வானவில்லொன்று விழுந்துகிடப்பதாய்
அதை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர் அவர்கள்.
முற்றத்தில் வீழ்ந்து கிடந்த அந்த வானவில்லை குழந்தை
நிறநார்களாய்க் கிழித்துப் போட்டுக்கொண்டிருந்தது.
பிஞ்சுக் கைகள் அளைந்த நிறங்கள்
முகத்திலும் சிதறிட
ஓவியமாகிவிட்டிருந்தது குழந்தை.
எரியுண்ட வாழ்வின் நிறங்கள் கருகுண்டு
நாட்கள் பட்டுப்போயிருந்தன.
நிறமற்றுப்போன முகங்களுடன்
குடிசையின் வாசல்களில் திண்ணைகளில்
அவர்கள் இருந்தார்கள்.
இன்று இந்த முற்றத்தில்
நிறங்களை சிந்திவிளையாடும் குழந்தைக்குள்
அவர்கள் புகுந்துகொண்டார்கள்.
இன்றைய இரவில் நான் ஒரு கவிதையை எழுதிட வேண்டும்.
“ஒரு கவிதை கிவிதையைத்தன்னும் எழுதித்தா” என்றவனின் தொல்லை இனியாவது இல்லாமலாகிட வேண்டும்.
அதற்கான கனவுடன் நான் உறங்கியிருந்தபோது
எனது கனவோ தனக்கான கனவை தேடிக்கொண்டிருந்தது.
கனவின் கனவோ குயில்களின் இசைப்பில் கரைந்தழிகிற
அதிகாலை இருளை காண ஆசைப்படுகிறது.
ஆனாலும் காகங்கள் கரைகிற காலைதான்
தனக்கான கனவில் திரும்பத் திரும்ப வருவதால்
எனது கனவு என்னை குப்புறப் படுத்து
தொடர்ந்து தூங்கும்படி மன்றாடியது.
அப்படியேதான் கிடக்கிறேன், குப்புற!
(april2016)