சும்மா காலமும் பட்டையடியும்

obama daughter-shasha

ஓபாமாவின் மகள் Sasha (16) படிப்பில் ஈடுபடும் அதேநேரத்தில் கடலுணவு விடுதியொன்றில் பகுதிநேர வேலைசெய்வதை படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பல்லாயிரக் கணக்கானோர் (இலங்கையர், இந்தியர்) பகிர்ந்துள்ளனர். நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த விடயத்தை இது நினைவுபடுத்தியுள்ளது.

பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவ மாணவிகள் விடுமுறைகால வேலை தேடி உணவகங்கள், தொழிற்சாலைகள் என ஒரு வாரமோ இரு வாரமோ அல்லது ஒரு மாதமோகூட வேலைக்கு போய் உழைப்பார்கள். அந்தப் பணத்தை சேர்த்துவைத்து தமக்கான பொருட்களை வாங்கவோ, கார் பழகுவதற்கோ, சுற்றுலாவுக்கோ பயன்படுத்துவார்கள். பல்கலைக் கழக மாணவ மாணவிகள் பாடசாலை காலங்களில்கூட வாரத்துக்கு ஒரு நாளோ இரு நாட்களோ வேலைக்குப் போய் தம்மாலியன்றவரை சொந்தக் காலில் நிற்க முயற்சிப்பார்கள். (இத்தனைக்கும் பல்கலைக்கழகம் புகு முன்னரான உயர்தர வகுப்பில் 10 க்கு மேற்பட்ட பாடங்கள் வேறு)

ஆனால் இலங்கையிலோ படிச்ச பிள்ளை குப்பை பொறுக்கவோ? கடையிலை வேலைசெய்யவோ? தோட்டத்தில் புல்லுப் பிடுங்கவோ? என கௌரவப் பிரச்சினையில் மாய்கிறோம். குடும்பம் கஸ்ரத்தில் ஓடினாலும் இந்த தன்மானம் வாய்க்கால் நிரம்பி ஓடும். பாடசாலை லீவுக்கு மட்டுமல்ல உயர்தரப் பரீட்சை எடுத்துவிட்டு முடிவுகள் வருகிற நீண்ட காலப் பகுதியில்கூட உலாத்துவதைத் தவிர எதைச் செய்கிறோம்.

உழைப்பு என்பது மனிதஜீவியை அர்த்தமாக்குகிற ஒரு நடவடிக்கை. ஆனால் படிப்பில் ஈடுபடுவோரை எல்லாவற்றுக்குமே தம்மில் தங்கிநிற்க பெற்றோர்கள் கடமையுணர்ச்சி பொங்கிக் காட்டுவார்கள். படிப்பவர்களோ சமூகம் தரும் மதிப்பை ருசித்தபடி ஊர்சுற்றுவார்கள்.

பிஞ்சுவயதிலே கடைகளிலே முதலாளியின் அட்டகாசத்துள் அல்லாடியோ, தேயிலைச் செடியுள் குழந்தைமையை கிள்ளி எறிந்தபடியோ உழைப்பில் ஈடுபடுகிறது, வறுமைக் கோட்டிற்குள் அமிழ்ந்துபோன அல்லது அநாதரவாக விடப்பட்ட சிறிசுகள். உழைத்தால்தான் வயிற்றை நிரப்ப முடியும் என்ற நிலையிலுள்ள சிறிசுகள் அவர்கள்.

படிப்பில் ஈடுபடும் நடுத்தர அல்லது மேல்தட்டு பிள்ளைகள் உழைப்பின் பெறுமதியறியாமல் வளர்கிறது. உழைப்பின் மூலம் சொந்தக் காலில் நிற்கிற ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்குப் பதில் (தமது கல்வியை முன்னிறுத்தி) சமூகத்திடமிருந்து அங்கீகாரத்தை பெற்றபடி ஒருவித அதிகாரத் துளிர்களுக்கு நீரூற்றுகிறது. அதன்மூலம் தொழில் அடிப்படையில் சாதியையும் சமூக அந்தஸ்தையும் அழியவிடாமல் தம்மையறியாமலே பாதுகாக்கிறது.

“வெள்ளைக்காரனின் கக்கூசை கழுவிவிட்டு ஊரில் வந்து கவிஞராக உலாவருகிறார்” என யாரோ ஒருவர் குறித்து இளம் இலக்கியவாதி (யதார்த்தன்) யாழ்ப்பாணத்திலிருந்து அண்மையில் எழுதியிருந்தார். அதேபோல் புகலிடத்தில் (மாற்றுக் கருத்து பேசியவர்கள் உட்பட) சில எழுத்தாளர்கள் தாம் கோப்பை கழுவி, தெருக் கூட்டி உழைத்த பணத்தில் புத்தகம் போடுவதாக சொல்லினர். புலிகளுக்கு காசு இறைத்து ஏமாந்தவர்கள் தாம் கோப்பை கழுவி உழைச்ச காசு என வியர்த்துக் காட்டினர்.

தொழிலின் கடினம் சம்பந்தப்பட்டு அல்லது சம்பளத்தின் போதாமை சம்பந்தப்பட்டு பேசப்படுவதை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். ஆனால் இழிவான தொழிலாக அர்த்தப்படுத்துகிற மனநிலை என்பது சாதியத்தின் வேர்களிலிருந்து வளர்கிற முளைப்புகள்.

குடும்ப உணவு விடுதிகள் அல்லது விடுமுறை நிலையங்களில் வேலையாள் லீவு அல்லது சுகவீனம் என்றாகும் நாட்களில் முதலாளியோ முதலாளியின் மனைவியோ இந்த வேலைகளை செய்கின்றனர். நான் முதன்முதலில் வேலைசெய்த விடுதியில் நான் இல்லாத நாட்களில் முதலாளி குசினியில் ‘பட்டையடியை’ (கோப்பை கழுவுதல்) செய்வார். அவரது மனைவி கக்கூசை துப்பரவு செய்வார். பாடசாலை விடுமுறை காலங்களில் அவர்களின் மகள் வந்துநின்று இந்த வேலைகளைச் செய்வாள்.

பின்னர் நான் தொழிற்சாலைக்கு வேலை மாறியபோது தொழிற்சாலை முதலாளியின் பிள்ளைகள் பாடசாலை லீவு நாட்களில் யன்னல்களை துப்பரவு செய்யும் வேலைக்கு வருவர். அப்படி வேலைசெய்த மூத்த மகள்தான் இப்போ தொழிற்சாலையை அடுத்த சந்ததியாக பொறுப்பேற்கும் படிப்பில் பல்கலைக் கழகத்தில் படிக்கிறாள். இப்போதும் வாரத்துக்கு இரு நாட்கள் உணவுவிடுதியொன்றில் வேலை செய்கிறாள்.

சாதியச் சமூகத்தை அதன் கூறுகளை எதிர்ப்பதாக நம்பும் ஒருவருக்கு வெள்ளைக்காரன்ரை கக்கூசை கழுவுறதாக எழுகிற சொல்லாடலுக்குள்ளும், கோப்பை கழுவிறதாக எழுகிற சொல்லாடலுக்குள்ளும் சாதியத்தின் கசடுகள் ஆழப் படிந்திருப்பதை அறிய முடியாமல் இருப்பது முரண்நகை.

இந்த தொழில்கள் குறித்த சொல்லாடல்களை மேற்குலகத்தார் சம்பளம் குறித்த ஏற்றத்தாழ்வுடன் புரிந்துகொள்வர். நம்மவரோ தொழில் சார்ந்து ஏற்றத்தாழ்வாக புரிந்துகொள்கின்ற நிலைக்குள் சாதியமன்றி வேறென்ன மசிர் இருக்க முடியும். சிகையலங்காரத்தைக்கூட ஒரு தொழில்துறையாக தேர்வுசெய்து படிக்கவிடாத தமிழ்ச் சமூகத்தின் மனநிலை சாதிய மனநிலையின் இன்னொரு எடுத்துக்காட்டு.

உயர்தரப் பரீட்சையை ஒரு தரம் அல்ல மூன்றுதரம் எடுத்து மூன்றுமுறையும் பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்திருந்த மூன்று நீண்ட ‘சும்மா காலப்’ பகுதியிலும், வீட்டின் வாழ்வாதாரம் இடறுப்பட்டு வாழ்க்கையோடிய அந்த குடும்ப நிலைமையிலும் கூலியுழைப்பு குறித்த புரிதலை ‘கண்டறியாக் கௌரவம்’ மூடிமறைக்க அனுமதித்ததுக்காக வெட்கப்படுகிறேன். 5 நாட்கள் படிப்பும் இரண்டு நாட்கள் வேலையுமென இயல்பான வாழ்வாய் வாழ்க்கையை வரித்துக்கொண்டு திரியும் மகளைக் காணும்போதெல்லாம் எனது சும்மா காலத்தின் மீதான குற்றவுணர்ச்சி மேலிடுகிறது.

– 11.02.17

*

fb link :

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: