குயிலின் கானத்தை கேட்க முடியாது !

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், புதியபாதை ஆசிரியருமான தோழர் சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) புலிகளின் தலைவர் பிரபாகரனால் கொலைசெய்யப்பட்ட தினம் இன்று. தனது 36 வது வயதில், அவன் சித்ரா பதிப்பகத்தின் வாசலில் வைத்து மௌனமாக்கப்பட்டான். புதியபாதை பத்திரிகை அலுவலாக அச்சகத்தின் முன்புறம் அமர்ந்திருந்து வேலைசெய்துகொண்டிருந்த சுந்தரத்தை புலிகள் மறைந்திருந்து சுட்டுக் கொன்றனர்.

ஒரு இடதுசாரிய சிந்தனையாளனாக,சோசலிசவாதியாக அவன் உருவாகிக்கொண்டிருந்தான் என சொல்லப்படுகிறது. புளொட் இல் இருந்த எல்லா தோழர்களுக்கும் அவன் புலிகளின் அராஜகத்திற்குப் பலியான ஒரு குறியீடாக ஒரு உயர்ந்த பிம்பத்துடன் உள்ளுறைந்து இருந்தான். அவர்கள் அவனை ஆத்மார்த்தமாகக் கொண்டாடியபடியே இருந்தார்கள்.
உமா மகேஸ்வரனை பாண்டி பஜாரில் கொல்ல எத்தனித்தவர் பிரபாகரன். (இதன்போது ராகவனும் உடனியங்கினார்). இந்த செயல் குறித்து எவரும் உடன்பட முடியாது. இதனூடான ஒரு பிம்பத்தை பெரிதாக்கி கட்டியமைப்பதற்கு சுந்தரத்தின் கொலையினூடாக பிரபாகரனை காட்சிப்படுத்தும் தேவையும் உமா மகேஸ்வரனுக்கு இருந்தது. இவையெல்லாம் சேர்த்து புளொட் தோழர்களுக்கு புலிகள் மீதான நியாயமான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது வியப்பில்லை. அது முகாம்களுக்குள் புலியெதிர்ப்பு வாதமாக பரவியிருந்தது.
சுந்தரம் ஒரு இடதுசாரிய சிந்தனையாளனாக வளர்ந்து ஒரு ஆளுமையாக உருவாகியிருந்தால் என்ன நடந்திருக்கும். அவனை புளொட் கொலை செய்திருக்கும் சாத்தியமே இருக்கிறது என்பதை சந்ததியார் கொலை செய்யப்பட்டதிலிருந்து கணிக்க முடிகிறது.
1985 பெப்ரவரியில் நடந்த ஒரத்தநாடு மத்தியகுழுக் கூட்டம் – சந்ததியார் வழியில்- அரசியலை உயர்த்திப்பிடித்தவர்கள் கத்திவிளிம்பில் நடந்து பார்த்த கூட்டம். அது தோல்வியில் முடிந்துபோக இரவோடு இரவாக உளவுப்படைக்குத் தப்பி தலைமறைவானார்கள். அவர்களே பின்னர் தீப்பொறி குழு என இயங்கியவர்கள்.
இது நடந்தபின் முகாம்களுக்குள் சாரம் கட்டிறவன், தாடி வளர்ப்பவன் எல்லாம் சந்ததியின் ஆட்கள் என ஒரு எளிய சூத்திரத்தோடு அலைந்தவர்கள் உளவுப்படையினர். அதன் தளபதி சங்கிலி. சுந்தரம் படைப்பிரிவு என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களில் இவரும் ஒருவர். சுந்தரம் படைப்பிரிவினர் தளத்திலும் பின்தளத்திலும் அமைப்புக்குள் அமைப்பாக அதிகாரத்தை கையில் எடுத்துத் திரிந்தவர்கள். கொலைகளில் சம்பந்தப்பட்டவர்களென பலமான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். இப் படைப்பிரிவுதான் புளொட் இன் உள்ளக கட்டுமானத்துள் சிதைவை ஏற்படுத்தியதாக ஒரு தாக்கமான விமர்சனம் இருக்கிறது.
1984 ஏப்ரலில் B முகாமின் பொறுப்பாளர் மதன் (முகாமைவிட்டு தப்பியோடி பின் பிடிபட்டவர் மதன்) முகாம் தோழர்கள் கண்களின் முன்னால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். உடல் உதறுகிற அந்தக் காட்சியை நிகழ்த்திக் காட்டியவர்கள் சுந்தரம் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். டெல்லியில் றெயினிங் எடுக்கும்போது “சுந்தரம் நினைவுநாளை கொண்டாடுவதற்கு ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” என மதன் கேட்டிருந்த கேள்வியை சொல்லிச் சொல்லி அடித்தார்கள். பின்னர் ஓரிரு நாட்களின்பின் மதன் கொலைசெய்யப்பட்டான்.
இப்படியான வாரிசுகள் அல்லது ‘தோழர்கள்’ சுந்தரத்துக்கு உருவாகியதன் பின்புலம் சுந்தரத்தின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்கவும் செய்கிறது.
எப்படியோ சுந்தரம் ஒரு நிராகரிக்கப்பட முடியாத அரசியல் ஆளுமையாக தன்னை புதியபாதை பத்திரிகையினூடு வளர்த்துக்கொண்டார் வெளிப்படுத்திக் கொண்டார். அதேபோல இராணுவத் தளபதியாகவும் அவர் விளிக்கப்பட்டார் அல்லது கட்டமைக்கப்பட்டார்.
இது இரண்டு சாத்தியங்களை புளொட் அமைப்பினுள் உருவாக்கியிருக்க வாய்ப்பு உண்டு. ஒன்று அவரும் உமா மகேஸ்வரன் போன்றே அமைப்பை மூழ்கடித்த சகதிக்குள் இறங்கியிருக்கலாம். அல்லது இந்த சகதிக்கு எதிராக நின்று அரசியல் இராணுவ தளங்களில் போராடியிருக்கலாம். இந்த இரண்டாவது சாத்தியம் சந்ததியார் போன்றே சுந்தரத்தையும் காவுகொண்டிருக்கும்.
புலிகளை எதிரியாக உமாவின் உயிருக்கு அச்சுறுத்தலாகக் காட்டிய 80 களின் முன்நடுப் பகுதியில் உமாவும் சந்ததியாரும் முகாமுக்கு மிகச் சாதாரணமான தோற்றத்துடன் (ஒரு சிவப்பு ரீசேர்ட் வேட்டியுடன் உமாவும் சேர்ட் வேட்டியுடன் சந்ததியாரும்) வந்துபோனவர்கள். ஆனால் 85 இன் ஆரம்பத்தில் இராணுவ உடையுடன் மோட்டார் சைக்கிளியல் உமா வர, முன்னுக்கும் பின்னுக்கும் இராணுவ உடை போர்த்த ஜீப்புகளும் மோட்டார் சைக்கிளும் ஆயுதங்களுடன் பவனியாக வந்தன.
அந்தக் காலப் பகுதியில் சந்ததியார் ‘ஒதுங்கியிருந்தார்’ அல்லது அந்த நிலைக்கு தவிர்க்கமுடியாதபடி தள்ளப்பட்டார். பின்னரான காலத்தில் அவர் புளொட்டின் உளவுப்படையால் கொலைசெய்யப்பட்டார்.
இந்த வரலாற்றுப் போக்கையெல்லாம் நியாயப்படுத்தியபடி அல்லது மறைத்துக்கொண்டு புளொட் அமைப்பாக எஞ்சிவந்தவர்கள் தற்போதைய புளொட் அமைப்பினரின் முத்த தலைமுறை.
இதைவைத்து நாம் பார்க்கிறபோது தற்போது புளொட் அமைப்பினர் சுந்தரத்தைக் கொண்டாடுவதில் அர்த்தமேதுமில்லை. சுடலையோரத்து ஆலமரம்போல பட்டையடித்து பெயருக்கு நிற்கும் அவர்களின் கிளைகள் சுடலைவால் குருவி குரலற கத்திஓய்ந்த இடம். அங்கு குயிலின் கானத்தை கேட்க முடியாது.
02012018
FB link :

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: