// கானா என்ற வார்த்தை மேல் உறைஞ்சுபோய் காய்ஞ்சு போய் எங்கட ரத்த நாத்தம்தான் நிறைய அடிக்கும். இது எங்கட வலி. எங்கட உணர்ச்சி. உங்களோடு அழ முடியல. அழுவதற்கான மனிதர்கள் எங்களட்டை இல்லை. எங்க முகத்தைப் பார்த்து பேசவோ, எங்களை தொட்டுப் பேசவோ இந்த சமுதாயத்தில் ஆள் இல்லாதபோது, நாங்கள் பிணத்தைத்தான் கட்டி அழவேண்டியிருக்கும்.//
“மரண கானா விஜி” என்ற தற்போதைய கானாக் கலைஞன் சொல்லுகிற வார்த்தைகள் இவை.
அவன் இந்த சமுதாய நாற்றத்துக்குள்ளிருந்து பிறப்பெடுத்தவன். விளிம்புநிலையின் நுனிவிளிம்பிலிருந்து வேர்விட்டு வளர்ந்து அதனூடே உருவாகிய ஒரு கலைஞன் அவன். தவிர்க்கமுடியாத “பொறுக்கி“ வாழ்வு அவனது. அவனது உலகத்தை அவன்களது அவள்களது உலகத்தை சமூகம் வகுத்து வைத்திருக்கும் ஒழுக்க மதிப்பீடுகளில் குந்தியிருந்துகொண்டு புரிந்துகொள்ளவே முடியாது. இவ்வாறாக மனிதர்களை உற்பத்தி செய்யும் சமூகத்தின் மீது வரவேண்டிய கோபத்தை, இந்த “பொறுக்கி“ வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மனிதர்கள்மீது திருப்புவது ஒழுக்கவாதத்தின் சூழ்ச்சி நிறைந்த பாத்திரம்.
இந்த காணொளியை பார்க்க நேர்ந்த முதல் கணங்களில் கிரிமினல் போல இருக்கிறானே என எனது மண்டைக்குள் ஏதோவொன்று சொல்லிச் சென்றது. அவனது உலகம் எனது உலகத்தைப் போன்றதல்ல. எமது உலகத்துள் விடாப்பிடியாக நின்றுகொண்டு இந்த மனிதர்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. அவன் தனது உலகை காட்டுகிறான். வெளிப்படையாகப் பேசுகிறான். அவனது வார்த்தைகளை தணிக்கை செய்ய அவனிடமே எந்த ஒழுங்குகளோ விதிகளோ கிடையாது. அவன் அதற்குள் உருவாகி வளர்ந்தவனல்ல. மெரீனா கடற்கரைதான் அவனது வாழ்விடமாக இருந்தது. பெற்றோரை அறியாதவன். அவர்களால் கைவிடப்பட்டவன். சொந்தப்பெயர் ஒன்று இருந்ததா எனக்கூட அறியாதவன்.
விதிக்கப்பட்ட “பொறுக்கி“ வாழ்வின் எல்லா செயல்களையும் அவன் தணிக்கையின்றிப் பேசுகிறான். அவையெல்லாம் இந்த சமூகம் பின்கதவு வழியால் தமது ஒழுங்குகளை தாமே மீறும் கள்ளத்தனத்துடன் எவ்வாறு இணைப்புக்கொள்கிறது என அவனது விபரிப்புகள் காட்டுகின்றன.
அவனுள் ஒரு மனிதன் ஒளித்திருந்திருக்கிறான். ஒரு கலைஞன் ஒளித்திருந்திருக்கிறான். இந்த சமூகம் விட்டுக்கொடுக்க மறுத்த வழிகளை வலிகளுடன் தாண்டி அந்த மனிதனும் கலைஞனுமாக கானா விஜி வெளிவருகிறார். கஞ்சா விற்பது, களவெடுப்பது… என தான் வாழ்ந்த எந்த வாழ்வும் நிம்மதியைக் கொடுக்கவில்லை. இப்போ கானாப் பாடி உழைப்பதில் அது கிடைக்கிறது என்கிறார்.
அவர் வாழ்ந்த “பொறுக்கி“ வாழ்வு ஒழுக்க மதிப்பீடுகளுக்கு வெளியிலானது என்றானபோது, பொய்கள் அவரது கதைகளுக்குள் தடையின்றி வந்துபோக சாத்தியமும் உண்டு. தம்முடன் இருந்த ராணியின் பாத்திரம் பற்றி அவர் பேசுவது அவர்களது வாழ்வின் சாத்தியப்பாடுகளுக்குள் நடக்கக்கூடிய விசயங்கள்தான். கவனிப்புப் பெற வேண்டிய விசயங்கள். ஆனால் அவர் கடைசியாக அவளை சந்தித்த காட்சிதான் ஒரு சினிமா பட காட்சிபோல இருக்கிறது. அது உண்மையாயின் அவளை தனக்குத் தெரியாத மாதிரி அவர் காட்டிக்கொள்ள வேண்டி ஏற்பட்ட சூழல், இப்போது மட்டும் -அதுவும் தொலைக்காட்சியில்- எவ்வாறு இல்லாமல் போயிற்று என்பது விளங்கவில்லை. இது பகிரங்கப்படுகிறபோது, அவளது வாழ்வு பாதிக்கப்படத்தானே செய்யும்?
ஆனால் பிரச்சினை இந்த அதிவிளிம்புநிலைக்குள் அலைக்கழிக்கப்பட்ட விஜி போன்ற தனிமனிதர்கள் பற்றிய தரவுகளை சரிபார்ப்பதல்ல. அவர்களின் உலகை புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான். அவர்களின்மீது சுமத்தப்பட்ட “பொறுக்கி“ வாழ்வுக்கான பொறுப்பை அவர்களிடம் தேடுவதல்ல. அதை சமூகத்திடம் தேடுவது. ஒழுக்க மதிப்பீடுகளாலும் கட்டுப்பாடுகளாலும் சட்டதிட்டங்களாலும் ஒழுங்கமைக்கப்பட்ட (நியம) வாழ்வின் வீதிகளினூடு நாம் பயணம் செய்து அவர்களை சென்றடையவே முடியாது. இழப்பதற்கு உசிரைத் தவிர வேறு எந்த மசிருமற்றவர்கள் அவர்கள்.
இந்த உலகை புரிந்துகொள்ள இந்த காணொளியின் நான்கு பகுதிகளையும் கொஞ்சம் நேரமொதுக்கி பார்ப்பது பிரயோசனமானது.