– வாசனைக் குறிப்பு
Jiang Rong
சீன எழுத்தாளரான ஜியாங் ரோங் 2004 இல் வெளியிட்ட நாவலை தமிழில் சி.மோகன் அவர்கள் 2012 இல் «ஓநாய் குலச்சின்னம்» என மொழிபெயர்த்திருக்கிறார். நண்பர் சுரேசின் மூலமாக இந் நாவலை வாசிக்கிற ஆர்வம் மேலிட்டது. எமது அடுத்த «வாசிப்பும் உரையாடலும்» நிகழ்ச்சியில் (13.10.2016) இந் நாவல் குறித்தான உரையாடலை மேற்கொள்ள இருக்கிறோம்.
ஓநாய்கள் பற்றி நமக்கு தரப்பட்டுள்ள அறிவு தவறானது என்பதை இந் நாவலை படிக்கிறபோது உணர்ந்தேன். அதன் உண்மைத்தன்மையைத் தேடியபோது ஓநாய்களுடன் ஏழு வருடங்கள் காட்டில் வாழ்ந்து கழித்த அமெரிக்கத் தம்பதிகளின் (Jim and Jamie Dutcher) ஆவணப்படத்தை காண நேர்ந்தது.https://www.youtube.com/watch?v=d36MK94POaI. (The hidden life of Wolves என்ற தலைப்பில் அவர்கள் நூலொன்றை எழுதியுள்ளனர்)
தாய் தகப்பன் பிள்ளைகள் என குடும்பமாக வாழும் ஒரு முறைமை ஓநாய்களிடம் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. குடும்பமாக வேட்டையாடுவது, தமக்குக் கட்டுப்படாத குடும்ப உறுப்பினர்களை குடும்பத்திலிருந்து விலக்கி வைத்துவிடுவதான ஒரு நடைமுறை என்பன அந்த ஒழுங்கமைவுள் காணப்படுவது இன்னும் ஆச்சரியமளிக்கிறது.
மேய்ச்சல் நிலத்தை (விளைச்சல் நிலத்தையல்ல) தமது ஆன்மாவாகக் கருதுகிற -சீனாவின் எல்லைக்குள் இருக்கிற- மங்கோலியப் பகுதியான ஓலோன்புலாக் இல் நிகழுகிற கதை இது. மாவோவின் கலாச்சாரப் புரட்சியின்போது மாணவர்களை கிராமப்புறங்களுக்கு கல்விபுகட்டலுக்காக அனுப்புகிற நடைமுறை இருந்தது. அப்படி போன ஒரு சீன மாணவனின் கதை அல்லது புனைவு இது.
இயற்கையுள் மனிதஜீவியும் உள்ளடங்குவதும் இந்த வாழ்முறைச் சுழற்சி ஒன்றோடொன்று உடன்பட்டும் முரண்பட்டும் எவ்வாறு இயங்குகிறது என்பதும் நாவலின் உள்ளார்ந்த கோட்பாடாக இருக்கிறது. மங்கோலிய மேய்ச்சல்நிலம் சார்ந்த நாடோடிக் கலாச்சாரமும், அது அழித்தொழிக்கப்பட்ட வரலாறும் நாவலின் களம். இந்த நாடோடிக் கலாச்சாரத்தின் வாழ்வு மிகுந்த அழகியலுடன் சொல்லப்பட்டிருக்கிறது.
கற்பிதப்படுத்தப்பட்ட ஓநாய் பற்றிய கதையாடல் அவனிடம் தகர்ந்துவிடுகிறபோது, ஆர்வத்துடன் ஓநாய்க்குட்டியொன்றை களவாடி எடுத்து வளர்க்கிறான் நாயகன் ஜென். ஓநாய் பற்றிய அறிதலை வளர்த்துக்கொள்வதற்காக அதை தான் செய்வதாக சொல்கிறான். ஓநாயையும் வேட்டைநாயையும் கலவி செய்வதன் மூலம் ஓநாய்களுடன் சண்டையிடக்கூடிய வீரியம் மிக்க வேட்டைநாய்களை உருவாக்க முடியும் என்கிறது அவனது அறிவு. இயற்கைக்கு விரோதமான இந்த எண்ணம் மங்கோலிய நாடோடிகளுக்கு ஆத்திரமூட்டக்கூடியது. ஆனாலும் படிப்படியாக விளைச்சல்நில (விவசாய) சீன மனிதன் என்பதிலிருந்து மேய்ச்சல் நிலத்தை நேசிக்கிற ஓநாய்களை நேசிக்கிற மங்கோலிய மனிதனாக மாறிக்கொண்டிருந்தான் ஜென்.
இந்த இயற்கையின் வாழ்முறைச் சுழற்சிக்குள் இயங்கவேண்டிய அந்த விலங்கை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிற ஒரு மிகச்சிறிய செயலானது அவனதும் அந்த ஓநாய்க்குட்டியினதும் வாழ்க்கையில் எவ்வாறு சிக்கல்களை உருவாக்குகிறது என்பதையும் அந்த விலங்கினத்தின் இயற்கைசார் வாழ்வு எவ்வாறு இழக்கச்செய்யப்படுகிறது என்பதையும் மிக நுண்மையாக எடுத்துச் சொல்கிறது நாவல். சுற்றுச்சூழல்களை வர்ணனையாக பாவிப்பதற்கும் அப்பால் அதன் உள்ளார்ந்த (சுற்றுச்சூழல்) அரசியலை இந் நாவலில் உள்ளோட்டமாகத் தரிசிக்க முடிகிறது.
மேய்ச்சல் நிலத்தைப் பாதுகாக்கும் குலச்சின்னமாக மங்கோலியர்கள் ஓநாய்களை வழிபடுகிறார்கள். மேய்ச்சல்நிலத்தை அழிக்கக்கூடியதான (வகைதொகையின்றி மேய்ச்சலில் ஈடுபடும் இயல்புடைய) மான்களினதும் மற்ற விலங்கினங்களினதும் பெருக்கத்தை ஓநாய்கள் கட்டுப்படுத்துகின்றன. அதன்மூலம் தமது ஆன்மாவான விளைச்சல் நிலம் பாதுகாக்கப்படுகிறது என அவர்கள் நம்புகின்றனர். அதேநேரம் ஓநாய்களின் மிதமிஞ்சிய பெருக்கத்தை, அதன்மூலமான வளர்ப்பு மிருகங்களின் அழிவை கட்டுப்படுத்த தாம் வழிபடும் குலச்சின்னமான ஓநாய்களை அவர்கள் வேட்டையாடுகிற நிலைமையும் இருக்கிறது. இயற்கையின் சமநிலையினை குலைத்துவிடாதபடி அவர்களது ஓநாய் வேட்டையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது.
மேய்ச்சல் நில பண்பாட்டு பழக்கவழக்கங்கள் -இயற்கையை பகிர்ந்துண்டு வாழ்தல் ஒன்றில் இன்னொன்று சார்ந்து வாழுதல் என்பன- இயற்கையின் சமநிலைகுலையாது இயங்குகிறது. அதற்கு நாடோடி வாழ்க்கைமுறை அமைவாக இருக்கிறது. இந்த மேய்ச்சல்நிலங்கள் விளைச்சல் (விவசாய) நிலங்களாக மாற்றப்படுகிறபோது இயற்கையோடான முரண் தொடங்கிவிடுகிறது. அது இயற்கையை கட்டுப்படுத்துதல், இயற்கைக்கு முரணாக செயற்படல், அழித்தொழித்தல்.. என தொடர்ந்து இன்று காலநிலை குழப்பநிலையிலிருந்து இயற்கைப் பேரழிவுகள்வரை வந்துநிற்கிறது.
மனிதனால் இயற்கையை ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ளவும் முடியாது கட்டுப்படுத்தவும் முடியாது என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இயற்கை பற்றி எமக்கு தரப்பட்டிருக்கிற அறிவு ஒருவித கற்பிதமாகவே பார்க்க முடிகிறது. ஓநாய் பற்றி எமக்குத் தரப்பட்டிருக்கிற அறிவை இந் நாவல் மட்டுமல்ல ஓநாயோடு வாழ்ந்து காட்டிய ஆய்வாளர்களின் தகவல்களும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
மேய்ச்சல்நில மங்கோலிய குதிரைகள் விளைச்சல்நில சீனர்களின் குதிரைகளை விடவும் பலம்பொருந்தியதாகவும் செயற்திறன் வாய்ந்ததாகவும் இருப்பதற்கான காரணம் அவர்கள் ஓநாய்களிடமிருந்து தம்மை பாதுகாப்பதற்கான போராட்டத்தினூடு (பரம்பரை பரம்பரையாக) தோன்றிக்கொண்டிருப்பதேயாகும் என்கிறார் இன்னொரு முக்கிய பாத்திரமாக வரும் முதியவர் பில்ஜி. தம்மை தக்கவைப்பதற்கான போராட்டத்தினூடு மரபணு மாற்றத்தினூடு அவை வீரியம் மிக்கவையாக உருவாகின்றன. எனவே வன்முறை சார்ந்த எமது புரிதலில் அல்லது கோட்பாட்டில் தம்மைத் தகவமைப்பது, இருப்பைத் தக்கவைப்பது என்பன பற்றிய புரிதல்களை சுண்டிவிடுவதாக இந்த நாவல் இருக்கிறது. வன்முறையின் மீதான ஒட்டுமொத்த நிராகரிப்பை அது கேள்விகேட்கிறது என சொல்லலாம்.
கலாச்சாரப் புரட்சியின் மீதான விமர்சனம் இந் நாவலினூடு இழையோடுகிறது. மேய்ச்சல் நிலத்தை விளைச்சல் நிலமாக மாற்றிமைப்பது அதற்குத் தடையாக இருக்கும் ஓநாயை துடைத்தழிப்பது என்று தொடர்கிற பாத்திரங்களினூடு இந் நுண்மையான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இதற்காக அந்த மண்ணின் மைந்தர்களாக கலந்திருந்த அனுபவம் வாய்ந்த பில்ஜி, உல்ஜி போன்ற முதிவர்களின் அறிவும் அனுபவமும் உதவியும் பெறப்படுகிற முரண்கொள்ளாத அசைவியக்கம் இந்த ஓநாய் அழித்தொழிப்பில் புதிய விளைச்சல்நிலங்களை உருவாக்கதல் வேட்டையாடுதல் என எல்லாவற்றிலும் அதிகாரிகளால் கைக்கொள்ளப்படுகிறது. நேரடி வன்முறையற்ற இந்த அணுகுமுறையை (பகைமுரண்பாடாக அன்றி நட்பு முரண்பாடாக வரைவுசெய்து) ஒருவர் கலாச்சாரப்புரட்சியின் ஜனநாயக அம்சமாக விளக்கவும் கூடும்.
இந்த ஓநாய் அழித்தொழிப்பிற்கான ஆயுத பாவனை, இராணுவ வண்டிகளின் வருகை (குளிர்தாங்கும் ஆடைகளுக்கான) ஓநாய்த் தோல் மோகம், இறைச்சி உற்பத்தி மட்டுமன்றி, விவசாயிகள் வருகை, குடியிருப்புகள், அவர்களின் பழக்கவழக்கங்கள், செயற்பாடுகள் எல்லாமும் இந்த இயற்கையை எவ்வாறு இடையூறு செய்துவிடுகிறது என்பதை நாவல் சொல்லிச் செல்கிறது.
குறைந்த படையணிகளைக் கொண்ட மங்கோலியா தன்னைப் பேரரசாக நிறுவவதற்கான போர் உத்திகளை ஓநாயின் தாக்குதல் முறைமைகளிலிருந்துதான் பெற்றது என்கிறார்கள். அவ்வாறான தாக்குதல்களை ஓநாய்கள் நிகழ்த்தும் விதம் நாவலில் இயற்கைசார் சாகசத்துடன் சொல்லப்படுகிறது.
ஓநாய்களைப் போன்றே போர்க்குணம் கொண்ட மனிதர்களாக ஓலான்புலாக் நாடோடி மனிதர்களும் இருக்கிறார்கள். உயிரைக்கொடுத்தாவது தமது நிலைத்தலுக்காகப் போராடுகிற இந்த துணிச்சல்மிக்க மனிதர்களின் ஒரு வகைமாதிரியாக குதிரை மேய்ப்பனான பட்டு வந்துபோகிறான். அவனது மரணப் போராட்டம் புயற்காற்றும் பனிப்பொழிவும் குளிரும் சிதைத்த இரவொன்றில் குதிரைக் கூட்டத்தை ஓநாய்களிடமிருந்து காப்பாற்றுவதில் நிகழ்கிறது. காயத்தோடும் இறுதிப் பலத்தோடும் சுழன்றடித்துக்கொண்டிருந்த பட்டுவின் குதிரையோடும் ரோர்ச் வெளிச்சத்தோடும் நாவலின் வரிகளுக்கிடையில் சிக்குப்பட்டு அலைக்கழிய வைக்கிறார் நாவலாசிரியர். இறுதியில் பட்டுவை மறக்கமுடியாத இன்னுமொரு பாத்திரமாக விட்டுச் செல்கிறார்.
670 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் பக்கங்கள் உருகி வாசனையை மிதந்து செல்ல வைக்கிறது.
இந் நாவலை (கதையை சிதைத்துவிடக்கூடியதான சில முக்கிய மாற்றங்கள் செய்து) 2015 இல் சீனாவில் Wolf Totem என்ற பெயரில் திரைப்படமாக்கியுள்ளனர். திகில் (adventure) என்று வகைப்படுத்தலுக்குள் இது படமாக்கப்பட்டுள்ளது. நாவல் மனதில் விரித்துச் செல்கிற இயற்கையின் உள்ளிழுப்பை மோசமான கிராபிக் காட்சிகளினூடாக அழித்தொழிக்கிறது படம். நாவலை வாசித்துமுடித்தபின் இத் திரைப்படத்தைப் பார்த்தபோது நிறமுதிர்ந்த வண்ணத்துப் பூச்சி என் முன்னால் வீழ்ந்து கிடந்தது.
ஓலோன்புலாக் புல்வெளி மட்டுமல்ல, இதன் உயிர்ப்பான மான்கூட்டங்கள், பறவைகள், அன்னப்பட்சிகள், மர்மோட்டுகள், முயல்கள், நரிகள் என்பவற்றின் வாழ்வியல் முறைகளும், வேட்டை முறைமைகளும், ஓநாய்களின் அதிரடி நடவடிக்கைகளும் உத்திகளும் புதிய வாசிப்பு அனுபவமாகப் படிந்துவிடுகிறது. வேட்டை நாய்களின் குரைப்பும், ஓநாய்களின் ஊளையும், ஜென் வளர்த்த ஓநாய்க் குட்டியின் -ஊளையுமற்ற குரைப்புமற்ற பிறழ்வான- பரிதாபத்துக்குரிய ஒலியெழுப்பலும் கேட்டபடியே இருக்கிறது.
(பிற்குறிப்பு: இந் நாவலை வாசிக்க விரும்புபவர்கள் இத் திரைப்படத்தை முதலில் பார்க்காமலிருப்பது நல்லது என்பது என் அபிப்பிராயம்)
ஓநாய் குலச்சின்னம் – ஜியாங் ரோங்.
தமிழில் சி.மோகன்,
வெளியீடு அதிர்வு பதிப்பகம்.
– ரவி (28102016)