(பான் பாய் சௌ அவர்களின் சிறைக் குறிப்புகள்)
// எதிர்காலத்தில் என்னைப் பின்பற்ற விரும்புபவர்கள் எவராக இருப்பினும் எனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். வேறு பாதையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். // – Phan Boi Chau
வியட்நாமின் மூத்த தலைமுறைப் போராளியான பான் பாய் சௌ இன் சிறைக்குறிப்புகளை வாசித்தபோது தலைமைப் பாத்திரம் வகிக்கும் ஒரு போராளி எப்போதுமே தன்னை ஒரு தொண்டனாக மனத்தளவில் வரித்துக் கொள்ளும் அசாதாரணமான நிலை அவரது எழுத்து முழுவதும் தொடர்கிறது. “வியட்நாம் மீட்புச் சங்கம்” (1912) என்ற அமைப்பின் தலைவராக இருந்தார் பான். அந்த அமைப்பு “வியட்நாம் மீட்பு இராணுவம்” என்ற அமைப்பையும் உருவாக்கியது.
ஓர் போராளியாக எழுத்தாளராக கவிஞராக வாழ்தவர் அவர். விடுதலை குறித்தான நூல்களை வெளிநாட்டிலிருந்தபோது எழுதினார். வியட்நாமுக்குள் அவை இரகசியமாக விநியோகிக்கப்பட்டன.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பிரான்ஸ், யப்பான், அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கு உட்பட்ட வரலாறு கொண்ட வியட்நாம் 1975 இல் விடுதலைபெற்ற சுதந்திர நாடாக மாறியது. கோசிமின் (1890-1969) இந்த இறுதி விடுதலையை வீரம்செறிந்த போராட்டத்தின் மூலம் நிகழ்த்தினார். இரண்டாம் உலக யுத்தத்தில் வீசப்பட்ட குண்டுகளை விடவும் அதிகமான (20 மில்லியன்) குண்டுத் தாக்குதலை செய்த அமெரிக்காவை கோசிமின் தலைமையிலான வியட்கொங் படைகள் வெறறிகொண்ட வலிநிறைந்த விடுதலை உலக விடுதலைப் போராட்டங்களுக்கு இன்றுவரை முன்னுதாரணமாகவே இருக்கிறது.
பான் பாய் சௌ (1867-1937) கோசிமின்னுக்கு முந்தைய தலைமுறையை சேர்ந்தவர். இவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி கோசிமின் புரட்சியைத் தொடர்ந்து வெற்றிகரமாக முடித்தார்.
பிரெஞ்சு காலனியத்துக்கெதிராக, அதன் மிகக் கண்காணிப்பான நிலைமைகளினூடாக உதிரிநிலையில்; தொடங்கிய பான் இனதும் அவரது நண்பர்களினதும் விடுதலையுணர்வு வியட்நாம் விடுதலையின் வித்தாக விழுந்தது.
பிரெஞ்சு காலனியாவதிகளின் கண்காணிப்பு நிலைமைகளுக்கூடாக யப்பான், பாங்கொக், கொங்கொங், சிங்கப்பூர், சீனா என இரகசியப் பயணங்களை மேற்கொண்டு ஓயாது வியட்நாமின் விடுதலைக்காக உழைத்தார் பான். ஆயுத உதவிக்காக ஜப்பானின் இடதுசாரி அமைப்புகளை நாடினார். பிறகு சீனாவையும் நாடினார். நம்பிக்கையளிக்கக்கூடியதாக தெரிந்த ஒளிக்கீற்று விரைவிலேயே மறைந்தும்போனது. பெரியளவில் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. திரட்டிய ஆயுதங்களும் வியட்நாமுக்குள் அனுப்பப்பட்டபோது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திடம் அகப்பட்டன. தேடுதல் வேட்டையில் போராளிகள் கைதுசெய்யப்பட்டனர். கொல்லப்பட்டனர்.
ஒரு சிறிய அமைப்புக்கு இதை எதிர்கொள்ள முடியாமல் போயிற்று. எல்லாமே தோல்வியில் முடிந்தன. ஆனால் வியட்நாமின் சுதந்திர வேட்கைக்கான கதவை வியட்நாம் மக்களிடம் திறந்துவிட்டதுதான் வியட்நாமின் விடுதலைக்கான அவரது மிகப் பெரிய பங்களிப்பாக இருந்தது.
அவரது யப்பான் பயணம் அறியாமையில் மூழ்கியிருந்த வியட்நாம் மக்களுக்கான அறிவின் தேவையை அவருக்கு உணர்த்தியதாயிருந்தது.
இந்த சிறைக்குறிப்பில் தன்னை சுயவிசாரணை செய்கிறார். தோல்வி என்பது படிப்பினைகளைத் தருவன என்பதையும், தோல்வி தவறுகளால் அல்லது பிழையான அணுகுமுறைகளால்தான் நேர்கிறது என்பதையும் அடிப்படையாகக் கொண்டது அவரது சுயவிசாரணை. தோல்வியை ஏற்றுக்கொள்வதிலும், அதற்கான காரணிகளையும், பாதகமான அம்சங்களையும், தம்மளவில் இழைத்த தவறுகளையும் மதிப்பிடுவதே வெற்றியை நோக்கி நகர்த்தவல்லது என்பது அவரது பார்வை. அந்த அடிப்படையில் அவரது எழுத்துக்கள் இருக்கின்றன. தன்னை கடுமையான சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார். இதை ஒழுக்கம் சார்ந்து தன்னடக்கமாக எடுத்துவிட முடியாது. அது அரசியல் பிரக்ஞை சார்ந்தது.
அவர் கூறுகிறார்,
« ஆயுதங்களை திரட்ட முடியாமல் போனவன் நான். இந்த மண்ணில் நிலைத்து நிற்கக்கூடிய திட்டங்கள் எதையும் நான் உருவாக்கவில்லை. வெறுங்கை முரடன் நான். என் பெயர் குறிப்பிட்டுக் கொள்ளும் படியாக எதுவுமற்ற பலவீனமானவன் நான். திறமை போதாது. இருப்பினும் நீண்ட பற்களையுடைய புலியுடனும் கூர்ந்த நகங்களையுடைய சிறுத்தைகளுடனும் போராட இன்னும் ஆயத்தமாக இருக்கிறேன்.
என் மனதைப் புரிந்துகொண்டோர் «எப்பேர்ப்பட்ட வீரன்» எனச் சொல்லி எனக்கு ஆறுதல் அளிக்கலாம். என் தவறுகளை மட்டுமே பார்க்கக்கூடிய மனதுடையவர்கள் «சரியான முட்டாள்» எனச் சொல்லலாம்.»
« தன் தேசத்தை இழந்த ஒரு மனிதன் நான். என் வாழ்க்கை குறிப்பிடத்தக்கதல்ல. நான் பெற்ற பட்டங்கள் எல்லாம் மோசமான தரம் கொண்டவை. நிலைமை மோசமடைந்ததிற்கும் நம் மக்களை பலவீனப்படுத்தியதற்கும் நான் காரணம்.» என்கிறார்.
« தொகுத்துச் சொல்வதானால், உண்மையிலேயே நான் முட்டாள். நான் தப்பிப் பிழைக்க நல்வாய்ப்பு இருக்குமானால,; அதற்குப்பிறகு புலிகளையும் சிறுத்தைகளையும் நான் சந்திப்பேன்» என்று தனது சிறைக் குறிப்பை எழுதி முடிக்கிறார்.
« எதிர்காலத்தில் என்னைப் பின்பற்ற விரும்புபவர்கள் எவராக இருப்பினும் எனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். வேறு பாதையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று கூற விரும்புகிறேன்» என்றார்.
ஒரு தலைமைக்குரிய ஆளுமை என்பது சுயதம்பட்டத்தில் இல்லை . தனது தவறுகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதில்தான் வெளிப்படுகிறது என்பதற்கு அசல் உதாரணம் பான் இன் இந்தக் கூற்றுகள்.
அவர் அடுத்த தலைமுறையின் (கோசிமின் நடத்திய) புரட்சிக்கு ஒரு விடுதலை வீரனின் குறியீடாக போராளிகளின் மனதில் இடம்பிடித்தவர்.
வன்முறையை அவர் மனத்தளவில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. «எதிர்காலத்தை திட்டமிட வழிவகையில்லாதவர்கள் கையாளும் முறையே வன்முறையும் தற்கொலையும்» என்கிறார். «ஆனால் சூழ்நிலைகள் என்னை தற்கொலைக்கு தள்ளுமானால் அப்போது நான் வன்முறை வழியில் சாவதையே விரும்புகிறேன். வன்முறை வழியில் வெற்றிபெற வாய்ப்பு ஆயிரத்தில் ஒரு பங்காக இருக்கிற சூழ்நிலையில், வன்முறையைக் கைவிடுவதைத் தவிர மதிப்புள்ள செயல் வேறு ஒன்றுமில்லை» என்கிறார்.
ஆயுதப் போராட்டத்தை தவிர்க்க முடியாமல் பின்பற்றும் ஒரு வழியாகப் பார்த்த அவர் ஆயுதப் போராளிகளின் மனம் வன்முறை என்ற ஒரே செயல்வடிவத்தையே «முட்டாள்தனமாக» பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதை மறுத்து, முட்டாள்தனத்தின் இடத்தில் அறிவை வைக்க வேண்டும் என்றார். அது குறித்து அவர் எழுதிய நூல் பரவலாக வியட்நாமில் இரகசியமாக பரிமாறப்பட்டது. அறிவை முன்வைப்பதில் அவரது செயற்பாடாக இளைஞர்கள் வியட்நாமிலிருந்து இரகசியமாக வெளியேறி வெளிநாடுகளில் கல்விகற்க ஊக்கமளித்தார். வுழிவகை செய்து கொடுத்தார்.
வன்முறையை தற்காலிகமான ஒன்றாக பார்த்த அவரது பார்வை அரசியலின் இடத்தில் அறிவை பிரதியீடாக வைத்ததாக புரிந்துகொள்ள முடிகிறது. அதற்கு அன்றைய காலகட்டத்தின் காலனிய சூழலில் காலனியவாதிகளின் அறிவதிகாரமும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர்களின் அறிவுக்கும் அடிமைப்பட்ட மக்களின் அறிவின்மைக்குமான இடைவெளி பான் பாய் சௌ வுக்கு உறுத்தலாக இருந்திருக்கிறது என கொள்ளலாம். அதேபோல் அறிவு என்பதை சமூகம் சார்ந்த அறிவாக அவர் வியாக்கியானப் படுத்தியிருக்கலாம். (நூலில் அதற்கான விளக்கம் ஏதும் இல்லை.)
« நம் நாட்டை மீண்டும் நம்வசம் கொண்டு வருவதற்கு பலமானதோர் அடித்தளம் இன்றியமையாதது. இல்லாவிடின் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்துவிட வேண்டும் என்பதை அந்நியர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்» என்கிறார்.
சீனாவில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1917 இல் விடுதலையானார். அதன்பின் சாங்காயிலிருந்து பான் அவர்களை இரகசியமாகக் கடத்திய பிரெஞ்சு உளவுப்படை அவரை கப்பல் மூலம் வியட்நாமுக்கு கொண்டுவந்தது. அவருக்கு மரணதண்டனையளிக்க பிரெஞ்சு காலனியம் எடுத்த முயற்சி பரவலான மக்கள் திரள் போராட்டங்கள், வெளிப்படையான பத்திரிகை விமர்சனங்கள் காரணமாக மாற்றப்பட்டது. பான் தனது வாழ்நாளின் எஞ்சிய காலம் முழுவதையும் நிரந்தர விட்டுக் காவலில் கழித்தார்.
(நூல் வெளியீடு: தமிழோசை பதிப்பகம், கோவை)
fb link: