புனைவு – fiction

இலக்கியத்தில் புனைவு, உண்மை, பொய் என்பவற்றுக்கான ஊடாட்டங்கள் சம்பந்தமாக இலக்கிய உலகு (தமிழ்ப் பரப்புக்கு வெளியேயும்) வரைவுசெய்துவிட முடியாத வர்ணச் சிதைவுகளாகவே தொடர்கிறது. மிக இலகுவாக “புனைவு” என்றால் பொய் அல்லது உண்மையற்றது என்ற மேலோட்டமான பார்வைக்கு குறைச்சலில்லை என்பது என் கணிப்பு.

மனிதவாழ்வில் தனிமனிதர்கள் எல்லா உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடிவதில்லை. அதற்கான வரம்புகளை கலாச்சாரங்கள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள், பழக்கவழக்கங்கள், நாகரிகங்கள்.. என பலவகையான வரப்புகள் தடுத்து மனதில் தேக்கிவைத்துவிடுகின்றன. இந்த இடங்களை ஊடுருவி வாசகரை ஆற்றுப்படுத்தும், லயிக்கவைக்கும் அதிசயங்களை புனைவுகள் நிகழ்த்தவல்லவை. இது வாசக அனுபவமாக அமைகிறது. புனைவை பொளதீக முறையில் (physical) நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது காட்சிப்படுத்தல்களை, நேரடி அனுபவங்களை பிரதிபண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் யதார்த்த நிகழ்வுகள் வழங்குகின்ற உணர்வெழுச்சி அல்லது உணர்ச்சி அனுபவங்களை (emotinal experience) புனைவுகள் தருவனவாக இருத்தல் வேண்டும். அதேபோல் புதிய அறிதல் அனுபவங்களை (intellectual experience) அது வழங்குதலாகவும் இருத்தல் வேண்டும். அதை நாம் யதார்த்தவாத புனைவாக (realistic fiction) சுட்டலாம். நமது வாழ்வுலகத்துக்கு வெளியோயன சூழல்களை, வாழ்முறைகளை, மனிதர்களை, கலாச்சாரங்களை.. என நீளும் அறிவுச் சேகரங்களை ஒரு இலக்கியப் புனைவு வழங்குவது பற்றிய சுட்டல் அது.

மாதொருபாகனின் பூவரச மரம் அந்த நாவலை எந்தவகை வாசிப்பு செய்பவர்களிடமிருந்தும் ஒரு மரமாக கடந்துபோய் விடக்கூடியதல்ல. அது வழங்கும் சூழல் மற்றும் வாழ்வியல் மீதான அறிவனுபவம்தான் அதற்குக் காரணம்.

மேற்கோளாளர்கள், படங்கள் என தொகையான (அல்லது முழுமையான) புனைவுகளை கொண்டிருக்கும் சோபாசக்தியின் பொக்ஸ் கதைப்புத்தகம் தாவர வகைகளையும் விட்டுவைக்கவில்லை. அதில் ஓர் இடத்தில் வன்னிக் காட்டின் தாவரவகைள் ஒரு தொகைப் பெயர்களினால் பட்டியலிடப்படுகிறது. சுமார் 60,70 வகையான பெயர்கள் வருகின்றன. அதற்குள் புனையப்பட்ட தாவரவகைகள் ஏராளம். அத்தோடு “பாவட்டை”, “ஆடாதோடை” என்பன இருவேறு தாவரவகைகள் போன்று பட்டியலுக்குள் சொருகுண்டு கிடக்கின்றன. (பாவட்டையின் ஆயுர்வேதப் பெயர் ஆடாதோடை). வன்னிக் காட்டுக்குள் தடங்களை கண்டுபிடித்து நகர்ந்துகொண்டிருந்த சிறுவனை பின்தொடர்ந்த வாசிப்பு மனம் இந்த பட்டியலிடலுக்குள்ளிருந்து விரைவில் மீண்டுவந்து சிறுவனை தொடரமுடியால் வாசிப்பை அறுத்து, ஒரு சூழலியல் வாசிப்புக்குள் விட்டுவிடுகிறது. அதுவும் பொய்யான சூழலியல். இந்த இடையீடு ஒருபுறம் இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் இந்த தாவரவகைகளை புனைய வேண்டிய தேவை என்னவென்று புரியவேயில்லை. அது வன்னிக் காட்டின் சூழல் அனுபவத்தை அதுபற்றிய அறிதல் அனுபவத்தை தரமுடியாதபடி இந்த (தாவரப் பெயர்ப்) புனைவுக்கான எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கான பதிலுரைப்பு ஒரு புனைவெழுத்தாளருக்கு அதற்கான முழுச் சுதந்திரம் இருக்கிறது என மட்டும் ஒருவரால் சொல்லமுடியுமெனின், அது கேள்விகளை கொல்வதாகவே புரிந்துகொள்ள இயலும்.

(புனைவு பற்றிய தற்போதைய எனது அறிதலின் ஒரு பகுதிப் பதிவு இது.)

// People read fiction for the emotional and intellectual experience. And what readers read, and why they read it, influences what we writers write and how we write it.// – Ramccullough

————————————————————————————

Fb Link:

https://www.facebook.com/notes/ravindran-pa/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-fiction/947098695361225

One thought on “புனைவு – fiction”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: