பயம்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு van இல் பயணித்துக் கொண்டிருந்தோம். சாரதி ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளிலிருக்கும் (அகதித்) தமிழர்களை ஏற்றியிறக்கிய அனுபவம் வாய்ந்தவராக இருப்பார் என தெரிந்துகொண்டேன். வெளிநாட்டிலிருந்து வரும் தமிழ்ப் பிள்ளைகளெல்லாம் பயந்தவர்கள் என்றார். பூச்சிகளைக் கண்டு பயப்படுகிறார்கள். பாம்பைக் கண்டு பயப்படுகிறார்கள். பல்லியைக் கண்டு பயப்படுகிறார்கள்… என அடுக்கிக்கொண்டிருந்தார்.


போதாதற்கு ஒரு உதாரணத்தையும் சொன்னார். அவர் கனடாவிலிருந்து வந்த குடும்பமொன்றை ஏற்றிக்கொண்டு யாழ் நோக்கி சென்றிருக்கிறார். அந்தப் பிள்ளைகள் வேகத்தை குறைத்து ஓடும்படி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர் வேண்டுமென்றே வேகமாக ஓடிக்கொண்டிருந்தாராம். வழியில் ஒரு பெரிய தோகை மயிலொன்று நடுவீதியில் நின்றது. அந்த அழகு மயில் அவர்களை வசீகரித்தது.

வாகனம் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. அந்தப் பிள்ளைகள் விழுந்தடித்து வாகனத்தை நிறுத்தும்படி பெரிய சத்தமாகக் கத்தினார்கள். “எனக்குத் தெரியும்தானே அது பறந்து போய்விடும். வாகனத்தில் அடிபடாது என. அதனால் நான் பிரேக் பிடிக்கவில்லை. அது பறந்து போய்விட்டது. அவர்கள் வீடு போகும்வரை அந்தச் சம்பவத்தை மறக்கவேயில்லை” என சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தார்.

கையிலே ஒரு நத்தையை ஊரவிட்டபடி இருந்தது ஒரு குழந்தை. இரண்டாம் வகுப்பு. நாளை இந்த நத்தையைப் பற்றி வகுப்பில் இந்தக் குழந்தை தனது புரிதலை (theme) சொல்ல வேண்டும். அதை நாளை தன் வகுப்புக்கு எடுத்துச் செல்ல இருக்கிறது. அது அந்த ஜீவியோடு வாழ்கிறது. தொட்டு உணர்கிறது. அதன் இயக்கத்தை இரசிக்கிறது. அதன் செயல்களை உன்னிப்பாக அவதானிக்கிறது. அது சாப்பிடுவதை இரசிக்கிறது. மனிதாபிமானம் மெல்ல மெல்ல அந்தக் குழந்தைக்குள் இறங்குகிறது. சகஜீவியின் தனித்தன்மையை, அதன் இருப்பை அங்கீகரிக்கப் பழகுகிறது.

அதன் இருப்பை அழித்தலின்மீதான பின்வாங்கலை அது செய்வதையே “பயம்“ என இலங்கைச் சூழலில் வளர்ந்த பெற்றோரும் வரைவு செய்துவிடுகிறார்கள்.
இதையேதான் ஜெசீக்காவின் தாயாரும் ஜெசீக்கா பற்றி குறிப்பிடுகையில் “சுப்பர் சிங்கர்“ சபையோர் முன் சொன்னார். “எறும்பு கடித்தாலே நான்தான் போய் எறும்பை எடுத்துவிட வேண்டும். அவளவு பயம் கொண்டவள்“ என்றார். அதற்கு முகநூலில் ஒருவர் குத்திமுறிஞ்சு “இப்படி பூச்சி பூரானுக்கு பயந்தவர் மேடையில் பனைமரக்காடே என பாடுகிறாராம். பனைமரக் காட்டுக்குள் பாம்பு, பூச்சி, பூரான் எல்லாம் இருக்குமே“ என கிண்டலடித்தார்.

சும்மா வேலியில் தானும் தன்ரை பாடுமாய் இருக்கும் ஓணானையே கெற்றப்போல் வைச்சு அடிச்சுக்கொண்டதுக்காக வருத்தம் வராதவரை வெளிநாட்டுத் தமிழ்க் குழந்தைகளின் “பயத்தை“ உணர்ந்துகொள்ளவே முடியாது.

Fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/866539463417149?pnref=story

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: