பட்டாம்பூச்சி

…ச்செறியும் நாவல் !

papilon cover-tamil
கென்றி சாரியரின் (Henri Charriere) “பட்டாம்பூச்சி” நாவல் எனது புத்தக அலுமாரியில் தனது சிறகொடுங்கி குந்தியிருந்து பல வருடங்களாகியிருந்தது. “சூரிச் – வாசிப்பும் உரையாடலும் 12” சோலையுள் இந்தப் பட்டாம்பூச்சியின் பறப்பை காண நாம் விழைந்தோம். ஒரு தொகை பக்கங்களில்அது தன் சுவடுகளை மெல்லப் பதித்தபடி பறந்துகொண்டிருந்தது. பல இலட்சக்கணக்கான பிரதிகளிலும் பல்வேறு மொழிகளின் வரிகளுக்குள்ளாலும் அது ஏன் பறந்தது என எழுந்த கேள்விக்கு இன்னமும் என்னிடம் பதிலில்லை. நூலை வாசித்து உரையாடியுமாயிற்று. இன்னும் பதிலில்லை. ரா.கி.ரங்கராஜனின் மொழியெர்ப்பு நாவலின் உள்ளுடனை ஊடுருவ முடியாமல் ஓரமாய் நடந்துகொண்டிருக்கிறதா எனவும் எண்ணத் தோன்றியது. எப்படியோ வரிகளுக்கிடையால் புகுந்து நடக்க வேண்டிய பொறுப்பு இந்த எதிர் அம்சத்தை தாண்டிச் செல்ல வைத்தது.

1906 இல் பிரான்ஸ் தேசத்தில் பிறந்த சாரியர் 1931 இல் கொலைக் குற்றச்சாட்டில் தீர்ப்பளிக்கப்பட்டு சிறை வாழ்வுக்காக கயானா தீவுக்கு கொண்டுசெல்லப்படுகிறார். பிரான்சின் காலனியத் தீவு அது. 13 வருட சிறைவாழ்வை பலமுறையான தப்பித்தல் முயற்சிகளுடனும் வெற்றிகளுடனும் தோல்விகளுடனும் சிதைத்துக் காட்டியபடி நகர்கிறது கதை.
“மயிர்க்கூச்செறிய வைக்கும் மாபெரும் மானிட சாசனம்” என ஒரு உசுப்பல் வசனத்துடன் தமிழில் அது வெளியாகியிருக்கிறது. போதாக்குறைக்கு மண்டையோட்டில் வந்தமர்ந்த பட்டாம்பூச்சி அட்டை வடிவமைப்பு மற்றும் உள்வழி கிறுக்கல் ஓவியங்கள் என ஒரு நாவலை சிதைத்து, காற்றடித்து பக்கங்களை 855 க்கு ஊதிப் பெருசாக்கியுமிருக்கிறார்கள் நர்மதா பதிப்பகத்தார்.
இது சாரியரின் உண்மைக் கதை எனப்படுகிறது. ஆனால் அவரே ஓரிடத்தில் இது 75 வீதம் உண்மை என்கிறார். 2007 இல் காலமான Charles Brunier (104) என்ற முன்னாள் கைதியோ இதில் வருகின்ற பல சம்பவங்கள் தான் சாரியருடன் பகிர்ந்துகொண்ட தனது அனுபவங்கள், அதை அவர் களவாடிவிட்டார் என்கிறார். எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். இறுதியில் தேங்காய் மூட்டையில் சமுத்திரத்தைக் கடந்து காட்டிய சாரியரின் எழுத்தலைகள் ஒரு புனைவாய் உருவாகியும் அழிந்து உண்மையாகியும் வாசிப்பைப் பின்தொடர்ந்ததை சொல்லித்தானாக வேண்டும்.

 
சாரியர் உண்மையில் கொலை செய்தானா இல்லையா என நாவலின் இறுதிவரை துப்பறிய அலைந்த சராசரி வாசக மனம் ஏமாற்றத்துடனேயே திரும்பும் என்பது இந் நாவலின் சிறப்பு. புனைவோ, உண்மையோ, புனைவும் உண்மையுமோ… எல்லாம் கடந்து போய்க்கொண்டிருக்கிற வாசிப்பில் இந் நாவல் அவசியம் வாசிக்கப்பட வேண்டியதுதான் என எனக்குத் தோன்றுகிறது. தகவலை முன்வைத்து தீர்ப்பு வழங்குகிற மனநிலையை சிதறடித்து மனிதப் பண்புகள், பலங்கள் பலவீனங்கள், சரிகள் தவறுகள், சாத்தியம் சாத்தியமின்மை… என முரண்கள் கொண்ட ஒற்றை மனிதஜீயை அடையாளம் காட்டுகிற இன்னொரு நாவல் பட்டாம்பூச்சி.

 
தப்புதல் சாத்தியமேயில்லை என உறுதியளிக்கப்பட்ட டெவில் தீவின் சிறைக்குள் காலடிவைக்கிறபோதுகூட, தப்புவதுதான் என்ற கேள்விக்கிடமற்ற உறுதியுடன் வந்திறங்குகிற சாரியரின் மனநிலை அசாத்தியமானது. தனது இருப்பு மீது தீராத வெறிகொண்ட மனிதன் அவன். தன்மீதான கட்டுகளை அறுத்து அடுத்த கட்டத்துக்கு மாறுவது ஒன்றே அவனது பட்டாம்பூச்சிக் கனவு. தப்புதலுக்கான எல்லாவகை சாத்தியத்தையும் பௌதீக ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மற்றவர்களின் பலவீனங்களை மோந்து பிடித்து அதை பயன்படுத்துவதிலும் நுண்மையாக வடிவமைத்துக்கொண்டு அவன் இயங்கியபடியே இருந்தான். சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிற, அவனது விடாப்பிடியான, சிலவேளைகளில் தனித்த அவனது போராட்டம் தலைமைத்துவப் பண்புகளுக்குள் உள்ளடங்கவல்லது.

 
பிரான்ஸ் தேசம் உலகத்துக்கு விடுதலையைப் போதித்த நாடு. மனித உரிமைகளுக்கும் பிரசைகளின் சதந்திரத்திற்கும் வழிகாட்டிய நாடு. அதன் பின்கதவுவழி இந்த கொடுமையான சிறைகளுக்கு இழுத்துச் செல்லப்பட்ட கைதிகளின் கதை இது.

 
சமூகத்தில் புறக்கணிக்கப்படுபவர்கள் அல்லது ஒதுக்கப்படுபவர்களிடம் பண்பாடுகள் இருக்கின்றன. மற்றவர்களின் உணர்ச்சிக்கு மதிப்புத் தருகிற பண்பாடுகள் அவை என்கிறார் சாரியர். அதை நாவலில் இழையிழையாக பின்னித் தருகிறார்.

 
நாகரிகம் என்பதை இயல்பான வாழ்வின் பண்பாட்டுக்கு முன் நிறுத்தி கேள்வி கேட்கிறார். கோவாஜிரா செவ்விந்தியர்களிடம் தஞ்சம்புகுந்த காலங்களின் மேல் நின்று இந்தக் கேள்வியை அவர் உரக்கக் கேட்கிறார். “நாகரிக மனிதர்களின் கள்ளங் கபடுகளை அறிந்திராத மக்கள் இவர்கள். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டதும் இயல்பான முறையில் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொள்வார்கள். தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதையோ கோபமாக இருப்பதையோ வருத்தமாக இருப்பதையோ அக்கறையாக இருப்பதையோ இல்லாதததையோ அவர்கள் அப்போதைக்கு அப்போது வெளிக்காட்டி விடுகிறார்கள்” என்கிறார்.
நாகரிக உலகின் சம்பிரதாயபூர்வமான வார்த்தைக் கட்டுகள் இயல்பான வாழ்வின் மனிதர்களிடத்தில் இருப்பதில்லை. பதிலாக இயல்பான உடல்மொழிகள் வெளிப்படுகின்றன.

 

“நன்றி” என்ற வார்த்தைக்கு பிரதியீடாக ஒரு பதில் வார்த்தையை தமிழில் சொல்லமுடியாமல் ஏன் இருக்கின்றது என ஒருவர் கேட்பாராகில், அந்த பதில் வார்த்தை உடல்மொழிதான் என்பேன்.

 
இந்த நாவலை வாசிக்க பொறுமையற்றவர்களுக்கு இயல்புநிலை வாழ்வின் பண்பாட்டுத் தளத்தில் பயணிக்கிற சாரியரின் செவ்விந்தியர்களுடனான காலம் ஒரு குட்டி நாவலாக விரிகிற தகவலை சொல்லிவிடத் தோன்றுகிறது. அற்புதமாக இருக்கிறது. 221 இலிருந்து 294 வரையான பக்கங்களில் அழகியலில் நனைந்தபடியே பயணிக்கலாம். அதிலும் காதல் என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்தி உதிர்த்தி அழகியலாக பரவச் செய்கிற சாரியரின் அவதானமும் எழுத்தும் சிலிர்க்க வைத்துவிடுகிறது.

 
பெண்ணுடல் பற்றிய விபரிப்பை பண்டப்படுத்துகிற ஆண்வக்கிர கோதாரி அழகியலுக்கு எதிர்மாறான அழகியலுடன் வாசிக்க நேர்கிற அனுபவம் அற்புதமாக இருக்கிறது. அவள் முத்துக்குளித்து எம்பி வெளியே வந்து வந்து போகிறபோது சாரியரின் விபரிப்புக்குள் அவளது வலிமையும் அதுசார்ந்த உடற்கட்டும் கடல் அலையுடனான அதனது இயற்கைசார் உறவும் ததும்புகிறது.

 

“லாலி ஒரு கொடிபோல என்னை சுற்றிக் கொண்டாள். அவளது உடம்பின் துடிப்பை உணர்ந்தேன். இதயம்போல அவள் உடம்பு மொத்தமும் துடித்தது.”

 

தப்புதல் என்ற விடாப்பிடியான அவனது கனவை முழுமையாக சாத்தியப்படுத்தியபோது அவன் வெனிசுவேலா நாட்டை வந்தடைந்திருந்தான்.
“வெனிசுவேலா மண்ணில் கால்வைத்த அந்த முதல் சில நிமிடங்களை அந்தச் சூழ்நிலையை விபரிப்பதற்கு திறந்த மனம் கொண்ட அந்த இனிய மக்களின் வரவேற்பை விபரிப்பதற்கு எனக்கு திறமை போதாது” என்கிறார் சாரியர்.
வெனிசுவேலா பிரசையாக வாழ்ந்த சாரியர் பின்னர்1967 இல் பிரான்ஸ் திரும்புகிறார். 1973 இல் அவர் காலமானார்.

 

தப்பவே முடியாது என வாக்களிக்கப்பட்ட டெவில் தீவிலிருந்து சாரியர் தப்பியது குறித்து எவரிடமும் மறுகேள்வி இல்லை எனவும், அவர் தேங்காய் மூட்டையுடன் குதித்தது உண்மையாகவும் இருக்கலாம் எனவும், அவரை வேறு படகுகளோ கப்பலோ கண்டுகொண்டு அவரை கரைசேர்த்திருக்கலாம்.. அதுவே சாத்தியமாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

 

நாவலின் வாசிப்புக்கு இந்த புலனாய்வு தேவையாகப் படவில்லை. உண்மைக் கதைகளும் புனைவை மீறுதல் ஒரு நாவலில் சாத்தியமில்லை என இந்த நாவலின் உளளே சொல்லப்பட்டிருக்கிற மேலும் சில சம்பவங்கள் கண்ணடித்துச் சொல்லிவிடுகின்றன.

*

குறிப்பு -1

சிறையேகலின்போது கைதிகள் பிரன்சு நாணய நோட்டுகளை ஒரு சிறு அலுமினிக் குமாய்க்குள் இட்டு அதை மலவாசலுக்குள் வைத்துக்கொண்டு செல்லுகிற வழமையொன்றை சாரியர் பல இடங்களிலும் சொல்ல நேர்கிறது. தப்பித்தலுக்கு உதவுகின்ற இந்தப் பணம் பற்றி பல இடங்களிலும் பேசுகிறார். குணா கவியழகனின் விடமேறிய கனவில் மலவாசலுக்குள் பாதுகாத்து வைக்கப்படுகிற சயனைட் குப்பியை ஞாபகப்படுத்தியது சாரியரின் அலுமினிக் குழாய்.

*
குறிப்பு-2
மனிதர் திருந்துவதற்கான சந்தர்ப்பத்தை பெரும்பாலும் தண்டனை முறைமை தருவதில்லை. அவர்களை மனநோயாளர்களாக்குவது, இன்னுமின்னும் குற்றமிழைக்கச் செய்வது, தீராத வருத்தத்தில் தள்ளிவிடுவது, உடலை உளத்தை சிதைப்பது.. என இந்த முறைமை வெவ்வேறு வடிவில் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது.

அண்மையில் ஈரானின் நீதிபதியொருவர் குற்றமிழைத்தவர்களுக்கு ஒரு மாற்று தண்டனை முறைமையை அறிவித்தார். அவர்களுக்கு புத்தகங்கள் கொடுக்கப்பட்டு அதை மறு தவணைக்குள் வாசித்துவிட வேண்டும் என தீர்ப்பெழுதினார். நூலுக்குள்ளிருந்தான அவரது கேள்விகளுக்கு பதிலை கேட்பதன்மூலம் அவர்களது வாசிப்பு நேர்மையை பரிசோதித்தும் பார்த்தார்.

 

சேரிப்புற வாழ்வும் நிறவொதுக்கலும் உருவாக்கிய ஒரு பொறுக்கியாக, உதிரி லும்பனாக சிறையேகிய மல்கம் எக்ஸ் இனை சிறையில் வாசிப்புப் பழக்கம்தான் ஒரு கலகக்கார நிறவெறியெதிர்ப்புப் போராளியாக உருமாற்றியது என்பதை இந்த இடத்தில் சொல்லிச் செல்ல நேர்கிறது.

*

குற்றமிழைத்தவர்களுக்கான மாற்றுத் தண்டனை முறைமை பற்றியும் குற்றம் என்பதை எந்த அளவுகோல் கொண்டு மதிப்பிடுகிறோம் என்பது பற்றியும் கூட உரையாடலுக்கு அழைக்கிற நூல் பட்டாம்பூச்சி. இதுவிடயம் குறித்து  ஈழத்து மின்கம்பங்கங்களிடமும் கதைகள் உண்டு.

– ரவி (30062017)

 

 

 

One thought on “பட்டாம்பூச்சி”

  1. அருமையான விமர்சனம்,, வாழ்த்துக்கள். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: