வித்தியாவின் பாலியல் சித்திரவதைக் கொலை தொடர்பாக எதிர்பாராத அளவில் வடக்கு கிழக்கிலும் புத்தளம் போன்ற பிரதேசங்களிலும் ஓர் எதிர்ப்புப் போராட்டம் வெளிக்கிளம்பியுள்ளது. மிக நீண்ட காலமாக அடக்குமுறைக்குள் மெல்ல மெல்ல ஆழப்புதைந்த ஒரு சமூகம் மெல்லத் தலையெடுத்து வாழ்வியல் வெளிகளில் சமூக மனத்துடன் உலவத் தொடங்கியிருக்கிறது. தனது தொலைந்துபோன விழுமியங்கள் மீதான பச்சாதாபம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வன்முறைக்குள் அடக்கிவைக்கப்பட்ட அதன் மனித உணர்வுகள் உணர்ச்சிகள் எல்லாம் ஏதோவொரு வகையில் வெளிப்படுத்தப்படுவது இயல்பு. தனிமனித உளவியலானாலும் சமூக உளவியலானாலும் அதேதான் நிலைமை.
இங்கு வித்தியாவிற்கு இழைக்கப்பட்ட கொடுஞ்செயலைக் கண்டித்து அது எழுந்திருக்கிறது. தனிமனித உளவியலின் தொகுப்பான சமூக உளவியல் வெளிப்பாடு இது. இதை வித்தியா என்ற தனிநபருக்கான போராட்டமாக மட்டும் பார்க்க முடியாது. இது இழந்துபோன விழுமியங்களை மீளுருவாக்கம் செய்ய ஏங்கும் சமூக மனங்களின் போராட்டமாக வரையறுக்க முடியும்.
இதற்குமுன் இதேவகைப்பட்ட கொலைகளையும் அதில் பலியாகியவர்களையும் உதாரணம் காட்டி, அதுக்கெல்லாம் கிளர்ந்தெழாத மக்கள் இதுக்கு கிளர்ந்தெழுவதன்மீது, ஒருவித மறைமுகத்தன்மையோடு, கேள்விகளை முன்வைப்பதை முகநூலில் பார்த்திருக்கிறேன். அதற்கான விடையை யாழ் மேலாதிக்க சிந்தனைமுறை சார்ந்து அல்லது பிரதேசம் சார்ந்து ஒற்றைச் சொற்களுக்குள் லைற் அடிச்சும் காட்டிவிடுகிறார்கள். இது முழுமையான சமூகவியல் ஆய்வுத்தன்மை கொண்டதல்ல. பன்முகத்தன்மை கொண்ட சிந்தனை முறையுமல்ல. உண்மையில் ஒருவித அறிவுச்சோம்பேறித்தனம் கொண்டது. அது பொதுப்புத்தியை மறுப்பதுபோல் காட்சி தந்தபடி பொதுப்புத்தியோடு இருளில் கள்ள உறவுகொள்கிறது.
நான்கு வயதுக் குழந்தையைக்கூட பாலியல்வதை செய்து கொன்ற சம்பவம் இதே புங்குடுதீவில்தான் நடந்தது. வித்தியாவின் சம்பவத்துக்கு முன்னர் நான்கைந்து சம்பவங்கள் புங்குடுதீவில் நடந்திருக்கிறது. யாழ்ப்பாணத்திலும் நடந்திருக்கிறது. ஏனைய தமிழ்ப் பகுதிகளிலும் நடந்திருக்கிறது. அதுக்கெல்லாம் போராடாமல் இப்போ போராடுகிறார்கள் என ஒழுங்கைக்குள்ளால் வந்து காதில் போடுகிறார்கள். இது வெறும் தர்க்கத்தன்மை மட்டுமே கொண்டது. போராட்டங்கள் வெளிக்கிளம்புவதற்கான சமூக, அரசியல், உளவியல் சூழல்களை கவனத்தில் எடுக்காதது.
வெளிக்கிளம்பும் போராட்டங்கள் கடந்துபோன சம்பவங்களையும் சேர்த்துத்தான் கேள்விகேட்கிறது என்பதும், அவை (அதாவது கடந்துபோன சம்பவங்கள்) கட்டியெழுப்பிக்கொண்டிருந்த கேள்விகளிலிருந்து பிறக்கிறது என்பதும் அதன் உள்ளார்ந்த அரசியல். இதேபோன்ற சம்பவங்கள் இந்திய, இலங்கை இராணுவத்தால் பெண்களுக்கும் பெண் போராளிகளுக்கும் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை யாரும் மறந்துவிடவில்லை. பெண்ணுடலின்மீது இழைக்கப்படும் இராணுவ உடைபோர்த்திய ஆண்வெறியின் இரட்டை அதிகாரத்தை வெளிப்படுத்தும் குறியீடாக இசைப்பிரியா அரசியல் தளத்தில் பதியப்பட்டுவிட்டார். மன்னம்பெரி ஏற்கனவே அவ்வாறான குறியீடாக்கப்பட்டவர். போராளிகளாக இல்லாதபோதும் கிருசாந்தி, கோணேஸ்வரி போன்றவர்களின்; குறியீட்டு உருவாக்கமும் ஒருவகையில் அவ்வாறான அரசியல் தளத்தில்தான் நிகழ்ந்திருக்கிறது. ஜனநாயக மறுப்புச் சார்ந்து புலிகளால் கொல்லப்பட்டவர்களிலும் ராஜினி திரணகம, செல்வி போன்ற பெண்களும் குறியீடாகிப் போயினர்.
இங்கு வித்தியாவை முன்வைத்து மேலெழுந்துள்ள போராட்டமானது வித்தியாவை சமூகத்தளத்தில் ஆணதிகார வெறிக்கு பலியாகிய பெண்ணுடல் மீதான அரசியலின் குறியீடாக்கிக்கொண்டுள்ளது. எனவே வித்தியாவை முன்வைத்து நடத்தப்படும் போராட்டங்கள் சமூகப் பெறுமதி கொண்டது. இழந்துபோன சமூக விழுமியங்களை மீளுருவாக்கும் ஏக்கத்தோடு சம்பந்தப்பட்டது. அதனால்தான் அது தமிழ் முஸ்லிம் சிங்கள மலையக மக்களையெல்லாம் வீதிக்கு அழைத்து வந்திருக்கிறது.
இசைப்பிரியா, மன்னம்பெரி போன்ற குறியீடுகள் அரசியல் தளத்தில் அரசியல் பெறுமதி கொண்டது. இதை ஏற்றுக்கொள்வதற்கு ஒருவர் முறையே புலிகளின் அரசியலையோ அல்லது முன்னாள் ஜேவிபியின் அரசியலையோ ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. ஒருவித நெகிழ்ச்சித்தன்மையில் சொன்னால், “துர்அதிஸ்டவசமாக“ இதைக் கவனிக்கத் தவறி, புலியின் அரசியலையும் இதையும் குழப்பிய நிலைமை இருந்தது. இருக்கிறது. புலிகளில் போராடிய பெண்போராளிகளை மட்டுமல்ல, குறியீடாகிப்போன இசைப்பிரியாவையும் கொண்டாட, அல்லது போராளிகள் என அழைக்கத்தன்னும் சிலருக்கு பலகாலம் பிடித்தது. சிலருக்கு இன்னமும் முடியாமலிருக்கிறது.
சமூக ஒடுக்குமுறையோ அரசியல் ஒடுக்குமுறையோ எந்தத் தளத்திலும் குறியீடுகள் உருவாக்கப்படுகின்றன. அது ஒடுக்கும் தரப்பிலும் உருவாகலாம். ஒடுக்குமுறைக்கு எதிரான தரப்பிலும் உருவாகலாம். அவரவர் அரசியல் சார்புநிலை சம்பந்தப்பட்டு குறியீடுகளை முன்னிறுத்துவர். நான் மேலே சொல்லவந்தது, ஒடுக்குமுறைக்கு எதிரான தரப்பிலான குறியீட்டு உருவாக்கத்தைப் பற்றியது.
முடிவாக சொல்வதானால் அவ்வாறான குறியீட்டு உருவாக்கத்தையும் அதன் வினைத்திறனையும் புரிந்துகொள்ளாமல், சம்பவங்களை முன்னிறுத்தி தர்க்கம் செய்வது அபத்தமானது.