பனி

நாவல்தானே ஓர் ஓட்டமும் நடையுமாக கடைசிப் பக்கத்தை எட்டிப் பிடித்துவிடலாம் என்ற எனது எதிர்பார்ப்பைப் பார்த்து ஓரான் பாமுக் புன்னகைத்திருத்தல் கூடும். ஒருவேளை அதற்கும் ஒரு படிமத்தையும் பனிச் செதிலிலிருந்து உருவி எடுத்துக் காட்டியுமிருப்பார் அந்த மனுசன். பனியை எத்தனைவகையான குறியீடாக, படிமமாக பொரித்துக் காட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு இது ஒன்றும் பெரிய விசயமல்ல.

மனிதஜிவியின் உள்மனக் கட்டமைப்பு ஒருபடித்தானதாய் இருப்பதில்லை. அது கலாச்சாரம், மத நம்பிக்கை, இனமானம், மொழிப்பற்று, பழக்கவழக்கம், நாகரிகம், ஒழுக்கம், நியமம் (norm), புனிதம், தியாகம்… என பல வடிவங்களில் உள்வாங்கப்பட்டு எல்லாத்தினதும் ஒத்திசைவான அல்லது எதிரெதிரான கலவையாகவும் தனித்திருத்தலாகவும் எல்லாம் உள்மனம் செதுக்கப்படுகிறது. இதன் பிரதிபலிப்பாக பனி நாவலின் முக்கிய பாத்திரமான “கா” மட்டுமல்ல, மற்றைய பாத்திரங்களும் ஒருபடித்தானதாக வாசகரிடம் உலாவர முடியாதபடி உருவாகியிருக்கின்றன.

orhan pamuk

Orhan Pamuk – நாவலாசிரியர், துருக்கி

நாவலில் தத்துவ விசாரணைகள் எவ்வாறு இழையோடவேண்டும் என்பதற்கு ஓரான் பாமுக் இன் பனி நாவல் சிறந்த உதாரணம்.வாசிப்பு நினைவு வழியில் விட்ட வரியைத் தேடி திரும்பவும் செல்ல வேண்டி ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் அதிகம். உணர்ச்சி அனுபவத்தைவிட(emotional experience), அறிவனுபவம் (intellectual experience) ஆழமான வாசனையை கோரிநிற்கிறது. தத்துவ விசாரணைகள் இதற்குள் இழையோடுவது அறிவனுப சுவாரசியமாக இருக்கிறது. இதற்கு தத்துவப் பலமும் உளவியல் அறிவும் ஓரான் பாமுக் என்ற நாவலாசிரியனுக்கு துணையாக இருந்திருக்கிறது.

அன்றேல் நாவலுக்குள் தத்துவ விசாரணை என்பது பொதுப்புத்தித் தளத்தில் எழும் கொசுறுத் தத்துவங்களால் ஆளப்பட்டுவிடும். இந்த அனுபவம் (தமிழ்) நாவல்கள் சிலவற்றை வாசித்தபோது கிடைத்துமிருக்கிறது. வாசகரோடு நாவலாசிரியர் பேசுகிற இடங்களில் நாவலாசிரியரின் ஒற்றைக் கருத்துநிலைச் சார்பானது வாசனையை (வாசகரை) புறந்தள்ளும் ஆபத்தைக் கொண்டுள்ளது. எனவே பன்முகங்களோடு இயங்கும் மனிதஜீவியின் உள்மன நிலைகளுக்குள் ஊடுருவுவதற்கு நாவலாசிரியரின் தன்முனைப்பு அழிப்பு மட்டுமன்றி, அவரது கருத்துநிலையும் ஆணிவேரற்ற கிளைகள்கொண்டதாக பன்முகத்தன்மை கொண்டதாக (உள்மனவெளிக்குள்) பரவ வேண்டும். உள்மனவெளிகளை உள் உடலுறுப்புகளினூடு காட்சிப்படுத்தவோ பேசவைக்கவோ முடியும் என நான் நம்பவில்லை. அதையும் சில நாவல்களின் வாசிப்பில் குறுக்கிட நேர்ந்திருக்கிறது.

snow-novel

பனி நாவலை வாசிக்கிறபோது எழுகிற அறிவனுபவம் கனதியானது. ஒருபடித்தாக பாத்திரங்களை உருவகிக்கத் துடிக்கும் வழமையான வாசிப்பு மனத்தை அது ஏமாற்றியபடி நகர்கிறது. எண்ணற்ற குறியீடுகளை உருவாக்கிக் காட்டும் பனி நாவலின் கடைசி வரிக்குள் குண்டை வைத்துவிட்டு போய்விடுகிறான், இந்த நாவலாசிரியன் ஓரான் பாமுக்.

“சன்னலை ஒட்டி அமர்ந்து வெளியெ பனியினூடே மங்கித் தெரியும் இந் நகரத்தின் கடைசிப் பகுதிகளின் கடைசி வீடுகளின் ஆரஞ்சு விளக்குகளை, கும்பலாக டிவி பார்த்துக்கொண்டிருப்பவர்கள் நிரம்பிய அலங்கோலமான அறைகளை வெறித்துக்கொண்டிருந்தேன். பனி மேற்கவிந்த கடைசி வீட்டுக் கூரைகளும், உடைந்த புகைபோக்கிகளிலிருந்து நெளிந்தபடி எழும் புகைச் சுருள்களும் என்னைவிட்டு விலகி பனிக்குள் மறைய… நான் உடைந்து பெருகத் தொடங்கினேன். “
//நான் உடைந்து பெருகத் தொடங்கினேன். //

ஆசிரியன் சிதிலமாகி காணாமல் போக ஒருதொகையான எண்ணங்களும் கதைகளும் வாசக வெளியெங்கும் பரவிக்கிடக்கிறது. உலகம் முடிவடைகிற இடம் என (இந் நாவலில்) வர்ணிக்கப்படும் “கார்” KAR நகரமும் அந்த மனிதர்களும் பனியும் நினைவுள் புதைந்துபோகிறது.

18ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற நாவல் இலக்கிய வடிவம்தான் முதன்முதலான உருவாகிய உலகமயமாக்கல் அதாவது இலக்கிய உலகமயமாக்கல் (Literary Globalisation) என்கிறார் ஓரான் பாமுக். நாவலானது உலகின் எந்த மூலையில் இருப்பவர்களாலும் தமது சூழ்நிலைமைகளுக்குள் வைத்து வாசிக்கப்படக் கூடியது என்கிறார். அதற்குள் இலக்கிய வகைகளின் எல்லா வடிவங்களையும் புகுத்த முடியும் என்பது அதன் வளத்தை எடுத்துக் காட்டுகிறது.

Novels are encyclopedic. Can put inside anything – Orhan Pamuk

வாசனைத் தாகமுள்ளவர்கள் தவறவிடக்கூடாத நாவல் பனி. 08.11.2015 அன்று சூரிச்சில் நடந்த “வாசிப்பும் உரையாடலும்-5” இல் “பனி” மிகக் காத்திரமானதும் சுவாரசியமானதுமான ஓர் உரையாடலை -நாவலுக்கு உள்ளும் வெளியும்- தோற்றுவித்திருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.

( காலச்சுவடு பதிப்பகத்தால் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த (574 பக்கம்) மொழிபெயர்ப்பு நூல் பனி.)

 

fb link:

https://www.facebook.com/notes/ravindran-pa/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF/994607620610332

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: