காதலர்கள் மிக இயல்பாக வீதிகளிலோ புகைவண்டியிலோ அதன் நிலையங்களிலோ கட்டியணைத்து முத்தமிடுவது இங்கு ஒரு சாதாரணமான நிகழ்வு. ஆரம்ப காலங்களில் அதை தமிழர்கள் “நொங்கு குடிக்கிறாங்கள்” என விழிப்பர். முத்தமிடுபவர்களைப் பார்த்து தாம் வெட்கப்படுவர். அந்த வெட்கத்துக்குள் காமம் ஒளிந்திருக்கும். ஒளித்துவைக்கப்படுகிற காமம் வக்கிரமாக கசிகிறதோ என எண்ணத் தோன்றுமளவுக்கு யோசிக்க வைக்கிறது.
ஒரு பேரூந்தில், புகைவண்டியில், அதன் தரிப்பிடங்களில் எல்லா வெள்ளை மனிதர்களையும் கலங்கலாக்கி தமிழ்ப் பெண் பிள்ளைகள் மீது -வாயைத் திறந்தபடி- பார்க்கிற சிலபல தமிழர்களை பார்க்கிறோம். அவர்களுக்கு வயதுதிர்ந்து மொட்டைத்தலைகூட இருக்கும்.
* அது ஒரு கிராமம். தனது வகுப்புப் பிள்ளையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துவிட்டு சுமார் பத்து மணியளவில் அவள் நிற்கிறாள். வேறு எவரும் அந்த தரிப்பிடத்தில் இல்லை. மறுகரையில் -அதாவது எதிர்த் திசையில்- பேரூந்தில் வந்திறங்கிய ஒருவன் (தமிழன்) இவளைக் காண்கிறான். ஒரே ஓட்டமாக போய் முன்னாலுள்ள தனது இருப்பிடத்தில் தான் கொண்டுவந்த பொருட்களையெல்லாம் அவசர அவசரமாக வைத்துவிட்டு வீதியை கடந்து ஓடிவந்து இந்தப் பிள்ளை நிற்கும் பஸ்தரிப்பில் நிற்கிறான். பிள்ளை பயப்படுகிறது. வீட்டுக்கு தொலைபேசுகிறது. “வித்தியாசமாக நடந்தால் உடனே பொலிசுக்கு போன் பண்ணு” என்கிறார் தந்தை. பஸ் வருகிறது. அவனும் ஏறுகிறான். பிள்ளை சாரதியின் பின்னாலுள்ள இருக்கையில் அமர்கிறது. இறுதியில் பஸ் சனநாட்டமுள்ள புகைவண்டி நிலையத்தில் நிற்கிறது. அவள் போய்விடுகிறாள். இவன் திரும்ப பஸ் க்கு காவல் நின்று வீடு திரும்புகிறான்.
* மாலைவேளையில் அந்த சிறிய புகைவண்டி நிலையத்தில் மூன்று தமிழ் இளைஞர்கள் நிற்கிறார்கள். இலங்கையிலிருந்து அண்மையில் வந்தவர்கள் அவர்கள். இவள் தன்னுடன் படிக்கிற இந்த நாட்டவனுடன் பல்கலைக்கழகம் முடிந்து வீடு திரும்புகிறாள். இருவரும் சிரித்துப் பேசி வந்திறங்குகிறார்கள். “உனக்கு வெள்ளைக்காரன் கேட்குதோ” என்கிறான் அந்த மூவரில் ஒருவன். அவள் பயப்படுகிறாள். அந்த நண்பன் இவளை வீடுவரை கூட்டிவந்து விட்டுவிட்டுப் போகிறான்.
* உயர்கல்வி கற்கிற விடலை வயது பிள்ளைகளில் அவளும் ஒருத்தி. எமது சந்ததியைச் (முதல் சந்ததியைச்) சேர்ந்த அந்த ஒருவன் இவளின் முகத்தை குனிஞ்சு பார்த்து “கொல்லுறாயடி” என பல்லைக் கடிக்கிறான். இந்த நாட்டுப் பிள்ளைகளுக்கு ஏதோ விபரீதமாக அது தெரிகிறது. கேட்கிறார்கள். அவள் தனது இனத்தின் மானத்தை காப்பாற்ற அதை வேறோ எதுவாக மொழிபெயர்க்கிறாள்.
இது வெளிப்படுத்துகிற செய்தியை (message) நீங்களே எழுதிக் கொள்ளுங்கள்.
இவ்வாறான வகைதொகையில்லாத உதாரணங்களை நாட்டிலுள்ள பெண்கள் எதிர்நோக்கியிருப்பார்கள். எதிர்நோக்குகிறார்கள்.
**
இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகள் கல்விமுறை மாற்றம், குடும்ப உரையாடல் முறைமை மாற்றம், சமூக மாற்றம் என இன்னோரன்ன மாற்றங்களுக்காக காத்திருப்பதை விடுத்து, ஆணதிகார மனநிலையில் பெண்கள் குறித்தான பார்வைகள் கருத்தியல்களை அசைத்துக்காட்டுகிற வெகுஜன அமைப்புகளை ஏன் உருவாக்கக் கூடாது. கிராமம் கிராமமாக சென்று உரையாடுவது, பாடசாலைகளில் விசேட அனுமதியெடுத்து -மாணவன் மாணவி களுடன்- உரையாடுவது.. என்றவாறாக வேலைமுறைகளை உருவாக்க வேண்டுமென அவாவுகிறது மனது.
*
அதிகாரங்கள், தண்டனைகள், சட்டதிட்டங்கள் எல்லாமும் அத்துமீறல்களை செய்பவர்களுக்கு அச்சமூட்டலாம். அவர்களை கட்டுப்படுத்தலாம். சமூகத்தில் பொதுமனிதர்களிடத்தில் அது மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. அதனால் அது பொது மனநிலையில், அறிவில் மாற்றத்தை நிகழ்த்துவதில்லை. அதை கல்வி முறைமைகள், ஆசிரியர்கள் ஆசிரியைகள் கற்பதும் கற்பிப்பதுமாக இயங்குகிற அறிவுச்சூழல், புத்திஜீவிகளின் சமூகப் பாத்திரம் என்பவைகளின் திரட்சி நிகழ்த்தவல்லது.
*
இரவுப் பொழுதில் தனியாக ஒரு பெண்ணைக் காணுகிறபோது மனக்குகைக்குள்ளிருந்து மெல்ல எழும்பி வருகிற பிசாசொன்றுடன் சீவிக்கும் ஓர் ‘அமைதியான’ ‘ஒழுக்கமான’ மனிதனாகத்தான் நான் இருக்கிறேனா என சந்தேகப்படுங்கள். அந்தப் பிசாசை விரட்டுங்கள். அது வெளிப்படையாக எதையும் செய்யாமல் கட்டுப்படுத்தலாம். ஆனால் -பெண்கள் பாதிக்கப்படுகிற ஒவ்வொரு சம்பவத்திற்கும்- கள்ளநியாயத்தை வழங்குகிற குரலாக அது அழுக்கேறி வெளிவந்தபடிதான் இருக்கும்.
அது பெண்களின் உடையை கண்காணிக்கும். அவர்களது உடலை கண்காணிக்கும். அவர்களது சுதந்திரத்தை கண்காணிக்கும். உடல்மொழியை கண்காணிக்கும். தன்னால் பாதுகாக்கப்படுபவளாக பெண்களை உரிமைகொண்டாடும். புத்திமதி சொல்லும். இலகுவிலேயே சந்தேகத்தை வரவழைக்கும். ஒரு தூசியின் பறப்பாய் அவதூறுகளை வீசும் அல்லது நம்பும். தன்னுயிரை அழிக்கும் வரையான எல்லைக்கு ஒரு பெண்ணை கொண்டுசெல்லும்.
கொஞ்சம் மேலே போய் பெண்ணிய கோட்பாட்டுக்கு -அது என்னவென்று தெரியாமலே- எள்ளலான பொழிப்புரை எழுதும். பெண்ணுடல் மீதான அத்துமீறல்கள் செய்திகளாக வரும்போது தனது பாதுகாப்பு வலயத்துள் நடந்த அத்துமீறலாக மனவரைவு செய்து கொள்ளும். ஆத்திரப்படும். மனிதாபிமானமாக பேசும். இதில் நேர்அம்சங்கள் (பொசிற்றிவ்) இல்லாமலில்லை. ஆனால் எதிர் அம்சங்களின் (நெகற்றிவ்) இருப்பிடத்தில் உலாவுகிற பிசாசை நாம் காண்பதேயில்லை. அல்லது சிறைப்படுத்தி உயிரோடு வைத்திருக்கிறோம் அல்லது ஒளித்துவைத்திருக்கிறோம்.
*
ஆணாக இருப்பதில் வெட்கப்படுகிறோம் என பிரகடனப்படுத்துவோம், பிசாசின் இருப்பை அனுமதிக்கும்வரை !
07042017