சுடுமணல்

யோசப்பு

Posted on: November 5, 2017

சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு யோசப்பை ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பார்த்தேன். அடையாளம் காண்பதில் சிரமமிருக்கவில்லை. அதே பகிடி.. அதே கடி.. அதே உரசல்.. சுற்றியிருந்தவர்களுடன் பம்பலாக இருந்தார். அவரை ஆச்சரியத்திலும் இளிப்பிலும் ஆழ்த்தியபடி என்னை அடையாளப்படுத்திவிட்டு அங்கே அமர்ந்தேன்.

யார் இந்த யோசப்பு. நான் சுவிசுக்கு வந்தபோது அகதிகள் முகாமில் எம்முடன் இருந்தவர். பொழுதுகளை அவர் நகைச்சுவையால் சுழற்றி வீசிவிட்டுக்கொண்டிருப்பார். ஒருமுறை புளொட்காரர் வந்து முகாமுக்குள் பிரச்சாரக் கூட்டம் நடத்தினார்கள். அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்தில்தான் என்றார்கள். “தைப்பொங்கல் வருசத்திலை ஒருக்கா வருமா அய்ம்பது நூறு வருசத்துக்கு ஒருக்கால் வருமா” என கேட்டவர் யோசப்பர்.

அவர் வேலைவெட்டியென்று வாழத்தொடங்கியபோது கார் ஓட பழகினார். வாகன அனுமதிப்பத்திரத்துக்கு முயற்சியெடுத்தார். ஒருமுறை… இருமுறை… கடைசியாக மூன்று முறை என முயற்சித்து தோல்வி கண்டபின், அவருக்கு கடிதமொன்று வந்தது. உளவியல் ரீதியிலான பரீட்சை ஒன்றிற்கு தோற்றமளிக்க அழைப்பு வந்தது. அதில் அவர் பாஸ் பண்ணினாலே நாலாவது முறை லைசென்சுக்கு முயற்சி எடுக்க முடியும். “அப்ப எனக்கென்ன லூசோ” என்றுவிட்டு கடிதத்தை கிழித்தெறிந்துவிட்டார்.

அவருக்கு சைக்கிள் மீண்டும் துணையானது. கடுமையான பனிப்பொழிவு ஏற்படும்போதும் மழை அடித்து ஊத்தும்போதும் மட்டும் சைக்கிள் அவருடன் போவதில்லை. மற்றபடி அதுதான் அவரது துணை. இப்படியாய் நீண்ட காலமதில் ஒருநாள் இரவு பியர் பிரியனான யோசப்பு சைக்கிளை படாதபாடு படுத்தியபடி வீட்டைநோக்கி நடைபாதையில் ஓட்டினார் .. ஓம்.. ஓட்டினார் குத்துமதிப்பாக! பொலிஸின் கண்ணில் எத்துப்பட்டார். அவருக்கு அபராதம் எழுதிய பொலிஸ் சைக்கிளை உருட்டிச் செல்லும்படி பணித்து .. “Gehts?” (இயலுமா) என வேறு அன்பாக கேட்டு வழியனுப்பினான். இப்போ யோசப்பர் இரண்டு கால்களிலும் இரண்டு சில்லுகளிலும் நடந்தும் உருண்டும் போனார். மறுநாள் அவர் அந்த சைக்கிளை எப்படி வீட்டுக்கு கொண்டுவந்தேன் என்று அதிசயமாக பார்த்தார். யோசித்தார். பிடிபடவேயில்லை. மழைக்கு போட்டுச் செல்கிற சைக்கள் றெயின்கோட் காணாமல் போனதை மட்டும் கண்டுபிடித்தார்.

அண்மையில் பட்டப்பகலில் இவர் ஒழுங்காக நடைபாதையில் வேலைக்களையுடன் நடந்து வந்திருக்கிறார். அவசரம் அவரை துரத்த வீதியைக் கடக்கிற மஞ்சள் கோடுவரை போய் மறுபக்கம் திரும்பி தனது வீட்டுக்கு வருவதிலுள்ள நேரவிரயத்தை கணக்கிட்டபடி வாகனம் ஏதும் வராதததை உறுதிப்படுத்திக்கொண்டு வீதியைக் குறுக்கறுத்தார். பாடசாலை விடுமுறை விட்டு மீண்டும் தொடங்கியிருந்தது. பாடசாலைப் பிள்ளைகள் மதியம் கும்பலாக வீதிக்கு இறங்குவதால் பொலிஸார் மஞ்சள் கோட்டுக்கு அருகில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியபடி அவதானமாக இருந்தனர். யோசப்பர் கடந்த குறுக்குவழிக்கும் மஞ்சள் கோட்டுக்கும் ஒரு முப்பது மீற்றர் இருக்கும். பொலிஸ் யோசப்பரின் வீரநடையைக் கண்டுவிட்டது. கூப்பிட்டார்கள். அபராதம் எழுதினார்கள். யோசப்பர் வழிஞ்சு சிரிச்சபடி நின்றார்.

இப்போது கெக்கட்டம் விட்டுச் சிரித்தார்கள் கூட இருந்த நண்பர்கள்.
“எனக்கு கார் ஓடத் தெரியாதெண்டான்
பிறகு சைக்கிள் ஓடத் தெரியாதெண்டான்
இப்ப எனக்கு நடக்கக்கூட தெரியாது எண்டிட்டான்ரா.” என்று யோசப்பர் சொல்லிக்கொண்டிருந்தார்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Follow சுடுமணல் on WordPress.com

Blog Stats

  • 13,649 hits
%d bloggers like this: