சுடுமணல்

மனச்சாட்சி எமை வழிநடத்தட்டும் !

Posted on: July 9, 2017

 

யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் அரக்கியிருக்கின்றன. வன்னி நிலப்பரப்புள் வாழ்வாதாரத்திலும் நிலம்சார் வாழ்க்கை முறையிலும் நம்பிக்கையூட்டக்கூடிய மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதேநேரம் அடித்தட்டு மக்களின் வாழ்நிலையானது மீட்சியை வேண்டிய துயருடனும் கதறலுடனும் உதவிக்கரமொன்றையாவது பற்றிப் பிடித்துவிடத் துடித்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நாம் கைகொடுத்தாக வேண்டும். அவ்வாறானதோர் மீட்சியுடன் தொடங்கப்படக்கூடிய அவர்களது வாழ்வை வரித்துக்கொள்ள அவர்களை அந்த மண்ணின் வளம் கைவிடவே கைவிடாது. இது அவசரப் பணியாகவே தோன்றிற்று, எமது ஒருவார பயணத்தில்.

DSC00657

2017 கடந்த மாதம் (“ஆதரவு” அமைப்பு சார்பாக) நாம் இருவர் இந்த ஆழ்வன்னி பிரதேசத்துள் ஒரு வார காலத்தை செலவிட்டு 70 க்கு மேற்பட்ட குடும்பங்களை சந்திக்கச் சென்றிருந்தோம். மோட்டார் சைக்கிளையே நாம் பயன்படுத்தினோம். ஆட்டோகூட புகமுடியாத ஆழ்வன்னியின் சில பகுதிக்குள் இதுவே பொருத்தப்பாடாக இருந்தது. காலையில் தொடங்குகிற எமது பயணம் இரவு எட்டுமணிவரை நீடித்தது. சாப்பாட்டு கடைகளை ஆழ்வன்னியுள் காண முடியாததாலும், வெக்கையும், வேலையை திட்டமிட்ட நாட்களுக்குள் முடித்துவிட வேண்டிய நிர்ப்பந்தமும், ஈடுபாடும்… இந்தப் பயண நாட்களை ஒருநேர (இரவு) உணவுடன்தான் முடிவடையச் செய்தன.

உதவிகள் துஸ்பிரயோகம் செய்யப்படாமலிருப்பதான எச்சரிக்கைத்தன்மையையும், அது யாருக்கு வழங்கப்பட வேண்டியிருக்கிறது என்ற நேரடி அறிதலையும், வன்னி குறித்தான பல தெரிதல்களையும் தருகிற பயணமாக இது அமைந்தது. அதேபோல அதன் இயற்கையானது இறுகிப்போயிருந்த இயந்திரவாழ்விலிருந்து எமை விடுவித்து இயல்பான ஓர் வாழ்தலை காட்டியதன் மூலம் ஒரு விடுமுறையாகவும் உணரவைத்தது.

எமது ஆதரவு அமைப்பின் (aatharavu) கடந்த 3 ஆண்டுகால செயற்பாடுகளில் இதுவரை 30 குடும்பங்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான முதலீட்டை செய்து கொடுத்திருந்தோம். அந்த குடும்பங்களை நாம் போய் பார்த்தபோது மிக திருப்தியளித்தது. அநேகமாக எல்லோருமே தத்தமது சுயதொழிலில் ஈடுபட்டிருப்பது எமக்கு மகிழ்ச்சியளித்தது. அவர்களுக்கிடையில் ஓரளவு பரஸ்பரம் உதவிசெய்வதான ஒரு கூட்டு மனநிலையும், மற்றும் கூலிகளை இயன்றளவு குறைத்து கொடுக்கப்பட்ட பணத்தை விரயமாக்காது தமது சொந்த உழைப்பைக்கொண்டே தமது தேவைகளை சந்திக்கிற குணமும், உழைப்பையே நம்பிவாழ்ந்த அவர்களது குணாம்சமும், (புலியுடனான அரசியல் உடன்பாடின்மைக்கு அப்பால்) அடிமட்ட போராளிகளின் கட்டுக்கோப்பும், சுயஉழைப்பும் இப்போ அவர்களை முன்னேறத் துடிக்கும் மக்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

இது வன்னி முழுவதுக்கும் பொதுமையல்ல. அடிமட்ட மக்கள் மத்தியிலான நிலைமை இது. பெரும்பாலும் ஆழ்வன்னியினுள்தான் இந்த நிலைமை. கிளிநொச்சி நகரை அண்டிய பிரதேசங்களிலோ நிலைமை அப்படியில்லை. என்ஜிஓக்களினதும் மனிதாபிமானமுள்ள புகலிட தனிமனிதர்களினதும் பெரும்பாலான உதவிகளும் அவர்களை தாண்டி உள்வன்னிக்குள் செல்வது குறைவு அல்லது இல்லை என்பதை அவதானிக்க நேர்ந்தது.

இழப்பதற்கு எதுவுமேயில்லாத மனிதர்களாக இருப்பவர்களிடம் உயர்ந்த மனிதாபிமானத்தை வளர்த்துவிட்டிருக்கிறது என எண்ணத்தோன்றிய சில சம்பவங்களை சொல்லியே ஆகவேண்டும்.

பூநகரியில் ஒரு இளம் குடும்பத்துக்கு நாம் மீன்பிடி வலை மற்றும் மோட்டர் வாங்குவதற்கான முதலீட்டை முன்னர் செய்திருந்தோம். அவருக்கு முழங்காலுக்குக் கீழ் இரண்டு கால்களும் இல்லை. மனைவிக்கு ஒரு கால் இல்லை. செயற்கைக் காலோடு நடமாடுகிறார்கள். கடற்தொழிலில் ஒரு கூலியாக வேலைக்குப் போய்வந்த அவர் இப்போ வள்ளத்தை மட்டும் நாளொன்றுக்கு மூவாயிரம் வாடகைக்கு எடுத்து தாமே வலைவீசி தொழில் செய்கிறார். அவர்களைக் காண போயிருந்தோம். சிரித்த முகத்துடன் வரவேற்றவர்கள் “அண்ணை நாங்கள் நல்லாயிருக்கிறம். உங்கடை உதவியாலை இப்பிடி இருக்கிறம். வள்ளத்தை உழைச்சு சொந்தமாக வாங்கியிடுவம் அண்ணை” என்று அந்தப் பெண் சொன்ன சொற்களில் அவரது ஆளுமையும் நம்பிக்கையும் வெளிப்பட்டது. அண்ணை அந்த வள்ளம் வாங்க உதவிசெய்யுங்கோ என்று அவர் கேட்டாரில்லை. மகிழ்ச்சியாக வழியனுப்பி வைத்தார்கள்.

இன்னொருவர் எமது ஆதரவு அமைப்பைச் சேர்ந்த வன்னி நண்பரிடம் சொன்னார். இவங்களை என்ரை வீட்டுப் பக்கம் கூட்டிவாங்க என்றார். உதவி எதையும் அவர் கேட்டிராததால் கமரா எதுவுமின்றி சாதாரணமாக சென்றோம். அது காட்டை அண்டிய இடம். காடுவெட்டி நிலக்கடலை பயிரிட்டிருக்கிறார். குரங்கிடமிருந்து அதைப் பாதுகாக்க 24 மணிநேரக் காவல் செய்யவேண்டும். நாய் அவருக்கு உதவியாக இருக்கிறது. அக்கராயன் குளத்தின் நீட்சியாக காட்டினுள் ஒரு பெரும் வாய்க்கால் போல இருக்கும் அந்தக் குளத்துள் (ஊத்தை அக்கராயன் குளம்) முதலை வேறு. காட்டில் ஒரே குரங்குகள். அவரது குடிசையிலும் குடிசையானது அந்த நீர்த்தேக்கத்திலிருந்து 15 மீற்றர்தான் இருக்கும். நாய்கள் முதலையின் வரவை குரைத்துச் சொல்லிவிடுமாம். தான் அலேட் ஆகியிடுவேனாம். மிகச் சாதாரணமாக உரையாடினார். அந்த நீர்த்தேக்கத்திலிருந்து பம்ப் பண்ணி தனது தோட்டத்தில் பயிர் செய்துகொண்டிருக்கிறார். அவர் தான் இந்தத் தோட்டத்தால் முன்னேறி வந்துவிடுவேன் என்கிறார். அவர் உதவிசெய்யப்பட வேண்டியவராக நாம் உணர்ந்தோம். ஆனால் எம்மிடம் அவர் உதவி கேட்டாரில்லை.

எம்மை மூன்று நாட்களாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற இன்னொரு நண்பர் எம்மிடம் உதவி கேட்டிருக்கவில்லை. தனது நிலைமையை அவர் சொல்லியதுகூட கிடையாது. ஒருநாள் இருட்டிவிட்டிருந்தது. நாம் திரும்புகிற வழியில் அவரது வீட்டினுள் எமது வன்னி ஆதரவு நண்பர் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அதிர்ந்து போனோம். சூழவும் ஒரே இருட்டு. மின்சாரம் கிடையாது. ஒரு சிறு குடிசை. அதற்குள் கைவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. முன்னால் ஒரு மாமரம் கிளைதாழ்த்தியிருந்தது. தேடி நாலு பிளாஸ்ரிக் கதிரைகளை அவரது சகோதரிகள் கொண்டுவந்து போட்டனர். மரக்கிளையில் கட்டப்பட்டிருந்த ஒரு சிறு ரோர்ச் லைற்றின் ஒளிவட்டத்துள் நாம் இருந்தோம். அவரது மனைவி குழந்தை மூன்று சகோதரிகள் எவர்களினதும் முகங்கள் துலங்கவேயில்லை. ஒளிவட்டத்துக்கு வெளியே அவர்கள் நின்றபடி உரையாடிக்கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் அவரது சகோதரிகள் உயர்கல்வி படித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னவோ செய்தது. ஏன் நீங்கள் எமக்கு விண்ணப்பிக்கவில்லை என கேட்டபோது, நான் யாரிடமும் உதவி கேட்பதில்லை அண்ணை என்றார்.

நாம் சரியான இடத்தினுள்தான் செயற்படுகிறோம் என்ற திருப்தியையும் இந்தச் சம்பவங்கள் தரத் தவறவில்லை.

என்ஜிஓக்களில் வேலைசெய்பவர்கள் இந்த ஆழ்வன்னிக்குள் ஊடுருவி எதையும் செய்யத் தயாரில்லை. எனஜிஓவில் வேலைசெய்வதை பெரும்பாலானாரும் ஒரு வருமானம் தரும் தொழிலாகவே செய்கிற நிலைமை இவர்களது கடினமான பணியை மறுத்துவிடுகிறது. உண்மையில் அவசரம் உதவி தேவைப்படுபவர்களை நோக்கி செல்வதில் அவர்களது வசதிப்பாடு அகன்ற வீதிகளைவிட்டு ஒழுங்கைகளுக்குள்ளும் ஒற்றையடி காட்டுப் பாதைகளுக்குள்ளும் இறங்க விடுவதில்லை. புழுதிபடிகிற உடைகளுடன் அவர்கள் வீடுதிரும்ப தயாரில்லை.

அரசு வெளிநாட்டு உதவியுடன் அறிமுகமாக்கிய வீடமைப்புத் திட்டம் இந்த மக்களுக்கு கைகொடுத்த அளவுக்கு எதுவுமே கைகொடுக்கவில்லை என்பதை துணிந்து சொல்ல முடியும். ஆரம்பத்தில் ஐந்தரை இலட்சமாக வழங்கப்பட்ட இந்த நிதி இப்போ எட்டு இலட்சமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் குடிசைகளை அது படிப்படியாக அகற்றிக்கொண்டிருக்கிறது. இந்தப் பணம் ஒரு வீட்டை கட்டி முடிக்கப் போதுமானதில்லை என்றபோதும் இந்த மக்களின் கடினமான சொந்த உழைப்பும் கூட்டு வேலைமுறையும் அவர்கள் இந்த வீட்டை புறவயமாக அறுக்கைப்படுத்தி முடிப்பதில் வெற்றிகொள்ள வைத்திருக்கின்றன.

சுவர்கள் வெளிப்புறமாகவோ உட்புறமாகவோ சாந்து பூசப்படாதிருக்கும். உள்ளுக்குள் நிலம் பூசப்படாதிருக்கும். சில தருணங்களில் சாணியால் மெழுகப்பட்டிருக்கும். ஒரு வீட்டில் புகைபோக்கியினூடாக வானம் தெரிந்தது. அறைகளுக்கு நிலைகள், கதவுகள் எதுவும் இருக்காது. அறையை என்றோவோர் நாள் முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில்ம ணல் குவிக்கப்பட்டிருந்த காட்சியையுயும் கண்டோம்.

மின்சார வசதிகள் குச்சொழுங்கைகளுக்குள்ளாலும் போகிறது. இது புறச்சூழலை வெளிச்சமிட்டுக் காட்டும் வலுவற்ற, தீவிபத்துகளை உண்டாக்கக்கூடிய பாதுகாப்பற்ற கைவிளக்குகளை அகற்றிக்கொண்டிருக்கிறது. இதுவும் ஒரு வரப்பிரசாதம்.
தமக்கு வருகிற நிதியின் அரைவாசியை திருப்பியனுப்புகிற வக்கற்ற அரசியலின் பிரதிநிதிகளாக இருக்கும் மாகாணசபைக்கு இவையெல்லாம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இன்னொருபுறம் போராட்டத்தைக் காட்டி புகலிடத் தமிழரின் கடின உழைப்பை கையாடிய பொறுக்கிகளுக்கும் இவையெல்லாம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இந்த இரு சக்திகளும் நினைத்தால் வன்னி மக்களின் வாழ்வு ஒரு பாய்ச்சலை நிகழ்திக் காட்ட முடியும்.

வெளிநாடுகளில் இரண்டு மூன்று வீடுகள், பங்களாக்கள், ஜீப்புகள், நகையலங்காரங்கள் ஒருபுறமும், பூப்புநீராட்டு விழாவை கெலிகொப்ரரில் ஏற்றிக் காட்டுகிற, திருமணங்களை அரசகுடும்ப லெவலுக்கு நடத்திக் காட்டுகிற பவுசுகளுக்கும் பின்னால் போராட்டத்தின் பெயரால் ஈந்த புகலிட சாமான்ய மக்களின் வியர்வை நாற்றம் இருப்பதையாவது புரிந்துகொள்ளாத (புலிகளின் பணத்தை கையகப்படுத்திய) இந்த மாபியாக்களைப் பற்றி அவர்களிடம் நாம் சொல்லியும் வைத்தோம்.

பாதிக்கப்பட்ட போராளிகள் தம்மை கவனியாதுவிட்ட புலிகளின் நிதிக்களவாளர்கள் மீது அருவருப்புக்கொண்டு பேசினர். சிலர் அப்பாவித்தனமாக புகலிட மாவீரர் தினத்தை புரிந்துகொண்டு பேசினர். அவர்களுக்கு இதுகுறித்து தெளிவுபடுத்தினோம். நாம் தொடக்க காலங்களிலிருந்தே புலிகளின் அரசியலுடன் உடன்படாதவர்கள், இப்போதும் அப்படியேதான் என்ற தகவலை அவர்களிடம் நாம் சொல்லிவைக்கத் தறுவதில்லை. நாம் நினைத்ததுக்கு மாறாக அது அவர்களை இன்னுமாய் எங்களுடன் ஓரளவு வெளிப்படையாய் பேச வைத்துமிருந்தது.

நாம் பயணத்தை முடித்துக்கொண்டு விடைபெற்ற கடைசி நாளில் எம்முடன் சேர்ந்து இயங்குகிற அந்த நண்பர் சொன்னார். எமது வேலைமுறை குறித்து நேரில் தெரிய விரும்புபவர்கள் அல்லது கேள்விகேட்பவர்கள் அவர்கள் இலங்கை வரும்போது என்னுடன் தொடர்புகொண்டால் நான் அவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று நேரிலேயே பார்க்க வைக்கிறேன் என.

தலையுள் இரண்டு செல்துண்டுகள் உட்பட உடலில் 7 இடங்களில் அவற்றை வைத்துக்கொண்டிருக்கிற அவருக்கு, ஒரு காலுக்குள் தகடு வைக்கப்பட்டுமிருக்கிறது. இந்த உபாதையோடு நாளொன்றுக்கு 200 இலிருந்து 300 கிலோ மீற்றர் வரையிலான தூரங்களை எட்டிய எமது பயணத்துக்கு ஒரு வார காலம் தொடர்ச்சியாக எம்மை ஏற்றிச் சென்றிருந்தார் அவர். வன்னி பற்றிய அதன் வளம் பற்றிய அறிவு அவரிடம் வியாபகமாகவே இருப்பது எமது வேலைமுறைக்கு பெரிதும் உதவுகிறது. அவருடன் இணைந்து இரு கட்டமாக எம்மை ஏற்றிச் சென்ற இன்னும் இரு நண்பர்களின் அர்ப்பணிப்பும் நெகிழவைத்தது.
எமது மனச்சாட்சி எமை வழிநடத்தட்டும்.

 

DSC00815.JPG

DSC00819

1 Response to "மனச்சாட்சி எமை வழிநடத்தட்டும் !"

Great service! God bless you all & our people!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Follow சுடுமணல் on WordPress.com

Archives

Blog Stats

  • 22,211 hits
%d bloggers like this: