சப்ளினின் உலகம்

DSC00286
சுமார் 20 வருடங்களுக்கு முன் எஸ்.வி ராஜதுரை சுவிசுக்கு வந்திருந்தபோது சார்ளி சப்ளின் வாழ்ந்த வீட்டை நோக்கிய (300 கி.மீ) பயணத்தை மேற்கொண்டோம். அந்த வீடு மிக உயரமான மதிலுக்கு பின்னால் மறைந்திருந்தது. பெரும் மரங்கள் ஏதோவொன்றை பொத்திவைத்திருப்பது மட்டுமே தெரிந்தது. உள்ளே போக முடியாது. எதையும் பார்க்க முடியாது. வீடாகவே அது இருந்தது. எஸ்விஆருக்கு அது பொருட்டாக இல்லை. சார்ளி சப்ளின் நடந்த இந்த வீதியில் நானும் நடக்கவேணும் என்றபடி அங்குமிங்குமாக ஒருவித ஆகர்சிப்புடன் நடந்தார். அதை இப்போ அவர் பார்க்க நேர்ந்தால் ஒருவேளை சப்ளின் வாழ்ந்த அந்த வளவினுள் உருண்டுபுரளவும் கூடும்.
இருபதாம் நூற்றாண்டின் இந்த மாபெரும் மக்கள் கலைஞன் நம்மில் பலரையும் இவ்வாறேஆதர்சித்து நிற்கிறான்.

1840 இல் கட்டப்பட்ட இந்த விலாவை (villa) 1952 மார்கழியில் சார்ளி சப்ளின் வாங்கினார். 1977 இல் அவரின் இறப்பை அடுத்து அவரது மனைவி அங்கு வாழ்ந்தார். அவரும் (1991) இறந்துபோகவே அங்கு வாழ்ந்துவந்த அவரது இரு பிள்ளைகளும் இந்த வீட்டை சார்ளி சப்ளின் நூதனசாலை அமைப்புக்கு (Charlie Chaplin Museum Foundation) வழங்க சம்மதித்தனர். 2002 இல் நூதனசாலைக்கான திட்டம் முகிழ்த்தது.
2008 இல் லக்சம்பேர்க் முதலீட்டு நிறுவனமொன்று (Genii Capital) இந்த நூதனசாலையின் எதிர்கால திட்டத்தை ‘பாதுகாக்கும்’ நோக்குடன் சப்ளினின் வீட்டை Charlie Chaplin Museum Foundation இடமிருந்து வாங்கியது. சப்ளினின் intellectual properties க்கும் பொருட்களுக்கும் உரிமத்தை எடுத்துக்கொண்டுள்ள பிரெஞ்சுக் கம்பனி (Compagnie des Alpes/Grévin) மற்றும் நெஸ்லே (Nestle) போன்ற பல்தேசிய கம்பனிகளின் இடையீடுகள் பேரம்பேசல்களுடன் சுமார் 15 ஆண்டுகள் இழுபட்டு 2013 இல் இந்த நூதனசாலைக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகின. 60 மில்லியன் பிராங்குகள் செலவுடன் பூரணப்படுத்தப்பட்டு 2016 ஏப்ரல் 17ம் திகதி சப்ளினின் 127 வது பிறந்தநாளன்று திறக்கப்பட்டது.
விரிந்து நீண்டு பரவியிருக்கும் ஏரி (Geneve Lake), Alps மலை, திராட்சைத் தோட்டமென அழகுசூழ் இயற்கையில் (Vevey) அவனது 14 கெக்டர் நிலத்தில் அமைந்திருக்கிற விலா (Villa) இப்போ சப்ளினின் நூதனசாலையாக (Museum) மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடம் (2016) இலைதளிர் காலத்தில் திறக்கப்பட்ட புதுவாசனையுடன் இந்த கலைவாசலினுள் புகுந்தபோதும் சரி, அதனுள் சுற்றிப் பார்த்போதும் சரி சப்பிளின் நம்மோடேயே வந்துகொண்டிருந்தார். எத்தனை முறை பார்த்தாலும் நிறுத்திவைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து அனுப்புகிற அவனது ஆளுமையின் அரவணைப்புடன் சுமார் 3 மணித்தியாலம் கரைந்துபோனது.
(1952-1977) 25 வருட காலப் பகுதியில் அவன் இந்த வீட்டில்வாழ்ந்தான் வாழ்ந்தான். முக்கியமான பல படங்களை இந்தக் காலப் பகுதியில் எடுத்தான். நிலக்கீழ் அறை கலைகளின் பொக்கிசமாக திரைத்துறைசார் கருவிகளோடும் scenography அமைவியலோடும் சிறியதோர் கலையுலகாக இருந்திருத்தல்கூடும் என தெரிகிறது.
இவ்வாறான கலைஞனிடம் எவளவு தொகையான கலைசார் பொருட்கள் இருந்திருக்கும் அவையெல்லாம் காணக்கிடைக்குமா என்ற ஏக்கம் வெளியே வந்தபோதும் தீர்ந்துபோகாமல் விட்டிருந்தது. இந்தக் குறையை சப்ளினினது கறுப்பு வெள்ளை படக்காட்சித் துண்டுகள் மூலைமுடக்குகளிலும், அமைக்கப்பட்டிருக்கிற திரையரங்கிலும், சுவர்களிலும் நவீன தொழில்நுட்பம் ஈடுசெய்ய இடையறாது முயற்சிசெய்துகொண்டிருக்கிறது.
1977 இல் அவன் மரணித்து இன்று 46 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது இந்த மாபெரும் கலைஞனுக்கு ஒரு மியூசியத்தை அமைக்க. அவன் இரண்டாம் உலகப் போரின்போது சோவியத்தை ஆதரித்ததால் ஒரு “கம்யூனிஸ்ட்” என விழிக்கப்பட்டு அல்லது ‘குற்றஞ்சாட்டப்பட்டு’ அமெரிக்காவாலும் பிரித்தானியாவாலும் வெறுக்கப்பட்டவன். அமெரிக்காவில் ஒரு பிரித்தானியப் பிரசையாக வாழ்ந்த சப்ளின் சுவிசுக்கு 1952 இல் வந்துசேர்ந்தான். இந்த “கம்யூனிஸ்ட்” என்ற வார்த்தை 46 வருடங்களை இந்தக் கலைஞனுக்கான மியூசியத்தை அமைத்து கொண்டாட முடியாதபடி ஆக்கியதா என்ற கேள்வி எழவே செய்கிறது.
லெனின் அகதியாய் சூரிச் யோசப் வீதியில் (Joseph Strasse) இல் வாழ்ந்த இல்லமோ அவர் பாவித்த பொருட்களோ எந்த அடையாளமுமற்றுப் போனது. வரலாற்றை அசைத்த இந்த மனிதர்களை ஒரு நாடு கொண்டாடக் காட்டிய தயக்கம் வேறுபாடுகளை அங்கீகரித்து செயற்படுகிறதாக சொல்லப்படுகிற ஜனநாயகத்தின்மீதான ஒரு கறைதான்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி அவர்கள் வாழ்வார்கள் என்பதை குறிப்புணர்த்துகிற விதமாக பெருந்திரளான பார்வையாளர்களால் மியூசியம் வழிந்து நிறைந்துகொண்டிருந்தது வியப்பை அளிக்கத் தவறவில்லை. மீண்டுமொருமுறை நீ வருவாய் என்பதுபோல தனது கைத்தடியின் மாதிரியை அடையாளமாக என்னிடம் தந்து அனுப்பியிருக்கிறான், அந்த மாபெரும் கலைஞன்!
31.12.2016

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: