சுடுமணல்

சித்திரைப் புத்தாண்டும் நானும்.

Posted on: April 13, 2017

இப்படியான புத்தாண்டுக்கு ஓரிரு நாட்களின் முன்னரேதான் நான் “சொப்பிங் பாக்” உடன் வீட்டைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் நழுவினேன். “சாப்பிட்டிட்டுப் போவன்ரா” என எனது அம்மா கால்நீட்டியபடி திண்ணையிலிருந்து சொல்லிக்கொண்டிருந்தாள். “பிறகு வந்து சாப்பிடுறன்” என்று பொய் சொன்னேன். “அப்ப தண்ணியாவது குடிச்சுட்டுப் போவன்ரா” என்றாள். கடைசியாக எனது கடைசி அக்காளிடமிருந்து தேசிக்காய்த் தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டுப் புறப்பட்டேன். புத்தாண்டு தினத்தில் (1984 இல்) நான்  இயக்கத்தின் படகில் ஏறினேன். அம்மாவை ஏமாற்றியதை இன்னமும் ஜீரணிக்க முடிவதில்லை.

ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அம்மா சுவாமிப் படத்தின் முன் நின்று அழுதுகொண்டிருந்தாள். அம்மா என்னைத் திரும்பிப் பார்த்தபோது எனது கண்களில் நீரை ஒளித்துவைத்தேன். “நீயும் இயக்கத்துக்குப் போகப்போறியாம் மோனை… கதைக்கிறாங்கள்” என்றாள்.
மறுத்தேன்.
“சும்மா மனசை அலட்டிக்கொள்ளாதை” என்று வேறு சொன்னேன்.
“தகப்பனில்லாத இந்தக் குடும்பம் உன்னைத்தான் தூண்போல நம்பியிருக்கடா. எங்களை நட்டாற்றில் விட்டு போயிடாதை..” என்று வெடித்து அழுதாள்.
இப்பவும் மறுத்தேன்.
“எனக்கு போகயில்லை எண்டு சத்தியம் செய்து தா” என்று கையை நீட்டினாள்.
நான் சாமி கும்பிடுவதில்லை. என்றபோதும் அம்மாவுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்க வேண்டாம் என எண்ணினேன். “நீ பெத்த பிள்ளையிலை நம்பிக்கையில்லை எண்டால் கேள்..சத்தியம் செய்கிறேன்” என்றேன். அம்மாவின் நீட்டிய கை கீழிறங்கியது.
ஒவ்வொரு சித்திரைப் புத்தாண்டும் வருகிறபோது, அநேகமாக நான் நினைவுகளால் தொந்தரவு செய்யப்படுகிறேன்.
எனது எல்லா நம்பிக்கைளையும் பின்தளம் போட்டுடைத்தது. உயிர்தப்பி ஊர் வந்து சேர்தலே வாழ்வின் மிகப் பெரும் பாய்க்கியமாய்ப் போனது. எப்படியோ ஊர்திரும்பும் சந்தர்ப்பம் கிடைத்தது. பின்னர் எனது நாட்டை விட்டும் வெளியேறினேன். அகதியாய் இங்கு வந்து சேர்ந்தேன்.
எல்லாம் பொய்த்துப்போன துக்கமும், மக்களுக்கு ஏமாற்றம் தரப் போகிற போராட்டத்துக்கு அதன் பங்காளியாய் இருந்த குற்றவுணர்வும், முகாமில் காணாமல் போன எனது தோழனின் துயரும், தப்பியோடி கேரளாவில் ஒளித்திருந்த எனது ஆறு தோழர்களின் மீதான ஏக்கமும், “சந்ததியார் கோஷ்டி” என கண்காணிப்புக்குள் அகப்பட்டு தொடர்பற்றுப்போன பெண் தோழர்களும்… என நான் கலவரமடைந்த மனநிலையில் இருந்தபோது, மலையுச்சியொன்றில் சுற்றுலா விடுதியில் முதல் வேலை கிடைத்தது.
அறையில் ஒரு பாடல் என்னுடன் சகவாசமே செய்தது. அப்போதெல்லாம் சி.டி இல்லாத காலம். கசற் இல் இரண்டு பக்கமும் இந்த ஒரே பாடலை திரும்பத்திரும்ப ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தேன். என்னிடமிருந்த ஒரே கசற்கூட அப்போது அதுதான். அந்தப் பாடல் இதுதான். (ஊமை விழிகள் படத்தில் வரும்) “தோல்வி நிலையென நினைந்தால்…“ என்ற பாடல்தான் அது. அதைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபடியே நான் உறங்கிப்போன நாட்கள் பல. இன்றும்கூட அந்தப் பாடலைக் கேட்டால் நான் பழசாகிவிடுகிறேன்.
மும்முனை என்று (நேரடி மொழிபெயர்ப்பில்) அழைக்கப்படுகிற அந்த முடிவில் ஒரு பெரிய பாறைக் கல் இருக்கிறது. அதில் நான் குந்தியிருக்கிறபோது காலடியின் கீழ் பாதாளமாக பதிந்திருக்கிற சரிவு ஓர் பச்சை ஏணைபோல குழிவாகி மறுமுனையில் மலையாய் உயர்ந்து நிற்கும். சுற்றவர மலைகளதும் அது விரித்துப் போட்டிருக்கும் மலையடிவார மடிப்புகளினதும் பிடிக்குள் முகில் வர்ணங்களை கண்டு இரசிக்கிற குழந்தையாய்ப் போவேன்.
எல்லா காலநிலைகளுக்குமான அந்த மலையின் கோலமும் வர்ணங்களும் என்னை அழுத்திய துயரையும் விரக்தியையும் மெல்ல மெல்ல கரைத்துக்கொண்டது. எனது தனிமைக்கு அது அர்த்தத்தை வழங்கிக்கொண்டே இருந்தது. பனித்திரளில் சிற்பங்கள் தெரியும். நிறமுடுத்தி அலையும் முகில் கூட்டங்களில் தேவதைகள் தெரிவர். சூரியக்கதிர்களால் மாலைவேளையில் துண்டாடப்பட்டுக் கிடக்கும் மலைத்துண்டுகள் மஞ்சள் பட்டிருக்கும். உரோமத்தை வருடியபடி இசையும் இளங்குளிர் காற்று எனதுடலை நீவிக்கொண்டிருக்கும். அவற்றை இரசித்தபடி பாறையில் தனிமையில் குந்தியிருப்பேன்.
அந்தக் கிராமத்துக்கு ஒரு கறுப்பனாக ஒரேயொரு தமிழனாக நான் அறிமுகமாகினேன். என்னை அந்த மக்களின் உணர்வுகள் அரவணைத்ததோ இல்லையோ என்ற கேள்வியை எனக்கு வேண்டியிருந்த தனிமை எழவிடாமலே வைத்திருந்தது.
என்னை என்னிடமே மீட்டுத் தந்த அந்த சூழலை நான் அண்மையில் தரிசிக்கச் சென்றபோது பழைய நினைவுகள் ஒரு மெல்லிருளாய் எனைச் சூழ்ந்தன.
நான் வேலைசெய்த அந்த சுற்றுலா விடுதி கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. அதற்குள் ஏக வேண்டும்போல் இருந்தது. மூளைக்குள் குந்தியிருந்த ஒழுங்குவிதிகள் தடுத்தன. அதற்குள் ஒருவரது நடமாட்டமும் தெரியவில்லை. பாதையோரமாய் இணைந்த அந்த விடுதியின் கார்த் தரிப்பிடத்தில் நின்றேன். இந்த இடத்தில் பனிக்காலங்களில் விடுதியில் தங்கியிருப்பவர்களின் கார்கள் சிலவேளைகளில் ஓர் இரவிலேயே பனியால் முழுவதுமாக மூடப்பட்டு ஒரு பனியலைபோல் காலையில் இருக்கும். அதை இரசித்தபடியே நான் அவதானமாக அகற்றத் தொடங்குவேன். இளமையான என் உடலுக்கு அந்த கடின வேலை ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. இப்போ வெயில்காலத்தின் ஒரு பகலில் அங்கு நிற்கிறேன். மீண்டும் மீண்டுமாய் அந்த கட்டடத்தை பார்த்துக்கொண்டு நின்றேன். அது ஒரு நினைவுத் துயரை என்னுள் இறக்கிக்கொண்டிருந்தது. எதிர்ப் பக்கமாக வருகிறேன்.
“சுவிஸ் மம்மி” என்று நான் ஆசையோடு அழைத்த அவள் கிழவியாகிவிட்டிருந்தாள். கண்பார்வை வேறு மங்கியிருந்தது. தனிமையில் இருந்தாள். அவளது பூந்தோட்டமும் சோபை இழந்திருந்தது. 27 வருடங்களுக்குப் பிறகு அங்கு சென்றேன். அதே வீடு. அசுமாத்தம் எதுவுமில்லை. அவள் இப்போதும் இருக்கிறாளா இல்லையா என்ற சிறு சந்தேகம் வேறு துருத்தியது. பெல்லை அமத்தியபோது அவள் மெல்லக் கதவைத் திறந்தாள். கலவரமடைந்தேன். “என்னைத் தெரிகிறதா?” எனக் கேட்டேன். சற்று புதிரான பார்வையோடு “இல்லை” என்றாள். “நான்தான் ரவி” என்றதுமே அவள் கணநேரத் தயக்கமின்றி அணைத்துக்கொண்டாள். எல்லா நினைவுகளையும் இழுத்துவந்து அவள் பேசிக்கொண்டிருந்தாள். 27 வருடங்களும் பனியாய்க் கரைந்தன.
மலையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது, நான் இப்போதைய நானாக மாறிக்கொண்டிருந்தேன்.
13042017

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Follow சுடுமணல் on WordPress.com

Blog Stats

  • 18,279 hits
%d bloggers like this: