முதலில் வித்தியாவுக்கு எனது கனத்த அஞ்சலிகள்.
வித்தியாவின் இழப்பின் மீதான தார்மீக கோபங்களிலிருந்து பிறழ்ந்து விழும் சொற்கள் இக் குறிப்பை எழுதத் தூண்டியது.
மாணவி வித்தியாவை கொன்றொழித்த குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும். பெண்ணுடலின் மீதான மலின அரசியலை நடத்தி காசு பொறுக்கும் குறுக்குவழியில் ஈடுபடாமல் குற்றவாளிகளை அம்லப்படுத்த ஊடகங்கள் முன்வர வேண்டும். இவையிரண்டுக்குமான போராட்டங்கள், அழுத்தங்கள் எழுவது ஓரளவாவது பயன்தரும்.
போரானது சமூக மனிதர்களை வன்முறையினூடுதான் பிரச்சினைகளுக்கான தீர்வை சிந்திக்க, அறிவிக்க மேலதிகமாகக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அது போர்ச் சூழலுள் அகப்பட்டவர்களை மட்டுமல்ல அதற்கு வெளியில் அலைநுனியில் நனைந்தவர்களையும் விட்டுவைக்கவில்லை.
போட்டுத் தள்ளுவது, அடித்துக் கொல்வது, ஆண்குறியை வெட்டுவது, சித்திரவதை செய்வது போன்ற தீர்வுகளை அது வழங்கிக்கொண்டிருக்கிறது. முகநூலிலும்தான். பொதுவெளியில் அதை எழுதாமலும்கூட, மனவெளியில் அவ்வாறு சபித்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் தார்மீகக் கோபம் இதற்குள்ளால் புரிந்துகொள்ளப்படக் கூடியதுதான். ஆனால் இச் சிந்தனைமுறை ஏற்றுக்கொள்ள முடியாதவை.
புலிகளின் நிழலாட்சி இருந்தால் இவ்வாறெல்லாம் நடக்குமா என கேட்பதின் சிந்திப்பதின் தளமும் வன்முறையில்தான் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அரசும் இயக்கங்களும் கட்டியமைத்த வன்முறை இயந்திரங்களின் மீளுற்பத்தியாகவே வன்முறைகளும், வன்முறை மனோபாவமும், சிந்தனைமுறையும், தீர்ப்பு வழங்கும் மனோபாவமும் மலிந்துபோயிருக்கிறது. புலிகள் இருந்தால் இதெல்லாம் நடக்குமா என கேட்பதற்கு எதிராக வைக்கப்படக்கூடிய பதில் (புலிகள் உட்பட) இயக்கங்கள் இருந்ததால் இதெல்லாம் நடக்கிறது என்பதுதான்.
வன்முறைகொண்ட சிந்தனைமுறையின் களன்கள் சமூகத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டு திரும்பவும் சமூகத்துள் கொடுக்கப்பட்டிருக்கிறது, இயக்கங்களால். அதன் விகாரத்தைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு தளங்களிலும்.
போதைப்பொருட்களின் பாவனை, மூடுண்ட சமூகத்தை அல்லது கலாச்சாரங்களை பிளந்து ஊடுருவியிருக்கும் தொடர்புசாதனங்கள், ஊடக பொறுக்கித்தனங்கள் போன்றனவெல்லாம் வன்முறை மனோபாவங்களை இன்னொரு புறமாய் வளர்த்துவிட்டிருக்கிறது. விளைவு எதற்கெடுத்தாலும் வன்முறை ஒரு இலகுவான ஆயுதமாக மாறியிருக்கிறது. கொலை கொள்ளை பாலியல் வல்லுறவு என்றெல்லாம் அது பேயாட்டம் ஆடுகிறது.
சும்மா அவனைச் சாட்டாதை இவனைச் சாட்டாதை என்றும் இந்தியாவிலென்றால் சனம் இப்படிச் செய்திருப்பார்கள் அப்படிச் செய்திருப்பார்கள் என்றெல்லாம் நாம் மேய்ஞ்சுகொண்டிருப்பது எதற்கும் உதவப்போவதில்லை. இந்த மேய்ச்சல் வன்முறையை மூடிமறைப்பதான அல்லது வன்முறையை தீர்வாக முன்மொழிவதான உள்ளோட்டத்தையே கொண்டிருக்கிறது.