இப்போதான் எனது நண்பர் ஒருவரை சந்தித்து பேசிவிட்டு வந்தேன். «மாவீரர் தினத்துக்கு போகயில்லையா» என கேட்டேன்.
அதற்கு காரணம் உள்ளது. அவர் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றில் பயிற்சியாளராக இருந்தவர். இப்போ சுவிசில் குடும்ப வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
«நான் போகவில்லை. மாவீரர்களின் பெயரிலை வியாபாரம்தான் நடத்துறாங்கள். அங்கை எத்தினை சனம் கஸ்ரப்படுகுது. போராளிகள் படுற பாடு. பார்த்தியோ தமிழினியின்ரை அம்மா நல்லூர்க் கோயிலிலை கடலை வித்து சீவிச்சதை..» என்று தொடர்ந்து கொண்டிருந்தார்.
அவர் ஒருபோதும் சுவிசில் புலிகளுடன் இணைந்து செயற்பட்டவரில்லை. ரெலோவை புலிகள் அழிக்கத் தொடங்கிய 80 களின் கடைசிப் பகுதியில் அவர் இயக்கத்திலிருந்து வெளியேறியிருந்தார். அவரது பயிற்சி முகாமிற்கு அருகில் சுமார் 15 ரெலோ இயக்கப் போராளிகளை கொண்டுவந்து அடைத்து வைத்திருந்தார்கள். அவர்கள் தப்பியோடாமல் கவனமாக பார்த்துக்கொள்ளும்படி
நண்பருக்கு சொல்லிவைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கொல்லப்படுதல் உறுதி என தெரிந்துகொண்ட நண்பர் அவர்களை இரவோடு இரவாக தப்பியோட வைத்திருந்தார். அதற்கான மோசமான தண்டனையையும் அவர் அனுபவித்தார்.
«இதற்கு உனக்கு மரணதண்டனைகூட கிடைக்கலாம் இல்லையா. அப்படியிருந்தும் எந்தத் துணிவில் இப்படி செய்தாய்» என கேட்டேன். «செத்தால் நான் ஒருத்தன்தானே. தப்பிப் போனது 15 உயிர்கள். அவங்களும் விடுதலைக்கு என்று நம்மைப்போலை போராட வந்தவங்கள்தானே.» என்றான்.
ஒரு போராளிக்கான உயர்ந்த பண்பை அவனில் நான் கண்டேன்.
இப்போ நான் யோசித்துப் பார்க்கிறேன். அவன் அந்த பதினைந்து பேரினதும் மரணத்துக்கு பங்காளனாக இருந்திருந்து.. பின்னரான காலங்களில் ஒரு தாக்குதலில் உயிரை விட்டிருந்தால் அவன் மாவீரர் என கொண்டாடப்பட்டுக் கொண்டிருப்பான் அல்லது இறுதிவரை இயக்கத்தின் உறுப்பினராக இருந்திருந்தால் போராளி எனப்பட்டிருப்பான். இன்று?.
ஓர் உயர்ந்த போராளியப் பண்புகொண்ட அவன் இன்று ஒரு சாமான்யன்.
அப்போ நாம் யாரை போராளி என்கிறோம்? யாரை மாவீரர்கள் என்கிறோம்?
* * *
முள்ளிவாய்க்கால்வரை ஆயுதத்துடன் இருந்து பின் மௌனித்து இராணுவத்திடம் பிடிபட்டு சித்திரவதைப்பட்டு புனர்வாழ்வு முகாம் அது இது என்று அலைந்து அங்கங்களை இழந்தவர்களாக மிக மோசமான வாழ்நிலையில் இருக்கும் புலிகளின் போராளிகள் இப்போ “முன்னாள் போராளிகள்” என அழைக்கப்படுகிறார்கள். முன்னாள் இராணுவ அதிகாரி, முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி, முன்னாள் சனாதிபதி … என்பது போல “முன்னாள்” என்ற அடைமொழிக்குள் தப்பிப்பிழைத்த போராளிகளும் வீழ்த்தப்பட்டார்கள்.
அப்போ போராளிகள் என்பது யாரை? அதற்கு இயக்க உறுப்பினராக இருத்தல் ஒன்றே போதுமானதா?
இவர்கள் தாக்குதல்களில் இறந்திருந்தால் மாவீரர்கள் என கொண்டாடப்படுவர். அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். அதனால் அவர்கள் கொண்டாடப்படுவதில்லை. வாழ்வாதாரங்களைத் தொலைத்து இன்று நிர்க்கதியாக அவர்கள் விடப்பட்டதின் அரசியலில் ‘மாவீரர்’ என்பது பிம்ப கட்டமைப்பாகவே தெரிகிறது.
போராளி என்ற பதத்துக்குள்ளிருந்து பிதுக்கியெடுத்து கட்டப்பட்டிருக்கிற பிம்பமே ‘மாவீரர்’ என்பது.
இந்த (இயக்க) அமைப்புசார் அரசியலில் அவர்கள் செத்துத் தொலைந்திருக்க வேண்டும் என்ற உள்மனவோட்டம் வக்கிரமாக சுவறுகிறதா எமக்கெல்லாம்!
இவளவு பணச்செலவிலும் கொண்டாட்ட வடிவிலும் கொட்டுகிற பணத்தை தப்பிப் பிழைத்திருக்கிற போராளிகளின் வாழ்வை மேம்படுத்த ஏன் உதவக்கூடாது. இந்த (மாவீரர்) பிம்பக் கட்டமைப்பு மனநிலை கொண்ட மனிதர்களை உருவாக்குகிற இந்த பெருமெடுப்புகள் யாருக்குத் தேவை?.
இதை புரியமுடியாதவர்களாக அல்லது மாவீரர் பிம்ப வெளிக்குள்ளிருந்து வெளியே வர முடியாதவர்களாக நீங்கள் அவதிப்பட்டால் ஒரே வழி வன்னிக்குள் (முன்னாள் !) போராளிகளை நேரில் சென்று பாருங்கள். உரையாடுங்கள். பதில் கிடைக்கும்.
25222016