// ” பெட்டை நாயே! இங்கே நடப்பது ஒன்றுமேயில்லை. உன்னை உகண்டாவுக்குக் கொண்டுபோனபின்தான் கச்சேரியே இருக்கிறது” என்று அவர்கள் கொக்கரித்தார்கள்.அவர்கள் அந்த இரகசிய இடத்தில் என்னை நீண்ட நாட்களாக அடைத்துவைத்து சொல்லவோ எழுதவோ முடியாத சித்திரவதைகளை செய்தார்கள்.அந்தக் காலம் என் அவமானத்தின் காலமாக இருந்தது. அதைப் பற்றி இதற்குமேல் எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை…
என் வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் ஏதோவொரு கருமையான மனநிலையோடும், தடித்த தோலோடும் சகித்துக்கொண்டு வாழ்ந்தாகிவிட்டது. நான் என் ஆன்மாவில் இருளைத் தவிர வேறெதையும் கண்டதில்லை. எதையும், எவரையும் சந்தேகத்துடன்தான் என்னால் பார்க்க முடிந்தது. என் இருள் மனநிலைக்கு பிற்காலத்தில் மற்றவர்கள் “மன அழுத்தம்” எனப் பெயரிட்டனர்.
ஒருநாள் நான் என் கால்களால் அங்கு (UNHCR ) இழுத்துச் செல்லப்பட்டேன். நான் ஏன் அங்கே போனேன் என எனக்குத் தெரியாது. ஏதோ போனேன். என் கையில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தை கட்டாயம் நான் அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என எனக்குள் ஏதோவொன்று என்னையே உசுப்பிவிட்டது. அந்த உசுப்பலுக்கு பிற்காலத்தில் நான் “ஒளி” எனப் பெயரிட்டேன். //
சைனா கெய்ரெற்சியின் “குழந்தைப் போராளி” நூலிலிருந்து அறுந்து தொங்கும் ஆன்மாவின் பல வரிகளில் மேலுள்ளவை ஒரு இழை மட்டுமே. அதன் இழைகளில் எனது வாசிப்பு ஓர் அந்தரத்தில் தொங்கும் மனநிலையை ஊசலாடவிட்டபடியே இருந்தது. புத்தகத்தை இடையில் மூடிவைக்க வேண்டிய வேலை நிர்ப்பந்தங்களை கடிந்துகொண்டேன்.
வாசித்து முடித்தபோது நான் தனிமையில் இருந்தேன். அமைதி பேசிக்கொண்டது. எனது இரு கைகளும் எனது முகத்தைத் தாங்கிப்பிடித்திருந்தது. முழங்கால்களை முழங்கை அழுத்திக்கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தேன் என எனக்குத் தெரியாது. நான் தூங்கப்போகும்போது சாமமாகிவிட்டிருந்தது.
அடையாள மேலீட்டால் “குழந்தைப் போராளி” என்ற பதத்தின் மேற்குலக வரையறுப்புகளுக்குள் அவள் வந்து நின்று பேசவில்லை. அவளது ஆன்மா அந்தப் பதத்தை வரைந்து தள்ளியிருக்கிறது.
ஒரு போராளியாய் அதுவும் குழந்தைப் போராளியாய், கனவுகளைத் தொலைத்தவளாய், அர்ப்பணிப்புகளுக்கான பரிசாய் சித்திரவதைகளையும் வெறுத்தொதுக்கலையும் மட்டுமல்ல கொலைப் பயமுறுத்தல்களையும் பரிசாய்ப் பெற நேர்கிற அவலங்களையெல்லாம்… அதுவும் ஒரு பெண்போராளியாய் அலைக்கழிக்கப்பட்ட கதைகளை சொல்லிச் செல்கிறது “குழந்தைப் போராளி” என்ற இந்த நூல்.தனது ஒன்பதாவது வயதில் குழந்தைப்போராளியாய் உகண்டாவின் புரட்சிப்படையான NRA இல் இணைந்த கெய்ரெற்சியின் எழுத்துகள் இவை.
இந்த நூலை யேர்மன் மொழியிலிருந்து நண்பர் தேவா (சுவிஸ் இல் இருந்தவர்) 2007 இல் தமிழுக்கு மொழிபெயர்த்திருந்தார். (கருப்புப் பிரதிகள் வெளியீடாக வெளிவந்தது.)
சுவிஸில் எமது அடுத்த “வாசிப்பும் உரையாடலும்” நிகழ்ச்சியில் உரையாடப்படுவதற்காக “குழந்தைப் போராளிகள்” எமது தனி வாசிப்புக்குள் சுற்றித் திரிகிறது.
புகலிடத்தில் வெளிவரும் நூல்களின் (தேவையான) அறிமுகங்களுக்கு தேவைக்கதிகமாக நாடுநாடாய் செலவழிக்கப்படும் நேரங்களுக்குள் இவ்வகையான நூல்களை கண்டுகொள்ளாமல் விடுவதும், இந்தவகை முயற்சிகளை கண்டுகொள்ளாமல் விடுவதுமான தவறவிடலில் இந்த “குழந்தைப் போராளிகள்” நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.Fb Link :