அவசர அவசரமாக அந்த முதியவர் வந்து ஏறினார். அருகில் அமர்ந்துகொண்டார். இலக்கியச் சண்டையொன்றை பார்த்ததாக அவர் சொல்லத் தொடங்கியபோது “நானும் கண்டனான்” என சொல்ல வாய் வந்தது. சொல்லவில்லை. சோலி இல்லாமல் பேசாமலே இருந்துவிடுவம் எண்டு இருந்தேன்.
இந்த முதியவருக்குப் பக்கத்திலை போன தடவை ஒரு இளைஞன் அகப்பட்டுப் போயிருந்தான். அவன் வேலைவெட்டியில்லாமல் சோசல் காசிலை இருந்ததை தெரியாமல் சொல்லிவிட்டான்.
“அப்ப அரசாங்கப் பணத்திலை இருக்கிறியள். தம்பி வேலையில்லாமல் இருக்கக்கூடாது . இந்த நாட்டுக்கு வந்திட்டம். அதுக்காக உழைக்காமல் அரசாங்கத்திட்டையிருந்து காசெடுக்கிற அலுவல் அவளவு நல்லாயில்லை² என்றார்.
“நான் அரசாங்கப் பணத்திலை இருக்கயில்லை. “அது சனத்தின்ரை காசு” என்று இளைஞர் ஒரு மறுத்தான் விட்டுப் பார்த்தார். அதையும் விட எங்கடை நாடுகளை சுரண்டி, சண்டையளை மூட்டிவிட்டு, ஆயுதங்களை வித்து, எங்கடை அரசியல்வாதிகளின்ரை கள்ளக்காசையெல்லாம் பாங்கிலை பதுக்கி வைத்திருந்து பணக்காரராகின நாடு. எங்களட்டை களவெடுத்த காசிலை எங்களுக்கு தந்தால் என்னவாம்” என்று இளைஞன் கவணை பெரிசாக விட்டெறிந்தான்.
“அதுசரிதான் ராசா. அதைப் பற்றி நான் கதைக்கயில்லை. உழைப்புத்தான் மனித ஆதாரம். மனித சாரம். அதில்லாமல் இப்ப கையிலை வைச்சு நோண்டிக்கொண்டிருக்கிறாயே இந்த கைபேசி. அதுவும் வந்திராது” என்று முதியவர் விளாசத் தொடங்னினார். நான் தப்பினேன் பிழைச்சேன் என்று அன்று இருந்துவிட்டேன். ஆனால் இன்று. எனது ‘ரேர்ண்’.
“அரவிந்தன் நீலகண்டனோடை அகரமுதல்வன் ஏதோ தொடர்பாம் எண்டு அகரன்ரை சட்டையையைப் பிடிச்சு கேள்வி கேட்கிறாங்கள். ஞாயம் கேட்கிறாங்கள். ஒரே இழுபறியா இருந்தது” என்றார் முதியவர். “நானும் கண்டனான்” எண்டு சொல்லாமல் இருப்பம் என முயற்சித்தேன். அவர் விடுறதாயில்லை.
“அதெப்படி அரவிந்தன் ஒரு பச்சை இந்துத்துவ வாதி. அவனோடை என்ன நிக்கிறது” எண்டேன். “ராசா அதை தவறு என்று சொல்லிறாயா?”
“ஓம். வேறையென்ன”
“ஆக சரி அல்லது பிழை எண்டு இரண்டு விடைதான் உன்னட்டை இருக்கா” என்றவர், தான் அதை ‘ஒவ்வாமை’ என்ற சொல்லாலைதான் குறிக்கிறன் என்றார். அதாவது “எனக்கு உடன்பாடின்மை இருக்கு” என்றார்.
“பார்ப்பனியத்துக்கு எதிராக குரல்குடுக்கிறவங்களிலை சிலர் பார்ப்பனிய ஊடகங்கள் குடுத்த விருதுகளை பெற்று களிக்கயில்லையா? அதிலையும் சிலர் நுண்களங்களிலை நிலவுற அதிகாரங்களை கட்டுடைச்சு அக்குவேறு ஆணிவேறா காட்டுற புதிய சிந்தனையளையும் அறிவையும் எங்களுக்கு சொல்லித் தந்துமிருக்கினம்.
எதிர்ப்புக் கலகமாக யூனியர் விகடனை கிழிச்சு மலம் துடைச்சவங்கள் அதை குதூகலமாக ஆதரிச்சவங்கள் எல்லாம் பார்ப்பனிய ஊடகங்களுக்கு பேட்டிகள் கதை கட்டுரை எண்டு எழுதுவதில்லையா? பார்ப்பனிய பதிப்பகங்களிலை தங்கடை புத்தகங்களை போடயில்லையா? “என நீட்டி முழங்கத் தொடங்கினார்.
குறுக்கிட்ட நான் “எல்லாரையும் அப்பிடியா பார்க்கிறியள்” என கேட்டேன். அப்பிடி நான் சொல்லயில்லை. இண்டைக்கு அகரன்ரை சட்டையை பிடிச்சு கேள்வி கேட்டவங்களைத்தான் சொல்லிறன்.”
“அப்ப கேட்டது பிழையா?”
“அதுவும் இல்லை. கேட்கலாம். அவையளின்ரை அளவுகோலைத்தான் கேள்வி கேட்கிறன்.
அதிலையும் ஒருசிலரை கண்டன். ‘உங்களிலை யாராச்சும் தவறு செய்யாதவங்க இருந்தால் அவர் முதல் வந்து கல்லை எடுத்து எறியுங்க’ என கிறிஸ்தவத்தை குழைச்சு சுவர் எழுப்பி தாம் சார்ந்த தரப்புக்கு பாதுகாப்பெடுத்துக் குடுக்கிறவை.
கூடிநிண்ட கூட்டத்திலை சிலரை கண்டன். தங்கடை எழுத்துகள் புத்தகங்களுக்கு பார்ப்பனிய எழுத்தாளர்களின்ரை புகழாரம், அங்கீகாரம் எண்டு கிடைச்சபோது காட்டி காட்டி மகிழ்ந்தவை.
“இப்ப என்ன சொல்லவாறியள் என கேட்டேன். “தம்பி பார்ப்பனியம் ஒரு கிருமி. அந்த சிந்தனைமுறையே ஒரு கேடு. அதுக்கு எதிராக நிக்கவேணும். அதுக்கு பிரக்ஞையோடை அதை எதிர்த்து நிண்டாத்தான் வலுவிருக்கும். அதை உடைச்சு உள்நுழையுற வலு பார்ப்பனியத்துக்கு இல்லாதபடி அரணாக நிக்கோணும். அப்பிடி எத்தனையோ களப் போராளியள் நிக்கிறாங்கள். அவங்களுக்கெல்லாம் பிம்பம் கட்டிற அலுவல் இல்லை. அவங்களை மதிக்கிறன்.”
“நீங்கள் என்னவும் சொல்லியிட்டுப் போங்க. இனி அகரமுதல்வன்ரை புத்தகத்தை வாசிக்கிறயில்லை எண்டு முடிவெடுத்திட்டன்.”
“சரி உன்ரை பாசையிலை அகரன் ‘தவறு’தான் விட்டிட்டான். அதுக்கும் வாசிப்புக்கும் என்ன பிரச்சினை?”
“நீங்கள் வாசிக்கிற உலக எழுத்தாளர்கள் எல்லாம் தனிப்பட்ட வாழ்விலை அல்லது இப்பிடியான அரசியல் சமூக நிலைப்பாடுகளிலை எப்பிடி இருந்தாங்கள் எண்டு தெரிஞ்சுதான் வகிர்ந்தெடுத்து வாசிக்கிறீரோ” என முதியவர் நக்கல் விட்டார்.
“ராசா பிரச்சினை தான். சொல்லிறதுக்கும் எழுதுறதுக்கும் ஒருத்தர் நேர்மையாக இருக்க வேணும். குறைந்தபட்சம் அதுக்காக போராடியபடி இருக்கோணும். அங்கைதான் நான் சொன்ன பிரக்ஞை உயிர்வாழும். அது வாழ்ந்தால் இப்பிடி பல பிரச்சினையள் வராது. பார்ப்பனியம் போன்ற எல்லா மேலாதிக்கங்களுக்கும் எதிரான ‘செயல்’ என்ற ஒன்று தனியாகவும் கூட்டாகவும் இயங்குதளத்தில் இருக்கும்.
பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக கதைக்கிற ஒருத்தன், பெண்ணை பாலியல் பண்டமாக பார்ப்பதை எதிர்க்கிற ஒரு இலக்கியவாதி, பெண்ணியலாளன் ஆராவது ‘உரிஞ்சுபோட்டு நடனமாடிற ஒரு பெண்ணை’ பார்த்து ரசிச்சால் அங்கையென்ன செயல் வாழப்போகுது. என்ன நேர்மை இருக்குது? எங்கை பிரக்ஞை இருக்குது?
முதியவர் இறங்கிப் போகும்போது, “அதுக்காக அவங்கடை எழுத்துகளை வாசிக்கக்கூடாது எண்டெல்லாம் சொல்லவும் நான் வரயில்லை. அவங்களை வாசிக்கிறது வேறை, அவங்கடை எழுத்தை வாசிக்கிறது வேறை. புத்தகங்களோடை கோவிக்காதை ராசா.” என்று விலகினார் முதியவர்.
அகரனுக்கு போச்சிப் போத்திலை குடுத்து படம் கீறிக் காட்டி “சிறுவன்… மன்னிச்சிடுவம்.. சொன்னால் கேட்காமலா விட்டிடுவான்.. நாங்கள் முந்தி இதைவிட மோசமாக அப்பாவியாக இருந்தனாங்கள்தானே..” எண்டெல்லாம் சொல்லிறாங்களே. அதுக்கென்ன சொல்லிறியள் எண்டு கேட்க மறந்துபோனேன்!
12122017