வாழைப்பழ ‘சோசலிசம்’

1984-85 . தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் இயக்கத்தின் அலுவலகம் இருந்தது. சில பல மைல்கள் தொலைவில் ஒரு பஞ்சாயத்து தலைவரின் காணிக்குள் அந்த அமைப்பின் தொலைத் தொடர்பு பயிற்சி முகாம் இருந்தது. அது ‘சலுகைகள்’ கூடிய முகாமாக இருந்தது. ஏனைய முகாம்கள் சவுக்கம் காடுகளுக்குள்ளும் பொட்டல் காடுகளுக்குள்ளும் வெந்து வேக, இந்த முகாமோ ஊருக்குள் தென்னந்தோப்புக்குள் குளிர்மையாய் சீவித்தது. அருகால் ஆறு ஓடிக்கொண்டிருக்கும். சமார் 40 பேரைக்கொண்ட இந்த முகாம் எல்லோரையும் ஒரே குடும்பமாக இணைத்து வைத்திருந்தது.. மிக வெளிப்படைத்தன்மையாக அந்த வாழ்வு இயங்கியது. வாழ்வின் மகத்தான தருணங்கள் அவை.

சிங்கப்பூர் சமையலில் ஈடுபடும்போது அவன் அண்டாவுக்குள் உப்பெறியும் விதத்தைப் பார்த்து பஞ்சாயத்துத் தலைவரின் இரண்டாவது மகன் விழுந்து விழுந்து சிரிப்பார். சுமார் இரண்டு மீற்றர் தொலைவிலிருந்து அண்டாவுக்குள் உப்பை கிள்ளி வீசுவான் சிங்கப்பூர். “அளவு பார்த்துப் போட்டால் பிழைக்குமடா. கிள்ளி வீசவேண்டும்” என்பான். தனது வேலையை தூக்கியெறிந்துவிட்டு சிங்கப்பூரிலிருந்து நேராக இயக்க பயிற்சிமுகாமுக்கு வந்துசேர்ந்தவன் சிங்கப்பூர். முகாமில் சமையலுக்கு பெயர்போனவன் அவன்தான். உருசியாக சமைப்பான். எப்போதும் சமைப்பான். சமையலுக்கென்று குழுப் பிரித்து மாறிமாறி சமைக்க வேண்டும் என முகாம் பொறுப்பாளர் முதல்நாள் வைத்த நடைமுறை விதி இயங்குவதே கிடையாது. பிரச்சினைகள் இழுபறிகள் எதுவுமே இருந்ததில்லை. அநேகமாக சிங்கப்பூரும் லியோவும் அந்த இடத்தில் நிற்பார்கள். இந்த விடயத்தில் யோகன் தானாகவே வந்து காய்கறிகள் வெட்டுவதில் தவறியதில்லை.

பெண்களுக்கான சாப்பாடையும் சேர்த்து சமைப்போம். அந்தச் சாப்பாடு குறிப்பிட்ட தோழர்களால்தான் பெண்களிடம் (அவர்களின் முகாமுக்குள்) கொண்டுபோய்க் கொடுக்க முடியும். மற்றைய தோழர்களுக்கு அனுமதி கிடையாது. எர்னஸ்ரோஇ பீலிக்ஸ் என்பவர்கள்தான் கொண்டுசெல்வார்கள்.

எல்லா இயக்கங்களையுமே அந்த மக்கள் ‘விடுதலைப் புலிங்க’ என்றே அழைப்பர். தெருவால் நாம் நடந்து போகும் தருணங்களில் ‘கடவுள் பெத்த புள்ளைங்க போறாங்க’ என முதிசுகள் சொல்வது காதில் விழும். ஒவ்வொரு நாள் காலையிலும் எர்னஸ்ரோ அருகிலுள்ள பால்கடைக்குப் போய் பால் வாங்கிக்கொண்டு வருவான். ‘விடுதலைப் புலிங்க’ ளுக்கான பால் என்பதால் கடைக்காரர் ஒழுங்காகப் பாலை தனியாக ஒதுக்கி வைத்துவிடுவார். தண்ணி கலப்பது கிடையாது. சுத்தமான பால்.

நித்திரையால் எழும்பினால் பல்துலக்கி முகம் கழுவாவிட்டால் எமக்கெல்லாம் ஒருமாதிரியாக இருக்கும். இந்தப் பிரச்சினை எர்னஸ்ரோவுக்கு இருப்பதில்லை. நாம்தான் ஞாபகமூட்ட வேண்டியிருக்கும். சாத்துவாயுடன் அவன் பால்வாங்கப் போன நாட்கள் ஏராளம். ஒருநாள் பால்கடையில் தாயின் தோளிலிருந்த குழந்தை பாலுக்கு அழுகிறது. “கொஞ்சப் பாலாவது கொடு” என கடைக்காரனிடம் மண்டாடுகிறாள் அந்தத் தாய். கையில் நிறைந்த பால்வாளியுடன் எர்னஸ்ரோ நின்றான். தாயின் கெஞ்சலை கடைக்காரர் புறந்தள்ளிக் கொண்டிருந்தார். எர்னஸ்ரோவுக்கு பொறுக்க முடியவில்லை. வாளியிலிருந்து அந்தத் தாயின் பால் போத்தலுக்குள் பாலைகோலிக் கொடுத்துவிட்டு வந்தான். ‘விடுதலைப் புலிங்க’ என்றால் மனிதநேயம் மிக்கவங்க என்ற அவர்களது நினைப்புக்கும்கூட அவன் பால்வார்த்துவிட்டு வந்தான்.

வாட்டசாட்டமான உயரம். தாடி வைத்திருப்பான். நிறத்தில் மட்டுமல்ல தோற்றத்திலும் ஒரு லெபனான்காரன் போல இருப்பான் அவன். சேகுவேராவில் இருந்த ஈர்ப்பில் ‘எர்னஸ்ரோ’ என பெயரிட்டிருந்தான். முகாமுக்கு நாம் வந்திருந்த ஒருசில நாட்கள். பரஸ்பரம் நன்கு அறிமுகப்படாமல் இருந்தோம். சாப்பாட்டுச் சாமான்களுடன் ஒரு குலை வாழைப்பழம் வந்திருந்தது. பொறுப்பாளர் அன்ரனி ஒவ்வொருவருக்கும் இரண்டு வாழைப்பழம் வீதம் பிரித்துக் கொடுக்கத் தொடங்கினார்.

எர்னஸ்ரோ இதைக் கண்டுவிட்டான். “நாங்களெல்லாம் விடுதலை… சோசலிசம்… சொத்துகளை சமனாப் பகிரவேணும் எண்டெல்லாம் சொல்லுறம். நாங்களாகவே ஒவ்வொருத்தரும் இரண்டு வாழைப்பழத்தைப் பிரித்து எடுக்க முடியல்லையெண்டால் என்ன மசிருக்கு சோசலிசத்தைப் பற்றிக் கதைக்க இருக்கு” என்று வார்த்தைகளை விசிறினான். பாண்டி கெக்கட்டம் விட்டுச் சிரித்தான். பலரும் மென்மையாகச் சிரித்தார்கள். அன்ரனி விலகிவந்துவிட்டான். கியூவின் மறைப்பில் வாழைக்குலை இருந்தது. எர்னஸ்ரோ கடைசியில் நின்றான். இடையில் நின்ற எனக்கே வாழைக்குலையின் தண்டை மட்டுமே பார்க்க முடிந்தது. பாண்டி மடியில் ஏழெட்டு வாழைப் பழங்களுடன் இருந்து எர்னஸ்ரோவுக்குக் காட்டி காட்டிச் சாப்பிட்டான். இருவரும் ஏற்கனவே ஒரே இராணுவ முகாமில் பயிற்சி எடுத்ததால் நன்கு அறிமுகமாகியவர்கள். “நாயே உன்னையெல்லாம் வைச்சுக்கொண்டு சோசலிசப் புரட்சி நடத்தப்போறம் பார்” என்றான் எர்னஸ்ரோ.

எல்லாமே கவிழ்ந்து கொட்டுப்பட்டு வாழ்க்கை சிதறி நாலாபுறமும் எமை அகதிகளாய் உதிர்த்து வீசிவிட்டது. இருந்தாலும் 30 வருடங்களின் பின்னும் நாம் சந்திக்கிற சந்தர்ப்பங்களில்கூட அந்த நெருக்கமும் நினைவுகளும் ஒரு சுகமாக மிதந்து வருகிறது.

 

– 02.04.17
*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: