அவள் அனாதையாகிவிட்டிருந்தபோது கவனித்தாள், தன்மீது
ஓர் இருள் துண்டொன்று போர்த்தப்பட்டிருப்பதை.
தாழப் பறந்த கிபீர் விமானங்கள்
கிழித்துவிட்டிருந்த துண்டாக இது இருக்கலாம்.
நிலமதிர வெடித்துச் சிதறிய குண்டின் செல்கள்
அரிந்தெறிந்த துண்டாகவும் இருக்கலாம்.
எது எப்படியாகிலும் அவள் அதைப் போர்த்தியிருந்தாள்
அல்லது
அது அவளைப் போர்த்தியிருந்தது.
இப்போதெல்லாம் அவள் அதை இறுகப் பற்றி
அதற்குள் குறங்கிவிடுகிறாள்.
அது அவளுக்கு துர்க்கனவுகளை பொரித்துக் கொடுக்கிறது.
கண்ணீரை ஊற்றாய்த் தருகிறது.
நிர்க்கதியான உலகத்துள் அது ஒரு வானமாக
அவள்மீது கவிழ்ந்தும் விடுகிறது, தனது
காணாமல்போன பிள்ளையை தேடுகிறபோதெல்லாம்.
இருள்வெளியின் ஓட்டைகளை அடைத்தாலன்றி
ஆழ் உறக்கம் கொள்வது சாத்தியமில்லை என
மனிதர்கள் கூடிக் கதைத்துக்கொள்கின்றனர்.
கிழிந்தறுந்துபோன துண்டுகளை பொறுக்கி
இருளை தைத்துவிடலாம் என்கின்றனர் சிலர்.
இல்லை, அது காயம்பட்ட தசைபோல தானாக வளர்ந்து
மூடிக்கொள்ளும் என்கின்றனர் சிலர்.
வைத்தியரில்லா உலகில்
மனிதர்கள் கடவுளை அடிக்கடி அழைத்துக்கொள்கின்றனர்.
ஆழ் உறக்கம் வேண்டி
இருள்வெளியை முழுமையாய்த் தந்தருளும்படி மன்றாடுகின்றனர்.
அரசியல்வாதிகளோ
இருள்வெளியின் பொத்தலை தாம் சரிசெய்துவிடுவதாக
சொல்லிக்கொண்டேயிருக்கின்றனர்.
அவள் தனது புத்திரரை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறாள்.
சகோதரரை தேடிக்கொண்டிருக்கிறாள்.
கணவரை தேடிக்கொண்டிருக்கிறாள்.
அவர்களுக்காய்
வீதிக்கு வந்து உரத்துப் பேசுகிறாள்.
சிலவேளைகளில் போர்வை அவள்மீது இறுகவும் செய்கிறது,
திரும்புதல் சாத்தியமில்லை என்றாகும்போது.
ஆனாலும் அவள் திரும்பவும் திரும்பவும்
போர்வையை உதறியெறிந்து
மீண்டெழுகிறாள் நம்பிக்கைகளுடன்.
– ரவி (12052015)