– வெகுஜன அமைப்புகளும் முன்னுதாரணமும்.
(12.03.17 அன்று சுவிஸ் “வாசிப்பும் உரையாடலும்” நிகழ்ச்சியில் நான் வைத்த கருத்துகளை தழுவி எழுதப்பட்டது.)
வெகுஜன அமைப்புகள் ஒரு சமூகத்தின் அசைவியக்கத்திலிருந்து தோன்றுகிறது. தனக்கான சுயத்தை உடையதாகவும் சுதந்திரமான இயக்கத்தை வேண்டிநிற்பதாகவும் குறித்த எல்லைகளுக்குள் தமது இலக்கை நிர்ணயிப்பதாகவும் இருக்கும். அது தொடர்ந்து செயற்படுவதோ, கலைந்போவதோ அதன் இலக்கைப் பொறுத்தது.
இலங்கையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் நமது தேசிய விடுதலைப் போராட்டத்தை விடவும் ஒரு முன்னுதாரணமான போராட்ட வடிவமாகும். மக்கள் போராட்டங்களில் வெகுஜன அமைப்புகளின் பாத்திரத்தை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டுமெனில் அது இந்த சாதியத்துக்கு எதிரான போராட்டத்திலிருந்துதான் முடியும்.
தேசிய விடுதலைப் போராட்டம் இதன் மறுதலையாக தனது அரசியலுக்கு வெளியேயான எல்லா வெகுஜன அமைப்புகளையும் அழித்தொழித்தது. இதன்மூலம் சமூகத்தின் பண்பாட்டு நிறுவனங்கள் சிதைக்கப்பட்டன. கட்சிக்கு வெளியே இருந்து அல்லது இயக்கங்களுக்கு வெளியே இருந்து அதை வழிப்படுத்துகிற செழுமைப்படுத்துகிற பன்முக கருத்தியல் பார்வைகள் இல்லாமலாக்கப்பட்டன. வெகுஜன இயக்கம் என்பதே தமது இலக்குகளை அடைவதற்கான கருவிகளாக பாவிக்கப்பட்டன. இல்லாதபோது அழித்தொழிக்கப்பட்டன. இது நீண்ட காலத்தில் ஏற்படுத்துகிற விளைவுகளாகவே நாம் இப்போ சமூகத்தில் இதுவரை காணாத வினோதமான போக்குகளை எதிர்கொள்ள நேர்கிறது.
இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக சாதிய தளத்தில் இயங்கிய வெகுஜன அமைப்புகளின் பாத்திரம் வியக்கக்கூடிய அளவுக்கு இருந்திருக்கிறது.
அவை:
1. 1910 – வட இலங்கை தொழிலாளர் சங்கம்
2. 1920 – யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்
3. 1927 – ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம்
4. 1933 – வட இலங்கை தொழிலாளா கள் இறக்கும் சங்கம்
5. 1942 – வட இலங்கை தமிழர்சிறுபான்மைத் தமிழர் மகாசபை
– (40 களில் 10 க்கு மேற்பட்ட அமைப்புகள் செயற்பட்டன)
6. 1965 – சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி
– மக்கள் முன்னேற்ற மன்றம்
– திருவள்ளுவர் மகாசபை
– அருந்ததியர் சங்கம்
– சலவைத் தொழிலாளர் சங்கம்
– சிகை அலங்கரிப்பாளர் சங்கம்
7. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்
இவ்வாறான அதிகளவிலான வெகுஜன அமைப்புகள் செயற்பட்டதானது அன்றைய சமூக அமைப்பின் ஜனநாயகத் தளத்தின் செழுமையைக் காட்டி நிற்கிறது. சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள் 1960 களில் உச்சக் கட்டத்தை அடைந்து தீண்டாமையின் பல அம்சங்களை இல்லாமலாக்கியது. அவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தார்கள். சாதித்தார்கள்.
நமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் சுதந்திரமான வெகுஜன அமைப்புகளை இல்லாதொழித்ததின் மூலம் இந்த ஜனநாயக அம்சங்கள் பலவீனப்பட்டன. அளவிடமுடியாத விலையைக் கொடுத்தும் எதையும் சாதிக்காமல் அவலமாக முடிந்துபோனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
சாதியத்துக்கு எதிரான போராட்டங்களில் இந்த வெகுஜன அமைப்புகளை வழிநடத்தியவர்கள் அல்லது செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் பலரும் இடதுசாரிய கண்ணோட்டமுடையவர்களாக இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்தும் இருந்தனர் என்பது குறித்துக்கொள்ளப்பட வேண்டியது.
ஆதிக்கசாதியினராக இருந்த இருக்கின்ற வெள்ளாள சமூகத்திலிருந்தும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராளிகள் உருவாகக் காரணமாக இருந்தது. அவர்களையும் இணைத்துக்கொண்டு அறுதுகளில் சாதியப் போராட்டம் கணிசமான மாற்றத்தை சாதித்துக் காட்டியது. குறிப்பாக தீண்டாமைமீது பெரிய தகர்ப்பை அது செய்தது.
இந்த அம்சங்கள் இலங்கையில் வெகுஜன அமைப்புகள் “சாதிச் சங்கங்களாக” சீரழியாமலோ அல்லது “சாதியவாதம்” மேலெழாமலோ பார்த்துக்கொண்டது. இது ஒரு மிகப் பெரிய சாதனை.
இந்தப் போராட்டம் கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், காந்தியவாதிகள், சீர்திருத்தவாதிகள் எல்லோரையும் இணைத்துக்கொள்வதில் வெற்றிகண்டது. இந்தியாவில் பெரியார், காந்தி, அம்பேத்கார் போன்றவர்களின் சிந்தனைகளும், சர்வதே ரீதியில் அலையாக எழுந்த கம்யூனிச சிந்தனைகளும் போராட்டங்களும், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் போராட்டங்களும் மார்ட்டின் லூதர் கிங் ,மல்கம் எக்ஸ் போன்றவர்களின் வழிநடத்தல்களும்… என அறுபதுகள் போராட்டங்களில் மூழ்கிருந்த காலங்கள். ஆமெரிக்க நிறவெறியின் தீண்டாமையை ஒத்தது சாதியத் தீண்டாமை. அவை கொந்தளிப்பான போராட்டங்களாகவும் இருந்தன.
இதன்போதே சண்முகதாசன் முற்றவெளி கூட்டத்தில் பேசியபோது.
புகழ்பெற்ற ஆபிரிக்க நீக்ரோ பாடகர் ‘போல் பொப்சனுக்கு’ அவரது தமையனார் சொன்னார் «ஒருபோதும் அடிபணிந்து போகாதே. எதிர்த்து நின்று அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக அடி.அவர்கள் படிப்பினையைப் பெற்றதும் விசயங்கள் வித்தியாசமாக இருக்கும்» என்றார்.
உன்னைத் தாக்கவருபவனை நீ திருப்பித் தாக்கு என்றார் சண்முகதாசன் . சாதியப் போராட்டத்தில் அவரின் நிலைப்பாடு வன்முறையை தாக்குதல் நிலையிலன்றி எதிர்த்தாக்குதல் நிலைக்குள் மட்டுப்படுத்தியதாக இருந்தது. போராட்டமும் அவ்வாறேதான் நிகழ்ந்தது. சாதிவெறி பிடித்த உயிரழிவுகளை ஏற்படுத்துகிற ஊர்ச்சண்டியர்கள் சிலர் வலிந்து தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர் என்பதும் உண்மை. (இந்த எதிர்த் தாக்குதல் அணுகுமுறையை மட்டும் தேசியவிடுதலைப் போராட்டத்தில் பிரதியீடு செய்ய முடிந்திருக்குமா என்பது விவாதத்துக்கு உரியது)
அதேநேரம் எப்போதுமே ஆட்சி அரசியல் அதிகார மையங்களில் அரசியல் நகர்வுகளை செய்தபடியே இந்த வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் படிப்பறிவு மட்டுமல்ல, அரசியல் அறிவும் பெற்றிருந்ததும் அதற்கு ஒரு காரணம். அவர்களின் முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய பிள்ளைகளின் கல்விக்காக அரசு 19 மகாசபைப் பாடசாலைகளை நிறுவப்பட்டன. சோல்பரி ஆணைக்குழுவுடன் நேரில் சந்தித்து பேசினர். சேர்.பொன் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், ‘அடங்காத் தமிழன்’ சுந்தரலிங்கம் என கொழுத்த சாதிவெறியர்களை மேவி இவர்கள் செயற்பட வேண்டியிருந்தது. தவறுகள் நிகழ்ந்தாலும் கணிசமானளவு சோரம் போகாமல் இருந்தனர். பெரும்பாலான வெகுஜன அமைப்புகளும் தனிநபர் தலைமை என்பதை விடவும் கூட்டுத் தலைமைபோல் செயற்பட்டார்கள். விட்டுக்கொடுக்காத போராட்டத்தில் நின்றனர். எல்லாப் போராட்டங்களிலும் ஊர்வலங்களிலும் அவர்களே முன்னுக்கு நின்றனர். தாக்குதலுக்கு உள்ளாகினர்.
இவ்வாறான ஒரு செழுமைமிக்க வெகுஜன அமைப்புகளின் வகிபாகம் எவளவு முக்கியமானது என்பதற்கு இதைவிட ஒரு முன்னுதாரணத்தை இலங்கை வரலாற்றில் காட்ட முடியாது. சாதியம் பற்றிப் பேசுவதையே தமது வளவாக சொந்தம் கொண்டாடுபவர்களும், வெள்ளாள சாதியில் பிறந்ததிற்காகவே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்கும் ‘வெள்ளாளர்களை’ புறந்தள்ளி வாய்வீசுவதும் என சாதியவாதங்களுக்கு இட்டுச் செல்கிறவர்களால் இந்த வரலாற்றை கொண்டாட முடிகிறதே தவிர அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாக இல்லை.
பெண் ஒடுக்குமுறை சார்ந்து இவ்வாறானதோர் செழுமை மிக்க வெகுஜன அமைப்புப் போராட்டங்கள் நிகழ்ந்திருக்குமானால் சமூகத்தின் அகவளர்ச்சி வேறுமாதிரியாக இருந்திருக்கும். இன்றைய ஆயுதப் போராட்டத் தோல்வியின் பின் பெண்போராளிகளை ஒரு பொதுமகளின் நிலைக்குக் கீழும் தள்ளிய அவலவரலாற்றை நாம் தரிசித்திருக்க மாட்டோம். வெறும் சட்டங்களாலோ, தண்டனைகளாலோ, அல்லது கண்டும்காணாமல் போய்க்கொண்டிருப்பதாலோ சாதி மற்றும் பெண் ஒடுக்குமுறைகளை சமூகத்திலிருந்து நீக்கிவிடலாம் என கனவுகாணமுடியாது. பண்பாட்டு அடையாளங்களினூடு பல நூற்றாண்டு வேர்களைக்கொண்ட இந்த ஒடுக்குமுறைகளை படிப்படியாக இல்லாமலாக்குகிற ஒரு செயல்முறை தேவைப்படுகிறது. அதற்கு பொருத்தமான களங்களில் வெகுஜன அமைப்புகளுக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. அது வெற்றிடமாவே உள்ளது.
- ரவி (30032017)
*
குறிப்பு:
இந்த உரையாடல் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட இரு நூல்களையும் முன்வைத்து சொல்லப்பட்ட எனது கருத்தின் ஒரு பகுதிதான் இது.
அந்த நூல்கள்
1. வெகுஜனன்- இராவணா எழுதிய
“இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்”
2. கலாநிதி ந.இரவீந்திரன் எழுதிய
“சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம்.”
.
முதலாவது நூல் சாதியம் பற்றிய தெளிவான தரவுகள் ஆய்வுகளுடன் எழுதப்பட்டிருக்கிறது.
இரண்டாவது நூல் சாதியத்தை கோட்பாட்டுத் தளத்தில் விரிவாக எடுத்துச் செல்கிற நூல்.இந்த இரு நூல்களும் ஒவ்வொருவரினதும் நூலகத்தில் இருக்கவேண்டியவை என்பேன்