
தமிழ் சிங்கள மொழிகளிலான ஈழத்து பொப் இசையின் எழுச்சி இளைஞர்களின் உளவியல் தளத்தினை மேடையாக்கியதில் வெற்றிகண்டது. எமது சமூகத்தின் -குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின்- கட்டுப்பெட்டித்தனமான வாழ்க்கை முறைகளால் துள்ளலான மனவியல்புகள் அடக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக இளமையின் துடிதுடிப்புக்கும் வெளிப்படுத்தலுக்கும் எதிராக அது இருந்தது / இருக்கிறது. இந்த அமுக்கப்பட்ட துடிப்பான மனவியல்பை ஊடுருவி வெளிக்கொணர்ந்ததில் ஈழத்து பொப் இசைக்கு மறுக்கமுடியாத வரலாற்றுப் பாத்திரம் உண்டு.
அதன் தோற்றுனர்களில் முக்கியமானவரான ஏ.இ.மனோகரனின் இழப்பை நினைவுகூராமல் இருக்க முடியாது. அழிக்கப்படமுடியாத பெயராக ஈழத்து இசை வரலாறு அவரது பெயரை பொறித்துக் கொள்ளும். அவர் ஈழத் திரைப்படங்களிலும், சில தமிழகத் திரைப்படங்களில் (தனது திறமையை வெளிப்படுத்த இடமளிக்காத) குறும் பாத்திரங்களிலும் நடித்தவர். அது அவரது பொப் இசை கலைத்தளத்தின் கோடிப்புறத்துக்கு சமமானது. அவரை அத் தளத்தில் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை.
இந்த பொப் இசைகால சந்தர்ப்பத்தை மனவெழுச்சியை தமிழ் இளைஞர்கள் வெளியாகக் கொண்டாடிய அளவுக்கு தமிழ் யுவதிகள் கொண்டாட முடியாமல் போனதற்கு எமது கலாச்சாரக் கட்டுதான் காரணம். இருந்தபோதும் சாத்திய கதவுக்குப் பின்னால் இந்த பொப் இசை அவர்களது மனவெழுச்சியை கொண்டாட வைத்தது.
அதுமட்டுமன்றி இசையை, பாடலை சினிமாவின் தளத்துக்குள் முடக்கி வைத்திருக்கிற இந்திய நிலைமையிலிருந்து மாறுபட்டு பாடலிசை என்பதை தனிக்கூறாக எழுச்சிகரமானதாக வடிவமைத்ததில் பொப் இசைக்கு இன்னொரு பாத்திரம் இருக்கிறது.
தமிழ் சிங்களம் ஆங்கிலம் (மலையாளம், தெலுங்கு) ஆகிய மொழிகளில் பாடுகிற வல்லமை படைத்த கலைஞன் ஏ.இ.மனோகரன் என்பதும் முக்கியமானது. தமிழ் சிங்கள முரண்களுக்கிடையில் அல்லாடிய மனிதர்களை இசையால் பிணைத்ததில் பொப் பாடலிசைக்கு தாக்கமான சமூகப் பாத்திரமும் இருந்தது.
அதன் தொடர்ச்சியின்மைக்கு போரும் ஒரு காரணம். இல்லையேல் அது இன்னொரு பரிமாணத்தை எட்டியிருக்கும். அந்தப் பாடலின் எளிய தன்மைகள் (சொல்லாடல்கள், உரைப்புமுறை) விளிம்புநிலை மக்கள்வரை சென்றடைந்ததானது அதன் இன்னொரு சிறப்புத் தன்மை. இதனூடு சில உருப்படியான செய்திகள் கேள்விகள் விமர்சனங்கள் சமூகம் மீது மென்மையாக வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் அதையும் மேவி கேளிக்கைகள் பாடல்களை ஆக்கிரமித்திருந்தது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். (அந்தப் பாடல்கள் இலகுத் தன்மையையும் துள்ளலையும் வேண்டி நின்றதை கணக்கில் எடுத்தால்) இக் கேளிக்கைத்தன்மையை குறைபாடாகக் கொள்ள முடியவில்லை.
இயல்பிலேயே எமக்குள் வாழுகிற துள்ளல் மனமானது (குறிப்பாக இளைய சமூகம்) கலாச்சார ரீதியில் ஒழுக்கம் என்ற பெயருக்குக் கீழ் செதுக்கப்பட்டு சீரியஸ்தன்மை கொண்டதாக ஆக்கப்பட்டுவிடுகிறது. இது உளவியல் சார்ந்த ஒரு அமுக்கமாகவும் போய்விடுகிறது. இதை குணப்படுத்துகிற மருந்தாக பொப் இசை இருந்தது.
சிங்கள மக்கள் மத்தியில் இருக்கிற இலகுத்தன்மை தமிழர்களிடம் -அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்து தமிழர்களிடம்- இருப்பதில்லை. அவர்களில் பாதங்களில் ஆணிகள் முளைத்துவிடும். உடலை இறகுபோல் உணர அவர்களுக்கு முடிவதில்லை.புகலிடத்திலும்கூட மூத்த தலைமுறைகளின் நிலை பெரும்பாலும் அதுதான்.
சும்மா நடந்துபோகும்போதுகூட இயல்பாக நடனக் கீற்றுகளை தன் உடல்மொழியாக பெற்றிருக்கிற ஆபிரிக்க சகோதரை சகோதரியை காணுகிறபோதெல்லாம் பொப் இசை எனது நரம்புகளில் ஊர்வதை உணர்கிறேன். அதுவே இந்தக் கலைஞனுக்கான எனது அஞ்சலியும் !
22012018
