிற புகழ்பெற்ற பாடசாலைகளையும் தம்மை அடையாளப்படுத்த முனைவதை (முகநூல் புறொபைலில்கூட) நாம் காணலாம். இது ஒரு மனநிலை. அந்த மனநிலையை எதிர்ப்பதாக தன்னை பிரதியீடு செய்துகொண்டு தானே அதற்குள் பலியாகியிருக்கிற அவலம் அது. தான் சார்ந்த இயக்கத்தை தான் விமர்சிக்கிற அதே உரிமையை வெளியே இருக்கிற ஒருவர் எடுத்துக்கொள்ளும்போது (விமர்சனத்தை) ஜீரணிக்க மறுக்கிற, அதை தனது உள்வீட்டு விவகாரமாக காண வைக்கிற மனநிலை அது.
இந்த சமூக மனநிலை இயக்கம் பற்றி தலைமைகள் பற்றி பிம்பங்களைக் கட்டியெழுப்ப உறுதுணையாக இருந்தது. படித்தவர்களை உயர்த்திப் பிடித்தது. தான் ஒழுக்கம், வீரம் என வரையறுத்தவைகளை தலைவர்கள் மேல் ஏற்றிப் பார்த்தது. அதன் சுயநலப் போக்கு உயிரை தமக்காகக் கொடுப்பவர்களை புனிதர்களாக்கியது. கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்களாக்கியது. “எங்களுக்காக உயிரையே குடுக்கிறாங்கள்” என்றது. “அவங்கள் செய்தால் சரியாகத்தானிருக்கும்” என ‘சமூகவிரோதி’ காட்போர்ட் மட்டையையும் குருதியோடிய உடலையும் மின்கம்பத்தில் வைத்துப் பார்த்தபடி வியாக்கியானம் செய்தது. போராட்டம் என்றால் அழிவு தவிர்க்க முடியாதது என்றது. யாருடைய அழிவு அது?. தன்னுடையதல்ல. அதனால்தான் மதவடியில் தொடங்கிய தாக்குதலை அது வெறுத்தது. கொழும்பில் தொடங்கிய தாக்குதலை கொண்டாடியது
80 களின் நடுப் பகுதியில் ஒரு பிரபல்யமான எள்ளல் கதையொன்று பேசப்பட்டுக் கொண்டிருந்தது. யாழ்ப்பாண மினிபஸ் சனங்களின் பண்ணைகள் போல் நெரிசலாக ஓடுவது வழமை. அதற்குள் ஒரு பெரியவர் கம்பியை பிடித்தபடி ஒருவாறு நெரிசல் பட்டுக்கொண்டு நிற்கிறார். அவரது வெறும் பாதத்தின் மீது செருப்பணிந்த ஒரு இளைஞனின் கால் மிதித்தபடி இருக்கிறது. பெரியவருக்கு வலி தாங்க முடியவில்லை. மெல்ல தாழ்ந்த குரலில் குழைந்தபடி அவர் அந்த இளைஞனை கேட்கிறார்.
“தம்பி எந்த இயக்கம்? ”
“நான் இயக்கமொண்டிலுமில்லை.”
“உங்கடை தம்பி அல்லது அண்ணை இயக்கத்திலை இருக்கினமோ? ”
“இல்லை.”
“சொந்தக்காரர் ஆராவது இருக்கினமோ? ”
“ஒருத்தருமில்லை”
“எடடா பு..மோனை காலை. செருப்பாலை உளக்கிறியோ” என பெரியவர் கத்துகிறார்.
(அடுத்த வரிகளை நீங்களே எழுதிக் கொள்ளுங்கள்.)
இயக்கங்களின் அதிகாரத்தை வெளிப்படுத்துகிற கதை இது. இதுவே சமூக மனநிலையின் சாட்சியும்கூட.
யாழிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது சனம் வீதிக்கு இறங்கவில்லை என்றொரு விமர்சனம் இருக்கிறது. அதை முஸ்லிம் மக்களுக்கெதிரான சமூக மனநிலை என எளிய சமன்பாட்டால் சில புத்திசீவிகள் விடைகண்டுபிடிச்சுச் சொன்னார்கள். சொல்கிறார்கள். அதில் ஒரு பகுதி உண்மை இருக்கிறதுதான். ஆனால் அதை அவர்கள் சமூக மனநிலையின் முழுமையிலிருந்து பார்த்ததாகத் தெரியவில்லை. புலிகளால் நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சகோதர இயக்கப் படுகொலைகளில் தமது பிள்ளைகள் ஈடுபட்டதற்கும், (மற்றைய இயக்கங்களைச் சேர்ந்த) தமது பிள்ளைகளே பலியாகியதற்கும்கூட அந்த மனநிலை வெகுமக்களை வீதிக்கு இறக்கி போராட வைக்கவில்லை. கேள்விகேட்க வைக்கவில்லை. ஏன் குருதிவழிய அபயக்குரல் எழுப்பி வீட்டு வளவுகளுக்குள் தப்பிவந்தவர்களைக்கூட ஒளித்துவைத்து பாதுகாக்க மறுத்தது. பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மடிவதாக சொல்லப்படுகிற ஒரு சமூகத்தில் இதுவிடயத்தில் எந்த அசுமாத்தமும் இல்லாமல் போனதேன்? புளொட் இயக்கத்தில் உட்படுகொலை நடப்பதாக தெரியவந்த பின்னர்கூட அது “எங்கடை பிள்ளையள் எங்கை, அவங்களை ஊருக்கு கொண்டுவாங்க” எண்டு தாய் தகப்பன் சகோதரம்கூட வீதிக்கு இறங்கவிடாமல் வைத்திருந்த மனநிலை அது. பின்தளத்தில் முகாம்களில் இருந்த அவர்களின் பிள்ளைகள் இப்படியெல்லாம் அதிசயங்கள் நடக்காதா என ஏங்கிக்கொண்டிருந்தனர்.
நிலைமை இப்படியிருக்க புலிகள் இயக்கத்தின் இராணுவத் தாக்குதல்களை வைத்து ஈழத்தமிழர்கள் துணிந்தவர்களாக வீரப் பரம்பரையாக தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சியாளர்களால் கட்டமைக்கப்பட்டனர். புகலிடத்தமிழர்களும் அந்த சங்கை பலர் ஊதியபடிதான் இருக்கின்றனர். எல்லாவகை அதிகாரங்களுக்குள்ளும் சிக்கிச் சின்னாபின்னப்பட்டுப் போன விளிம்புநிலை மக்களையும், பலவழிகளிலும் பாதிக்கப்பட்ட வெகுமக்களின் அகநிலை வாழ்பனுபவங்களையும் தமிழகம் புகலிடம் என அதிபுறநிலையில் நின்று தரிசிக்க முடியாது. தமது கனவுகளை மீண்டும் அந்த மக்கள் மேல் ஏற்றுகிற அபத்த அரசியல் அவர்களுடையது.
போர்ச் சூழலில் அல்லது போராட்டச் சூழலில் ஒவ்வொரு மனிதஜீவியும் தனது இருத்தலுக்கான போராட்டத்தை இயங்குதலை தனித்தும் கூட்டாகவும் நிகழ்த்துவர். இன்னும் அது உடனடி உயிர்ப் பாதுகாப்பு நிலைமைகளில் எல்லா அரசியலையும் தூக்கியெறிந்துவிட்டு தன்னை தற்காத்துக் கொள்ளும். இலங்கை இராணுவம் தாக்கியபோது இந்திய இராணுவ முகாமுக்குள் ஓடியது. இந்திய இராணுவம் தாக்கியபோது இலங்கை இராணுவ முகாமுக்குள் ஓடியது. எதிர்க்க வேண்டிய இடத்தில் தவிர்க்க முடியாதபடி எதிர்த்து நின்றது. அது தப்பிப்பிழைத்தலுக்கான இயற்கை விதிக்கு உட்பட்டது. தனது மனித வளம் உட்பட மற்றைய வளங்களையும் அதன் அடிப்படையில் விடுதலைப் போராட்டத்துக்கு வழங்கியது. போரும் போராட்டச் சூழலும் ஈழத் தமிழர்களை அவ்வாறு வைத்திருந்தது. புறச்சூழலை புறந்தள்ளி மறத் தமிழர்கள் என விளிப்பது உசுப்பேத்தத்தான் உதவும்.
‘ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை’ என்றும், ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தகுடி தமிழ்க்குடி’ என்றும் முழக்கமிட்ட மிதவாதத் தமிழ்த் தலைமைகளின் பேச்சு தலைக்குள் ஏறிய தமிழ் மனநிலையின் கனவுத் தேசமாக தமிழீழம் இருந்தது. இது ஈழத்திலாயிருக்கட்டும். தமிழகத்திலாயிருக்கட்டும். இந்த உணர்ச்சி அரசியலின் வழிவந்தவர்கள்தான் இயக்கத் தலைவர்களும்.
இதன்வழியே இலகுவாகவே தமிழீழத்தை தீர்வாக எல்லா இயக்கமுமே ஏற்றுக்கொண்டார்கள். தமது இலட்சியமாகக் கொண்டார்கள். அந்த தீர்வை ஒரு பெரும் அரசியல் விவாதத்தினூடாக பகுப்பாய்வினூடாக அவர்கள் வந்தடையவில்லை. சோசலிசம் என்ற ஓர் சொல்லை அதோடு இணைத்துவிட்டதும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டோடு இணைத்துப் பேசியதும்தான் இடதுசாரிய சிந்தனை கொண்ட (இயக்கத்) தலைவர்கள் செய்த பணி. அதாவது முடிவை வியாக்கியானப் படுத்தினார்களே யொழிய அரசியல் வியாக்கியானங்களுக்கூடாக முடிவை (தமிழீழத்தை) வந்தடையவில்லை.
இன்று இயக்கத் தலைவர்களை, இயக்கத்தை கொண்டாடுகிறவர்களில் பெரும்பாலானோரும் இயக்கத்துள் இருந்த (அகப்) போராளிகள் இல்லை. கொண்டாடும் அந்த பெரும்படையானது இயக்கத்தை புறநிலையில் கண்டடைந்தவர்களைக் கொண்டது. (இயக்கக் கட்டமைப்பின் ஓரங்களில் நடந்து திரிந்தவர்களும் அல்லது அதைவிட்டால் பிழைப்பு இல்லாமல் போய்விடும் என்ற நிலையில் உள்ளவர்களும் கொண்டாடுகிறார்கள்). அதற்குள் வெகுமக்கள் மட்டுமன்றி சில புத்திஜீவிகளும் அடக்கம். வெகுமக்கள் பொதுப்புத்தியாலும் அதன்வழி வந்த கொசுறுத் ‘தத்துவங்களாலும்’ விளக்கமளிக்கிறார்கள். புத்திஜீவிகள் தமது தமது அறிவையும் கற்றறிந்த தத்துவங்களையும் வளைத்து நெளித்து விளக்கமளிக்கிறார்கள்.
1980 களில் புளொட் இயக்கத்தில் இருந்தவர்கள் தளத்தில் நிகழ்ந்த அரசியல் வகுப்புகளில் உரையாடல்களில் எல்லாம் தோழர் உமா மகேஸ்வரன் என்று உணர்வொழுகச் சொல்லித் திரிந்தார்கள். தமிழீழத்தின் குரல் வானொலியில் ஒலிபரப்புக்கான ஒலிப்பதிவின்போது தோழர் என்றே உமாவை விளித்து வாசித்தெறிபவர்கள் வெளியே வரும்போது ‘பெரிசு’ ‘பெரியையா’ என்ற அடைமொழிகளுக்கு மாறிவிட வேண்டும். பயிற்சி முகாம்களில் ‘தோழர் உமாமகேஸ்வரன்’ என்று சொன்னால் சந்தர்ப்பம் பார்த்து நாலாம் மாடிக்குள் கடத்தப்படுவர். தமக்குள் ஓயாது தோழர் தோழர் என உச்சரித்துத் திரியும் போராளிகள் முகாம் பொறுப்பாளர்களை ‘அண்ணை’ என விளித்தனர். தளத்தில் அரசியல் வேலை செய்த மத்தியகுழு உறுப்பினர்களுக்குக்கூட இந்த உண்மை தெரியாமலே இருந்தது.
அந்தளவுக்கு இயக்கத்துக்கும் வெகுமக்களுக்குமான பிரிப்பு ஒரு வலுவான இரும்புக் கோடாகவே இருந்துவந்துள்ளது. இராணுவ இரகசியம் என்ற பெயர்ப்பலகைக்குள் எல்லா அநியாயங்களும் மறைக்கப்பட்டன. அந்த உண்மைகள் வெகுமக்களை மட்டுமன்றி இயக்கத்திற்கு நேர்மையாக உழைத்த அரசியற் போராளிகளைக்கூட வந்தடைய காலம் பிடித்தன. அதுவும் முழுமையாக அல்ல. இப்போதும்கூட அந்த நிலைமை மறைந்துவிடவில்லை.
எல்லாம் முடிந்து வெளிநாடு தப்பிப்போவதற்காக நாம் கொழும்பில் நின்றபோது கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர் எம்மை தோழர் சண்முகதாசன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இயக்க உள்விவகாரங்களையும் அதன் ஜனநாயகமற்ற போக்குகளையும் படுகொலைகளையும் நாம் அவருக்கு சொன்னபோதும்கூட அதை அவர் கோட்பாட்டு ரீதியில் நடைமுறைத் தவறுகளாகவே கண்டார். அவர்கூட இயக்கங்களை புறநிலையில் நின்றே அணுகியதால் எமது ஈரம்சொட்டும் அனுபவங்களை கோட்பாட்டுக்குள் கரைத்துப் பேசிக்கொண்டிருந்தார். சலிப்புடன் திரும்பினோம்.
எந்த சுயநலமுமின்றி தத்தமது சொந்தக் கனவுகளை தூக்கிவீசிவிட்டு இயக்கத்துக்குள் வந்தவர்கள் தவறிழைத்தபோது அல்லது தவறிழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டபோது அவர்கள் எதிர்கொண்ட தண்டனை முறைகள் மனிதாபிமானம் என்ற மிக அடிப்படையான தளத்தையே உலுக்கியெறிந்தவை. (அப்படியான ஒருசில சம்பவங்களை நான் கண்ணால் கண்டிருக்கிறேன். சிலதை காதால் கேட்டிருக்கிறேன்). இயக்கத்துள் கண்காணிப்பு அரசியலை உளவுப்படை செயற்படுத்திக்கொண்டிருந்தது. இந்த அகநிலை ஊடாட்டங்களைச் சுவீகரிக்காது, புறநிலையாய் நின்று மட்டும் செய்யப்படுகிற எந்த உயர்ந்த கோட்பாட்டு தத்துவார்த்த அணுகுமுறையும் அகநிலையின் பரிமாணத்தை கண்டுகொள்ள உதவும் என நான் நம்பவில்லை. மாறாக அவை எல்லா அநியாயங்களையும் விடுதலையின் பெயரால் கடந்து செல்லவே உதவியிருக்கின்றன. இந்த இரண்டுமே (அகநிலைப் பார்வையும் புறநிலைப் பார்வையும்) சரியாக இணைக்கப்படுகிற தளத்தில் நின்று வைக்கப்படுகிற விமர்சனத்துக்கு பெறுமதி உண்டு. இந்த இரண்டு நிலைகளையும் பொறுத்தளவில் ஒன்றை இன்னொன்றால் நிராகரிக்க முடியாது. இந்த அகநிலைப் பரிமாணத்தை அனுபவவாதம் என புறநிலைப் பார்வையால் கடந்து செல்லவும் முடியாது.
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த புலிகளின் தோல்வியை புறநிலையில் வைத்துப் பேசுகிறளவு விரிந்த பார்வை அதை (இயக்க) அகநிலையில் வைத்துப் பேசுவதில் இல்லை. சர்வதேச நாடுகள் சதி செய்துவிட்டன என்பது அவர்கள் புதிசாகக் கையாண்ட நடைமுறையா என்ன. அதற்குப் பலியாகிப் போகிற நிலைமையை இயக்கம் கொண்டிருந்த அகநிலைக் காரணிகளும்தான் தீர்மானித்தது. மேற்குலகை நம்பி பிரபாகரன் நந்திக் கடல்வரை நகர்ந்த அவலம் ஏன் நிகழ்ந்தது. அதேபோலவே மற்றைய இயக்கங்கள் தளத்தில் இல்லாமல் போனதற்கு புலிகளின் வெறித்தனமான அழிப்பை முதன்மையாக வைத்து (புறநிலையில்) சரியாகவே பெருமளவில் வைக்கப்பட்ட பார்வைகளானது, அந்தந்த இயக்கங்களின் அழிவுக்கான அகநிலைக் காரணங்களை தேடிக் கண்டடைவதில் இருக்கவில்லை. புளொட் இயக்கம் புலிகளின் அழிப்புக்கு முன்னரே அகநிலைக் காரணிகளால் உருக்குலைந்து போனது. இயக்க உள்ளமைப்பு மூடப்பட்டதாக இருந்ததுதான் கடந்தகால காரணமெனில் அந்தந்த இயக்க முன்னாள் போராளிகள் வெளிப்படையாக முழுமையாகப் பேசாதிருப்பதுதான் நிகழ்காலக் காரணம் எனலாம்.
இயக்கங்களை அகநிலையாக (இயக்க வாழ்வனுபவங்களினூடாக) அணுகுவதற்கும் புறநிலையாக அணுகுவதற்குமான இடைவெளி ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப் பெரியதாகவே இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. இந்த இடைவெளியை இனியாவது இல்லாமலாக்குவதற்கும்; அதன்வழி எமது தோல்வியின் காரணங்களை கண்டறியவும் இயக்கங்களுள் இருந்தவர்கள் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்பது இதனால்தான். இதனூடு இயக்கங்கள் மட்டுமன்றி தலைவர்கள் மீதும் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் கேள்விக்குறியாக மாறும். இந்த பிம்பங்களின் நிழல்களில் குந்தியிருந்து பஞ்சாயத்து பண்ணுபவர்களின் பிழைப்பும் இல்லாமல் போய்விடும்.
*
// எதிர்காலத்தில் என்னைப் பின்பற்ற விரும்புபவர்கள் எவராக இருப்பினும் எனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். வேறு பாதையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். // – Phan Boi Chau (வியட்நாமின் மூத்த தலைமுறைப் போராளி)
- 10.05.18