
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் அதை
எனது சுடரொளியில் நீ கவனிப்பதேயில்லை.
உனது முகத்தை நான் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
புறம்காட்டி நீ செல்கிறபோது அணிகிற முகமூடியை
நான் கண்டுகொண்டுவிடக் கூடாது என
எச்சரிக்கையுடன் இருக்கிறாய்.
தெரிகிறது.
என்னிடம் இருப்பது ஒரே முகம்தான்
சுடர்முகம்.
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் அதை
எனது சுடரொளியில் நீ கவனிப்பதேயில்லை.
குழந்தையொன்று கைவீசி நடக்கும் வீச்சுக் காற்றில்கூட
வளைந்து நெளியும் மென்மையுடன் நான் இருப்பதையோ
காற்றை உள்ளிழுத்து தாக்குமோர் ஊதலில்
தொந்தரவின்றி நான் அழிந்துகொள்வேன் என்பதையோ
பல சந்தர்ப்பங்களில் நீ மறந்துவிடுகிறாய்.
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் அதை
எனது சுடரொளியில் நீ கவனிப்பதேயில்லை.
எனது அழிவின் மையத்தில் மிஞ்சிவிடுகிற
சிறு சாம்பல் புள்ளியின் சூட்டில்
எனது வாசனையை நீ முகர்தல்கூடும்.
அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்
இருள் உனை சூழ்ந்திருக்கும்.
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் அதை
எனது சுடரொளியில் நீ கவனிப்பதேயில்லை.
– 24102016