சுவிசிலிருந்து 5 ஆண்டுகளாக வெளிவந்த (மொத்தம் 30 இதழ்கள்) “மனிதம்“ சஞ்சிகையின் எட்டாவது இதழில் (nov-dec 1990) எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தின் முக்கிய பகுதி இது. புகலிட சஞ்சிகைகள் பலவும் இதுகுறித்து அப்போ புலிகளின் கெடுபிடியையும் தாண்டி குரல்கொடுத்திருந்தன. விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டு, புத்தளத்தில் இன்றும் அகதிகளாக கழித்துக்கொண்டிருக்கும் காலம் ஒரு கால் நூற்றாண்டை எட்டியிருக்கிறது. அதனை நினைவுபடுத்தும் முகமாக இங்கு தரப்படுகிறது.
// அகதிகள் வெளியேற்றத்தில் இன்று பலரது கவனத்தையும் ஈர்த்திருப்பது வடக்கிலிருந்து வெளியேற்றப்படும் முஸ்லிம் மக்கள் பற்றியதாகும். கிழக்கில் முஸ்லிம் மக்களின் மேல் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், தமிழ்-முஸ்லிம் மக்களிடையே விரிசலை உண்டுபண்ண அரசு மேற்கொண்ட மேற்கொண்டு வரும் சதிகள், தமிழ் மக்களிடையே உள்ள குறுந்தேசிய உணர்வு, அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள், இதன் விளைவாய் கிழக்கு துண்டாடப்படக்கூடிய சாத்தியம் என்பவற்றின் பின்னணியிலேயே வடக்குவாழ் முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தை நோக்கவேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்திற்கு தலைமை கொடுப்பதாகக் கூறிக்கொண்டு போராடி வந்த இயக்கங்கள் முஸ்லிம் மக்களின் தனித்துவத்தையும், விருப்பு வெறுப்புகளையும் கவனத்தில் எடுக்காமல் «தமிழ் பேசும் மக்கள்» என்ற பரந்த வரைவிலக்கணத்துள் முஸ்லிம் சமூகத்தை அடக்க முற்பட்ட அதேவேளை, இயக்க தலைமைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தமிழ்-முஸ்லிம் விரிசலை தூண்டவே செய்தது.
தற்போது வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் குறித்து புலிகள் கூறும்போது, அவர்கள் தாமாகவே விரும்பி வெளியேறுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் முஸ்லிம் மக்களின் பேட்டிகளோ புலிகளே தம்மை வெளியேற நிர்ப்பந்தித்ததாக தெரிவிக்கின்றன. வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்திலேயே தனியான முஸ்லிம் மாகாணப் பிரிவொன்றை உருவாக்க வேண்டும் என்றும், இதற்கு முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மன்னார் மாவட்டத்தை கிழக்கின் அம்பாறையுடன் இணைக்க வேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரசால் விடுக்கப்பட்ட கோரிக்கையினால் சீற்றமடைந்த புலிகள் வடக்குவாழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. இது புலிகளின் அரசியல் வங்குரோத்துத்தனத்தையே காட்டுகிறது. இத்தகைய கண்மூடித்தனமான செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.
அண்மையில் முஸ்லிம் இயக்கங்களின் தேசிய சபை ரஞ்சனுக்கு எழுதிய கடிதத்தில், «மட்டக்களப்பில் பிறந்தும் கொழும்பை தளமாகக்கொண்டும் செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற குழுக்களாலேயே மன்னார் முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அம்பாறையை தளமாகக் கொண்ட முஸ்லிம் மாகாணசபையுடன் மன்னாரை இணைப்பதை மன்னார் மக்கள் கனவில்கூட விரும்பவில்லை» என தெரிவித்திருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இத்தகைய மனோநிலை கொண்ட மக்களை அவர்கள் காலாகாலமாக வாழ்ந்த பிரதேசத்திலிருந்து துரத்தியடிக்க நினைப்பது முட்டாள்தனமானது. ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு தனக்குள் வாழும் இன்னோர் சமூகத்தின் குரல்வளையை நசுக்கும் ஒரு இயக்கம் தனது விடிவிற்கான விடிவை பெற்றுத்தரவா போகிறது? //
fb link: