– திரையொழுக்கு.
தீபன் படம் பிரான்சின் அறியப்பட்ட இயக்குநரான ஜாக் ஓடியார் அவர்களால் இயக்கப்பட்ட பிரெஞ்சுப் படம். 2015 இன் கன்னஸ் விருதான பல்மடோர் விருதை வென்றிருக்கிறது. படத்தின் நாயகன் தீபன், நாயகி யாழினி, குழந்தை இளையாள் ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. சுமார் எண்பது வீதமும் தமிழிலேயே வசனங்கள் போகிறது. அதனால் தமிழ் ரசிகருக்கு அருகில் படம் வருவதை புரிந்துகொள்ள முடியும். இக் காரணங்களால் (ஒரு குறிப்பிட்ட வட்டத்துள்) தமிழர்களால் இப் படம் பற்றி பேசப்படுவதும் அதன் விருது பற்றி பெருமை கொள்வதும் நடந்தேறுகிறது. அது புரிந்துகொள்ளப்படக் கூடியது.
அப்படியிருந்தும்கூட தமிழக சினிமாக்களுக்கு அலையாகச் செல்லும் நிலைமைபோலன்றி, ஐரோப்பிய திரையரங்குகளில் பெரும்பாலான ஐரோப்பியர்களும் கொசுறளவான தமிழர்களும் இவ்வாறான படங்களை திரையரங்குகளில் பார்க்கும் நிலைதான் உள்ளது. பிரசன்ன விதானகேயின் “பிறகு“ (With You Without You) என்ற படத்தையும் 2014 இல் திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தமிழர்கள் பக்கத்து திரையரங்கில் ஓடிய “கத்தி“ திரைப்படத்துக்கு அலையாய் வந்திறங்கிக்கொண்டிருந்தனர். இதுதான் நமது சினிமா இரசனையின் இலட்சணம். திரையரங்கில் தீபன் படத்தை பார்த்துக்கொண்டிருந்த சுமார் 60 பேரில் நாம் 4 தமிழர்கள்தான் இருந்தோம்.
ஓடியாரின் தீபன் திரைப்படம் பல்வேறு அடையாளத்துடன் அணுகப்படக் கூடியது. அதற்கு செங்கம்பள விரிப்பு நடந்த நாளிலிருந்து இன்றுவரை தமிழடையாளத்துடன் புகலிடத் தமிழர்களில் பெரும்பாலாராலும் அக்கறைகொள்ளப்பட்டது. நமக்குக் கிடைத்த அங்கீகாரம் எனப்பட்டது. எதன்மீதான அங்கீகாரம் என்ற கேள்விக்கு -தமிழ் அடையாளத்துக்கு வெளியே- பொருத்தமான பதில் கிடைக்கவில்லை. அது அகதிகள், கறுப்பர்கள், வெளிநாட்டவர் என எந்த விளிம்புநிலை அடையாளத்துக்குள் வருகிறது என்ற கேள்விக்கு விடை என்ன.
French film ‘Dheepan’ wins top Palme d’Or award in Cannes என்றே பத்திரிகைகள் தலைப்பிட்டன. பல்மடோர் விருதை வென்ற ஒரு பிரெஞ்சுப் படம் இது. இந்த விருதை (பல்மடோர் என்பதை) “தங்கப் பனை“ என தமிழுக்கு மொழிபெயர்த்தும் விட்டார்கள் தமிழர்கள். இந்த பிரெஞ்சுப் படத்தின் பேசுபொருள் இலங்கைப் பிரச்சினையல்ல. புலிகளுமல்ல. போராளியமும் அல்ல. காதலுமல்ல. இவையெல்லாம் தீபன் படத்தின் மையத்தை முழு திரைப்படமாக கட்டமைக்கிற கூறுகள் மட்டுமே. பிரான்சின் வெளிநாட்டவர் அல்லது குடிவரவாளர்கள் மீதான அரசியல்தான் தீபன் படத்தின் மையம் என சொல்ல முடியும்.
வன்முறை சூழலுள் சின்னாபின்னப்பட்டு இருத்தலுக்காய் தப்பியோடி வந்த ஓர் புனைவுக் குடும்பமாக தீபன், யாழினி, இளையாள் (9வயது) என்போர் உருவாக்கப்பட்டுள்ளனர். ஆனால் தீபன் வன்முறையாளனாக வாழ்ந்த போராளி என்ற இயடுதான் கதைக் களத்தின் மைய அரசியலோடு இணைக்கப்படுகிறது.
பிரான்சில் பரம்பரைகளைக் கண்ட அல்ஜீரிய ஆபிரிக்க குடிவரவாளர்களின் பிரச்சினைப்பாடன சூழலை முதல் சந்ததி அகதித் தமிழனான தீபன் வன்முறையினூடே எதிர்கொள்கிறான் அல்லது எதிர்கொள்ள நேர்கிறது. இந்த விளிம்புநிலை அல்ஜீரிய ஆபிரிக்க குடிவரவாளர்களின் பிரச்சினைகளுக்கான பொறுப்பை ஒரு சனநாயக கட்டமைப்புக் கொண்ட பிரான்ஸ் அரசுமீது சுமத்துவதா அல்லது அதை அந்த குடிவரவுச் சமூகத்தின் மீது சுமத்துவதா என்பதை படம் தன் கலைவடிவப் பரப்புக்குள் எவ்வகையில் எடுத்துவருகிறது என்பதில் சிக்கல் இருக்கிறதாகவே படுகிறது.
படத்தில் தீபன் தகப்பனுமல்ல, கணவனுமல்ல. யாழினி தாயுமல்ல. மனைவியுமல்ல. இளையாள் இவர்களின் பிள்ளையுமல்ல. இவ்வாறாக ஓர் உதிரிநிலை போலிக் குடும்பமாக கட்டமைக்கப்பட்டு வன்முறைச் சூழலிலிருந்து தப்பிவருகின்றனர் அவர்கள். தப்பிவருதலுக்காக புனையப்பட்ட இந்த குடும்ப வடிவம் பிரான்சின் புறநகர்ப் பகுதியில் இன்னொருவகை வன்முறைச் சூழலுள் அகப்படுகிறது. இந்தப் புறநிலை அவர்களது குடும்ப உள் இயக்கத்தினை பாதிக்கிறது. அடிக்கடி உதிரிநிலை கேள்விக்குள்ளாகிறது.
போர்க்களத்திலிருந்து அவர்கள் தப்பிவந்தார்களே யொழிய வன்முறை ஏற்படுத்திய உளைச்சல்களிலிருந்து மன அழுத்தத்திலிருந்து அவர்கள் தப்பியிருக்கவில்லை. அவர்களுக்கிடையிலான சொல்லாடல்களிலிருந்து முரண்பாடுகளின் மீதான அணுகுமுறை வரை வன்முறையின் நெடில் பரவியே இருக்கிறது. அதேநேரம் இந்த மன அழுத்தங்களிலிருந்து விடுபடக்கூடிய சாதகமான அம்சம் இந்த குடும்பப் புனைவுக்குள் இருந்தது. புறநெருக்கடி இந்தக் குடும்பத்தினை புனைவுநீக்கி கட்டமைக்கக் கோருகிறது. படத்தின் முடிவும் அவ்வாறே புனைவையிழந்த அசல் குடும்பத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. அமைதியான வாழ்வை காட்சிப்படுத்துகிறது. ஆனால் ஒரு happy ending ஆக வருவது என்பதும், இலண்டனில் ஏதோ வெள்ளைக்கார சமூகத்துடன் தகவமைதல் (integration) அடைந்த குடும்பமாகவும் கொண்டாட்டமாக முடிவது படத்தை குத்துவிளக்கேற்றி முடித்து வைத்தமாதிரி சுடர்கிறது.
வன்முறைச் சூழல் கொண்ட புறநிலை நெருக்கங்களுக்கு மத்தியில் ஒரு குடும்பமாக ஊடாடவேண்டியிருந்த உதிரிநிலை உறவுகள் (இந்த புனைவுக் குடும்பத்தினுள்) உணர்வு ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் கொந்தளிப்பானது. இதை படம் ஓரளவு காண்பிக்கத் தவறவில்லை. அதுவும் பெரும்பகுதி தீபன் சார்ந்தும் யாழினி சார்ந்துமே எழுகிறது. வன்முறைகள் பெண்களையும் குழந்தைகளையுமே அதிகம் பாதிக்கிறது என்ற அடிப்படையில் பார்த்தால், இளையாள் சார்ந்து காட்சிப்படுத்தலில் போதாமைதான் இருக்கிறது. தீபன் படத்தின் மையம் அதிலில்லை என்பதாக அதை எடுத்துக் கொள்ளலாம்.
படத்தின் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர்கள் என்றளவில் சோபாசக்தியும் காளீஸ்வரியும் சிறப்பாக தம்மை வெளிப்படுத்தியுள்ளனர். இளையாளாக நடித்த சிறுமி கிளவ்டீனா வினாசித்தம்பியும் குறிப்பிடக்கூடியளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரையான எல்லா விமர்சனங்களும் இதைச் சொல்லியிருக்கின்றன. தமிழக சினிமா இலங்கைத் தமிழை சப்பித்துப்பி காட்டிய அவலத்தை காளீஸ்வரி செய்யவேயில்லை. அவருக்கு அது வரப்பெற்றிருக்கிறது.
அதேநேரம் நடிப்பை அவர்களோடு மட்டுப்படுத்தவிடுவது ஒரு தழிழ்தனம் என்றே சொல்லத் தோன்றுகின்றது. யாழினி வீட்டு வேலைசெய்கிற இடத்தில் உடலசைவுகள் இழந்த அந்தக் கிழவன் பாத்திரமேற்ற நடிகன் தனது கண்களால் மட்டும் நடிக்க வேண்டியிருந்த நிர்ப்பந்தத்தில் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவரது பார்வைகளில் வெறுமை மட்டுமன்றி, நான்கு சுவர்களுக்குள் முடங்கி அனுபவிக்கும் தனிமை உணர்வை யாழினியின் நடமாட்டத்தினை ஆதங்கத்துடன் அவதானிப்பதன் மூலம் வெளிப்படுத்துகிற காட்சி ஒன்றை ஓடியார் நுணுக்கமாக குளோஸ் அப்பில் காட்சிப்படுத்துகிறார். சிறையிலிருந்து மீண்டிருந்த போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த தனது மருமகன் தனது நண்பர்களுடன் நடத்தும் கூத்தடிப்பு வரவேற்பறையில் நிகழும்போதெல்லாம் அவர் கண்களால் உதிர்க்கும் வெறுப்புணர்வானது யாழினியின் அச்சவுணர்வுக்குப் பக்கத்தில் இணைந்துகொள்கிற காட்சியொன்று வருகிறது. யாழினி மெதுவாக அவரது தோளில் கைவைப்பதன் மூலம் இந்த உணர்வுகளை அற்புதமாக இணைத்திருக்கிறார் இயக்குநர்.
சிறையிலிருந்த வந்த அவரது மருமகன் எந்த அலட்டலுமின்றி நடித்துக் காட்டியிருக்கிறார். குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் அல்லது வன்முறை வாழ்வுள் தம்மை ஈடுபடுத்தியவர்கள் வன்மம் பொருந்திய முகத்துடனோ அட்டகாசமான குணம் பொருந்தியவர்களாகவோ பிம்பப் படுத்த விழைகிற எமது மனம் தமிழ்ப்பட இரசனையிலிருந்து பிறந்ததாகக் கொள்ளலாம். சாந்தமான முகம் கொண்ட அவரது நடிப்பிலும் தோற்றத்திலும் எமது இந்த இரசனை விம்பம் நொருங்கிப் போகிறது.
இந்தப் படம் விருதை வென்ற நிகழ்வின் பின் தொலைக்காட்சிப் பேட்டியில் சோபாசக்தி “பிரான்சைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?“ என்ற கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் ஓர் எழுத்தாளனாக, ஒரு மார்க்சியனாக, ஓர் அகதியாக, ஒரு கறுப்பனாக தன்னிடம் வௌ;வேறு பார்வைகள் இருக்கிறது என்றார். ஒரு தமிழனாக என்று அவர் சொல்லவேயில்லை. இங்கே அடையாளம் எனப் பார்க்குமிடத்து ஓர் அகதியாக, ஒரு கறுப்பனாக என்பவை முக்கியமானவை. ஐரோப்பாவைப் பொறுத்தவரை எமது தமிழடையாளங்களை மீறி நாம் சுமந்து திரிகிற அடையாளம் அவைதான். தீபன் மீதான எதிர்விமர்சனங்களை மட்டுமல்ல சிறு எதிர்வினையைத் தன்னும் சில உணர்ச்சி சார்ந்த தடுப்புச் சொற்களால் வழிமறிக்கும் மனோபாவம் இந்த இரு அடையாளங்களிலுமிருந்து வர சாத்தியமேயில்லை.
பாரிசின் புறநகர்ப் பகுதியில் விளிம்புநிலை மனிதராக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் அல்ஜீரியர்கள் கருப்பினத்தவருக்கு மத்தியில் தீபன் குடும்பம்வாழ விடப்படுகிறது. கும்பலாக நிற்பது, எரியும் பரல்களை வீதி மறிப்பாக காவிச்செல்வது எல்லாம் அந்த வீதியில் ஒரு இயல்புபோல் காட்டப்படுகிறது. தீபனின் குடியிருப்புக்கு அடுத்த கரையில் இருக்கும் குடியிருப்பில் போதைப் பொருள் கும்பல்கள் இருக்கிறது. அவர்களுக்கிடையிலான பகைமை அல்லது வன்முறை ஏற்கனவே போராலும் வன்முறையாலும் மனம் உடைந்துபோன தீபன் குடும்பத்தை மோசமாக பாதிக்கிறது. தீபனின் உள்ளமர்ந்திருந்த வன்முறை மனோபாவம் சுயகட்டுப்பாட்டை மீறி மெல்ல வெளிவரத் தொடங்குகிறது. அது, மரங்கள் இலைகளுக்கிடையிலிருந்து மெல்ல மெல்ல யானையொன்று பிரமாண்டமாக வெளித் தெரிய ஆரம்பிப்பதுபோல் குறியீடாக்கப்பட்டிருக்கிறது.
இரு தொடர்மாடிக் கட்டடத்திற்கும் இடையில் No Fire Zone என்ற கோட்டை தீபன் வரைவது தீபன் (போர்க்களத்தில் கற்றுக்கொண்ட) வன்முறையை பிரயோகிக்கும் முடிவுக்கு தீர்மானகரமாக வந்ததை குறியீடாக்குகிறது. இம்முறை யானையின் முகம் இன்னமுமாய் அண்மித்து திரையை ஆக்கிரமிக்கிறது.
யாழினி வீட்டுவேலை பார்க்கும் கிழவனின் மருமகன் இன்னொரு போதைப்பொருள் கடத்தல் கும்பலால் சுடப்பட்டு வீட்டுக்குள் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறான். குற்றுயிரோடு வீழ்ந்து கிடக்கும் அவன் யாழினியை நகரவிடாமல் கால்களைப் பிடித்து விடுகிறான், தன்னைக் காப்பாற்றும்படி. தீபனை உதவிக்கு தொலைபேசி அழைக்கும்படி துப்பாக்கி முனையில் பயமுறுத்துகிறான். ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த தீபனுக்கு யாழினியின் நடுங்கும் தொலைபேசிக் குரல் அவனது தீர்மானகரமான வன்முறை சார்ந்த முடிவை செயல்படுத்த வைக்கிறது. இச் சம்பவம் நடந்ததால் கும்பல்களில் பலரும் ஓடிவிடுகின்றனர். வெறித்தனமாக வருகின்ற தீபன் படிகளில் எதிர்ப்பட்டோரை வெறித்தனமாக சுட்டும் வெட்டியும் யாழினியை வந்தடைகிறான். (ஆனால் அவர்கள் கும்பல்களைச் சேர்ந்தவர்களா வெகுமக்களா என்பது தெளிவில்லை.) அதற்குள் யாழினியை பிடித்திருந்த கரங்களை மரணம் விடுவித்துவிட்டிருந்தது.
இந்தவகை குடியிருப்புகளில்தான் தமிழர்கள் பலரும் (சோபாசக்தி உட்பட) ஆரம்பத்தில் இருந்ததாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் படத்தில் அந்தச் சுற்றாடல் கிரிமினல்களின், வன்முறையாளர்களின் இயல்பான நடமாட்டமுள்ள பகுதியாக பிம்பமாகிறது. சாதாரண மக்களை ஓரிரு சந்தர்ப்பங்களில்தான் காண நேர்கிறது. வேக வீதியில் இரவு ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் செல்லும்போதுகூட வெறிச்சொடிய வீதியில் அவர்களின் இரு மோட்டார் சைக்கிள்கள் மட்டும் போவதுபோல் காட்சி வருகிறது. பாரிசின் புறநகர்ப்ப பகுதியில் வாழும் மக்களின் இயல்பான வாழ்வியக்கம் நடமாட்டங்கள் எல்லாம் படத்தில் ஒளிந்துகொண்டுவிட்டன.
இதன்மூலம் போதைப்பொருள் கும்பல்களை வெகு மக்களின் விளிம்புநிலை வாழ்வியலுக்கு வெளியேயான பிதுக்கங்களாக காட்சி பிம்பங்கள் எந்தளவுக்கு காட்டியிருக்கிறது என்பது கேள்விக்குறிதான். இங்குதான் தமிழர்களால் “அடை“, “கறுவல்“ என இழிச்சொற்களுடன் அடையாளப்படுத்தப்படும் இந்த மக்களை “கூடாத குடிவரவாளர்களாக“, கிரிமினல்களாக, வன்முறையாளர்களாக கட்டமைக்கும் தந்திரம் இருக்கிறதா என சந்தேகம் எழுகிறது. இத்தனைக்கும் பிரான்ஸ் பிரசைகளாக உரிமை பெற்றிருந்தும் பரம்பரைபரம்பரையாக வாழ்ந்திருந்தும் “கூடாத குடிவரவாளர்களாக“ அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். தனது நாட்டுப் பிரசையாக இருக்கும் இவர்களுக்கு இந்த வாழ்நிலையை பரிசளித்த பிரான்ஸ் அரசின் மீதான, அதன் அடையாள அரசியல் மீதான விமர்சனம் மேல்நிலைக்கு வந்திருப்பதான அசுமாத்தம் தெரியவில்லை.
இந்த சூட்சமத்தை மறைக்கும் நோக்கில் தீபன் காதல் படம் என படத்தின் மையத்துக்கு வெளியே வைத்து வியாக்கியானம் வேறு கொடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி ஜக் ஓடியாரை ஒரு இடதுசாரிச் சிந்தனையாளராக சோபாசக்தி டான் தொலைக்காட்சி பேட்டியில் உண்மைக்குப் புறம்பாக சொல்லியிருந்தார். இந்தக் கூற்றுகள் படத்தின் மைய அரசியலுக்கு வேறுவடிவம் கொடுக்கும் முயற்சியா என கேட்டுவைத்துவிடத் தோன்றுகின்றது.
கொலைவெறிக் காட்சியின் பின் இரவு யன்னலினூடாக கலங்கிய நிலையில் தெரிகிற வாகனத்தின் மீதான ஒளிச்சுற்றல் பொலிசினுடையதா அம்புலன்சினுடையதா என தீர்மானிக்க முடியாதபடி, பூட்டிய யன்னல்களினூடு சத்தம் தன்னும் கேட்காதபடி ஒரு காட்சி அமைகிறது. மற்றும்படி, மின்னல் வேகங்களில் வந்திறங்கும் நிர்வாகத் திறமையுள்ள பிரான்ஸ் பொலிசை இப்படி வன்முறைகள் நிகழும் கணங்களில் மருந்துக்கும்கூட காண முடியவில்லை. இது பிரான்ஸ் அரசின் அந்த குடிவரவாளர்களின் மீதான அக்கறையின்மையை உணர்த்துவதாக உள்ளது என்றொரு வாசிப்பும் கிடைக்கிறது. பொலிஸின் காணாமல்போதல் இந்தக் குடிவரவாளர்களின் பிரச்சினையில் அரசின் கண்டுகொள்ளாமையை, அக்கறையின்மையை குறியீடாக்குமா என்பது கேள்விக்குறி. கண்டுகொள்ளாமை அல்லது அக்கறையின்மை என்பது ஒதுக்கல் என்பதுதான். அது அரசியல் சார்ந்தது. அந்த அரசியலை செயற்படுத்துவதில் வன்முறை இயந்திரமான பொலிஸ் முக்கிய பங்கு வகித்துக்கொள்கிறது. மாறாக காணாமல் போதலாலல்ல.
போதைப் பொருள் கும்பல் வசிக்கும் கட்டடத்தில் துப்பரவு செய்தல் உட்பட வீட்டு மேற்பார்வையாளராக (Haus master) வேலை செய்யும் தீபன், வழமையாக அவர்கள் கும்மாளமடித்து விலகிச் சென்றபின், துப்பரவு பணியை மேற்கொள்கிறார். பியர் ரின், குடிவகைப் போத்தல்கள், பேப்பர்கள் பிளாஸ்ரிக்குகள், அது இது என தரைமுழுவதும் கொட்டிப்போய்க் கிடக்கும் குப்பைகளை தீபன் ஒருவித வீச்சோடு கூட்டி தள்ளிவிடுவதை கமரா குளோஸ் அப் இல் இரு இடங்களில் காட்சியாக்குகிறது. இது ஓர் “சுத்திகரிப்பின்“ குறியீடு என சரியாகவோ மிகையாகவோ பார்வையாளரின் பார்வைப்புலம் வாசிக்க நேர்கிறது.
தான் அல்லைப்பிட்டியிலேயே புலிகளின் அரசியலை குழிதோண்டிப் புதைத்துவிட்டு வந்ததாகவும் ஆனால் தீபன் இறுதிவரை புலியாக இருக்கிறான் எனவும் சோபாசக்தி பேட்டிகளில் கூறியிருக்கிறார். தீபனிடம் அதை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. புலிகளுக்கு ஆயுதம் வாங்க நிதி சேகரிப்பவரிடம் தீபன் அடிஉதை படும் காட்சி வருகிறது. “யாருக்கம்மான் ஆயுதம்? யாரைக் கொல்லுறதுக்கு..?“ என்றெல்லாம் எதிர்க் கேள்விகளைப் போடுகிறான் தீபன். அவன் எப்படி புலியாக இருக்க முடியும். இதன்மூலம் வன்முறைச் சுழிக்குள்ளிருந்து மீண்டு வந்து ஓர் அமைதியான இருத்தலை நோக்கி ஏங்குபவனாகவே தீபன் தெரிகிறான்.
எவ்வாறான அரசியல்களை இயக்கங்கள் கொண்டிருந்தபோதும் இயக்கங்களில் இணைந்து வேலைசெய்தவர்களுக்கு அதிகாரத்திற்கு எதிரான, அநியாயங்களுக்கு எதிரான, ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வும் அர்ப்பணிப்புத் தன்மையும் இருந்தது என்பது அடிப்படையானது. அது மனித விழுமியம் மிக்கது. பிழையான அரசியல்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ இயக்கங்களின் போக்குகள் தனது போராளிகளின் இதே போர்க்குணாம்சங்களுக்கு எதிராக நின்றது அல்லது அந்தப் போராளிகளையே அந்த வழிக்கு வரப்பண்ணியது. தீபனிடமும் அந்த போர்க்குணாம்சம் இருக்கிறது. அது வெளிவருகிறது.
ஓர் “இயல்பு” வாழ்வை எட்டும்வரை ஆநியாயங்களின் மீதான சகிப்பின்மை மேலெழுந்து மேலெழுந்து அடக்கப்படுதல் ஒரு தொடர் செயன்முறையாக அவர்களுக்குள் நிகழும். இதை புலம்பெயர்ந்து வந்த பல போராளிகளும் அனுபவித்திருப்பர். தீபன் இந்த வாழ்வியல் சூழலுக்கு புதியவன். ஆனால் வன்முறைச் சூழலுக்கு பழையவன். பிரச்சினைகளுக்கான தீர்வை அதற்குள்ளால் கண்டடைந்த அனுபவம் அவனுக்குள் இன்னும் உலர்ந்துபோகாத நிலையில்தான் இருக்கிறது. புறச்சூழல் அதை எப்படி படிப்படியாக மேலெழ வைக்கிறது, தீர்மானகரமாக்குகிறது என்பதை ஜக் ஓடியார் (யானை, No Fire Zone) குறியீடுகளின் மூலம் காட்சிப்படுத்துகிறார்.
தீபன் புலிகளின் போர்க்கள பாடலை பாடுகிறபோது அவனது கொந்தளிப்பான மனநிலையும், வன்முறை அவனை கைப்பிடித்து நடந்துபோக அழைப்பதையும் காண முடிகிறது. சோபாசக்தி அதை சிறப்பாகவே செய்திருந்தார். வெளிக்கிளர்த்தியிருந்தார் என்றும்கூட சொல்ல முடியும்.
பட்டாசு வெடிக்கிற காட்சியிலும்சரி, போதைப்பொருள் கும்பல்களின் சுடுபாட்டுக் காட்சியிலும்சரி வெடிப்போசை ஓர் போர்க்கால அதிர்வை கொடுக்கும்படியாக இசை வெடித்து மேலெழுகிறது. அது யாழினி இழையாளின் தரப்பிலிருந்து அனுபவமாக்கப்பட்டிருக்கிறது. இசை, கமரா, காட்சிப்படுத்தல், இயக்கம் எல்லாமே பார்வையாளரை ஈர்த்துக் கொள்கிறது. ஆனாலும் தீபனின் முதல் வருகையில் மரணித்துப்போன சக போராளிகளை காவோலை போட்டு கொழுத்துகிற காட்சியும், அகதிமுகாம் காட்சியும் அதிர்வுகள் எதையும் ஏற்படுத்தவில்லை. தீபனையும் யாழினியையும் இளையாளையும் அறிமுகமாக்கும் ஓர் எல்லைக்குள் நின்றுவிட்டதாகவே படுகிறது.
விருதுகள் என்பது தொலைக்காட்சி விளம்பரம் போல. விளம்பரங்கள் விற்பனையை குறிவைப்பதையும் பொய் சொல்வதையும் அறிவு சொல்லிவைத்தாலும், அந்தப் பொருள்களை நாம் வாங்கிக்கொள்ள மனம் அவாப்படும். விருதுகளுக்குப் பின்னால் அரசியல் உள்ளது என்பதை மறுக்க முடியாது என்றபோதும் அதை கொண்டாடும் மனமொன்றும் மறைந்தேயிருக்கும். அதனால் பல்மடோர் விருது தங்கப் பனையாக தமிழ் மனதில் அசைந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக..?
- ரவி (20092015)
இன்று தான் வாசிக்கிறேன் நாங்கள் பார்த்த காட்சியும் 100 பேர் வரை மண்டபம் நிறைத்து இருந்தது நாங்கள் மூவர் தமிழர் நான் இரண்டாம் தரம் குடும்பத்துடன் பார்க்கப் போரிருந்தேன் ..